Thursday, November 19, 2015

நாத்தீகம் vs. ஆத்தீகம்நாத்தீகத்தை பின்பற்றுபவர்கள் சிறந்த மேதைகளாகவும், மிகுந்த நம்பிக்கைவாதியாகவும் நினைப்பதும், ஆத்திகத்தை பின்பற்றுபவர்கள் சிறந்த பழமைவாதியாகவும், அசமஞ்சமாகவும் பயந்த சுபாவம் உடையவனாகவும் நினைப்பதும் நம் எல்லோரிடமும் இருக்கிறது.
நான் கல்லூரியில் படித்த காலத்தில் என்னுடன் படித்த ஒருவர் மீகத்தீவிரமான நாத்தீக நிலைப்பாட்டை கொண்டிருந்தார். பொதுவாக கல்லூரி காலங்களில் கடவுள் மறுப்புகொள்கையில் தீவிரமாக இருந்திருப்போம்தான். நானும் அப்படியானவனாக இருந்தேன். ஆனால் அந்த நண்பர் நிஜமாகவே தீவிரமான எதிர்நிலையும், அது குறித்த தெளிவான பார்வையும், அதற்கு தேவையான‌ புத்தகங்களும் படித்திருந்தார். பெரியார் ஈவேராவின் ஓரிரண்டு புத்தகங்கள் அவரிடம் இருக்கும். தீவிரமான முகத்தோடும் மனநிலையோடும் காணப்படுவார். எந்நேரமும் கல்லூரியின் பாட‌புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பார். எந்த விஷயத்திற்கு அவருக்கென்று ஒரு பார்வை இருக்கும். அதே வேளையில் எந்த சூழ்நிலையிலும் அது மாறாத தன்மையுடன் இருக்கும். எந்த விஷயத்தை குறித்தும் அவரிடம் பேசவோ விவாதிக்கவோ முடியாது அவருடன் பேசிய ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குபின் இது புரிந்துவிடும். அதை மிகதாமதமாகத்தான் புரிந்துக்கொள்ளமுடிந்தது. முன்பே ஒரு விஷயம் குறித்த‌ அதன் நிலைப்பாட்டை எடுத்திருப்பார். அத்தோடு அவருடன் விவாதிப்பதும் வீணாதாகவும், ஒரு கொடுக்கல் வாங்கலாக ஒரு நட்புமுறை முறையில் அல்லாமலும் இருக்கும்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தீவிர கடவுள் கொள்கை கொண்ட ஆத்திகரும் இப்படிதான் இருப்பார் என தோன்றுகிறது. ஆனால் அவர்கள் தங்களை சற்று சகிப்புதன்மை உடையவர்கள் என்று காட்டிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. அவர்களுக்கு கடவுள் என்கிற பிம்பம் ஒரு செயற்கையான வஸ்துவாக, அதை மிக நெருக்கமான உணர்ந்தவன் என்கிற அகந்தையில் ஒரு சின்ன‌ அறியாமையை உணர்த்துபவராகவும் இருப்பார்..
நாத்தீகம் ஆத்தீகம் நிலைப்பாடுகளைக் கடந்து கடவுள் குறித்த நம்முடைய தேடல்கள் ஒரு வயதில் முடிவுறுகிறது என நினைக்கிறேன். மிகச்சிலரை தவிர அனைவருமே ஒன்றுபோல சமனமடைந்து ஒரு நடைமுறை சிக்கல்களுக்கு ஒத்துப்போய் தேவைப்படும்போது மட்டுமே வெளிப்படும் ஒரு கொள்கையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். ஒன்று அது நாத்திகமாக இருக்கும் அல்லது ஆத்திகமாக இருக்கும்.
எனக்கு முன்னாலிருந்தே சொல்லப்பட்டிருக்கிற அறிவுறுத்தப்பட்டிருக்கிற கடவுள் என்பதை நான் ஏன் மறுக்க வேண்டும் அது முன்னோர்களுடையது அதை மறுக்க போதுமான தெளிவான ஒன்று கண்முன் தெரியும் வரை அதை ஒத்துக்கொள்ளலாம் என்கிற நிலைதான் பொரும்பான்மையான மனநிலை.
அதில் பலர் தன் சார்ந்த கொள்கைக்காக, தங்கள் மக்களுக்காக, தன் தலைவனுக்காக நாத்தீகம் என்கிற நிலைப்பாட்டை எடுத்திருப்பார்கள். பொதுவெளியில் எந்த தீவிர புரிதல்கள் இல்லாமல் வெறும் மேலோட்டமான கருத்துகளை அல்லது தங்களுக்கு சொல்லப்பட்ட கருத்துக்களை திருப்பி சொல்வதில், மறுகேள்வி கேட்பவரை மடக்குவதில் வெற்றி பெற்றவர்களாக இருப்பார்கள் நாத்தீகர்கள்.
இந்த இரண்டு நிலைகளைக் கடந்து மிக சொற்பமானவர்களே தீவிரமனநிலையுடன் ஆத்திகத்தையும் நாத்திகத்தையும் அணுகுபவர்கள் அல்லது புரிந்துக் கொண்டிருப்பவர்கள்.
நாத்தீகத்தை அல்லது ஆத்தீகத்தை தங்கள் பார்வையாக கொண்டிருக்கும் ஒருவர் மிகத் தீவிரமாக அதை ஆதரிப்பவர்களாக இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாடு அந்த பார்வைக்கு எதிரானதாக தோன்றுகிறது. முழுவதும் நாத்தீகராக/ஆத்தீகராக இருபவர்கள் எந்த வளர்ச்சியையும் தங்கள் வாழ்வில் பெறவில்லை என நினைக்க வைக்கிறது. இந்தியாவில் ஒருவர் எதிர் எதிர் நிலைப்பாட்டை தங்கள் கொள்கையாக எடுத்துக்கொள்வதற்கு நிறைய இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. பிறநாடுகளில் இந்த அளவிற்கு சுதந்திரமாக தங்கள் கொள்கைகளை குறித்து பேசமுடிவதில்லை. தீவிர நாத்தீகர்/ஆத்தீகராக தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் இருந்தால் அவரது மனமுதிர்ச்சியை சந்தேகப்படவேண்டும் என நினைக்கிறேன்.
ஆனால் துரதிஷ்டவசமாக ஒருவர் ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டால் அவரே கூட அதை மாற்றி சொல்லிக்கொள்ள முடியாது. அவரோடு இருப்பவர்கள் அவரை எந்த அளவிற்கு கீழாக‌ கொண்டு சென்றுவிடுவார்கள். சிலர் இதனால் தற்கொலை செய்துக் கொண்டதுகூட நடந்திருக்கிறது.
இந்தியாவில் தீவிர நாத்தீகம் அல்லது ஆத்தீகம் சாத்தியமில்லை. ஏதோ ஒரு வகையில் கொஞ்சம் அப்படி இப்படி என்று மாறி மாறி பின்பற்றுபவராகதான் இருப்பார்கள். ஒரு ரஷ்ய எழுத்தாளர் எழுதிய கடவுளை நம்ப 7 காரணங்கள் என்கிற புத்தகத்தை முன்பு படித்திருந்தேன். இரண்டு தீவிர பற்றாளர்களும் தலைசுற்றி கீழே விழுந்துவிடுவார்கள்.

No comments: