என் நண்பர்களின் நண்பர்கள் சிலர் சினிமா மோகமும் அரசியல் மோகமும் கொண்டவர்கள். அவர்களின் பேச்சுகள் செய்கைகள் எல்லாம் சினிமா அல்லது அரசியலின் ஒரு பகுதியை வெளிப்படுத்தாமல் இருக்காது. நான் அறிந்தவரை அவர்கள் அதில் மிக தீவிரமாக ஈடுபாடு கொண்டவர்களாகவும் அப்படி இருப்பது தன்னை தனித்துவமாக ஆக்குவதாகவும் நினைப்பவர்கள். அவர்கள் விரும்பும் சினிமாக்களின் வசனங்களை அச்சு பிசகாமல் மனப்பாடமாக சொல்பவர்கள், அதை சொல்லும்போது அவர்களே அதுவாக மாறிவிடுபவர்கள் என்று தோன்றும்.
உண்மையில் அது ஒரு பாவனைதான், அவர்களே அதை அறிந்தவர்கள்தாம். சினிமா ஒரு நிழல் அதன் ஒவ்வொரு அங்கமும் வாழ்வை நேரடியாக பிரதிபலிப்பதில்லை என்று. ஆனால் அந்த நாடகத்தன்மை அவர்களுக்கு தேவையாக இருக்கிறது. தன்னை ஒரு உயர்ந்த இடத்தில் வைக்கும் எல்லோரும் கவனிக்கும் ஒரு இடத்தில் வைக்கும் செயலை செய்வதனால், இருக்கும் ஒரு சில மணித்துளிகளை மகிழ்வாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் நாளெல்லாம் சினிமைவை பற்றி பேசிக்கொண்டும் எண்ணிக் கொண்டும் இருப்பவர்களால் நிஜவாழ்வின் சில முக்கிய தருணங்களை இழக்கிறார்கள் என்று தோன்றும்.











