Showing posts with label பாவண்ணன். Show all posts
Showing posts with label பாவண்ணன். Show all posts

Wednesday, December 28, 2022

பனி இறுகிய காடு குறுநாவல் குறித்து பாவண்ணன்

 



அன்புள்ள அசோக்குமார் 

வணக்கம்.  முதல் பகுதி கதையை முழுதாகப் படித்தேன். நல்ல தொடக்கம். அவன் மனநிலை, அவன் தாயின் மனநிலை, அவன் மனைவியின் மனநிலை எல்லாமே தனித்துவத்துடன் அமைந்துள்ளன. அவனுடைய விசித்திரமான நடத்தைகளை சிறிதும் மிகை படியாத விதத்தில் எழுதியருக்கிறீர்கள். மகிழ்ச்சி.

இரண்டாம் பகுதிக் கதையையும் படித்து முடித்தேன். மனத்தை பனி இறுகிய காடாக உருவகித்து, அது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து தெளிவடைவதை கூர்மையாக சொல்லியிருக்கிறீர்கள். பழைய நினைவுகளை சின்னச்சின்ன சித்திரங்களாக இடையிடையே ஊடாடவிட்டு அழகாக கோர்த்திருக்கிறீர்கள்.  பொதுவாக தந்தை இல்லாமல் தாயால் வளர்க்கப்படும் சிறுவர்களின் மனநிலை அடையும் மாற்றங்கள் துல்லியமாக அமைந்துள்ளன. அப்பாவுவின் அணுகுமுறை, அவன் இறந்தகால வாழ்வின் தகவல்கள் எல்லாமே கதைமையத்துக்கு வலு சேர்க்கின்றன. முள்ளும் குப்பைகளுமாக அடர்ந்த இடம் சிறுகச்சிறுக சுத்தம் பெற்று தெய்வத்தைக் கண்டடையும் இடம் மொத்த கதையின் மைய்த்தையும் உருவகமாக முன்வைப்பதாக உள்ளது. கதை வாசிப்பு நல்ல அனுபவமாக இருந்தது. வாழ்த்துகள்


அன்புடன்
பாவண்ணன்

Thursday, July 12, 2018

'புரியாதவர்கள்' கதை குறித்து பாவண்ணன்



அன்புள்ள அசோக்குமார்

வணக்கம். சொல்வனத்தில் வந்திருக்கும் சிறுகதையைப் படித்துவிட்டேன்.  தொடர்ந்து வீட்டைத் தேடிவரும் சிறுவியாபாரிகளுக்கும் மருமகளுக்கும் இடையிலான உரசல்/உறவு புதிய களமாக இருப்பதால் படிக்க உற்சாகமாக இருந்தது. வியாபாரிகளின் ஒட்டுறவை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவளுடைய வேகத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாமலேயே வாழ்க்கை ஓடுகிறது. ஒரு புதிர்போல போய்க்கொண்டே போகிறது. யாருக்கும் நேரமில்லை, யாரும் யாருக்கும் தேவையுமில்லை என்கிறபோது வேறெப்படி இருக்கமுடியும்?

எனக்கு அந்த இறுதிவரிக்கு நீங்கள் சற்றே கூடுதல் அழுத்தம் கொடுத்துவிட்டீர்கள் என்று தோன்றவைக்கிறது.  விற்பவர் போகிறார், மருமகள் பார்க்கிறாள், வாசல்முன் வந்து கூவக்கூடும் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் அந்த வீட்டை கூச்சலின்றி கடந்துவிடுகிறார். வேணுமா பாப்பா என்று கேட்கவில்லை. அந்தச் சித்தரிப்போடு சொல்லியிருந்தாலே போதும். தேவையின்றி ‘ஒருநாளும்’ என்றொரு சொல்லால் நீங்கள் தரும் அழுத்தம் ‘ஒரு துளி உப்பு’ கூடுதலாவதுபோல கூடிவிட்டது. அது வெறும் சித்தரிப்பு என்னும் நிலையைக் கடந்து நீங்கள் விரும்பும் முடிவாக மாறிவிட்டது.

அன்புடன்

பாவண்ணன் 

 

Saturday, October 21, 2017

சுயபுராணம்



என்னைப் பற்றி அறிந்துக் கொள்ள ஆர்வமாக இருக்கும் வாசகர்களின்/நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க(!!) அவர்களை திருப்திபடுத்த வேண்டி இந்த பதிவு செய்யப்படுகிறது. மற்றவர்களுக்கு இது சற்று அதீதமாகப் படலாம். அல்லது இணைய உலகின் வேறு பயனுள்ள தளங்களை பார்க்க வேண்டுகிறேன். இருந்தாலும் தலைப்பு சுட்டுவதுபோல் இக்கட்டுரையை சுயபுராணமாக அமைத்துவிடாமல் இருக்க முயற்சிசெய்கிறேன். 

Friday, June 10, 2016

அணிந்துரை: கே.ஜே. அசோக்குமாரின் கதையுலகம் -- பாவண்ணன்



தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் கணிப்பொறியில் நேரிடையாக தமிழில் எழுதும் முறை பரவலாக அறிமுகமானபோது, அப்போது எழுதிக்கொண்டிருந்த ஒருசிலர் உடனடியாக அந்தப் புதுமுறையைப் பயின்று தேர்ச்சி பெற்றுவிட்டார்கள். தினந்தோறும் கணிப்பொறியைக் கையாளக்கூடியவனாக இருந்தும்கூட, என்னால் அப்படி உடனடியாக  மாறமுடியவில்லை. ஒரு படைப்பை முழுமையாக கையெழுத்துப் பிரதியாக எழுதி வைத்துக்கொண்டு, அதற்குப் பிறகு ஓய்வாக அதைப் பார்த்து கணிப்பொறியில் எழுதும் வழிமுறைதான் எனக்கு வசதியாக இருந்தது. கணிப்பொறி என்பதை கிட்டத்தட்ட ஒரு தட்டச்சுப்பொறியாகவே நான் பயன்படுத்தி வந்தேன்.

Thursday, April 23, 2015

சுஜாதா விருதுகள் 2015

ஒவ்வொரு ஆண்டும் சுஜாதா விருதுகள் வெளியிடப்படுகின்றன. வந்த மற்ற ஆண்டுகளில் அவ்விருதுகளைப் பற்றியும் பெற்றவர்களைப் பற்றியும் பாராட்டி அல்லது விமர்சித்து எதுவும் எழுதியதில்லை. இந்த ஆண்டு அப்படி விடமுடியவில்லை. எதாவது சொல்லிவைப்போமே என்று தோன்றுகிறது. முக்கிய காரணம் நான் விரும்பும் எழுத்தாளர்களான பாவண்ணன், போகன், சமஸ் போன்றவர்களுக்கு கிடைத்திருப்பது ஒருகாரணம். மற்றவர்களை விரும்புவதில்லை என்று சொல்லமுடியாது. நான் சரியாக கவனித்ததில்லை. சுரேஷ் கண்ணன், சந்தோஷ் நாராயணன் இருவரின் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன் அல்லது கடந்துபோயிருக்கிறேன். சுரேஷை சினிமாவை எழுதுவதால் கவனிக்காமல் விட்டிருக்கலாம். சந்தோஷின் எழுத்துக்களை விகடனை பிரதிபலிப்பதால் விட்டிருக்கலாம். இப்போது இருவரின் எழுத்துகளை பார்க்கும்போது இளமையாகவும் புதுமையாகவும் இருந்து ஆச்சரியப்படுத்துகிறது. இதற்காகவே விருதுகளை அளிக்கலாம் போலும்.

Friday, January 9, 2015

பாவண்ணனுடன் ஓர் உரையாடல் : இரண்டாம் பகுதி



கேள்வி: கிரிஷ் கார்னாட்டின் நாடகங்களை பல தமிழில் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். குறிப்பாக பலிபீடம்அதில் முன்னுரையிலேயே இது தமிழில் அறங்கேறுமா என பார்த்து மொழிபெயருங்கள் என்று கூறியிருக்கிறார் கிரிஷ் கர்னாட்அவர் சொன்னது போல் இதுவரை ஒருமுறைகூட மேடை ஏறவில்லை. வருங்காலத்தில் நாடகம் என்றவகை தமிழ் இலக்கியத்தில் இல்லாமல் போய்விடுமா?

பாவண்ணன்:  நாடகமே இல்லாமல் போய்விடும் என்றெல்லாம் நினைக்கத் தேவையில்லை. கண்டிப்பாக நாடகச் செயல்பாடுகள் தொடர்ந்தபடியேதான் இருக்கும். தமிழ்ச்சூழலின் பிரச்சினை, நாடகங்களுக்கான பார்வையாளர்கள் இல்லை என்பதுதான். ரசனையுணர்வும் மேலான தேடலுணர்வும் கொண்ட பார்வையாளர்களின் எண்ணிக்கை பெருகப்பெருக நாடகங்களுக்கான வரவேற்பும் பெருகும். அதுவரை, ஒரு சிறிய கூட்டத்தினருக்கான செயல்பாடாக மட்டுமே நாடகம் சுருங்கியிருக்கும். கிரிஷ் கார்னாடின் நாடகங்கள் புராணம், வரலாறு, நாட்டுப்புறவியல் ஆகிய பின்னணிகளைக் கொண்டவை. அந்தக் களங்களிலிருந்து நாடகத்துக்கான கருக்களை அவர் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். சமகாலத்துக்குரிய பார்வையை விவாதிக்கும் ஒரு களமாக அக்கருக்களை அவர் புனைந்துகொள்கிறார். நாடகத்தில் துக்ளக் பேசினாலும், அதை ஒரு நவீன அரசியல்வாதியின் பேச்சாகவே பார்வையாளர்கள் உணரும் வகையில் அவருடைய புனைவு கட்டமைக்கப் பட்டிருக்கிறது. இந்தியத்தாயை மனத்தில் வைத்துக்கொண்டு  பாரதியார் பாஞ்சாலி சபதம் எழுதியதுபோல கார்னாட் தன் நாடகங்களை அமைக்கிறார். 

Thursday, January 8, 2015

பாவண்ணனுடன் ஓர் உரையாடல்

எழுத்தாளர் பாவண்ணனுக்கு அதிகம் அறிமுகம் தேவையில்லை. 3 நாவல்கள், 16 சிறுகதை தொகுப்புகள், 17 கட்டுரை தொகுப்புகள், 19 மொழிபெயர்ப்புகளை செய்தவர். அவரது கதைகளும் கட்டுரைகளும் நுண்ணிய வெளிப்பாடுகளாக எப்போதுமே உள்ளன. சமீபத்திய சிறுகதை தொகுப்பான பாக்குத்தோப்பும் அப்படிதான். நாவல்களில் சிதறல்களும், பாய்மரகப்பலும் முக்கிய நாவல்களின் வரிசையில் சேர்ந்தவைகள். பழகுவதற்கு எளிய இனிய மனிதர். அவருடன் அவ்வப்போது நடந்த உரையாடல்களில் சிறிய கேள்விகளுக்கும் விரிவான விளக்கமாக பதிலளித்து நிறைவாக இருந்தது. அவற்றின் தொகுப்புதான் இது.

Monday, May 9, 2011

கணையாழியும் கஸ்தூரிரங்கனும்

கணையாழியும் கஸ்தூரிரங்கனும்
பாவண்ணன்
எண்பதுகளில் இலக்கிய உலகில் அடியெடுத்து வைப்பதற்கு ஒரு வாசலாக இருந்த முக்கியமான இதழ் கணையாழி. அதன் நிர்வாக ஆசிரியராக இருந்து நடத்தியவர் கி.கஸ்தூரிரங்கன். தொடக்கத்தில் சிறிது காலம் தி.ஜானகிராமன் இதன் ஆசிரியராக இருந்து நடத்தினார். பிறகு, நீண்ட காலத்துக்கு அசோகமித்திரன் ஆசிரியராக இருந்தார். அப்போதுதான் இரா.முருகன், கோணங்கி, சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், நான் என பலரும் அந்த இதழில் தொடர்ந்து எழுதினோம். எங்களுக்கு முன்னால் சா.கந்தசாமி, ஆதவன், விட்டல்ராவ், பிரபஞ்சன், மாலன் என இன்னொரு தலைமுறை எழுத்தாளர்கள் எழுதினார்கள். அசோகமித்திரனைத் தொடர்ந்து இந்திரா பார்த்தசாரதி ஆசிரியர் பொறுப்பேற்றிருந்தார்.
அறுபதுகளில் நியுயார்க் டைம்ஸ் என்னும் ஆங்கில இதழுக்கு வேலை செய்வதற்காக கி.கஸ்தூரிரங்கன் தில்லிக்குச் சென்றார். இதுபோலவே, வேலை நிமித்தமாக தில்லிக்குச் சென்ற எஸ்.ஜெகன்னாதன், ஆதவன், ரங்கராஜன் என்கிற சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, க.நா.சுப்பரமணியன், தி.ஜானகிராமன் ஆகியோர் தற்செயலாக ஒன்றுகூடி ஓர் தமிழிதழைத் தொடங்கினார்கள். அதுதான் கணையாழி. கஸ்தூரி ரங்கன் காந்தியச்சார்பு உடையவர். அவருடைய பல அரசியல் கட்டுரைகள் காந்தியச்சிந்தனையை முன்வைப்பவை. பிற்காலத்தில், கணையாழிக்கு வெளியே ஆர்வமுள்ள இளைஞர்களைத் திரட்டி ஸ்வச்சித் என்னும் அமைப்பை உருவாக்கி தொண்டு செய்துவந்தார். ஏறத்தாழ இருபதாண்டுகளுக்குப் பிறகு இதழோடு தொடர்புடையவர்கள் அனைவருமே தமிழ்நாட்டுக்குத் திரும்பினார்கள்.
கணையாழியில் சுஜாதா எழுதி வெளிவந்த கடைசிப்பக்கங்கள் பகுதி வாசகர்களின் கவனத்தை மிகவும் ஈர்த்த பகுதி. காகித மலர்கள், என் பெயர் ராமசேஷன் ஆகிய ஆதவனின் நாவல்களும் தி.ஜானகிராமனின் நளபாகம் நாவலும் இந்திரா பார்த்தசாரதியின் வேர்ப்பற்று நாவலும் கணையாழியில் தொடராக வெளிவந்த படைப்புகள். இந்திய மொழிகளில் சிறந்த பத்து நாவல்கள் என்னும் க.நா.சு.வின் தொடரைக் கணையாழி வெளியிட்டது. முஸ்தபா என்னும் பெயரில் கஸ்தூரிரங்கன் தொடர்ச்சியாக பல கட்டுரைகள் எழுதிவந்தார்.
தி.ஜா. மறைவையொட்டி கணையாழி குறுநாவல் திட்டம் ஒன்றை அறிவித்தது. கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக இத்திட்டம் செயல்பட்டு வந்தது. பெயர்பெற்ற எழுத்தாளர்கள் முதல் அறிமுக எழுத்தாளர்கள் வரை இத்திட்டத்தில் பங்கேற்று குறுநாவல்களை எழுதினார்கள். தமிழில் குறுநாவல்கள் வளர்ச்சியில் கணையாழிக்கு பெரும்பங்குண்டு.
கஸ்தூரிரங்கன் தினமணி நாளேட்டுக்கு சில ஆண்டுகள் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தினார். அச்சமயத்தில் தினமணி கதிரில் ஒரு தொடர் எழுதவும் செய்தார். ஆனாலும் அந்தப் பங்களிப்பைவிட எல்லோருடைய நெஞ்சிலும் நிறைந்திருப்பது அவருடைய கனவுகளையும் ஈடுபாடுகளையும் தாங்கி வெளிவந்த கணையாழி இதழ் மட்டுமே. கணையாழி இதழை ஓர் இலக்கிய இயக்கம் என்றே அழைக்கலாம். எழுத்து, கசடதபற போல கணையாழியும் ஓர் இயக்கம். ஒரு கட்டத்தில் அது நின்றது. பிறகு அறக்கட்டளை ஒன்றின் வழியாக மீண்டும் உயிர்த்தெழுந்தது. மீண்டும் நின்றது. கடந்த சித்திரைத்திங்கள் மீண்டும் அது ம.ராஜேந்திரன் முயற்சியால் உயிர்த்தெழுந்தது. புத்துயிர்ப்போடு அது மீண்டும் தோன்றியிருப்பதைப் பார்ப்பதற்காகவே காத்திருந்த்துபோல, பார்த்துவிட்டு மறைந்துவிட்டார் கஸ்தூரிரங்கன். அவருக்கு நம் வணக்கத்துக்குரிய அஞ்சலி.