Monday, August 31, 2015

விபத்து

இன்றுகாலை ஒகேனகலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறுபேர் இறந்த செய்தியை படித்துவிட்டு அலுவலகம் வந்துக் கொண்டிருந்த வழியில் சற்று நேரத்திற்கு முன்னால்தான் மூன்று சக்கர மினிடெம்போ லாரியும் ஒரு மோட்டார் பைக்கு மோதிக்கொண்டிருந்தன லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தை வைத்து பார்க்க என்ன நடந்தது என்பதை கணிக்க முடிந்தது. மினிடெம்போவிற்கு பெரிய சேதம் இல்லை. அதன் டூல்பாக் மட்டும் லேசாக ந‌சுங்கி இருந்தது. ஆனால் பைக்கில் முன்சக்கரம் இரண்டாக மடிந்துவிட்டது, அதில் வந்தவருக்கு ஊமைஅடி. லேசாக அழுது கொண்டிருந்தவரை ஓரமாக உட்கார வைத்திருந்தார்கள்.
விபத்துகள் ஒரு குறிப்பிட்ட இடைவெளிகளில் நம் கவனத்திற்கு வந்து கொண்டேதான் இருக்கின்றன. சில நம் கவனத்திற்கு வராததற்கு காரணம், அது அத்தனை கொடூரம் இல்லாததாக இருக்கும். கொடூரங்கள் நமக்கு பிடித்திருக்கின்றன. கொடூரமான காட்சிகளை டிவியில் பார்ப்பதும், சாலை விபத்துகளின் தொகுப்புகளை யூடியூபில் பார்ப்பதும் நம் மனதில் உள்ள கொடூர ஆசைகளை திருப்திபடுத்ததான்.


நான் வேலை தேடிக்கொண்டிருந்த காலத்தில் பெயர் தெரியாத ஒருவருக்கு நடந்த் விபத்து என்னை புரட்டி போட்டுவிட்டது. பேருந்து நிறுத்தத்தில் என் பக்கத்தில் நின்றிருந்த பதின்பருவன் பையன் திடீரென நினைத்துக்கொண்டவனாக வேகம் கொண்டிருந்த ஒரு பேருந்திற்கு ஓடி சென்று ஏற கால் இடறி பின் சக்கரத்தில் விழுந்துவிட்டான். டிரைவர் பார்த்து பிரேக் அடித்தாலும் அவன் கால்களை ரோட்டோடு வைத்து தேய்த்து வண்டி நகர்ந்து சென்றதை பார்த்து மக்கள் அலறிவிட்டார்கள். சிறுவனை இழுத்துவந்து ஓரத்தில் உட்காரவைத்தாலும் அவனால் நடந்தது என்னவென்று புரிந்து கொள்ள முடிய‌வில்லை. இனி அவன் கால்கள் பயன்படப்போவதில்லை என்பதை புரிந்துக் கொள்ள அவனுக்கு சற்று நேரமாகியது.
விபத்துகள் கணநேரத்தில் நிகழ்ந்துவிடுகின்றன். அவைகளை புரிந்துகொள்ள முடிவதில்லை. எவ்வளவு கவனமாக ஒருவர் இருந்தாலும் விபத்து அவர் கைகளை மீறித்தான் நடக்கிறது. விபத்து நடந்ததும், தங்கள் தவறு இல்லை என்றாலும் பாதிக்கப்ப‌ட்டவர் குற்றஉணர்ச்சியால் குமைந்து போகிறார். பாதிக்கப்பட்டவர்களை வெறுமனே வேடிக்கைப் பார்பவர்கள் அதிகம். சட்டென கூட்டம் கூடி எப்படி நடந்தது இந்த விபத்து என்று கேள்வி கேட்டுக் கொண்டிருப்பார்கள். இவனுவளுக்கு இப்படிதான் நடக்கும், என்று கடைசியாக பொன்மொழி உதிர்ப்பார்கள்.
தில்லியில் ஒருமுறை ஸ்கூட்டரில் வந்தவர் நடுவில் இருந்த கல் தடுக்கி கிழே விழுந்து மண்டையில் அடிப்பட்டுவிட்டது. இரவு 7 மணி இருக்கும். அவரை சுற்றி கூட்டமாக மிக நெருக்கமாக மக்கள் நிற்கிறார்கள். யாரும் எதுவும் அவருக்கு உதவி செய்யவில்லை. அந்த பக்கமாக வந்த நான் பக்கத்தில் இருந்த பாதுகாப்பு போலிஸ் அறைக்கு சென்று செய்தி சொல்ல ஓடினேன். என்றும் திறந்திருக்கும் அந்த அறையில் அன்று யாரும் இல்லை.
பொதுவாக் விபத்து நடந்ததும் தலையில் அடிப்பட்டவரை அவரின் தலையை லேசாக தூக்கிபிடித்திருந்தால் ரத்தபோக்கு நின்று அவர் பிழைத்துக்கொள்ள நிறைய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியா முழுவதும் உள்ளவர்களின் தேசிய குணமாக இதை சொல்லலாம். வேடிக்கைப் பார்ப்பது அந்த மனிதர் எப்படி இறக்கிறார் என்று ஒவ்வொரு நொடியாக பார்ப்பது.
என்ன பாவம் பண்ணினாரோ இப்படி செத்துட்டாரே என்று முடிப்பதைவிட அவருக்கு உதவலாம் என்று ஏன் யாரும் வரவதில்லை. ஆனால் இதையும் தாண்டி உண்மையான ஒரு முகம் மனிதர்களுக்கு இருக்கிறது. எப்படியெல்லாம் அழிச்சாட்டியம் பண்ணிணாங்க இப்படிதான் சாவானுவோ என்பது. யாரா எதையோ செய்ய எங்கோ அடிப்பட்டவரை இப்படி சொல்வதும் உண்டு.
முதலில் நான் சொன்ன அந்த பைக்காரரின் தவறுகளைப் பற்றி நிறைய பேசிக் கொண்டிருந்தது கூட்டம். கூடவே மினிடெம்போவின் தவறுகளை மற்றஒரு சிறிய கூட்டம் பேசிக் கொண்டிருந்தது. ஐந்து நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. அவரை அழைத்துக்கொண்டு அவர் உடைந்த பைக்கை அங்கேவிட்டுவிட்டு பறந்த‌து ஆம்புலன்ஸ். கூட்டம் மெல்ல கரைந்து போனது. மழைக்காக நின்று கோட்டை அணிந்துக் கொண்டே இவைகளை கவனித்துக் கொண்டிருந்தேன். தவறவிடாமல் கவனித்தது மற்றொன்றும் இருந்தது. அந்த பைக்காரரை ஆம்புலன்சில் ஏற்றியபோது அவர் முகத்தில் தெரிந்த குற்றஉணர்ச்சி.

No comments: