Saturday, April 18, 2015

கட்டுச்சோறுபழைய சினிமாக்களில் கட்டுச்சோறு எடுத்துச் செல்வதாக காட்சிகள் வரும். எந்த பயணத்தின்போதும் அல்லது ஒருவர் பயணம் கிளம்புகிறார் என்றாலே அவர் சோறு வைத்த தூணியை நாலு முனையையும் சேர்ந்துக்கட்டி தோளில் வைத்து இருப்பார் அல்லது ஒரு குச்சியில் வைத்து அதை தோளில் பிடித்திருப்பார். (உள்ளே இருக்கும் பொருட்கள் சிந்தாமல் நேராக இருக்கும் என்பதால்.)

முன்பு வெளியே உணவுகள் கிடைக்காது. அவரே தயாரிக்க வேண்டியிருக்கும் அல்லது வேறு ஒருவரிடம் கேட்க வேண்டியிருக்கும். விலைக்கு கிடைக்காது. கொஞ்சம் கொஞ்சமாக் காலம் மாறி நல்ல உணவுகள் வெளியில் கிடைக்க ஆரம்பித்தன. சில இடங்களில் தரமான உணவுகள் மலிவு விலையில் கிடைத்தன. மேலும் பல அன்ன சத்திரங்கள் எல்லா இடங்களிலும் இருக்கும். அதை பெரிய தர்மமாக நினைத்து செய்தவர்கள் உண்டு.

இன்று அப்படி அல்ல. எல்லா இடங்களிலும் உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. சொல்லப்போனால் வீட்டில் தயாரிக்க முடியாதவைகள் கூட ஸ்பெசல் என்று கூறி பல்வேறு வகைகளில் கிடைக்கின்றன. விலைக்குதான் கிடைக்கின்றன என்றாலும் தரமானவை இல்லை என்று தாராளமாக சொல்லலாம். வெளியில் உணவு உண்பதை பெரும் தயக்கத்துடன் தான் செய்ய வேண்டியிருக்கிறது.


ரோட்டோர கடைகளில் இருந்து பன்னாட்டு உணவகங்களான மெக்னோடால்ட் வரை பல்வேறு நிலைகளில் கடைகள் உள்ளன. ஏதோ ஒருவகையில் அவைகள் தரமற்றவைகள்தான் என்று சொல்லப்படுகின்றன. எந்தவிதமான அடிப்படை விதிகள் கடைபிடிக்கபடுவது அல்லது உண்பவரின் நிலையில் இருந்து உணவு தயாரிக்கப்படுவது இல்லை என்பதை காணலாம். முழுவதும் வியாபார நோக்கம் மட்டுமே உண்டு. சுகாதாரத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை என்பதை நாம் உணர்ந்து கொண்டேதான் இருக்கிறோம்.

முதலில் நான் இருந்த அலுவலகத்தின் முன்பே ஒரு பேக்கரி இருந்தது. அந்த இடத்தில் அலுவலகம் புதிதாக அப்போதுதான் திறக்கப்பட்டிருந்தது. அந்த பேக்கரியில் சென்று ஊழியர்கள் இடைவேளை நேரத்தில் சில உணவுகளை அங்கேயே வெளியில் நின்று உண்ண ஆரம்பித்தார்கள். அதற்கு முன்பிருந்தே இருக்கும் அந்த பேக்கரி ஆரம்பத்தில் நல்ல தரத்துடன் அங்கு கிடைத்தன. ஒரு சிலமாதத்திலேயே பேக்கரி நடத்துபவர்களின் மனநிலை மாறஆரம்பித்தது. சுற்று வட்டத்தில் வேறு கடைகள் இல்லை என்பதால் இதில் இருக்கும் அத்தனை ஊழியர்களும் இங்கு வருவார்கள் என்று தெரிந்தது. அத்தனை உணவுப் பொருட்களின் தரமும் குறைந்தது. விலையும் அதிகரித்தது. வேறுவழி இல்லை என்பதால் அதைத்தான் உண்ண ஆரம்பித்தார்கள் ஊழியர்கள். மக்கள் ஒருஇடத்தில் கூடஆரம்பித்ததும் உணவுதயாரிப்பவர்களின் மனநிலை மாற ஆரம்பித்துவிடுகிறது.

பயணத்தின்போது பஸ், ரயில்நிலையங்களில் உள்ள உணவங்கள் அதிக விலையும் தரமற்றவையாகவும் இருப்பதை காணலாம். அதுவும் நெடுந்தூர ரயில் பயணங்களில் பேன்ரியில்மூலம் அவர்கள் அளிக்கும் உணவைத்தான் நாம் உண்ணவேண்டியிருக்கும். தரமற்ற காய்கறிகள், தூய்மையற்ற தண்ணீர், சுகாதாரமற்ற பாத்திரங்களைக் கொண்டுதான் தயாரிக்கப்படுகின்றன.

யூடியூபில் ரயில்வே கேண்டினில் பாத்திரங்களி கழுவும் இடத்தில் ஒருவர் சிறுநீர் கழிப்பதை வீடியோ எடுத்து வெளியிட்டிருந்தார்கள்.  இங்கு ஏன் சிறுநீர் கழிக்கிறீர்கள், எப்போது இப்படிதான் செய்வீர்களா என்று அவரிடம் கேட்கப்படுகிறது. அவர் சிரித்து மழுப்புகிறார். அதைப் பார்த்தால் பலர் அங்கு உணவு உண்பார்களா என்பது சந்தேகம்.

ரயில் நிலையகளில் வெளியாட்கள் விற்கும் டீ மிகக்குறைந்த விலை இருக்கும். அது பாலில் தயாரிக்கப்படுவதில்லை என்பதால் அத்தனை விலைகுறைத்து கொடுக்க முடிகிறது. சுவற்றிற்கு அடிக்கும் ஒருவகை சுண்ணாம்பு பெயிண்டை சின்ன பாட்டிலில் கிடைக்கின்றன. பாலுக்கு பதிலாக அதில் நிறைய தண்ணீர் ஊற்றி டீத்தூள் போட்டு தயாரிக்கப்படுகிறது. சுவையில் நிறைய வித்தியாசம் தெரியும் என்றாலும் குறைந்த விலை என்பதால் அதுப்பற்றி தெரியாமல் குடித்துவிடுகிறார்கள்.

குறைந்த விலையில் கிடைக்கும் எண்ணெய் பொருட்கள் இப்படிதான் எண்ணெய் உடன் பல வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அப்போதுதான் கட்டுபடியாகும்.
மெக்டொனால்ஸ் போன்ற கடைகளில் பல்வேறு வேதிப்பொருட்கள் உணவோடு சேர்க்கபடுவதோடு, சிக்கன் போன்ற சில பொருட்கள் மொத்தமாக தயாரிப்பதால் அவற்றின் உள்ளுருப்புகள், கண்கள், கால்கள் ஏதுவும் நீக்காமல் அப்படியே எந்திரத்தின்மூலம் உணவு தயாரிக்கப்படுகிறது என்பதுதான் கொடுமை.

தயாரிப்பாளர்களின் எந்த நல்லநோக்கமும் இல்லாமல் தயாரிக்கப்படும் இந்த உணவுகளால் உண்பவர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் வரும். இது தெரியாமல் உண்பவகள் பலர். ஆனால் தெரிந்தே வேறுவழியில்லாமல் உண்பவர்களும் சிலர். பெரிய பிராண்டட் (ஃபாசோ, டொமினோ, மெக்டோனால்ட்) கடைகளில் உணவு தயாரிக்கும் வேலையாட்கள் அங்கு உணவு உண்பதில்லை, வீட்டிலிருந்து எடுத்து வந்து உண்கிறார்கள் என்பதிலிருந்து அதன் தரம் உண்மைதன்மையை புரிந்துக் கொள்ளமுடியும்.

கீழான கடைகளில் அடிப்படை உணவு பொருட்களை மாற்றம் செய்வதும், நடுவாந்திர கடைகளில் சுகாதாரமற்றும், உயர்தர கடைகளில் மோசமான தயாரிப்பும் இருப்பதால், வீட்டில் தயாரிக்கபடுவதை வெளியில் எடுத்துச் செல்ல வெட்கப்படாமல் எடுத்துச் சென்றுவிடுவதே நன்று. முடியாதவர்கள் எப்போதுபோல உண்ணவேண்டியதுதான்.

No comments: