Wednesday, November 18, 2015

அரசியல் தெளிவு



தமிழக இந்திய அரசியலை கொஞ்சம் உற்று கவனித்தாலே மண்டை வெடித்துவிடும் அபாயம் இருக்கிறது. பல வருடங்களாக பல்வேறு தலைவர்களை சந்தித்திருக்கும் பல அன்பர்களையும் அவர்கள் எழுதும் கட்டுரைகளை படிக்கும்போது ஒன்றை வெளிப்படையாகவே அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அது 'இந்தியாவில் நடக்கும் அரசியல் என்னால் புரிந்துக் கொள்ளமுடியவில்லை' என்று கூறுவதுதான். நேரடியாக இதை சொல்லவேண்டும் என்று இல்லை, பல சமயங்களில் மறைமுகமாகவும், நாசூக்காவும் சொல்லியிருப்பார்கள். அப்படி சொல்லவில்லை என்றால் அவர்கள் அந்த அரசியலில் நல்ல பிழைப்பை நடத்துகிறார்கள் என்று பொருள் கொள்ளலாம்.

தமிழக அரசியலை ஒருவர் புரிந்துக் கொள்ள அவர் பத்திரிக்கை, புத்தகம், மேடைப்பேச்சுகள் போன்றவைகளின் வாயிலாக தொடர்ந்து அவதானிப்பவராக இருக்கவேண்டும். அப்படி இல்லாதவரால் இந்த அரசியலின் உள்விவகாரங்களை புரிந்துக் கொள்ளமுடியாமல் மேலோட்டமான ஒரு பார்வையை மட்டும் வைத்திருப்பவராக இருப்பார்.
அப்படி என்ன உள்விவகாரங்கள் இருக்கின்றன. ஒரு செய்திக்கு பின்னால் இருக்கும் அரசியல் என்பது அதை யார் சொல்கிறார்கள் என்பதிலிருந்து தொடங்குவதாக தெரிகிறது. ஒரு தலைவர் அல்லது ஒரு கட்சியின் பிரதிநிதி ஒரு செய்தியை சொல்லும்போது அழுத்தமாகவும் எதை விட்டுவிட்டு சொல்கிறார் என்பதை புரிந்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் அதில் இருக்கிறது. அதைக் கேட்பவர்கள் அவர் சொன்ன அதே கருத்தை எந்த இடத்தில் அவர் அழுத்தம் கொடுக்கிறரோ அதே இடத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். எவ்வளவு தூரம் என்றால் அந்த தலைவர் சொல்லப்பட்ட செய்தியை தாங்கி நிற்கும் மற்ற கட்சியுடம் கூட்டணி வைக்கும் வரை. ஒரு சமயம் கூட்டணி விலகினால் அதை மீண்டும் அதே அழுத்தத்துடன் சொல்ல வேண்டியிருக்கும்.
இது மிகச் சாதாரண உதாரணம்தான். ஒரு அரசியல் கட்சியை பின் தொடர்பவருக்கும் இருக்கும் சங்கடங்கள் அலாதியானது. அது அந்த கட்சி எவ்வளவு பழமையானது என்பதையும் அதன் தலைவர் இதற்கு முன்னால் எந்த கட்சியில் இருந்தார் என்பதையும் பொருத்தது. இதற்கு முன்னால் நடந்த விஷயங்களை லாவகமாக மறைத்து அவ்வப்போது பேச வேண்டியிருக்கும்.
இது தொண்டனாக இருந்து செய்ய வேண்டியவைகள். ஒரு பார்வையாளனாக இருக்கும் வரை பல்வேறு குழப்பங்களுக்கு ஆட்பட வேண்டியிருக்கும். எதை எடுத்துக் கொள்வது எதைவிடுவது போன்ற எல்லா வற்றையும் சேர்த்துக் குழப்பிக் கொண்டபின் ஒரு தொண்டனாக மாறியபின் அதை வெற்றிகரமான தன்நிலைப்பாட்டை தக்கவைத்துக் கொள்ள பல்வேறு உத்திகளை கையாள வேண்டியிருக்கும்.
தொடர்ந்து ஒரு பார்வையாளனாக இருக்கும் சாத்தியம் எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. ஊசலில் அலையும் பெண்டுலம்போல ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு முடிவு எடுக்கும்போது மற்ற பார்வையாளர்களால்/தொண்டர்களால் அதிக கேள்விகளுக்கும் அதிக மனஉழைச்சலுக்கும் ஆளாக வேண்டியிருக்கும்.
ஒருவரது சாதியிலிருந்து அவரின் கொள்கை, கட்சி, நிலைப்பாடுகள் ஆரம்பமாகின்றன. தன் சாதியை மறைத்து பேசும் ஒருவர் அந்த குழுவில் இணையமுடியாது அதே வேளையில் மற்ற குழுவிலும் அவர் இணைந்துக் கொள்ள முடியாமல் போகும்.
உதாரணமாக ஒருவர் மீனவர் என்றால் அவர் மீனவர்களின் பிரச்சனைகளைப் பற்றிய அவரின் நிலைப்பாடு அவர் மக்கள் சார்ந்தவற்றில்தான் இருக்க வேண்டும். இல்லை இதை சந்தேகிக்கிறேன், மாற்றுக் கருத்தை கேடக விரும்புகிறேன் என்றால் அவர் மற்ற விவகாரங்களிலிருந்து விலகி வைக்கப்படலாம், வெளியேற்றப்படலாம் அல்லது தாக்கவும்படலாம். அந்த மீனவர் பிரச்சனையை ஆதரிக்கும் ஒரு கட்சியை அவர் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். அப்படி தேர்ந்தெடுக்கும்போது அதே மீனவர்களில் சில வேறு கட்சியை தேர்தேடுப்பதை பார்க்கலாம். இருகுழுவினரும் தங்களுக்குள் ஒரு சமரசத்தை ஏற்படுத்திக்கொள்ள தங்கள் கட்சிகளை அவர்கள் நியாயப்படுத்த வேண்டியிருக்கும். இப்படியே செல்லும்போது அவர்களின் நிலைப்பாடு எங்கே என்று அவர்களுக்கே மறந்துபோகும் அபாயத்தில் முடியும்.
அதே கட்சி தங்கள் தொண்டர்களுக்கு நேரடியான ஆதரவை எப்போதும் தந்துவிடமுடியாது. அந்த பிரச்சனையின் எதிர் தரப்பு என்ன என்பதை பொருத்து மாறுபடும். எது பலமானதோ அதை ஆதரிக்க வேண்டியிருக்கும். உதாரணமாக தேவர் தலித், இந்துத்துவா முஸ்லீம், வன்னியர் தலித், மீனவர் இலங்கை அரசு. அரசில் இருந்தால் நிலைப்பாடு எதிர் கட்சியில் இருந்தால் ஒரு நிலைப்பாடு, கூட்டணியில் இருந்தால் மற்றொரு நிலைப்பாடு எடுக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்குபின், தங்கள் ஆட்சியை பொருத்து, மாற்றிக்கொண்டு அதை மிக லாவகமாக மறைத்து பிழைப்பு நடத்தவேண்டும்.
இந்த அடிப்படைகளை புரியாமல் ஒருவர் தொடர்ந்து ஒரு கட்சியில் 20 ஆண்டுகளுக்கு மேல் இருந்து அவர் எந்த பணம் சொத்து, பிரபல்யம் போன்ற லாபங்களையும் சம்பாதிக்காமல் இருந்ந்தால் அவர் முட்டாள் அரசியல்வாதி அல்லது முட்டாள் வாக்காளராக இருப்பார்.

No comments: