Friday, November 27, 2015

இல்லம் சங்கீதம்
இல்லம் சங்கீதம் அதில் ராகம் சம்சாரம் அவள் நாயகன் பாவம் பிள்ளை சிருங்கார நாதம் என்று ஒரு பாடலின் பல்லவி இப்படி தொடங்கும். இல்லம் சங்கீதம்போல இனிமையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. நல்ல மனைவி பிள்ளைகள் இருக்கும்போது இல்லம் சங்கீதமாகதான் இருக்கமுடியும். ஆனால் அந்த இல்லம் சொந்தமானதாக இருக்க வேண்டியது முக்கியம். வாடகை வீட்டில் இருப்பதை எந்த இல்லதரசியும் விருப்புவதில்லை. இன்றைய நாளில் ஒருவருக்கு திருமணம் கைகூடவேண்டுமெனில் சொந்த வீடு இருக்க வேண்டும். அது அவராக சம்பாதித்து இருக்கலாம் அல்லது தன் அப்பா அல்லது தாத்தா வழியாக வருவதாக இருக்கலாம். அப்படி இல்லாதவர் குறைந்தது வீடு வாங்க லோன் போடும் அளவிற்கு இருக்கவேண்டும். அப்படி இல்லாதவர்களுக்கு திருமணம் அவர்கள் விரும்பம்போல் நடப்பதில்லை என்பதை கவனிக்கலாம்.

பழைய காலங்களில் கட்டப்பட்ட வீடுகள் நீளமான முற்றத்தை நடுவில் வைத்து சுற்றி அறைகள் இருப்பதுபோல் கட்டப்பட்டிருக்கும். மகன்க‌ள் வளர்ந்ததும் ஒரே வீட்டில் சில பிரிவுகளை ஏற்படுத்தி கொடுத்துவிடுவார்கள். அல்லது நடுவில் ஒரு சுவர் எழுப்பிகூட பிரிக்க முடியுமளவிற்கு வீடுகள் இருந்தன. ஆனால் இன்று சின்ன வீடுகள், இரண்டு அறைகள் கொண்ட ஒரு புறாக்கூடு போன்றுதான் வீடுகள்.
இன்று எல்லோரும் சொந்தமாக வீடு வேண்டும் என நினைப்பது அவர்களின் அதீத ஆசை என்று விட்டுவிட முடியாது. நிரம்ப‌ சம்பாதிக்கும் இடத்தை குறைந்த வயதில் அடைபவர்கள் இன்று அதிகம். தேவையான வீடுகள் அனைவருக்கும் கிடைப்பது பெரிய பிரச்சனையாகதான் இருக்கிறது. இன்று நாம் நகரங்களில் வெள்ளம் பெருகி வீடுகள் மூழ்குவதற்கு நாம் அவசரப்பட்டு குளங்களை, குட்டை, ஏரிகளை மூடிவிடுவதால் தான்.
ஆனாலும் ஒருவர் வாழ்வில் மிக முக்கியமான இலக்காக வீடு முன்பு எப்போதும் இல்லாதவகையில் அமைந்துவிட்டது. தன் அப்பா, தாத்தாவிற்கு கிடைத்திராத சொந்தான வீடு என்னும் நிலையை அடைய இன்று எல்லா திருமணமான ஆண்கள் பெண்கள் விடாமல் முயற்சிக்கிறார்கள். எனக்கு தெரிந்த ஒரு நபரின் மனைவி வீடு வாங்க பணமில்லாமல் இந்தியா வரவேண்டாம் என அவரை கட்டளை இட்டுவிட்டார். இன்றைய சூழலில் யாராவது வீட்டிற்கு சென்றால் அவர்களது கட்டும் வீட்டை அல்லது வாங்கிய வீட்டின் லோன் பற்றி கேட்டால் போதும் நாம் இதுவரை பேசிய பேச்சுகள் இதை நோக்கிய ஒரு நகர்வை பற்றிதான் என புரிந்துவிடும்.
தங்கள் உடல்நிலைப் பற்றிய அக்கறையைவிட தன் வீட்டின் ஸ்திரதன்மைப் பற்றிதான் அதிகம் கவலைப்படுவார்கள். நானும் ஒரு நண்பருடன் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தோம். வீட்டின் முன்னால் இருந்த ஒரு தூணைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள் அந்த தம்பதிகள். அந்த தூண் முதல் மாடியை தாங்கி நின்றிருந்தது. அதற்கே பல லட்சங்கள் செலவானதையும், அதன்மேல் பதிக்க டிசைன் கற்களை தேடி பல்வேறு கடைகளையும் ஏறி இறங்கியதையும் பற்றி பேசியது இன்றும் நினைவிருக்கிறது. அவர்கள் பேச்சில் தெறித்த மகிழ்ச்சி, விடுதலை, அகங்காரம் அவர்கள் இதுவரை பெற்றவைகளைவிட பெரியவைகள். வீடு கைகளுக்கு வருவதும் அதை சந்தோஷமாக பராமறிப்பதும் பெரிய பாக்கியமாக நினைக்கிறார்கள்.
அது ஒருவகையில் உண்மைதான். பல பேர்களின் வாழ்வில் வீடு அவர்களின் தந்தை அல்லது தாத்தா வழியில் இருக்கும் ஆனால் பல்வேறு சட்ட சிக்கல்களாலும், உறவினர்களின் அடிதடியாலும், அதை அனுபவிக்க முடியாத நிலையில் இருப்பார்கள்.
ஆனால் இன்றைய தேதியில் ஒருவர் லோன் மூலம் வாங்கும் வீடு என்பது அவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையே அதற்காக செலவாகிறது என்பதை அறியாமல் இருக்கிறார்கள். ஒருவரின் மிகப்பெரிய சேமிப்பே அதுதான். அவர் வீடு வாங்கும்போது அதுவரை சேமித்திருந்த பணம், நகை, நிலம், அப்பா/தாத்தா/மனைவி வழி வந்த சொத்துக்கள் அனைத்தையும் விற்றே வாங்குபவராக இருப்பார்கள்.
ஒருவகையில் பார்த்தால் அவர்கள் (கணவன் மனைவி) வாழ்வதே அந்த வீட்டை சம்பாதிக்கதானா என தோன்றும். அவர்களின் பணம் மட்டுமல்ல அவர்களின் கலை இல‌க்கிய அறிவையும் பணயம் வைக்கிறார்கள். கூடவே ஒன்றையும் செய்கிறார்கள் அது அந்த வீட்டை தவிர பிற உலகத்தை காணாமல் மரணிக்க போகிறார்கள்.

No comments: