Saturday, April 25, 2015

கோர்ட் (மராட்டி சினிமா)


கோர்ட் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைக்காமல் இருந்ததிருந்தால் அந்த திரைப்படத்தை பார்த்திருப்பேனா தெரியவில்லை. பொதுவாக திரைப்படங்களை பார்க்கும் ஆர்வம் அற்றவன் நான். திரைப்படத்திற்கு ஒரு மணி நேரம் முன்னமே தயாராவதும் அதற்காக காத்திருக்க வேண்டியதில் இருக்கவேண்டிய பொறுமையே காரணம்.

மராட்டியில் பல‌ நல்ல படங்கள் உள்ளன. இந்தி படங்களில் உள்ள சினிமாதனங்களை முடிந்தவரை நீக்கி யதார்த்த சினிமாக்களை மராட்டியில் உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்று சொல்லலாம். மராட்டிய மக்களே இந்தி சினிமா பிரியர்களாகதான் இருக்கிறார்கள். அவர்களை மராட்டி படங்களை பார்க்கவைக்க தரமான படங்களைதான் செய்யவேண்டியிருக்கிறது. முன்பு காமெடி கலந்த கவர்ச்சி படங்களே அதிகம் வந்தன. சிறுவர்கள் பின்னனி கொண்ட கதைகள், வயதானவர்கள் பின்னனி கொண்ட கதைகள் அதிகம் வந்துள்ளன என்றாலும் அவைகள் முதிர்ந்த பருவத்தினருக்கானவைகள் தான். கோர்ட் அப்படிப்பட்ட முதிர்ந்த பார்வையாளர்களுக்கானது. வீதிகளில் சென்று கிராமிய பாடல்களை தலித் மக்களுக்காக சேரிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பாடுபவருக்கு அந்த வாழ்க்கைக்கு சம்பந்தமேயற்ற மனிதர்களால் ஏற்படும் பிரச்சனைகள் இந்த கோர்ட்.
 
முதலில் அவர் கைது செய்தபோது அவரால் அவர் பாடல்களைக் கேட்டு உத்வேகமடைந்து ஒருவர் தன்னை மாய்த்துக் கொண்டதாக கூறி பாடகரை கைது செய்கிறார்கள். மாய்த்துக்கொண்டவர் சாக்கடை சுத்தம் செய்பவர். தன்னை மாய்த்துக் கொள்ள அவர் சாக்கடையில் மூச்சடக்கி கிடந்ததாக சொல்கிறார்கள் போலீஸார். மொத்தம் நான்கு பேரைச் சுற்றியகதைதான் இது. பாடகர், அவர் வக்கீல், அரசு வக்கீல், ஜட்ஜ். இந்த நான்கு மனிதர்களின் வாழ்க்கை அவர்கள் சந்திக்கும் இடங்களும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் இதில் காட்டப்படுகிறது. அவ்வளவுதான். ஆனால் மொத்த இந்திய வாழ்க்கையும் அதன் அர்த்தமற்ற செயல்களும் எப்படி தான்தோன்றிதனமாக இருக்கிறது என்பதை சொல்லிவிடுகிறது.

மிக மெதுவாக செல்லும் திரைப்படம் என்றாலும் அலுப்பு ஏற்படவில்லை. ஒரு சுவாரஸ்யமான உரையாடல்களாலும் மெல்லிய நகைச்சுவை தெரிக்கும் காட்சிகளாலும் அலுப்பு தெரியாமல் தொடர்ந்து பார்க்க வைத்துவிடுகிறார்கள். தமிழில் இப்படி ஒரு படம் வந்திருந்தால் திரையரங்கள் பெரிய விசில் சத்தங்கள் எழுந்திருக்கும். பெரும் சலசலப்புகளும், நிறையபேர் எழுந்து வெளியே செல்வதும் உள்ளே வருவதும் நடந்திருக்கும். பாடல்களற்ற, தொப்புள் நடனங்களற்ற, கதாநாயகனின் சவால்களற்ற ஒரு திரைப்படத்தை எப்படி தமிழ்சினிமா ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளமுடியும்.

பின்னனி இசையே பொதுவாக இல்லை. புத்தகங்கள் எடுக்கும் ஓசை, உடைகள் சரசரக்கும் ஓசை, காகங்களின் சத்தம் என்று போகிறதே தவிர பின்னனி இசையால் சொல்லவந்தது அதன்மூலம் தெரிந்துவிடும் என்பதுபோல முழுவதுமாக தவிர்கிறார்கள்.

பாடகருக்கு ஜாமீன் வாங்க முயற்சிக்கும்போது அரசு பெண் வக்கீல் இதனால் சூழலுக்கு பங்கு விளைவிப்பதாகஅமையும் என்று வாதிடுகிறார். அந்த வாதங்களைக் கேட்கும்போது திரையரங்கில் ஏற்படும் அமைதி நான் இதுவரை சந்தித்ததில்லை. பல்வேறு தள்ளிவைப்புக்கு பின் ஜாமின் கிடைக்கிறது.

அவரின் வக்கீல் தண்ணியடித்து ஜாலியாக சுற்றுவத்தும், அரசு வக்கீல் தன் குடுப்பத்துடன் நாடகம் சென்று சந்தோசமாக இருப்பதும் கடைசியில் ஜட்ஜ் தன் அபார்ட்மெண்ட் குழுமத்துடன் விடுமுறைக்கு தீம் பார்க் சென்று ஜாலியாக நீரில் விளையாடுவதுமாக் காட்சிகள் நகருகின்றன. ஜாமீனில் வெளி வந்த பாடகர் தடைசெய்துபின் தடை நீக்கப்பட்ட ஒரு 100 ஆண்டுகளுக்கு முந்திய ஒரு புத்தகத்தை வெளியிடுவதில் மும்மரமாக அச்சகத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார். போலீஸ் அங்கு வருகிறது. அவரை கைது செய்கிறது, அவருக்கு சொல்லப்படும் காரணம் தடைசெய்யப்பட்ட புத்தகம் என்று. 2 மாதவிடுமுறையில் மூடப்படும் கோர்டில் ஜாமீன் கிடைக்காமல் ஜெயிலுக்கு செல்ல நேர்கிறது.

சொல்லப்படுவது குறைவாக புரிந்து கொள்ளவேண்டியது அதிகமாக இருக்கும் கோர்ட்டில் நாம் தெரிந்துக் கொள்ளவேண்டியது தமிழில் இது வர இன்னும் காலம் இருக்கிறது என்பதுதான்.

No comments: