Thursday, April 2, 2015

திரைக் கதாசிரியர்கள்

வாலிப வாலி என்றோரு நிகழ்ச்சி டிடியில் ஒளிபரப்பாகியது. மறுஒளிபரப்பும் அவ்வப்போது வந்துகொண்டேயிருக்கும். அதில் சினிமாப் பாடல்கள் இலக்கியம‌ல்ல என்று பேசப்படுவதை பற்றி கேட்டதும் சற்று மிகையாகவே கோபப்பட்டார். இல்லை என்று சொல்பவர் முக்கியமானவராக இருக்கவேண்டும் அவர் அவர்துறையில் சாதித்திருக்க வேண்டும் என்றெல்லாம் கூறினார். ஒரு வகையில் ஞாயமானதும்கூட என்று தோன்றியது. அதே பகுதியில் சினிமாவில் கதாசிரியர்கள்/நாவலாசிரியர்கள் வெற்றி பெறாததைப் பற்றி கேள்வி கேட்டதும் கதாசிரியர்கள்/நாவலாசிரியர்கள் சினிமாவிற்கு தகுந்த தேவையை அவர்களால் அளிக்க முடியவில்லை என்று கூறினார். நாவலை நன்றாக எழுதுபவராக இருக்கலாம் ஆனால் சினிமாவிற்கு 5 நிமிடத்திற்கு சொல்லவேண்டியதை அவர்கள் சொல்லிவிடவேண்டும் என்று கூறினார்.
சினிமா என்பது ஒரு பெரிய மீடியாவாக தமிழில் உருவெடுத்துவிட்டது. அதன் வேகம் அதிலிருக்கும் உழைப்பு எல்லாமெ அபாரமானது. கூடவே அபாயகரமானதாகவும் இருக்கிறது. பெரிய அளவில் வட்டிக்கு பணம் பெற்று போட்ட முதலை இரண்டாக எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் அதன் தயாரிப்பாளர்கள். அவர்களின் அழுத்தம் இயக்குனர்கள், நடிகர்கள் மீதும் செல்கிறது. சொல்லப்போனால் இந்த மூவருமே பெரும் மனஉளைச்சலில்தான் இருக்கிறார்கள்.

இது ஒரே நாளில் இந்த இடத்தை அடைந்துவிட்டது என்று சொல்லமுடியவில்லை. எழுபதுகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து இன்று பெரிய விஸ்வரூபமாக மாறிவிட்டது. ஒரு நல்ல கதை அல்லது வித்தியாசமான கதைகருவுடன் கூடிய படம் ஒன்று வெளியாகி அது ஆரோக்கியமான சூழலை உருவாக்கி எல்லோர் மனங்களிலும் சென்று மிக நல்ல படத்தை எடுத்தோம் அல்லது பார்த்தோம் என்ற நிறைவை இன்று பெறமுடியாத நிலையில் தான் இருக்கிறது. பொருளாதார நிலையில் வெற்றிபெறாத எந்த சினிமா படைப்பும் பேசப்படுவதே இல்லை. என்பதுகளில் வெளியான சில நல்ல படங்கள் பொருளாதர வெற்றி பெறவில்லை என்றாலும் பேசப்பட்டதாக் தெரிகிறது. ஆனால் இன்று அப்படி இல்லை. பெரிய கும்பலாகவே படங்கள் வெளியாகின்றன. ஆண்டிற்கு 200 படங்கள் வரை வெளியாகும் நிலையில் நல்ல படங்களை மக்கள் எப்படி அரங்கு வந்து பார்ப்பார்கள் என்று பதற்றம் எல்லா த‌யாரிப்பாள/இயக்குனர்களிடம் இருக்கிறது. சினிமா சூதாட்டமாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லைதான். வெற்றி பெற்ற ஏதோ ஒரு மொழிப்படத்தை கொஞ்சம் மாற்றி புதியதாக எடுத்து மட்டுமே வெற்றிபெறுகிறார்கள். அதில் கலை அல்லது கதாசிரியர்களுக்கு எந்த பங்கும் இல்லை.
சினிமாவில் தமிழ கதாசிரியராக வெற்றி பெற்றவர் என்றால் அது ஜெயகாந்தன் தான். அதற்கு முன்பு சில ஆசிரியர்கள் சினிமாவிற்கு எழுதியிருந்தாலும் கதாசிரியரின் முழுமையை திரையில் வெளிக்கொணர்ந்தவர் ஜெயகாந்தன். ஒரு புத்தகக் காட்சி நிகழ்ச்சியில் தமிழ் கதாசிரியர்கள் சினிமாவில் யாரும் வெற்றி பெறவில்லையே? என்றேன். யாரும் இல்லை என்றா சொல்கிறீர்கள் என்றார்.
உண்மையில் மலையாள, கன்னட, வங்காள கதாசிரியர்கள் சினிமாவில் தொடர்ந்து செயல்பட்டார்கள். அவர்களின் முக்கியமான நாவல்கள் கதைகள் திரையில் வெளியாயின. அவர்களின் வாசகர்கள் அவர்களின் சினிமாக்களையும் அவரின் கலைவடிவமாக பார்த்தார்கள். தமிழில் அது நடைபெறவேயில்லை (ஓரளவிற்கு ஜெயகாந்தனும் ஜெயமோகனும் வெற்றிபெற்றிருக்கிறார்கள்).
தமிழ் கதாசிரியர்கள் சினிமாவில் வெற்றி பெறாததற்கு மக்களும் ஒரு காரணம். முக்கியமாக நாவல், சிறுகதகளும் சினிமாவும் ஒன்றாக இல்லை. இரண்டு வேறுவேறு பார்வையாளர்களாக மாறிவிட்டார்கள். இலக்கிய வாசகர்கள் சினிமாவை பார்ப்பதில்லை. சினிமா ரசிகர்கள் இலக்கியத்தை வாசிப்பதில்லை. தமிழில் இருவருக்கும் மிக்ப்பெரிய இடைவெளி உண்டு. தில்லானா மோகனாம்பாள் படத்தின் மூலகதையை வெளியானபோது நிறையபேர் படித்திருந்தார்கள். சினிமாவாக வந்தஉடன் பார்த்த நாவலை படிக்காதவர்கள் சென்று படித்ததாக தெரியவில்லை. சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் பெற்ற வெற்றியை சினிமா எட்டமுடியவில்லை. நாவலை சிலாகித்து படித்தவர்கள் அந்த படத்தை பார்த்ததும்/கேள்விப்பட்டதும்கூட இல்லை. படம் இலக்கிய தரத்துடன் இருந்தாலும் அதேமாதிரியான கொஞ்சம் முதிராத படமாக இருந்த அபூர்வராகங்கள், அவள் ஒரு தொடர்கதை போன்ற படங்கள் தான் வெற்றிப் பெற்றன.
இந்த மாதிரியான கமர்சியல் படங்களுக்கு கதாசிரியன் தேவையில்லை. இயக்குனர் அல்லது வேறு ஒருவர் திரைக்கதை அமைத்துவிடமுடியும். வேவ்வேறு மொழிகளில் வெளியான படங்களின் காட்சியமைப்புகளை கொண்டு அப்படி அமைக்கிறார்கள் என்று தோன்றுகிறது. சில படங்களைப் பார்த்ததும் இந்தமாதிரியான காட்சிகள் சில ஆங்கிலப்படத்தில் பார்த்துபோல் இருக்கிறதே என்று தோன்றும். தொடர்ந்து ஆங்கில/உலக சினிமாக்களைப் பார்க்கும் நபர்களுக்கு இந்த படம் எந்தப் படத்தின் தாக்கம் என்று ஓரளவிற்காவது புரிந்துவிடும். அதே வேளையில் இன்று எஸ்.ராவும் ஜெமோவும் தொடர்ந்து திரையில் பணியாற்றும் சூழல் இன்று உருவாகியிருக்கிறது. நல்ல தொடக்கம் தான். அவர்களைத் தவிர வேறுயாரும் வெற்றிபெறவில்லை என்பது யோசிக்க வைக்கிறது.
அரிதாக சில நல்லபடங்கள் அசலாக‌ தமிழில் வந்திருந்தாலும், முன்பு சொன்ன ஒட்டு வேலைகளுக்கு அசலான கதாசிரியன் தேவையில்லை என்றாகிவிடுகிறது. அப்படி ஒட்டுவேலைகள் செய்த நல்ல கதாசிரியன் படம் ஒன்று தோல்வி அடைந்ததும் அவருக்கு மார்க்கெட்டும் போய்விடுகிறது. மலையாளத்தில் கதை, திரைக்கதை எழுதிக் கொடுத்த ஒரு கதாசிரியரின் கதையை மாற்றவேண்டிய அவசியம் அங்கு இல்லை என்பதுதான் அவர்களின் வெற்றி. அந்த சூழல் தமிழில் வரும்வரை தமிழ் கதாசிரியர்கள் பொருத்துதான் இருக்க வேண்டியிருக்கும். 

No comments: