Friday, November 20, 2015

நான் சிரித்தால் தீபாவளி



பண்டிகைகளில் தலையாயது தீபாவளியாகத்தான் இருக்கும். இந்தியாவில் இந்துக்களுக்கு மட்டுமல்ல மற்ற மதத்தவர்களுக்கும் தீபாவளி முக்கிய நிகழ்வாக இருக்கிறது. தமிழகத்தில் பொங்கலைவிட, என்னதான் தமிழர் பண்டிகையாக இருந்தாலும், தீபாவளி ஒரு படி மேலேதான் இருக்கிறது. உறவுகளில் புது துணி எடுத்துக் கொடுப்பது, பண்டிகைப் பணம் கொடுப்பது என்று நடப்பவைகள் எல்லாம் தீபாவளியில் தான் இருக்கும். நான் சிரித்தால் தீபாவளி என்று ஒரு பாடல்கூட ஆரம்பமாகிறது. தீபாவளி என்பது சிரிப்பின் ஆரம்பம் எல்லோருக்கும். எல்லா வயதினருக்கும், மேல்மட்டம் கீழ்மட்டம் என்று இது எல்லா சமூகத்தினருக்கும் பொருந்தும். ஆனால் சமீபகாலங்களில் அப்படி இல்லை என நினைக்கிறேன். முன்பு வீதி முழுவதும் மக்கள் ஒரே நேரத்தில் திரண்டு வெடிகளை வெடிப்பார்கள். வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வார்கள். இன்று அப்படி சொல்லமுடியுமா என்பது சந்தேகம். வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதில் வாட்ஸ் அப், முகநூல், மெசெஜ் என்று விரிவடைந்திருந்தாலும் ஒன்றுகூடுதல், சிரித்து மகிழுதல் எல்லாம் கிட்டத்தட்ட‌ இல்லை என்றே சொல்லலாம்.

முன்பு தீபாவளியின் போது இரவு இரண்டு மணிக்கே எழுந்து விடுவார்கள். எல்லா பலகாரங்களும் அன்று இரவுதான் செய்யவே ஆரம்பிப்பார்கள். சொஞ்சி என்ற இனிப்பு பலகாரமும், முறுக்கு பலகாரமும் அன்றைய தின முக்கிய பட்சணமாக இருக்கும். அதைத்தவிர பல்வேறு பட்சணங்கள் அவர்களின் வருமானத்தைப் பொருத்து அமைந்திருக்கும். பலபேர்களுக்கு அதற்கு முந்தைய நாள்தான் பணம் கிடைத்திருக்கும். தாங்கள் செய்யும் தொழிலிலிருந்து கிடைத்திருக்கும் வெகுமதி வருமானத்தை எடுத்துக் கொண்டு அவர்கள் அன்றுதான் வீட்டிற்கு வந்திருப்பார்கள்.
தீபாவளிப் பண்டிகையை இன்று ஒரு வேகமாக கடந்துபோகும் ஒரு விடுமுறை நாளாக மட்டுமே பார்க்கபடுகிறது. அன்று அது ஒரு பெரிய நிகழ்வாக இருந்தது. ஒரு மாதத்திற்கு முன்பே உடைகள் எங்கே எடுப்பது, எங்கே தைக்க கொடுப்பது, பட்டாசுகள் என்கே வாங்குவது என்கிற பேச்சுகள் பேச ஆரம்பித்திருப்பார்கள். பொதுவாகவே வருடத்தின் ஒருமுறைதான் உடைகள் வாங்கப்பட்டிருக்கும் அதுவும் தீபாவளியாக இருக்கும். ஆனால் இன்று நினைத்தால் ஒரு கடைக்கு சென்று புதிய உடைகள் வாங்கிவிட மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஒரு வருடம் வரை காத்திருக்க வேண்டும் என்றெல்லாம் நினைப்பதில்லை. அந்த அளவிற்கு பணபுழக்கம் மக்களிடையே காணப்படுகிறது. பட்சணங்கள் வேண்டுமெனில் உடனே வீட்டில் செய்யவோ அல்லது நல்ல கடையில் அதை வாங்கிவிடவோ தயாராக இருக்கிறார்கள்.
ஒருமாதம் இருமாதங்கள் முன்பே ஒன்றைப் பற்றி யோசித்து, அதைப் பெறப்போகும் தித்திப்பை நினைத்து வாழும் வாழ்வு இன்று முடிந்துவிட்டது. பெரிய மனித கூட்டம் தங்கள் உறவுகளால் ஒன்றாக கூடும் அல்லது ஒருமுறையேனும் சந்திக்கும் நிலையிலிருந்து பல வருடங்கள் சந்திக்க முடியாமல் வேவ்வேறு இடங்களில் வாழ்பவர்கள் தான் இன்று அதிகமாக இருக்கிறது. அதிலும் ஒரு குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே இருப்பதால் அதிக பேச்சுகள்கூட தேவையில்லாமல் இருக்கிறது.
நாஸ்டால்ஜியா எனப்படும் வீட்டு அல்லது பழைய நினைவுகள் நினைத்துப் பார்க்கும் அளவிற்குகூட நேரம் இல்லாமல் மக்கள் வேவ்வேறு இடங்களில் வாழ்கிறார்கள். வெவ்வேறு நாடுகளின் ஒருவரின் குழந்தைகள் தங்கள் குடும்பத்துடன் வாழ்வது ஒருபுறம் இருக்கும்போது ஒரே குடும்பத்தில் உள்ள கணவன் மனைவுயும் கூட வேவ்வேறு இடங்களில் அதுவும் தீபாவளி சமய‌ங்களில் வாழ்வதும் நிக்ழந்துக் கொண்டிருக்கிறது.
மனைவியை பிரிந்து வெளிநாடுகளில் வாழும் கணவன்கள் தங்கள் மனைவியையும், குழந்தைகளை பிரிந்து வாழ்வது எவ்வளவு பெரிய அபத்தம் என்று நாம் சொல்லிக் கொண்டாலும் பின்னாளில் குடும்பத்தின், குழந்தைகளின் வளர்ச்சிக்குதானே என்று சொல்லப்படுவதில் இருக்கும் நம்பிக்கையை எப்படி புரிந்துக் கொள்வது என தெரியவில்லை.
தீபாவளி இன்று முக்கியமான நிகழ்வே அல்ல. ஒருவர் பணம் சம்பாதித்தபின் அதை ஒவ்வொரு நாளும் தீபாவளியாக அனுபவிக்கும் நாளுக்காக தங்கள் நேரம், இளமை, நடப்பு சந்தோஷங்களை இழக்க தயாராக இருக்கிறார்கள் மக்கள்.

No comments: