Tuesday, April 7, 2015

குழந்தை மனம்

குழந்தைகள் ஒழுங்கை விரும்புவதில்லை. ஒழுங்காக அடுக்கிவைக்கப்பட்ட பொம்மைகள், பாத்திரங்கள், துணிகள் என்று எதையும் அவர்கள் தங்கள் இஷ்டம்போல கலைப்பதையும், தூக்கி எறிவதையும் விரும்புகிறார்கள். ஒழுங்குபடுத்தும் ஒவ்வொரு சமயமும் கலைத்துக் கொண்டே யிருக்கிறது குழந்தை. அப்படி செய்வது ஒரு தொடர் பயற்சிப்போல்தான். இரவில் விளையாடிவிட்டு தூங்கும் குழந்தை காலை எழுந்ததுமே அந்த இடத்திற்கு சென்று விளையாட்டை தொடர ஆரம்பித்துவிடும். பல மணிநேரம் எந்த ஒரு இடையூரும் இல்லாமல் குழந்தைகளால் தொடர்ந்து ஒரே காரியத்தில் ஈடுபடமுடிகிறது.
காதுகுத்தும்போது ஒரு குழந்தை அந்த அதிர்ச்சியில் பலமாக அழுது வாந்தி எடுத்துவிட்டது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு குழந்தை தன‌க்கும் காது குத்தவேண்டாம் என்றது ஏன் என்று கேட்டபோது தனக்கு வாந்தி வ்ரும் என்று காரணம் கூறியது. அன்றுமுழுவதும் அந்த குழந்தையை உனக்கும் காது குத்தப்படும் என்று பயமுறுத்திக் கொண்டே இருந்தது கூட்டம். ஒரு குழந்தைக்கு தர்க்கஒழுங்கு ஒன்று மனதில் ஏற்ப்பட்டுவிடுகிறது. எதுவும் மிக எளிதாக தங்களின் அனுபவ பார்வைக்குள் வைத்து முடிவு செய்துவிடுவது குழந்தையின் வழக்கம்.
ஐந்து வயதுக்குள் அனைத்தையும் கற்றுக் கொடுத்துவிடவேண்டும் என்று அலையும் குரூப் ஒரு பக்கம். எல்லாம் அவனே/அவளே கத்துக்குவான்/ள் என்று அலையும் குரூப் ஒரு பக்கம். குழந்தைகள் என்ன தான் செய்யும். இரண்டும் சரி அல்லது சரியல்ல என்று சொல்லிவிடமுடியாதபடி சூழ்நிலை வேறு.
இன்றைய தேதியிலும் குழந்தைகளை ஒப்பிடாமல் வளர்க்க முடிவதில்லை. வீட்டில், பள்ளியில், பொதுவெளியில் என்று எல்லா சம்யங்களிலும் குழந்தைகள் ஒப்பிடப்படுகின்றன. அவர்களின் இன்றைய சூழலுக்கு எது சரியானதோ அதை ஒத்துப்போகும் குழந்தைகள் புத்திசாலியாகின்றன. அப்படி இல்லாதவைகள் தத்தி, மந்தம் என்ற பேச்சுகள்தான் கிடைக்கும்.
நான் சாதாரண அரசு பள்ளியில்தான் படித்தேன். நான் சிறுவனாக இருந்தபோது எதிர்சாரியில் கொஞ்சம் தள்ளி இருந்த ஒரு வீட்டில் இருந்த என் வயதொத்த சிறுமி இருந்தாள். அவளின் படிப்பைப் பற்றிய நினைவு பதற்றம் நிறைந்ததாக இருந்தது. புத்தகத்தை கண்டாலே ஒருமாதிரி ஆகிவிடுவாள். ஒருநாள் அவளின் பெரிய அண்ணன் என்றுமில்லாமல் அவளின் படிப்பு திறனை சோதித்துக் கொண்டிருந்தார். விளையாட்டில் அந்தப்பக்கம் சுற்றிக்கொண்டிருந்த என்னை அழைத்து ஆங்கில பாடப்புத்தகத்தை கொடுத்து இரண்டு வரிகளை வாசிக்க சொன்னார். அவரின் முறுக்குமீசையை பார்த்து பயந்தபடியே தப்பாக வாசித்ததாக நினைவு. பார் எப்படி படிக்கிறான் பார் என்றார். பக்கத்தில் அந்த சிறுமி. கவிந்த தலையில் வகிடெடுத்த கோடு மட்டுமே தெரிந்தது. அதில் இருந்த எந்த வாசிப்பும் அவளுக்கு தெரியவில்லை என்பது அவரின் குற்றச்சாட்டு. அதற்குமுன் அவளை சரியாக வெளுத்திருக்க வேண்டும். அடியைவிட என்முன்னால் அவளுக்கு ஏற்ப‌ட்ட அவமானம் பெரியதாக இருக்கும்.
கொஞ்சநாள் முன்பு ஒரு பெண்பிள்ளையை சைக்கிள் கேரியரில் கட்டி எடுத்துச் சென்ற ஒரு வடநாட்டு இளைஞனின் புகைப்படம் வெளியானது. அவர் தன் குழந்தையை அழைத்து செல்வது பள்ளிக்கு. வரமறுக்கும் குழந்தையை இப்படி இழுத்துச் சென்றால் அவள் எப்படி படிக்ககூடும். பள்ளியில் சேர்க்கும்போதே பிள்ளையை பயமுறுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். என் மகனை பள்ளியில் சேர்க்கபோகும்போது அவன் அம்மா அவனை பயமுறுத்தினாள். நான் அப்படி சொல்லவேண்டாம் என்று கூறி அவனுக்கு பள்ளியில் இன்ன இன்ன விளையாட்டுகள் இருக்கும். அந்த அக்காவைப் போல் போகலாம் அந்த அண்ணனைப் போல உடை உடுத்தலாம் என்று தொடர்ந்து அந்த நாட்களில் கூறிக்கொண்டிருந்தேன். அவன் மிஸ்ஸைப் பற்றி எந்த எதிர்மறை விஷயமும் அவனிடம் சொல்லாமல் இருந்தேன். மிஸ்ஸின் உருவம், உடை, பற்றிய எந்த கிண்டலும் இருக்ககூடாது என்று தீவிரமாக இருந்தேன். பின்நாட்களில் எந்த பயமும் அவனுக்கு ஏற்பட்டதில்லை.
முக்கியமான விஷயம் அவசரமாக, அளவிற்கு அதிகமாக பாடங்கள்/செய்திகளை குழுந்தைகளுக்கு திணிப்பதுதான். குழந்தை பின் தங்கிவிடுவான் என்று வேறு சொல்லிக்கொள்வார்கள். இந்த ஒரு விஷயமே குழந்தைகளை வெகுவாக பாதிக்கிறது. தனக்கு தெரியவில்லை என்கிற விஷயம் அவர்களுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி அடுத்தடுத்த படிகளில் ஏறாமல் இருந்துவிடுகிறார்கள். அமெரிக்க பள்ளிகளில் 7 வயதில்தான் பள்ளிப் படிப்பை ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் தன்னம்பிக்கை தான் அவர்களின் கற்பதற்கு உந்துகோலாக இருக்கிறது.
குழந்தையின் பிஞ்சு மனதை கொஞ்சமும் புரிந்துக் கொள்ளாமல் அதை வதைத்து என் புள்ளைக்கு இதெல்லாம் தெரியும் என்று நம் கொரூர மனதை வெளிப்படுத்திக் கொள்கிறோம்.

நம் பெற்றோர்கள் சொல்லும் முக்கிய உதாரணம் தன்னை தன் தந்தை சிறுவயதில் ஆசிரியரிடம் கண்ணை மட்டும் விட்டு விட்டு தோலை உரிக்கச் சொன்னார் என்பதுதான். உண்மையில் அப்படி அவர்களை உரித்து எடுத்திருக்கலாம்.

No comments: