Sunday, November 22, 2015

பட்டிமன்றம்


விடுமுறை நாட்களில் தொலைக்காட்சியில் முக்கியமாக பார்க்கப்படுவது பட்டிமன்றம்தான். மற்ற நாட்களில் இந்த பட்டிமன்றம் நினைத்துப் பார்க்கபடுவதில்லை.. மற்ற நாட்களில் ஒளிப்பரப்பினாலும் பார்க்கமாட்டார்கள். ஏன் விடுமுறை நாட்களில் மட்டும் பட்டிமன்றம் பார்க்கப்படவேண்டும்? மற்ற நாட்களில் ஒளிபரப்பானால் அவைகளுக்கு பெரிய மரியாதை இல்லை. இன்றைக்கு பட்டிமன்றம் ஒரு வேடிக்கையாக மட்டுமே பார்க்கப்படுகிறது என நினைக்கிறேன். அதிலிருந்து வரும் எந்த கருத்துகளுக்கு அவர்களுக்கு தேவையாக இல்லை. விடுமுறைநாட்களில் சிரித்து மகிழ்ந்திட ஒரு சிரிப்பு நிகழ்ச்சியாக மற்ற கமெடி நிகழ்ச்சிகளைவிட சிறந்த காமெடிக்கு இதை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். அன்றைய தினம் குடும்பத்தோடு சிரித்து அன்றைக்கே மறந்துவிட ஒரு காமெடி நிகழ்ச்சியாக இன்று மாறிவிட்டது.
முந்தைய நாட்களில் கோவில் திருவிழா, கிராம விழா, தெருமுனை, பள்ளிகளில், கல்லூரிகளில் என்று ஒவ்வொரு முக்கியமான சமயங்களிலும் பட்டிமன்றங்கள் இருந்தன. ஒருவகையில் நாம் பெருமைபட்டுக்கொள்ளலாம். தமிழகத்தில் நடந்த இந்தபட்டிமன்றங்களைப் போல மற்ற பகுதிகளில் நடந்ததில்லை. உண்மையில் டிவியில் காட்டப்படும் பட்டிமன்றம்விட ஒரிஜினம் பட்டிமன்றத்தை முற்றிலும் வேறானது. பழைய பட்டிமன்றங்களில் பேசப்படும் கருத்துக்கள் சிறந்த பேச்சாளர்களால் பேசப்பட்டு அதற்கென்று உருவாகியிருந்த மக்கள் கூட்டத்தால் ரசிக்கப்பட்டவைகள்.

கம்பன் கழகம் போன்றும் மற்ற அமைப்புகளால் உருவாக்கப்பட்ட பேச்சரங்கள் தமிழகம் முழுவதும் ஒரு சமயம் பரவியிருந்ததாக் அறியப்படுகிறது. அவற்றிற்கென்று பேசப்படும் பேச்சாளர்களும் பெரியபார்வையாளர் கூட்டமே இருந்தது. பேசுபொருள் இலக்கியம் சார்ந்ததாக இருந்தது. இந்தியாவில் மற்ற எந்த மாநிலத்திற்கு இல்லாத அளவு தமிழகத்தில் செவிவழிக் கல்வியாக இந்த பட்டிமன்றங்கள் பயன்பட்டுள்ளன. பட்டிமன்றங்களை தொடர்ந்து கவனித்த ஒருவர் நல்ல ரசனையை தன் வாழ்வில் பெற்றுவிடமுடிந்தது. சுதந்திர போராட்ட காலங்களில்கூட இந்த அமைப்புகள் சிதையாமல் இருந்ததாக தெரிகிறது. அந்த அளவிற்கு மக்களிடம் நல்ல செல்வாக்குடன் இருந்திருக்கின்ற இந்த பட்டிமன்றங்கள்.
ஆனால் திராவிட கட்சிகள் இந்த பட்டிமன்றங்களை பயன்படுத்த ஆரம்பித்ததும் அதன் முகம் மாறத் தொடங்கிவிட்டது. எளிய மக்களை இதில் சேர்க்கும் வண்ணம் சிரிப்பு அரங்கங்களாக கொஞ்சம் கொஞ்சமாகமாறி பின் தொலைக்காட்சிகளில் வெறும் சினிமா, குடும்பம் சார்ந்த வேடிக்கைக் காட்சி பொருளாக மாறிவிட்டது. மெகா தொலைக்காட்சியில் காட்டப்படும் நேரடியான சில நல்ல பட்டிமன்றங்கள் எந்த எடிட்டிங் இல்லாமல் லைவாக காட்டபடுவதை தவிர மற்ற பட்டிமன்றங்கள், பேச்சரங்கங்கள் அன்றைய தினசந்தோஷத்திற்காக மட்டும் புனையப்படுபவைகள். இவற்றிலிருந்து மக்கள் பெறுவது வெறும் சிரிப்புகள்தான். எந்த புதிய செய்திகள் இல்லாமல் சற்று மேம்பட்ட ரசனைக்குரியவர்களுக்கு தேவையான எதுவும் இல்லாமல் மிமிக்ரி நிகழ்ச்சியை போன்றே இதுவும் புனையப்படுகிறது.
முந்தைய காலங்களில் தமிழகத்தில் மிக நல்ல ரசனைக்கு பயன்பட்ட பட்டிமன்றங்கள் இன்று வெறும் சிரிப்பு நிகழ்ச்சியாக மாறிவிட்டதை யாரும் பண்டிகைக் காலங்களில்கூட பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

No comments: