Tuesday, November 17, 2015

நாடகபாணியும் விஜயகுமாரியும்


நான் சின்ன வயதில் விஜயகுமாரியின் ஒரு பழைய படத்திற்கு சென்று படம் முழுவதும் அழுதுக் கொண்டேயிருந்தது நினைவிருக்கிறது. இன்று அவரது படத்தை பார்க்கும் யாவரும் 'ஏன் இவ்வளவு எக்ஸ்பிரசன், தேவையா இது' என்பார்கள். நானும் அப்படிதான் நினைக்கிறேன். ஆனால் அவர் நடித்த சில படங்களில் அவர் செய்யும் முக சேட்டைகளை நான் ரசிக்காமல் இருந்ததில்லை. 'இந்த மன்றத்தில் ஓடிவரும்' பாடலில் அவர் செய்யும் முகபாவத்தை அதிகம் ரசித்திருக்கிறேன். குறிப்பாக திடீரென ஒரு ஆணின் பாடல் குரல் கேட்டதும் அது யார் என்று அவர் அலைமோதும்போது செய்யும் முகபாவத்தை சொல்லலாம். ஒரு மலரைப் பறித்து தூக்கி எறிவார், வேகவேகமாக நடந்துசெல்வார், தலையை இங்குமங்கும் திருப்பி தன் சலிப்பை வெளிப்படுத்துவார். இப்படி நிறைய செய்தாலும் அவர் அண்ணன் கையை பிடித்ததும் நிற்பது தன் அண்ணன் தான், அவருக்கு தன் மனவேதனை கூறியதை கேட்டுவிட்டதே என்று அவர் செய்யும் முகசேட்டைகள், கண்களை பெரிதாக்கி, உதடுகளை குவித்து, தன் கையை பல‌முறை உதறி, குவிந்த உதட்டில் விரலை வைத்து என்று எத்தனை பாவங்களை ஒரே சாட்டில் செய்துவிடுகிறார். ஆச்சரியம்தான்.

ஆனால் இத்தனை உணர்ச்சி வெளிப்பாடுகள் முந்தைய காலகட்டங்களில் தேவையாக இருந்தது. ஹீட் என்ற படம் என நினைக்கிறேன் அதில் இரண்டு பெரிய ஜாம்பவான்கலான அல்பசினோவும், டி ரிரோவும் ஒரு காரில் பயணிப்பார்கள். ரொம்ப நேரம் அதையே காட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதில் அவர்கள் மெல்லிய, மிக மெல்லிய உணர்ச்சிகளை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். அதற்கு முன் அவர்கள் நேர்ந்த சங்கடங்களும் சிக்கல்களும் ஏற்பட்டு கடைசியாக இருவரும் ஒரே நேரத்தில் மற்றொரு சிக்கலை எதிர்நோக்கி பயணித்துக் கொண்டிருப்பார்கள். அந்த உணர்ச்சிகளைதான் சின்ன கண் அசைவுகளாலும், உதட்டு சுளிப்புகளாலும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள். இந்த இடம் தமிழ் சினிமாவில் இருந்தால் பல ப்ளாஷ் பேக்குகளை காட்டி பின்னணி இசைகளை கூட்டி பெரிய உணர்ச்சி கடலை வெளிப்படுத்தியிருப்பார்கள். தமிழ் (அல்லது இந்திய) சினிமாவில் இவைகள் தேவையாக இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.
தமிழ் சினிமாவின் பாணி நாடகத்திலிருந்து தொடங்குகிறது. அங்கு சங்கரதாஸ், டிகேசி போன்றவர்கள் மிகுந்த சிரம்பங்களுக்கிடையே நாடகங்களை நடத்தி அதற்கென்ற ஒரு பாணியை உருவாக்கி வந்தார்கள். அந்த சமயங்களில் புராணக் கதைகளும் சத்தியவான் சாவித்திரி மாதிரியான சமூக உணர்ச்சி கதைகளும் பிரதானமாக‌ நடிக்கப்பட்டன.
இந்த மாதிரியான உணர்ச்சி கதைகளும், பெரிய திரளான அரங்கத்திலும், பெரிய மக்கள் கூட்டமாக மேடையில் தோன்றி நடித்ததாலும், ஒவ்வொருவரும் ஒரு உணர்ச்சி மூலம் தன் கதாபாத்திரத்தை வெளிபடுத்த வேண்டியதாலும் நாடகங்கள் அதீத உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவையாக இருந்துள்ளன. நாடகத்தை பார்க்கும் கடைக்கோடி மனிதனுக்கு மேடையில் இருக்கும் நடிகன்/நடிகை செய்யும் உடல் அசைவுகளும் குரலும் தேவைக்கு அதிகமாக இல்லாதுபோனால் புரியாமல் போகும். ஒரு குறுகிய வட்டமான மனிதர்களுக்கு மட்டும் அவர்கள் நடிக்கவில்லை, பெரிய கூட்டமாக குறிப்பாக இரவில் நடிப்பதால் அதீதமாக நடிக்காதவரை நடிக்கவே தெரியவில்லை என்று சொல்லிவிடமுடியும்.
ஆகவே நடிகர்களே உச்சஸ்தானியில் பேசவும், அதிகமாக முகபாவங்களை காட்டி நடிக்கத்தார்கள். சிவாஜியும், எம்ஜியாரும் ஆரம்பகால படங்கள் மட்டுமல்ல கடைசிகட்ட பட‌ங்களில்கூட அப்படிதான் நடித்தார்கள். முதல் மரியாதை படத்தில் மட்டும் சிவாஜி அதிகமாக அடக்கி இயல்பாக ஒரு சாதாரண மனிதரின் நடைஉடையில் நடித்தார். மற்ற எல்லா படத்திலும் அவர் ஜட்ஜாக நடித்தாலும சிவாஜியாகவே தெரிந்தார்.
நாடகங்களில் நடித்துவிட்டு சினிமாவிற்கு வந்த அத்தனை நடிகர்களும் நடிகைகளும் தங்கள் பாத்திரத்திற்கான உணர்ச்சிகளை அதிகம் காட்டியதோடு அதுவே சிறந்த நடிப்பு என்று நம்ப வைத்தார்கள். விகே ராமசாமி, மேஜர் சுந்தராஜன், குலதெய்வம் ராஜகோபால் என்று அத்தனை கலைஞர்களையும் சொல்லாம். கேஆர் விஜயா நாடகங்களில் கொஞ்சமே நடித்திருந்தாலும் (அல்லது அதை பார்த்து வளர்ந்து சினிமாவில் வந்தவரானதால்) அதீத உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார் என்று தோன்றுகிறது.
நாடகபாணி நடிப்புதான் சிறந்தது என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால் ஆங்கில, மற்றும் இந்தியாவின் மற்ற மொழிகளில் குறிப்பாக வங்காளம், கன்னட, மலையாள மொழிப் படங்களில் நாடக்பாணியை விட்டு வெளியே வந்து உண்மையான நடிப்பை வெளிப்படுத்தும் படங்களை எடுக்கிறார்கள். அதே வேளையில் அவர்களின் நாடகங்களில் மேற்ச்சொன்ன அதீத நடிப்பை வெளிப்படுவதையும் கவனித்திருக்கிறென். ஒரு ஆங்கில நாடகத்தை பார்த்தபோது அப்படிதான் இருந்தது.
தமிழகத்தில் நாடகத்தை மீண்டும் ஒரு நல்ல நாடக அனுபவத்திற்காக பார்க்க தலைப்படும்போது நம் சினிமாக்களும் தங்கள் நாடகபாணியை விட்டுவிடுவார்கள் என நினைக்கிறேன்.

No comments: