Friday, November 27, 2015

இல்லம் சங்கீதம்
இல்லம் சங்கீதம் அதில் ராகம் சம்சாரம் அவள் நாயகன் பாவம் பிள்ளை சிருங்கார நாதம் என்று ஒரு பாடலின் பல்லவி இப்படி தொடங்கும். இல்லம் சங்கீதம்போல இனிமையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. நல்ல மனைவி பிள்ளைகள் இருக்கும்போது இல்லம் சங்கீதமாகதான் இருக்கமுடியும். ஆனால் அந்த இல்லம் சொந்தமானதாக இருக்க வேண்டியது முக்கியம். வாடகை வீட்டில் இருப்பதை எந்த இல்லதரசியும் விருப்புவதில்லை. இன்றைய நாளில் ஒருவருக்கு திருமணம் கைகூடவேண்டுமெனில் சொந்த வீடு இருக்க வேண்டும். அது அவராக சம்பாதித்து இருக்கலாம் அல்லது தன் அப்பா அல்லது தாத்தா வழியாக வருவதாக இருக்கலாம். அப்படி இல்லாதவர் குறைந்தது வீடு வாங்க லோன் போடும் அளவிற்கு இருக்கவேண்டும். அப்படி இல்லாதவர்களுக்கு திருமணம் அவர்கள் விரும்பம்போல் நடப்பதில்லை என்பதை கவனிக்கலாம்.

Thursday, November 26, 2015

லாலுவும் நீலுவும்சிறுவர்களுக்கான பாலுவும் நீலுவும் என்ற ஒரு நாவலை முன்பு படித்தது நினைவிருக்கிறது. பாலு நல்லவன் நீலு கேட்டவன். இருவரும் அவர்களுக்குள் நடக்கும் சின்ன சண்டைகளும் சமாதனங்களும், எது சிறந்தது, மேன்மையானது போன்ற சிலவற்றை இருவரும்  புரிந்து கொள்வதும் என கதை நகரும். இரு சிறுவர்கள் காடு மலை நகரம் என்று சைக்கிளில் பயணிப்பதை படிக்க அத்தனை ஆனந்தமாக இருந்ததாக நினைவு. இன்று லாலுவும், நீலுவும் (நிதீஷ்) அப்படி தங்களுக்குள் நட்பை வளர்த்து சுற்றி திரிவதாக நினைத்துக் கொள்கிறேன். முற்றிலும் வெவ்வேறு குணங்களை கொண்ட இருவர் சேர்ந்து தங்களுக்கு சமரசங்களை வளர்த்துக் கொள்வதை இனி வருங்காலத்தில் லாலு, நிதீஷ் உறவிலும் சொல்லலாம் என நினைக்கிறேன்.

Tuesday, November 24, 2015

மதங்கள், மக்கள் தொகை, கடவுள்மதரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011க்கானது சில நாட்களுக்கு முன்பு வெளியானது. பத்தாண்டுகளுக்கு ஒரு முறை வெளியாகும் பொதுசென்சஸில் மதம் சம்பந்தமான கணக்கெடுப்பும் நிகழ்கிறது. சாதிரீதியான கணக்கெடுப்பிற்கு இன்னும் நாம் பக்குவப்படவில்லை என நினைக்கிறேன். அதற்கான சண்டகள் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கின்றன‌. ஆனால் மதம் சம்பந்தமான கணக்கெடுப்பு வெளியாவதற்கு மதம் ஒரு வெளிப்படையான அடையாளமாக தவிர்க்கமுடியாத ஒரு சின்னமாக ஒவ்வொருவருக்கும் இருப்பது காரணமாக இருக்கலாம். கணக்கெடுப்பு என வரும்போது அதை தொடர்ந்து அவதானிப்பவர்களிடம் ஒரு பதற்றம் இருப்பதை பார்க்கலாம். நான் சார்ந்திருக்கும் மதத்தில் எத்தனை சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். எத்தனை சதவிதம் உயர்ந்திருக்கிறார்கள் என்பதை பார்க்காதவர்கள் யாரும் இல்லை எனலாம். அதை குறித்து பின்னாளில் பேசாமல் இருப்பவர்களும் மிக குறைவே.
நேரடியாக மதம் ஒரு தனிப்பட்டவர்களின் சார்பு அல்லது பிறப்பால் ஒருவருக்கு சேர்ந்துவிட்ட ஒரு த‌னித்துவம் என்று மட்டும் கொள்ள முடியவில்லை. அதன் பின்ன‌ணியில் உள்ள அரசியல், பொருளாதார பிரிவினைகளையும் பார்க்க வேண்டியிருகிறது. ஒரு தனிமனிதன் இன்ன மதத்தில் இருக்கிறேன் என்பதும், ஒரு தேசம் இன்ன மதத்தில் பெரும்பான்மையாக இருக்கிறது என்பதற்கும் இடையேயான‌ வேறுபாடு ஆழமானது.

Monday, November 23, 2015

வார்த்தைகள், சொற்கள், தமிழ்தமிழில் வார்த்தைகளுக்கு பஞ்ச‌மில்லை. மிகப் பெரிய சொற்களஞ்சியம் தமிழுக்கு உண்டு. எந்த ஒரு வார்த்தைக்கும் அதன் வேர்சொல் வரை சென்று ஆராய்ந்து பார்க்கமுடியும். தமிழுக்கு உரிய பல பெருமைகளில் ஒன்று ஒரு வார்த்தையின் வேர் தமிழிலேயே இருப்பதுதான். மற்ற இந்திய‌மொழிகளில் அது சமஸ்கிரதமாகவோ அல்லது தமிழாகவோ வந்து முடியும். ஆனால் ஒரு சினிமா தலைப்பு அல்லது புத்தகத்தின் தலைப்பு அல்லது ஒரு சினிமா பாடலுக்குள் இருக்கும் வார்த்தைகள் அல்லது தமிழில் தொடங்கப்படும் ஒரு நிறுவனத்தின் தலைப்புகள் அல்லது ஏன் நாம் தினம் பேசும் வார்த்தைகள் ஒரு குறிப்பிட்ட சொல்லகராதிக்குள் அடங்கிவிடும். ஒரு புத்தகத்தலைப்பு மட்டுமல்ல அதன் உள்ளடக்கத்தில் உள்ள சொற்கள் நாம் எளிதாக வகைப்படுத்திவிட முடியும்.
வெகுஜன எழுத்துக்களுக்கு ஒரு குறிப்பிட்ட வார்த்தைகள் தான் உண்டு. அதைதாண்டி நாம் எழுதிவிடமுடியாது. அதெல்லாம் போட்டா அவர்களுக்கு புரியாதுங்க என்று சொல்லப்படும். ஒரு சினிமா பாடலுக்கும் சரி ஒரு நவீன கவிதைக்கும் சரி இன்னென்ன வார்த்தைகள்தான் வேண்டும் என்கிற நிலை தொடர்வதாகத்தான் நினைக்கிறேன். சினிமா பாடலில் கையாளப்படும் வார்த்தைகளை எழுதி வைத்துக்கொண்டு அதே சூழ்நிலைக்கு வேறு ஒரு பாடலாக எழுதிவிடலாம். (அப்படிதான் எழுதப்படுகின்றன என சொல்லப்பட்டிருகிறது)

Sunday, November 22, 2015

பட்டிமன்றம்


விடுமுறை நாட்களில் தொலைக்காட்சியில் முக்கியமாக பார்க்கப்படுவது பட்டிமன்றம்தான். மற்ற நாட்களில் இந்த பட்டிமன்றம் நினைத்துப் பார்க்கபடுவதில்லை.. மற்ற நாட்களில் ஒளிப்பரப்பினாலும் பார்க்கமாட்டார்கள். ஏன் விடுமுறை நாட்களில் மட்டும் பட்டிமன்றம் பார்க்கப்படவேண்டும்? மற்ற நாட்களில் ஒளிபரப்பானால் அவைகளுக்கு பெரிய மரியாதை இல்லை. இன்றைக்கு பட்டிமன்றம் ஒரு வேடிக்கையாக மட்டுமே பார்க்கப்படுகிறது என நினைக்கிறேன். அதிலிருந்து வரும் எந்த கருத்துகளுக்கு அவர்களுக்கு தேவையாக இல்லை. விடுமுறைநாட்களில் சிரித்து மகிழ்ந்திட ஒரு சிரிப்பு நிகழ்ச்சியாக மற்ற கமெடி நிகழ்ச்சிகளைவிட சிறந்த காமெடிக்கு இதை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். அன்றைய தினம் குடும்பத்தோடு சிரித்து அன்றைக்கே மறந்துவிட ஒரு காமெடி நிகழ்ச்சியாக இன்று மாறிவிட்டது.
முந்தைய நாட்களில் கோவில் திருவிழா, கிராம விழா, தெருமுனை, பள்ளிகளில், கல்லூரிகளில் என்று ஒவ்வொரு முக்கியமான சமயங்களிலும் பட்டிமன்றங்கள் இருந்தன. ஒருவகையில் நாம் பெருமைபட்டுக்கொள்ளலாம். தமிழகத்தில் நடந்த இந்தபட்டிமன்றங்களைப் போல மற்ற பகுதிகளில் நடந்ததில்லை. உண்மையில் டிவியில் காட்டப்படும் பட்டிமன்றம்விட ஒரிஜினம் பட்டிமன்றத்தை முற்றிலும் வேறானது. பழைய பட்டிமன்றங்களில் பேசப்படும் கருத்துக்கள் சிறந்த பேச்சாளர்களால் பேசப்பட்டு அதற்கென்று உருவாகியிருந்த மக்கள் கூட்டத்தால் ரசிக்கப்பட்டவைகள்.

Friday, November 20, 2015

நான் சிரித்தால் தீபாவளிபண்டிகைகளில் தலையாயது தீபாவளியாகத்தான் இருக்கும். இந்தியாவில் இந்துக்களுக்கு மட்டுமல்ல மற்ற மதத்தவர்களுக்கும் தீபாவளி முக்கிய நிகழ்வாக இருக்கிறது. தமிழகத்தில் பொங்கலைவிட, என்னதான் தமிழர் பண்டிகையாக இருந்தாலும், தீபாவளி ஒரு படி மேலேதான் இருக்கிறது. உறவுகளில் புது துணி எடுத்துக் கொடுப்பது, பண்டிகைப் பணம் கொடுப்பது என்று நடப்பவைகள் எல்லாம் தீபாவளியில் தான் இருக்கும். நான் சிரித்தால் தீபாவளி என்று ஒரு பாடல்கூட ஆரம்பமாகிறது. தீபாவளி என்பது சிரிப்பின் ஆரம்பம் எல்லோருக்கும். எல்லா வயதினருக்கும், மேல்மட்டம் கீழ்மட்டம் என்று இது எல்லா சமூகத்தினருக்கும் பொருந்தும். ஆனால் சமீபகாலங்களில் அப்படி இல்லை என நினைக்கிறேன். முன்பு வீதி முழுவதும் மக்கள் ஒரே நேரத்தில் திரண்டு வெடிகளை வெடிப்பார்கள். வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வார்கள். இன்று அப்படி சொல்லமுடியுமா என்பது சந்தேகம். வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதில் வாட்ஸ் அப், முகநூல், மெசெஜ் என்று விரிவடைந்திருந்தாலும் ஒன்றுகூடுதல், சிரித்து மகிழுதல் எல்லாம் கிட்டத்தட்ட‌ இல்லை என்றே சொல்லலாம்.

Thursday, November 19, 2015

நாத்தீகம் vs. ஆத்தீகம்நாத்தீகத்தை பின்பற்றுபவர்கள் சிறந்த மேதைகளாகவும், மிகுந்த நம்பிக்கைவாதியாகவும் நினைப்பதும், ஆத்திகத்தை பின்பற்றுபவர்கள் சிறந்த பழமைவாதியாகவும், அசமஞ்சமாகவும் பயந்த சுபாவம் உடையவனாகவும் நினைப்பதும் நம் எல்லோரிடமும் இருக்கிறது.
நான் கல்லூரியில் படித்த காலத்தில் என்னுடன் படித்த ஒருவர் மீகத்தீவிரமான நாத்தீக நிலைப்பாட்டை கொண்டிருந்தார். பொதுவாக கல்லூரி காலங்களில் கடவுள் மறுப்புகொள்கையில் தீவிரமாக இருந்திருப்போம்தான். நானும் அப்படியானவனாக இருந்தேன். ஆனால் அந்த நண்பர் நிஜமாகவே தீவிரமான எதிர்நிலையும், அது குறித்த தெளிவான பார்வையும், அதற்கு தேவையான‌ புத்தகங்களும் படித்திருந்தார். பெரியார் ஈவேராவின் ஓரிரண்டு புத்தகங்கள் அவரிடம் இருக்கும். தீவிரமான முகத்தோடும் மனநிலையோடும் காணப்படுவார். எந்நேரமும் கல்லூரியின் பாட‌புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பார். எந்த விஷயத்திற்கு அவருக்கென்று ஒரு பார்வை இருக்கும். அதே வேளையில் எந்த சூழ்நிலையிலும் அது மாறாத தன்மையுடன் இருக்கும். எந்த விஷயத்தை குறித்தும் அவரிடம் பேசவோ விவாதிக்கவோ முடியாது அவருடன் பேசிய ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குபின் இது புரிந்துவிடும். அதை மிகதாமதமாகத்தான் புரிந்துக்கொள்ளமுடிந்தது. முன்பே ஒரு விஷயம் குறித்த‌ அதன் நிலைப்பாட்டை எடுத்திருப்பார். அத்தோடு அவருடன் விவாதிப்பதும் வீணாதாகவும், ஒரு கொடுக்கல் வாங்கலாக ஒரு நட்புமுறை முறையில் அல்லாமலும் இருக்கும்.

