Wednesday, April 29, 2015

சென்னை vs. பெங்களூர்

பெங்களூரு நகரம் முன்பு மதராஸ் மாகாணத்துடன் இருந்தது. அப்போது இந்தியாவில் நான்கு பெரிய நகரங்கள் மட்டும்தான் இருந்தன, மும்பை, தில்லி, கல்கத்தா, சென்னை. மொழிவாரி மாநிலங்களாக பிரிந்தபின்னும் இந்த நான்கு நகரங்களுக்கு அடுத்த நிலையில் இருந்த பெங்களுர், அகமதாபாத், ஹைதராபாத் போன்ற நகரங்கள் பெரியஅளவில் வளர்ச்சி பெற்றோ அல்லது மக்கள் கூடும் இடமாக உடனே மாறிவிடவில்லை. கொஞ்சம்கொஞ்சமாக இந்த மூன்று நகரங்களும் தங்களுக்கேயுரிய தனித்தன்மையுடன் வளர்ச்சிபெற்று அந்ததந்த மாநிலத்தில் இருக்கும் தொழில்களையும் வளர்ச்சி பெறச் செய்தன. முன்னாலிருந்தே இருக்கும் பெரிய நகரங்களான மும்பை, தில்லி, கொல்கத்தா, சென்னை நகரங்களும் வளர்ச்சி பெற்று மக்கள் தொகையில், தொழில்வளர்ச்சியில், பிடிபி உயர்வில் என்று எல்லாவகையிலும் வளர்ச்சிபெற்று வந்தன.

ஆனால் இன்றைய தேதியில் பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், புனே போன்ற நகரங்களின் வளர்ச்சி விகிதம் சென்னையைவிட அதிகம். முதல் மூன்று நகரங்கள் தொடர்ந்து வளர்ச்சியை அடைந்தாலும், சவலைப் பிள்ளை போல் சென்னை அப்படி வளர்ச்சியடையவில்லை. அதற்கு நம் அரசியல் வாதிகள்தான் காரணம் என நினைக்கிறேன்.

நம் அரசியல்வாதிகளுக்கு அவர்களுக்கு இடையே சண்டைவிடவே நேரம் சரியாக இருக்கிறது. யார் வந்தாலும் வந்தவர் முதலில் இருந்தவரின் முயற்சிகளை தூரப்போட்டுவிட்டு புதியதாக வேறு ஒன்றை ஆரம்பித்துவிடுவார். இதனால் வளர்ச்சிவிகிதம் சராசரியைவிட அதிகமாக பாதிப்பதாக தெரிகிறது. மற்ற நகரங்கள் இருக்கும் அரசியல்கட்சியை சேர்ந்தவர்கள் அப்படி நினைப்பதில்லை. முக்கியமாக தங்கள் மாநிலம், நகரம் வளர்ச்சியிலேயே கவனமாக இருக்கிறார்கள்.

பலசமயங்களில் இதை கவனித்திருக்கிறேன். பெங்களூர், புனே நகரங்களை தொடர்ந்து கவனித்து வருபவன். அங்கு எந்த பிரச்சனைகளும் உடனே தீர்க்கப்படுவதை காணமுடிகிறது. குப்பைகள், வீட்டுகட்டுமானத்திற்கு பயன்பட்ட ரப்பீஷ்கள் போன்றவைகளை சென்னையில் சர்வசாதாரணமாக சென்னையில் எங்குவேண்டுமானாலும் எறியலாம். யாரும் எதையும் கேட்கப்போவதில்லை. மேற்சொன்ன பெங்களூர், புனே நகரங்களில் இது சாத்தியம் இல்லை. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்துவிடுவார்கள். பைன் போன்றவைகளைப் போடவும் தயங்குவதில்லை. அதை எறிந்தவர்களே சுத்தம் செய்ய சொல்லி விடுவார்கள். இதனால் மழை தண்ணீரும் சாக்கடைத் தண்ணீரும் எங்கு தேங்குவதில்லை. எல்லா இடங்களிலும் இந்த நகரங்களில் பாதாள சாக்கடைகள் தான் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் அதன் மூடியை மாற்றியும் உடைந்தஉடன் புதிய மூடியை போட்டும் ரோட்டிற்கு சமமாக இருக்கும்படியும் செய்து கொண்டே இருக்கிறார்கள். சென்னையில் நகரத்தின் மத்தியில் இருக்கும் திருவான்மீயூரில் கூட பாதாள சாக்கடைகள் சரியாக கிடையாது. அதைத்தாண்டி ஈசியார் ரோட்டில் உள்ள எந்த ஏரியாவிற்கு பாதாள சாக்கடை கிடையாது.

இதற்கும் வளர்ச்சிக்கு என்ன என்று கேட்கிறீர்களா? இது ஒரு உதாரணத்திற்காக சொல்லப்பட்டது. நல்ல தண்ணீர் வசதியுள்ள ஏரியா சென்னையில் எதாவது சொல்லமுடியுமா? ஒருவாரம் தண்ணீர் வராதா ஏரியாக்களே அதிகம். அந்தளவிற்கு கவனமின்மையாக இருக்கிறார்கள். மாறாக பெங்களூரில் எல்லா வசதிகளையும் அதே நேரத்தில் சென்னையைவிட நல்ல முறையில் இருக்க பாடுபடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளமுடியும்.

ஜிடிபி வரிசையில் இந்திய பணக்கார நகரங்கள் என்று இணையத்தில் அடித்துபாருங்கள் ஆறாவது இடத்தில் சென்னை இருக்கிறது. நாலு ஐந்து: பெங்களூரும் ஹைதராபாத்தும் இருக்கிறன. இது அத்தனை எளிதாக அடையகூடிய இடமல்ல. ஒரு திட்டத்தோடுதான் செயல்பட்டிருகிறார்கள். சேப்பாகம் ஸ்டேடியத்தைவிட சின்னசாமி ஸ்டேடியம் எல்லா வசதிகளையும் கொண்டது. சென்னையில் மெட்ரோ ரயில் வருவதற்கு முன்பே பங்களூரில் வந்துவிட்டது. சென்னைக்கு வரவேண்டிய எந்த பெரிய ஐடி நிறுவனங்களையும் வளைத்து பெங்களூருக்கு அழைத்துச் செல்ல தயாரகவே இருக்கிறார்கள் பெங்களூர் அரசியல்வாதிகள்.
மேகதாண்டு அணைகட்டுகூட பெங்களூருக்கு எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்சனை வரகூடாது என்று செய்ய நினைத்திருக்கும் ஒரு திட்டம்தான். சென்னை ஆட்டோவின் மீட்டர் பிரச்சனையைகூட நம்மால் தீர்க்கமுடியவில்லை. பெங்களூரில்/புனேயில்/அகமதாபாத்தில் மீட்டர் வைத்த ஆட்டோகள் எளிதாக ஒரு இடத்திலிருந்து இன்னோரு இடத்திற்கு பயணிக்க முடியும். புதியவர்களை அந்தந்த நகரங்கள் அன்போடு அனுசரிப்பதாலேயே அந்த நகரங்களால் தொடர்ந்து முன்னேறிச் சென்றுக்கொண்டிருக்க முடிகிறது.

ஐடி அல்லது வேறு தொழில்நிறுவனங்கள் வருவதற்கு இந்த மாதிரியான பிரச்சனைகள் அற்ற இடமாகத்தான் தேடுவார்கள். அப்படி பார்க்கும்போது அவர்களின் தேர்வு பெங்களூர், புனே, ஹைதராபாத், அகமதாபாத் இருக்கும்போது சென்னை நகரம் கொஞ்ச கொஞ்சமாக தன் வளர்ச்சி வேகத்தை இழந்து காய்ந்துபோன மரமாகத்தான் இருக்கும்.

மக்களும் அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ளதவரை நாம் அதைநோக்கிதான் பயணிக்கிறோம்.

No comments: