Wednesday, April 29, 2015

சென்னை vs. பெங்களூர்

பெங்களூரு நகரம் முன்பு மதராஸ் மாகாணத்துடன் இருந்தது. அப்போது இந்தியாவில் நான்கு பெரிய நகரங்கள் மட்டும்தான் இருந்தன, மும்பை, தில்லி, கல்கத்தா, சென்னை. மொழிவாரி மாநிலங்களாக பிரிந்தபின்னும் இந்த நான்கு நகரங்களுக்கு அடுத்த நிலையில் இருந்த பெங்களுர், அகமதாபாத், ஹைதராபாத் போன்ற நகரங்கள் பெரியஅளவில் வளர்ச்சி பெற்றோ அல்லது மக்கள் கூடும் இடமாக உடனே மாறிவிடவில்லை. கொஞ்சம்கொஞ்சமாக இந்த மூன்று நகரங்களும் தங்களுக்கேயுரிய தனித்தன்மையுடன் வளர்ச்சிபெற்று அந்ததந்த மாநிலத்தில் இருக்கும் தொழில்களையும் வளர்ச்சி பெறச் செய்தன. முன்னாலிருந்தே இருக்கும் பெரிய நகரங்களான மும்பை, தில்லி, கொல்கத்தா, சென்னை நகரங்களும் வளர்ச்சி பெற்று மக்கள் தொகையில், தொழில்வளர்ச்சியில், பிடிபி உயர்வில் என்று எல்லாவகையிலும் வளர்ச்சிபெற்று வந்தன.

ஆனால் இன்றைய தேதியில் பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், புனே போன்ற நகரங்களின் வளர்ச்சி விகிதம் சென்னையைவிட அதிகம். முதல் மூன்று நகரங்கள் தொடர்ந்து வளர்ச்சியை அடைந்தாலும், சவலைப் பிள்ளை போல் சென்னை அப்படி வளர்ச்சியடையவில்லை. அதற்கு நம் அரசியல் வாதிகள்தான் காரணம் என நினைக்கிறேன்.

Saturday, April 25, 2015

கோர்ட் (மராட்டி சினிமா)


கோர்ட் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைக்காமல் இருந்ததிருந்தால் அந்த திரைப்படத்தை பார்த்திருப்பேனா தெரியவில்லை. பொதுவாக திரைப்படங்களை பார்க்கும் ஆர்வம் அற்றவன் நான். திரைப்படத்திற்கு ஒரு மணி நேரம் முன்னமே தயாராவதும் அதற்காக காத்திருக்க வேண்டியதில் இருக்கவேண்டிய பொறுமையே காரணம்.

மராட்டியில் பல‌ நல்ல படங்கள் உள்ளன. இந்தி படங்களில் உள்ள சினிமாதனங்களை முடிந்தவரை நீக்கி யதார்த்த சினிமாக்களை மராட்டியில் உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்று சொல்லலாம். மராட்டிய மக்களே இந்தி சினிமா பிரியர்களாகதான் இருக்கிறார்கள். அவர்களை மராட்டி படங்களை பார்க்கவைக்க தரமான படங்களைதான் செய்யவேண்டியிருக்கிறது. முன்பு காமெடி கலந்த கவர்ச்சி படங்களே அதிகம் வந்தன. சிறுவர்கள் பின்னனி கொண்ட கதைகள், வயதானவர்கள் பின்னனி கொண்ட கதைகள் அதிகம் வந்துள்ளன என்றாலும் அவைகள் முதிர்ந்த பருவத்தினருக்கானவைகள் தான். கோர்ட் அப்படிப்பட்ட முதிர்ந்த பார்வையாளர்களுக்கானது. வீதிகளில் சென்று கிராமிய பாடல்களை தலித் மக்களுக்காக சேரிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பாடுபவருக்கு அந்த வாழ்க்கைக்கு சம்பந்தமேயற்ற மனிதர்களால் ஏற்படும் பிரச்சனைகள் இந்த கோர்ட்.

Thursday, April 23, 2015

சுஜாதா விருதுகள் 2015

ஒவ்வொரு ஆண்டும் சுஜாதா விருதுகள் வெளியிடப்படுகின்றன. வந்த மற்ற ஆண்டுகளில் அவ்விருதுகளைப் பற்றியும் பெற்றவர்களைப் பற்றியும் பாராட்டி அல்லது விமர்சித்து எதுவும் எழுதியதில்லை. இந்த ஆண்டு அப்படி விடமுடியவில்லை. எதாவது சொல்லிவைப்போமே என்று தோன்றுகிறது. முக்கிய காரணம் நான் விரும்பும் எழுத்தாளர்களான பாவண்ணன், போகன், சமஸ் போன்றவர்களுக்கு கிடைத்திருப்பது ஒருகாரணம். மற்றவர்களை விரும்புவதில்லை என்று சொல்லமுடியாது. நான் சரியாக கவனித்ததில்லை. சுரேஷ் கண்ணன், சந்தோஷ் நாராயணன் இருவரின் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன் அல்லது கடந்துபோயிருக்கிறேன். சுரேஷை சினிமாவை எழுதுவதால் கவனிக்காமல் விட்டிருக்கலாம். சந்தோஷின் எழுத்துக்களை விகடனை பிரதிபலிப்பதால் விட்டிருக்கலாம். இப்போது இருவரின் எழுத்துகளை பார்க்கும்போது இளமையாகவும் புதுமையாகவும் இருந்து ஆச்சரியப்படுத்துகிறது. இதற்காகவே விருதுகளை அளிக்கலாம் போலும்.

Wednesday, April 22, 2015

கருத்துக்களை கருத்துகளால் வெல்லுதல்

கருத்துக்களை கருத்துக்களால் வெல்லுதல் வேண்டும் என்று சொல்லப்படுவதை நாம் பலசமயங்களில் பார்த்திருக்கலாம். டிவி விவாதங்களில், முகநூல் கமெண்டுகளில், தனிநபர் பேச்சுகளில் என்று பல்வேறு சமயங்களில் இப்படி ஒருவர் சொல்வதைக் கேட்டிருக்கலாம். தொலைக்காட்சி விவாதங்களை தினம் பார்க்கும் ஒருவருக்கு மனநோயாளியாக மாறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் என பல்வேறு சூடான விவாதங்களின் போது நினைத்துப்பார்த்திருக்கிறேன்.

கருத்து என்றாலே அது பேச்சு வடிவில் இருக்கும் ஒரு கருத்தாக்கம்தான். அது பேச்சுவடிவில் மட்டும்தான் இருக்க முடியும். ஒரு கருத்தை வெல்ல மற்றொரு கருத்தால் தான் முடியும் மாறாக செயலில் செய்ய அதில் ஒன்றுமே இல்லை. பன்னெடுங்காலமாக நாம் கருத்தை கருத்தால் தான் வென்றிருக்கிறோம் அல்லது தோல்வியை ஒப்புக்கொண்டிருக்கிறோம். தோல்வியை ஒப்புக்கொள்ளபடுவதை தவறாக பார்க்கப்பட்டதில்லை. ஒரு நூறு ஆண்டுகளுக்கு முந்தைய பழைய பல்வேறு விவாதங்களிலும் சரி ஆண்டுகளுக்கு முந்தைய பல விவாதங்களிலிலும் சரி இது தான் நடந்திருக்கிறது.

Saturday, April 18, 2015

கட்டுச்சோறுபழைய சினிமாக்களில் கட்டுச்சோறு எடுத்துச் செல்வதாக காட்சிகள் வரும். எந்த பயணத்தின்போதும் அல்லது ஒருவர் பயணம் கிளம்புகிறார் என்றாலே அவர் சோறு வைத்த தூணியை நாலு முனையையும் சேர்ந்துக்கட்டி தோளில் வைத்து இருப்பார் அல்லது ஒரு குச்சியில் வைத்து அதை தோளில் பிடித்திருப்பார். (உள்ளே இருக்கும் பொருட்கள் சிந்தாமல் நேராக இருக்கும் என்பதால்.)

முன்பு வெளியே உணவுகள் கிடைக்காது. அவரே தயாரிக்க வேண்டியிருக்கும் அல்லது வேறு ஒருவரிடம் கேட்க வேண்டியிருக்கும். விலைக்கு கிடைக்காது. கொஞ்சம் கொஞ்சமாக் காலம் மாறி நல்ல உணவுகள் வெளியில் கிடைக்க ஆரம்பித்தன. சில இடங்களில் தரமான உணவுகள் மலிவு விலையில் கிடைத்தன. மேலும் பல அன்ன சத்திரங்கள் எல்லா இடங்களிலும் இருக்கும். அதை பெரிய தர்மமாக நினைத்து செய்தவர்கள் உண்டு.

இன்று அப்படி அல்ல. எல்லா இடங்களிலும் உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. சொல்லப்போனால் வீட்டில் தயாரிக்க முடியாதவைகள் கூட ஸ்பெசல் என்று கூறி பல்வேறு வகைகளில் கிடைக்கின்றன. விலைக்குதான் கிடைக்கின்றன என்றாலும் தரமானவை இல்லை என்று தாராளமாக சொல்லலாம். வெளியில் உணவு உண்பதை பெரும் தயக்கத்துடன் தான் செய்ய வேண்டியிருக்கிறது.

Saturday, April 11, 2015

ஆட்டிசம்


ஆட்டிசம் என்றால் என்ன என்பதை பற்றி சமீபகாலத்தில்தான் பலர் அறிந்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒவ்வொருவர் குடும்ப வகையில் அல்லது தன் அக்கம்பக்கதில் உள்ளவர்களில் வீடுகளில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் என்ற குறைபாடு இருப்பதை கொண்டு அதை அறிந்திருப்பார்கள். ஆனால் ஆட்டிசம் என்பது ஒரு வியாதி அல்ல. மூளை செயல்திறனில் உள்ள ஒரு குறைபாடு மட்டும்தான் என்பது யாருக்கும் தெரிந்திருக்காது. ஆட்டிசம் ஸ்பெக்ரம் டிஸ்சாடர் (ASD) எனப்படும் ஒரு பொதுகுறைப்பாட்டின் ஒரு பகுதி மட்டும்தான் ஆட்டிசம். ஆனால் எல்லாவற்றையும் ஆட்டிசம் என்றே பொதுவாக நாம் குறிப்பிடுகிறோம்.

மூளைவளர்ச்சியின்மைக்கும் ஆட்சிசம் குறைபாட்டிற்கும் நிறைய வித்யாசம் இருக்கிறது. இரண்டும் பிறவியிலேயே இருப்பது தான். ஆனால் மூளைவளர்ச்சி குன்றியவரும் ஆட்சிசம் குறைபாடு உள்ளவரும் மூற்றிலும் வேறானவர்கள். ஆட்சிசம் குறைப்பாடு உள்ளவர்கள் அக்குறைபாடு உள்ளதே இரண்டு வயதில்தான் தெரிய ஆரம்பிக்கும். சாதாரண நாம் நினைக்கும் தினப்படி வேலைகளை தங்களே செய்ய முடியாது. அதாவது செய்யும் திறன் அற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் வேறு சில மூளைவளர்ச்சி குன்றியவர்களிடம் இல்லாத அதீத திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

Tuesday, April 7, 2015

குழந்தை மனம்

குழந்தைகள் ஒழுங்கை விரும்புவதில்லை. ஒழுங்காக அடுக்கிவைக்கப்பட்ட பொம்மைகள், பாத்திரங்கள், துணிகள் என்று எதையும் அவர்கள் தங்கள் இஷ்டம்போல கலைப்பதையும், தூக்கி எறிவதையும் விரும்புகிறார்கள். ஒழுங்குபடுத்தும் ஒவ்வொரு சமயமும் கலைத்துக் கொண்டே யிருக்கிறது குழந்தை. அப்படி செய்வது ஒரு தொடர் பயற்சிப்போல்தான். இரவில் விளையாடிவிட்டு தூங்கும் குழந்தை காலை எழுந்ததுமே அந்த இடத்திற்கு சென்று விளையாட்டை தொடர ஆரம்பித்துவிடும். பல மணிநேரம் எந்த ஒரு இடையூரும் இல்லாமல் குழந்தைகளால் தொடர்ந்து ஒரே காரியத்தில் ஈடுபடமுடிகிறது.
காதுகுத்தும்போது ஒரு குழந்தை அந்த அதிர்ச்சியில் பலமாக அழுது வாந்தி எடுத்துவிட்டது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு குழந்தை தன‌க்கும் காது குத்தவேண்டாம் என்றது ஏன் என்று கேட்டபோது தனக்கு வாந்தி வ்ரும் என்று காரணம் கூறியது. அன்றுமுழுவதும் அந்த குழந்தையை உனக்கும் காது குத்தப்படும் என்று பயமுறுத்திக் கொண்டே இருந்தது கூட்டம். ஒரு குழந்தைக்கு தர்க்கஒழுங்கு ஒன்று மனதில் ஏற்ப்பட்டுவிடுகிறது. எதுவும் மிக எளிதாக தங்களின் அனுபவ பார்வைக்குள் வைத்து முடிவு செய்துவிடுவது குழந்தையின் வழக்கம்.

Friday, April 3, 2015

சுஜாதா எழுதுகிறார்

வேலையில் சேர்ந்தபோது நாங்கள் அப்ரன்டிசுகள் என்பதால் நிறைய பேச நேரமிருந்தது. எல்லாம் அன்றைய சினிமா, தினசரி காதல் விவகாரங்கள்தான். சிலர் மட்டும் வாசிப்புகளைப் பற்றி ஆர்வம் கொள்வார்கள். அதில் ஒரு பெண்ணிடம் பேசும்போது சுஜாதாவை எனக்கு பிடிப்பதில்லை எல்லாம் தெரிந்த மாதிரி எழுதுகிறார் என்றாள்.
நான் சிறுவயதிலிருந்து படிக்க ஆரம்பித்திருந்தேன். பள்ளி நாட்களிலிலேயே சுஜாதாவை படித்திருந்தேன். கிரைம்/குற்ற நாவல்களை படித்து சலித்திருந்த சமயத்தில் ஏறக்குறைய சொர்க்கம் என்ற நாவல் குமுதத்தில் வெளிவந்தது பைண்ட் செய்து வைத்திருந்ததை படித்ததில் சட்டென உலகம் வேறுபக்கம் சுழல்வதுபோல் உணர்ந்தேன். அதற்குமுன் சுஜாதாவின் கட்டுரைகள், சில மர்மநாவல்களை மாதநாவல் வரிசையில் படித்திருந்தேன். மிகவும் பிடித்துதான் இருந்தது. இப்படிகூட கதை எழுதமுடியும் அப்படியெல்லாம் கதைகள் வருகின்ற என்பதே ஆச்சரியமாக இருந்தது. அந்த வயதில் அது ஆச்சரியம்தான் சந்தேகமில்லை. ஆனால் அதில் அவர் கையாளும் வார்த்தை பிரயோகங்களும் நேரடித் தன்மைகளும் இன்றும் படிக்க‌ அலாதியானதுதான்.

Thursday, April 2, 2015

திரைக் கதாசிரியர்கள்

வாலிப வாலி என்றோரு நிகழ்ச்சி டிடியில் ஒளிபரப்பாகியது. மறுஒளிபரப்பும் அவ்வப்போது வந்துகொண்டேயிருக்கும். அதில் சினிமாப் பாடல்கள் இலக்கியம‌ல்ல என்று பேசப்படுவதை பற்றி கேட்டதும் சற்று மிகையாகவே கோபப்பட்டார். இல்லை என்று சொல்பவர் முக்கியமானவராக இருக்கவேண்டும் அவர் அவர்துறையில் சாதித்திருக்க வேண்டும் என்றெல்லாம் கூறினார். ஒரு வகையில் ஞாயமானதும்கூட என்று தோன்றியது. அதே பகுதியில் சினிமாவில் கதாசிரியர்கள்/நாவலாசிரியர்கள் வெற்றி பெறாததைப் பற்றி கேள்வி கேட்டதும் கதாசிரியர்கள்/நாவலாசிரியர்கள் சினிமாவிற்கு தகுந்த தேவையை அவர்களால் அளிக்க முடியவில்லை என்று கூறினார். நாவலை நன்றாக எழுதுபவராக இருக்கலாம் ஆனால் சினிமாவிற்கு 5 நிமிடத்திற்கு சொல்லவேண்டியதை அவர்கள் சொல்லிவிடவேண்டும் என்று கூறினார்.
சினிமா என்பது ஒரு பெரிய மீடியாவாக தமிழில் உருவெடுத்துவிட்டது. அதன் வேகம் அதிலிருக்கும் உழைப்பு எல்லாமெ அபாரமானது. கூடவே அபாயகரமானதாகவும் இருக்கிறது. பெரிய அளவில் வட்டிக்கு பணம் பெற்று போட்ட முதலை இரண்டாக எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் அதன் தயாரிப்பாளர்கள். அவர்களின் அழுத்தம் இயக்குனர்கள், நடிகர்கள் மீதும் செல்கிறது. சொல்லப்போனால் இந்த மூவருமே பெரும் மனஉளைச்சலில்தான் இருக்கிறார்கள்.

Wednesday, April 1, 2015

அசடு

அசடுகளை தினம் அல்லது ஒரு காலகட்டத்தின் எதாவது சந்தர்ப்பத்தில் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம். அவர்களின் சேட்டைகளை ரசிக்கிறோம். அவர்களின் உணர்வுகளை மதிப்பதாக பெருமை பேசி மகிழ்ச்சியடைகிறோம். என்ன காரியங்கள் செய்தாலும் அவர்களுடன் ஒப்பிட்டு பெருமிதம் கொள்கிறோம். ஒருவகையில் அவர்கள் நம் புறஉலகிற்கும், அக‌உலகிற்கு தேவையாக இருக்கிறார்கள். அவர்கள் இல்லை என்றால் நாம் நம் வாழ்க்கையை நடத்தகூட முடியாது போலிருக்கிறது. ஆனால் நாம் உணர்வதை அசடுகள் பார்ப்பதில்லை. அவர்கள் தங்கள் உலகில் வாழ்கிறார்கள். வெற்றியோ தோல்வியோ எதுவானாலும் அவர்களுடனேயே அவர்கள் வாழ்கிறார்கள்.
என் ஊரில் ஒரு அசடு இருக்கிறார். அவருக்கு எல்லாமே தோல்விதான். ஒரு நாள் டீக்கடையில் டம்ளர் கழுவுவார், அடுத்த நாள் வேறுஒரு கடையில் தண்ணீர் சுமப்பார். ஊருக்கு போகும்போதெல்லாம் அவரை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன். எப்போது மாறாத புன்னகை. வாழ்க்கையின் பொருளாதார தோல்விகுறித்த எந்த கவலையும் அவருக்கு இல்லை. கிடைத்தால் சாப்பிடப்போகிறார் இல்லை என்றால் பசியில் எங்காவது படுத்து தூங்கப்போகிறார். அதற்காக தன்மானம் குறைக்கும் எந்த செயலையும் நாம் செய்துவிடமுடியாது.