Wednesday, November 18, 2015

ஆட்டோகாரர்களை எதிர்கொள்ளல்ஆட்டோக்காரரை எதிர் கொள்வது என்பது எத்தனை சிரமமானது என்பதை எல்லா தமிழகவாசிகளுக்கு தெரியும். சென்னையில் இத்தனை பேருந்துகள் இருப்பதற்கு ஆட்டோகாரர்களின் அடாவடிதனம் தான் காரணம். இந்தியாவில் நான் பயணித்தவரை தமிழர்கள் கோழைகள் என்கிற முடிவை எடுக்க அவர்கள் ஆட்டோகாரர்களை எதிர் கொள்ள தெரியாததை ஒரு முக்கிய காரணமாக சொல்லலாம். மற்ற இடங்களில் ஒரு அளவிற்கு மேல் மீறிநடந்துக் கொண்டால் அந்த ஆட்டோகாரர் அந்த பகுதியிலிருந்து சென்றுவிட‌ முடியாது. ஆனால் சென்னையில் ஒரு ஆட்டோகாரர்கள் பணம் தரும் தன் பயணிகளை எந்த அளவிற்கு கீழ்தரமாக வும் நடத்தலாம். அவரை ஒரு கேள்வியும் கேட்க மற்ற மனிதர்களுக்கு தைரியம் வருவதில்லை.

அரசியல் தெளிவுதமிழக இந்திய அரசியலை கொஞ்சம் உற்று கவனித்தாலே மண்டை வெடித்துவிடும் அபாயம் இருக்கிறது. பல வருடங்களாக பல்வேறு தலைவர்களை சந்தித்திருக்கும் பல அன்பர்களையும் அவர்கள் எழுதும் கட்டுரைகளை படிக்கும்போது ஒன்றை வெளிப்படையாகவே அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அது 'இந்தியாவில் நடக்கும் அரசியல் என்னால் புரிந்துக் கொள்ளமுடியவில்லை' என்று கூறுவதுதான். நேரடியாக இதை சொல்லவேண்டும் என்று இல்லை, பல சமயங்களில் மறைமுகமாகவும், நாசூக்காவும் சொல்லியிருப்பார்கள். அப்படி சொல்லவில்லை என்றால் அவர்கள் அந்த அரசியலில் நல்ல பிழைப்பை நடத்துகிறார்கள் என்று பொருள் கொள்ளலாம்.

Tuesday, November 17, 2015

நாடகபாணியும் விஜயகுமாரியும்


நான் சின்ன வயதில் விஜயகுமாரியின் ஒரு பழைய படத்திற்கு சென்று படம் முழுவதும் அழுதுக் கொண்டேயிருந்தது நினைவிருக்கிறது. இன்று அவரது படத்தை பார்க்கும் யாவரும் 'ஏன் இவ்வளவு எக்ஸ்பிரசன், தேவையா இது' என்பார்கள். நானும் அப்படிதான் நினைக்கிறேன். ஆனால் அவர் நடித்த சில படங்களில் அவர் செய்யும் முக சேட்டைகளை நான் ரசிக்காமல் இருந்ததில்லை. 'இந்த மன்றத்தில் ஓடிவரும்' பாடலில் அவர் செய்யும் முகபாவத்தை அதிகம் ரசித்திருக்கிறேன். குறிப்பாக திடீரென ஒரு ஆணின் பாடல் குரல் கேட்டதும் அது யார் என்று அவர் அலைமோதும்போது செய்யும் முகபாவத்தை சொல்லலாம். ஒரு மலரைப் பறித்து தூக்கி எறிவார், வேகவேகமாக நடந்துசெல்வார், தலையை இங்குமங்கும் திருப்பி தன் சலிப்பை வெளிப்படுத்துவார். இப்படி நிறைய செய்தாலும் அவர் அண்ணன் கையை பிடித்ததும் நிற்பது தன் அண்ணன் தான், அவருக்கு தன் மனவேதனை கூறியதை கேட்டுவிட்டதே என்று அவர் செய்யும் முகசேட்டைகள், கண்களை பெரிதாக்கி, உதடுகளை குவித்து, தன் கையை பல‌முறை உதறி, குவிந்த உதட்டில் விரலை வைத்து என்று எத்தனை பாவங்களை ஒரே சாட்டில் செய்துவிடுகிறார். ஆச்சரியம்தான்.