Sunday, August 20, 2023

அல் கிஸா என்னும் ஏமனி மேலங்கி


அல் கிஸா என்ற நாவல் குறித்த பேச்சுகள் முன்பே தொடங்கிவிட்டன. நாவல் அளிக்கும் விடுதலையைப் பற்றி பேச தொடங்கிவிட்டார்கள். அஜிதனின் நாவல் அல்லது குறுநாவலின் உள்ளடக்க தேர்வை பாராட்டவேண்டும். ஒரு பொறியின் துளியிலிருந்து தீ பரவுவது போன்ற தூண்டுதலலால் உருவான குறுநாவல். அதன் வேகத்தோடும் துடுக்கோடும் இருக்கிறது.

சிறந்த வேலைப்பாடுகளை கொண்ட போர்வையை நெய்து வெளி எடுப்பது போலத்தான் நாவலை எழுதியிருக்கிறார். ஒரு காதல் கதையின் ஊடே இறைதூதர் முகம்மது நபியின் வழிதோன்றல்களில் ஒருவரான மகள் வழி ஃபாத்திமா பெயரன் ஹுசையின் இறுதி போர்ப் பற்றிய நாவல் என்று சுருக்கி கொள்ளலாம்.

இஸ்லாத்தின் இரு பிரிவுகளின் ஒன்றான ஷியா முஸ்லீம்களின் தலைவர் ஹுசைன், அவரது இறுதி யுத்தம் நடைபெறும் இடமும் அவர் உயிர் தியாகத்தின் மகத்துவத்தையும் கூறுவது இந்நாவலின் நோக்கம். கூடவே வேறு தளங்களையும் இணைத்துக் கொள்கிறது. பழைய தில்லியின் அஜ்மீரின் நடக்கும் இறைப்பாடல் நிகழ்வும், ஹைதர்-சுஹாராவின் காதலையும் விவரிக்கும் இடமும்.

மொஹரம் மாதத்தில் பத்தாம் நாள் நடக்கும் நிகழ்வில் உஸ்தாத் படே குலாம் அலிகானின் இசை நிகழ்வு நடக்கிறது. ஹைதரும் சுஹானாவும் காதல் கதையும் அங்கே நிகழ்கிறது. ஹுசைனின் தியாக கதையை கேட்டபடி இருக்கும் இருவரின் உள்ளங்கள் இணைவதும் பின் ஒன்றாகி தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்வதுமாக செல்கிறது.

மிக அழுத்தமாகவும் துல்லியமாகவும் குறுநாவலுக்குரிய நேர்க்கோட்டுப் பாதையில் அமைந்துவிட்ட புனைவு. சில இடங்களில் இடரல்கள் இருப்பது போன்றிருந்தாலும் எல்லாம் சரியாக அமைந்துவிட்ட ஓவியம் மாறியிருக்கிறது.

நுண்தகவல்களின் கலை என்று நாவலை சொல்ல முடியும். பாடகரான உஸ்தான் படே குலாம் அலிகானின் தொண்டைப் பிரச்சனையும் அது சரியாக அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளையும் உளப்பதிவுகளையும் நுணுக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது. ஹைதர் சுஹாராவின் பார்வையின் மூலம் தங்கள் காதலை வளர்த்துக் கொள்ளும் சம்பவங்களில் இருக்கும் அழகு மெச்சத்தக்கதாக இருக்கிறது. இடையே வரும் ஹுசைனின் போர்க்களத்து வர்ணனைகளும் அங்கு பேசப்படும் அதன் உள்ளார்ந்த தத்துவங்களும் நிறைவை அளிக்கின்றன.

காதலை தெய்வீக தளத்திற்கு கொண்டு செல்வதற்கு இறைவழிபாட்டு இடமும் அங்கே இசைக்கப்படும் பாடல்களும் துணைபுரிகின்றன. உண்மையில் இறைவழிபாட்டு பக்தியுடன் சகோதரத்துவதையும், காதலையும் வளர்க்ககூடியவை. காதலை வெறும் உடல் செயல்பாட்டிலிருந்து விலக்கி கொண்டு செல்கிறது. வழிபாட்டின் முன் நடக்கும் எந்த செயல்களும் அர்த்தம் பொருந்தியதாக மாறிவிடுகின்றன.

முகம்மது நபி, மகள் பாத்திமா, மருமகன் அலி, அவர் மகன்கள் ஹசன், ஹுசைன் கூடவே ஜிப்ரிகர் தேவதூதன் அமர்ந்து போர்த்தியிருந்த அல் கிஸா நிகழ்வு ஷியா முஸ்லீம்களின் முக்கிய தருணமாக கொள்ளப்படுகிறது. அதைச் சொல்லும் இசைப்பாடல் நிகழ்வில் ஒன்றிணையும் இணைகள் என்றும் அந்த புனித தன்மையாக தங்கள் வாழ்வை நினைத்துக் கொள்வார்கள். இப்படியான ஒரு புனைவு தருணம் அமைவது வாசகருக்கு அந்த புனைவின் மீது நம்பகத்தன்மையை அளித்துவிடுகிறது.

குறைகள் என்று சொன்னால் நாவலுக்குரிய எதிர் கருத்துகளின் பார்வையும் அது நேர்கருத்துகளின் மேல் செயல்படும் முயங்குதலும் நிகழவில்லை. விரிவாக சொல்லவேண்டிய சில இடங்களில் குறைவாகவும், குறைவாக சொல்லவேண்டிய சில இடங்களில் விரிவாகவும் சொல்லப்பட்டிருப்பது போன்ற மயக்கமும் இருக்கிறது.

கம்பி மேல் நடக்கும் வித்தையை கவனமாக செய்திருக்கிறார் ஆசிரியர். கீழே விழும் அபாயத்தை தாண்டி வெற்றிக் கோட்டை தொட்டிருக்கிறார். வாசகர்களுக்கு சின்ன இசைத் துணுக்கை கேட்டது போன்ற பிரம்மை. நீங்காமல் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கப்போகும் இசை.

 

(தஞ்சை மக்கள் சிந்தனை பேரவை நிகழ்வில் 19/8/23 அன்று கலந்துரையாடியதின் உரை வடிவம்)

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நூலை வாசிக்கும் ஆவலைத் தூண்டிய பதிவு.