Wednesday, April 1, 2015

அசடு

அசடுகளை தினம் அல்லது ஒரு காலகட்டத்தின் எதாவது சந்தர்ப்பத்தில் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம். அவர்களின் சேட்டைகளை ரசிக்கிறோம். அவர்களின் உணர்வுகளை மதிப்பதாக பெருமை பேசி மகிழ்ச்சியடைகிறோம். என்ன காரியங்கள் செய்தாலும் அவர்களுடன் ஒப்பிட்டு பெருமிதம் கொள்கிறோம். ஒருவகையில் அவர்கள் நம் புறஉலகிற்கும், அக‌உலகிற்கு தேவையாக இருக்கிறார்கள். அவர்கள் இல்லை என்றால் நாம் நம் வாழ்க்கையை நடத்தகூட முடியாது போலிருக்கிறது. ஆனால் நாம் உணர்வதை அசடுகள் பார்ப்பதில்லை. அவர்கள் தங்கள் உலகில் வாழ்கிறார்கள். வெற்றியோ தோல்வியோ எதுவானாலும் அவர்களுடனேயே அவர்கள் வாழ்கிறார்கள்.
என் ஊரில் ஒரு அசடு இருக்கிறார். அவருக்கு எல்லாமே தோல்விதான். ஒரு நாள் டீக்கடையில் டம்ளர் கழுவுவார், அடுத்த நாள் வேறுஒரு கடையில் தண்ணீர் சுமப்பார். ஊருக்கு போகும்போதெல்லாம் அவரை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன். எப்போது மாறாத புன்னகை. வாழ்க்கையின் பொருளாதார தோல்விகுறித்த எந்த கவலையும் அவருக்கு இல்லை. கிடைத்தால் சாப்பிடப்போகிறார் இல்லை என்றால் பசியில் எங்காவது படுத்து தூங்கப்போகிறார். அதற்காக தன்மானம் குறைக்கும் எந்த செயலையும் நாம் செய்துவிடமுடியாது.
காசியப்பன் எழுதிய அசடு என்கிற சின்ன நாவல் அந்த மாதிரியான ஒரு மனிதரைப்பற்றிய கதையை கொண்டுள்ளது. சின்ன நாவல் ஆனால் எல்லா விஷயங்களையும் உள்ளடக்கிய ஒருவரின் பிறப்பிலிருந்து அவரின் இறப்புவரை சொல்லக்கூடிய நாவல். அவரின் வாழ்க்கை குறித்த நோக்கம், தேடல் என்று எதுவும் பேசப்படவில்லை. வெறும் அவரின் செயல்களைக் குறித்து பேசுகிறது. அல்லது கதாசிரிய கதாப்பாத்திரம் அவரைப் பற்றி பேசுகிறது அவ்வளவுதான். நீல.பத்மநாபன் வகை தனக்கு தெரிந்த உலகம் மட்டுமே பேசும் நாவல்.
அசடு எனப்படும் கணேசன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் இருக்கிறார். அவருக்கு சொத்துகள் இருந்தும் அவற்றை வேறுஒருவருக்கு விட்டுவிட்டு ஊர் ஊராக செல்கிறார். கொஞ்ச நாள் கிராமத்தில் கடையில் வேலை செய்கிறார். பின் சென்னை சென்று அங்கு ஒரு சாப்பாட்டு கடையில் வேலை செய்கிறார். பின் புனே, பின் ஹைதராபாத் என்று அவருக்கு சொந்தங்கள் இருக்கும் ஊரெல்லாம் சென்று தங்குகிறார். வேலை செய்து வாழ்கிறார்.
எந்தவித பொறுப்பும், திறமையும் அற்ற அவருக்கு சொந்தங்கள் சேர்ந்து திருமணம் செய்கிறார்கள். மனைவி அவர்மேல் எந்த அன்பும் கொள்ளாமல் தாந்தோன்றிதனமாக இருக்கிறார். அவருக்கு தன்மேல் இருக்கும் அக்கறைதவிர பிறர் மேல்கூட இல்லை. அந்த இனிமை கொஞ்சநாள் இருந்ததும் மனைவியை விலகி மீண்டும் எப்போதும்போல ஊர்ஊராக திரிய ஆரம்பித்துவிடுகிறார். எதுவுமே சாதாரணமாக நடந்து முடிந்துவிடுவது அவர் வாழ்க்கையில் நட‌ப்பதுபோல அவர் மரணமும் இளவயதிலேயே மிகச் சாதாரணமாக நடந்து முடிந்துவிடுகிறது.
முன்னும்பின்னுமாக கொஞ்சம் அங்கு கொஞ்சம் இங்கு என்று எந்த செயற்கையும் இல்லாமல் அழகாக சொல்லப்படுகிறது. அதற்கே ஆசிரியரைப் பாராட்டலாம். எழுபத்தெட்டில் எழுதப்பட்டாலும் இன்னும் புதுமையாக இருக்கிறது. நகுலன் போன்ற எழுத்தாளர்கள் இதை கொண்டாடியிருக்கிறார்கள். இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம்.
கணேசனின் உளசிக்கல்களை, அவரின் பார்வைகளை அவர் தன் மேல் சுமத்தப்படும் பட்டங்களை எப்படி பார்க்கிறார் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் இந்த சின்ன உலகை ஆசிரியர் காட்டிமுடித்ததுமே நமக்கு கற்பனையில் நாம் சந்தித்துள்ள அசடுகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்து கற்பனையில் நமக்கு பிடித்த அசடுகளின் பார்வைகளை பார்த்துவிடுகிறோம். அதுவே ஆசிரியரின் வெற்றியாக கொள்ளவேண்டும்.

No comments: