Friday, April 3, 2015

சுஜாதா எழுதுகிறார்

வேலையில் சேர்ந்தபோது நாங்கள் அப்ரன்டிசுகள் என்பதால் நிறைய பேச நேரமிருந்தது. எல்லாம் அன்றைய சினிமா, தினசரி காதல் விவகாரங்கள்தான். சிலர் மட்டும் வாசிப்புகளைப் பற்றி ஆர்வம் கொள்வார்கள். அதில் ஒரு பெண்ணிடம் பேசும்போது சுஜாதாவை எனக்கு பிடிப்பதில்லை எல்லாம் தெரிந்த மாதிரி எழுதுகிறார் என்றாள்.
நான் சிறுவயதிலிருந்து படிக்க ஆரம்பித்திருந்தேன். பள்ளி நாட்களிலிலேயே சுஜாதாவை படித்திருந்தேன். கிரைம்/குற்ற நாவல்களை படித்து சலித்திருந்த சமயத்தில் ஏறக்குறைய சொர்க்கம் என்ற நாவல் குமுதத்தில் வெளிவந்தது பைண்ட் செய்து வைத்திருந்ததை படித்ததில் சட்டென உலகம் வேறுபக்கம் சுழல்வதுபோல் உணர்ந்தேன். அதற்குமுன் சுஜாதாவின் கட்டுரைகள், சில மர்மநாவல்களை மாதநாவல் வரிசையில் படித்திருந்தேன். மிகவும் பிடித்துதான் இருந்தது. இப்படிகூட கதை எழுதமுடியும் அப்படியெல்லாம் கதைகள் வருகின்ற என்பதே ஆச்சரியமாக இருந்தது. அந்த வயதில் அது ஆச்சரியம்தான் சந்தேகமில்லை. ஆனால் அதில் அவர் கையாளும் வார்த்தை பிரயோகங்களும் நேரடித் தன்மைகளும் இன்றும் படிக்க‌ அலாதியானதுதான்.

என் அறிவியல் ஆசிரியரின் சுஜாதா அபுனைவு புத்தகங்கள் எனக்கு படிக்க கொடுத்தார். காசள‌வில் ஓர் உலகம் போன்ற நூல்களை அவரிடமிருந்துதான் வாங்கி படித்திருந்தேன். பின் அவருடைய புனைவு, அறிவியல் கட்டுரைகள் என்று தொடர்ந்து வாசித்திருந்தேன். தொடர்ச்சியாக படித்ததனால் அவரின் எழுத்துகள் அமைப்புகளே சிந்தனைகளாக மனதில் இருந்தன. மர்ம நாவல்களின் ஆர்வம் குறைந்து பல்வேறு சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று எதையும் விடாமல் அவரே சொல்வதுபோல லாண்டரி கணக்குளை எழுதினால் அதையும் வெளியிடுவார்கள் என்பதுபோல அவர் எழுது எதையும் படிக்கும் க்ரேஸ் உடன் இருந்த நேரம்.
அந்த மாதிரியான ஒரு நேரத்தில் ஒரு பெண் எனக்கு அவரின் எழுத்துகள் பிடிப்பதில்லை, எல்லாம் தனக்கு தெரியும் என்ற பாவனையில் எழுதுகிறார் எனும்போது சற்றும் கோபமாகத்தான் இருந்தது. அதே வேளையில் அவர் அப்படித்தான் எழுதுகிறார் என்றும் தோன்றியது.
எல்டோராடா, நகரம், குதிரை போன்ற சிறுகதைகள், காகிதசங்கிலிகள், ஏறக்குறைய சொர்க்கம், எப்போதும் பெண் போன்ற நாவல்கள் பல அறிவியல் கட்டுரைகள் இப்போது பிடித்தவைகள். ஆனால் அவர் எதையும் முழுமையாக எழுதுவதில்லை. சிறுகதை, நாவல், அறிவியல் கட்டுரை எதுவாக இருந்தாலும் அதன் ஆரம்ப வேகத்தை தக்க வைத்துக் கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்துபவராக இருப்பார். எதையும் முழுமை செய்வதேயில்லை. அதன் அடிவரை சென்று எல்லாவற்றையும் அலசி ஒரு ஒட்டுமொத்த பார்வையை அவர் அளிக்க முயல்வதில்லை.
வாசகர்களுக்கு சுவாரஸ்யமாக எதையாவது கொடுக்க வேண்டும் என்று தானே நினைப்பார் ஒழிய, தனக்கு பிடித்தவற்றை, தான் ரசித்த, உணர்ந்த ஒன்றை வாசகர்களுக்கு அளிக்க, அது படிப்பவர்களுக்கு கடினமாக இருந்தாலும், மேலும் அதை விளக்கிகூற வேண்டும் என்கிற‌ முனைப்பு எதும் கொள்வதில்லை.
தன் வாசகர்கள் குமுதம் ஆனந்தவிகடன் அளவிற்கு இருந்தால் போதுமானது என்ற நினைப்பு அவரிடம் உண்டு என நினைக்கிறேன். ஒரு முறை அவர் எழுதிய ஒரு கட்டுரை பற்றி சொன்னபோது நண்பர் ஒருவர் அதன் ஆங்கில வெளியீட்டை எடுத்துவந்து காட்டினார். அச்சு அசலாக அதை காப்பியடித்து எழுதியிருந்தார் என்றுதான் சொல்லவேண்டும்.
மிக சுவாரஸ்யமாக இதைத்தவிர எதையும் படிக்க வேண்டியதில்லை என்று இருந்த சுஜாதா எழுத்துகளின் உலகம் இன்று வேறு எங்கோ இருப்பதாக தோன்றுகிறது. பல அறிவியல் கட்டுரைகளின் மூலம் புதிய உலகை மனதில் விதைத்திருந்த சுஜாதா உலகம் இன்று என்ன ஆனது என்று தெரியவில்லை. இது எல்லா எழுத்தாளர் வாசகர்களுக்கும் நேர்வதுதான். ஒரு சமயம் ஜெயகாந்தன் அவர் வாசகர்களும் இருந்த மானசீக உறவு கொஞ்ச நாளில் மாறிப்போனதாக கூறுவார்கள். ஆனாலும் அவரின் எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பதை நிறுத்தியதில்லை என்றும் கூறுவார்கள். கல்கிக்கும் இதே நடந்திருக்கிறது. ஆனால் சுஜாதாவிற்கும் அவர் வாசகர்களுக்கும் இருக்கும் இடைவெளி சற்று பெரியது என நினைக்கிறேன். பல வாசகர்கள் மீண்டும் சுஜாதாவின் எழுத்துக்களை வாசிப்பார்களா என தெரியவில்லை. ஏனெனில் அவரின் எழுத்துகள் முழுமையை தொடுவதில்லை என்ற ஒரு காரணத்தை சொல்லலாம்.
அவரின் எழுத்துக்கள் இலக்கிய தரம் வாய்ந்ததா என்கிற வாதத்திற்கு செல்லவில்லை. எழுத்துக்களால் ஆன ஒரு உலகம் வாசகர்களுக்கு தரும் உவப்பை பற்றி பேசும்போது சுஜாதாவின் உலகம் ஒரு சின்ன வட்டத்திற்குள் முடிந்துவிடுகிறது என்று தோன்றுகிறது. அந்த இளம் வயதிற்கே உரிய எழுத்து என்று தோன்றுவதால் அப்படி இருக்கலாம். பார்க்கலாம் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்காமல் இருக்காது.

No comments: