Thursday, April 6, 2023

குதிரை மரம் சிறுகதை தொகுப்பு பற்றி - பா. ராஜேந்திரன்



அன்புள்ள
திரு அசோக்குமார்,

இன்று உங்கள் குதிரை மரம் & பிற கதைகள் வாசித்து முடித்தேன். சென்ற ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய 90 புத்தகங்களுள் ஒளிந்திருந்து இப்போதுதான் வாசிக்கச் சிக்கியது.

எந்த பரிந்துரையின்படி வாங்கினேன் என்று நினைவில்லை. எனவே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாசிக்கத் தொடங்கினேன். முதல் கதையிலேயே ஒரு அற்புதமான படைப்பினுள் நுழைந்தது தெரிந்தது. அனைத்து கதைகளும் அதே உயர் வாசிப்பனுபவத்தைத் தந்தன. எதிர்பாராமல் அமையும் நல்நிகழ்வு தரும் பரவசம் இன்னும் மீதமுள்ளது. சரளமான மொழிநடை. இயல்பான உரையாடல்கள். நுணுக்கமான பாத்திர படைப்புகள். கூரிய வாழ்க்கை அவதானிப்புகள்.

அதிலும் சிகரமாக குதிரைமரம் குறுநாவல். குடும்பத்தின் அடிப்படை தேவைகளுக்கான பொருளை ஈட்ட இயலாத குடும்பத் தலைவனின் அவலம், படைப்பில் இருந்து உற்பத்திக்கு மாறும் உலகில் உண்டாகும் சமூக சீர்குலைவு, கணவனின் மகிழ்ச்சிக்கும் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் இடையே ஊசலாடும் மனைவி என் பல தளங்களில் சஞ்சரிக்கிறது. படைப்பாளியின் படைப்பூக்க மகிழ்ச்சியும் வீழ்ச்சியும் தந்தை மகன் ராமர் கதை மூலம் மனம் தொடுகிறது. எவ்வளவு ஆழமான நுணுக்கமான சித்தரிப்பு. வறுமையிலும் பசியில் வாடாமல் காக்கும் விலையில்லா ரேஷன் அரிசி, வறுமையிலும் பீஸ் வாங்கும் பள்ளியில் பசங்க படிப்பது என ஒரு வரியில் வந்து செல்லும் செய்திகள் பல.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே நெடுங்குணம் என்ற ஊர் யோக ராமர் கோயிலுக்காக அறியப்பட்டது. அந்த ஊர் லுங்கிகளுக்காகவும் பெயர் பெற்றது கோயில் மாட வீதிகளில் எல்லாம் லுங்கி நெசவு நடைபெறும் என்றும் கேள்விப்பட்டிருக்கேன். மூன்றாண்டுகளுக்கு முன் அந்தக் கோயிலுக்குப் போனபோது லுங்கி நெசவின் எந்த அடையாளமும் இல்லை. பழங்கதையாய் போய்விட்டது.

அற்புதமான படைப்பிற்கு நன்றி.

அன்புள்ள

பா ராஜேந்திரன்

திருவண்ணாமலை 

பிகு - என்னிடம் உள்ள நூல்களின் பட்டியலைத் தேடியபோது 'சாமத்தில் முனகும் கதவு' 2017 வாங்கியதாகத் தெரிகிறது. அதைத் தேடிப் பிடித்து விரைவில் படிக்க வேண்டும்.

அன்புள்ள திரு. பா. ராஜேந்திரன் அவர்களுக்கு,

வணக்கம். நீங்கள் குதிரைமரம் பிற கதைகள் சிறுகதை தொகுப்பை வாசித்தது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். அறியாத யாரோ ஒருவருக்கு படைப்பு சென்று சேர்வது மகிழ்ச்சியை எப்போதும் அளிக்கிறது. சந்திக்கும் புதிய மனிதனிடம் அறிந்த மனிதர்களின் ஒத்த முகங்களை நினைவுகூற தேடியலைவது போல இதுவும்.

குதிரை மரம் நல்ல மனநிலையில் எழுத தொடங்கவில்லை. எழுத எழுத மனநிலை அமைந்தது. சிலநேரங்கள் அந்த ராமாவை சந்திக்கிறேன். அவருக்கு தெரியாது அவர் கதையில் வாழ்கிறார் என்று.

நெசவு போன்றே எந்த பழைய கலையிலும் நமக்கு சுணக்கம் வந்துவிட்டது, தலையாட்டி பொம்மை, நெட்டிவேலை, வீணை, தஞ்சாவூர் ஓவியம், தட்டு போன்றவைகள் மிக பழையனவாகிவிட்டன. யாரும் வாங்குவாரில்லை. கைத்தறியில் நெய்வது 15 நாட்களாகும், அதே பொருள் பவர்லூமில் இரு நாட்கள் போதும். வீலை அதில் பாதிகூட இருக்காது. தரம் குறைவுதான் ஆனால் நவீனமாக இருக்கிறது என பவர்லூமை நாடுகிறார்கள்.

குலத்தொழிலாக கலையாக நாடுபவர்கள் அதை விட மனம் வராமல் தவிக்கிறார்கள். தனக்குப்பின் தானறிந்த கலை அழியும் என அறியும் மனிதர் எப்படி நிம்மதியாக இருப்பார். பித்தளை சிற்பங்கள் செய்பவர்கள், நாடக, பாகவதமேளா கலைஞர் எல்லோரும் இந்த லிஸ்டில் இருக்கிறார்கள். நானறிந்த நெசவுவாளரைப் பற்றி ஒரு குறுநாவல் எழுதியதே பெரிதாக நினைக்க வேண்டியிருக்கிறது.

பண்ணாட்டு நிறுவனங்கள், தொலைக்காட்சி, போன்றவை எல்லாவற்றையும் உண்டு செறித்துவிட்டன. நீங்கள் சொன்ன லுங்கி, வேட்டி நெசவு தொழில்களையும் தான். அவர்களிடம் பேசும்போது எங்கப்பா காலத்தோட முடிஞ்சிடுஞ்சி என்பார்கள்.

ஆழ்ந்த வாசிப்பிற்கு நன்றிகள். சாமத்தில் முனகும் கதவு சிறுகதை தொகுப்பை வாசிக்க இப்போதே என் அட்வாட்ஸ் நன்றிகள்.

அன்புடன்

கே.ஜே. அசோக்குமார்


https://solvanam.com/2021/03/14/%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/

https://www.commonfolks.in/books/d/kuthirai-maram