Showing posts with label சிறுகதை தொகுப்பு. Show all posts
Showing posts with label சிறுகதை தொகுப்பு. Show all posts

Thursday, August 28, 2025

படித்ததும் சுவைத்ததும்: சாமத்தில் முனகும் கதவு -‍ நாகரத்தினம் கிருஷ்ணா


மனம் அதிசயமானது, அதிவினோத பராக்கிரமசாலி. ஐம்புலன்களால்: தொட்டு, பார்த்து, கேட்டு, சுவைத்து,  நுகர்ந்து அறிய இயலாதவற்றை மனம் தொடுகிறது, மனம் காண்கிறது, மனம் கேட்கிறது, மனம் சுவைக்கிறது, மனம் நுகர்கிறது.

மனத்தின்  உண்மையான சொரூபம் நிர்வாணமானது.  உடலைப்போல அலங்கரிக்கப்பட்டதோ, வாசனை ஊட்டப் பட்ட தோ அல்ல. சமயம், சமூகம், அறிவதிகாரம், அனுபவ மூதுரை முதலான கட்டுகள் இறுக மறக்கும் நிலையில் அல்லது தளர்கின்ற கணத்தில் “பசியாற வேட்டையாடுவதில் தவறில்லை” எனபோதிக்கிற மனதின் நியாயத்திற்கு ஐம்புலன்கள் சேவகர்கள். இந்த மனத்தை உளவியல் அறிஞர்கள் நனவு(consciousness), முன்நனவு அல்லது மன உணர்வின் இடைநிலை அல்லது தயார்நிலை(preconciousness), இறுதியாக நனவிலி நிலை (unconsciousness) என வகைப்படுத்துகின்றனர். எழுத்தென்பதே நனவிலி நிலையின் வெளிப்பாடென்பது இவ்வறிஞர்களின் கருத்து.

Friday, May 9, 2025

குதிரைமரம் வாசிப்பனுபவம் - ஆதவன் சரவணபவன்

எழுத்தாளரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இந்தக் குதிரைமரம்.

பத்துக் கதைகள் கொண்ட தொகுப்பு. வாசக இடைவெளிகளுடன் அநேகமான கதைகள் இருப்பதால் ஆழ்ந்த வாசிப்பைக் கோருகின்றன. ஒன்றுக்கு இரண்டு தடவைகள் வாசிக்கும் போதே அவற்றின் உள்ளீடை அணுகமுடிகின்றது.

மனநலமருத்துவருக்கும் அவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளிக்கும் இடையிலான பூனை எலி விளையாட்டாக இருந்தது "தற்கொலை முகம்" என்ற கதை. உளவியல் அடிப்படையில் நோயாளியை அணுகும் மருத்துவர் எவ்வாறான மனச்சஞ்சலங்களுக்கு ஆளாகி தன்னிலை இழக்கும் தருணம் எதிர்பாராதது. தூக்கமின்மையின் காரணத்தை சுய மதிப்பீடு செய்யும் போது மனதின் கசப்பான பகுதியை உணர்வது என்ற முடிச்சில் கதை உச்சம் பெறுகிறது.  

Monday, November 25, 2019

சாமத்தில் முனகும் கதவு விமர்சனம் - சுரேஷ் சுப்ரமணி


எழுத்தாள நண்பர் திரு. கே.ஜே.அசோக்குமார் அவர்கள் எழுதிய இத்தொகுப்பில் மொத்தம் 18 சிறுகதைகள் உள்ளன. இக்கதைகள் உயிர் எழுத்து, வார்த்தை போன்ற அச்சு இதழ்களிலும் சொல்வனம், மலைகள்.காம், ஜெயமோகன்.காம் போன்ற இணைய இதழ்களிலும் வெளிவந்துள்ளன. எழுத்தாளர் கே.ஜே.அசோக்குமார் அவர்கள் இக்கதைகளை பல மாறுபட்ட களங்களில் எழுதியிருந்தாலும் அனைத்துமே மனிதர்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கை சிக்கல்களை, வேதனைகளை வெளிப்படுத்துபவையாக உள்ளன. அதற்கான மொழிநடை அவருக்கு சிறப்பாக கைவந்துள்ளது அவர் கதைகளை வாசிக்கும்போது தெரிகிறது. கதைகள் யதார்த்த வகை கதைகளாகவும் சில கதைகள் மாய யதார்த்த வகை கதைகளாகவும் அமைந்திருப்பது பலதரப்பட்ட வாசிப்பு அனுபவங்களை வாசகர்களுக்கு அளிக்கிறது.

Thursday, July 12, 2018

சாமத்தில் முனகும் கதவு தொகுப்பு குறித்து சுரேஷ் சுப்ரமணி

எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார் அவர்களுக்கு உங்கள் முகநூல் நண்பர் Suresh Subramani எழுதுவது,

வணக்கம். தங்களின் சிறுகதை தொகுப்பானசாமத்தில் முனகும் கதவுபுத்தகத்தை படிக்கிறேன் என நான் உங்கள் பதிவில் சொல்லியிருந்ததுக்கு நீங்கள் அதை படித்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள் என சொல்லியிருந்தீர்கள். பல்வேறு வேலைகளுக்கிடையே இன்றுதான் அதை முழுதும் படித்து முடித்தேன். அனைத்து கதைகளும் அருமையாக வந்துள்ளன.

புத்தகத்தின் தலைப்பான சாமத்தில் முனகும் கதையில் கூத்தையனின் மன அவசங்களை நுண்ணிப்பாக எழுதியிருந்தீர்கள். அவன் மனைவி வாசுகியின் மரணத்தை முன்னிட்டு அவனுள் எழும்பியிருந்த குற்ற உணர்ச்சியை குத்திக்காட்டும் விதமாக கதவு அகோரமாக முனகுவது வாசுகியின் ஆற்றாமையையே நினைவுறுத்துகிறது.

Monday, October 30, 2017

விமர்சனம்: சாமத்தில் முனகும் கதவு தொகுப்பு பற்றி மேரி கிறிஸ்டி




என் அன்பு வாசக நண்பர்களுக்கு, திரு.கே.ஜே. அசோக் குமார் வளர்ந்து வரும் நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்; விரைவில் மிக முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராக வரவிருப்பவர். சென்ற தடவை மலேசிய தமிழ் எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்களை அறிமுகப்படுத்தியிருந்தேன். தற்போது வாசித்தது கே.ஜே. அசோக் குமார் அவர்களின் "சாமத்தில் முனகும் கதவு" - 18 சிறுகதைகளின் தொகுப்பு. ஒவ்வொரு சிறுகதையைப் பற்றியும் நான் சொல்ல ஆரம்பித்தால் அதுவே ஒரு பெரிய புத்தகம் அளவுக்கு வந்துவிடும். ஏனெனில் அவரின் கதாபாத்திரங்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் மேலே மேலே சிந்தனைகளைக் கிளறிவிடுகின்றன.  அதனால் உதாரணத்திற்கு என்னைக் கவர்ந்தவற்றுள் ஒன்றிரண்டு வாக்கியங்களைப் பற்றி மட்டும் சொல்கிறேன். "சாமத்தில் முனகும் கதவு" என்று ஒரு சிறுகதை. அதில் இப்படி ஒரு வாக்கியம்: "கடை எண்ணெய் தினமும் பார்த்துப் பழகி சாதாரணமாகி விட்டிருப்பதை உணர்ந்தபடி சைக்கிளை எடுத்தான்". இது ஒரு சாதாரண மனித மனதின் அன்றாட பரிணாம வளர்ச்சி. இதை மிக இயல்பாக சொல்லிவிட்டார். நம் வாழ்வின் ஒவ்வொரு சமயத்திலும் நிகழ்வது இதுதான்

Friday, January 6, 2017

கனவுகளின் மீள் திரட்சி


கே.ஜே.அசோக்குமாரின் “சாமத்தில் முனகும் கதவு” சிறுகதைத் தொகுப்பு விமர்சனம்

முனைவர். அகிலா கிருஷ்ணமூர்த்தி


சிக்மண்ட் ஃப்ராய்டை புறக்கணித்து, “சாமத்தில் முனகும் கதவு” சிறுகதைத் தொகுப்பிற்குள் பயணிப்பது சாத்தியமில்லாத ஒன்று. மிகுந்த தனிமையில், மனதோடு பேசுகிற பேரமைதியின் சலசலப்புதான் கே.ஜே.அசோக்குமாரின் சிறுகதைகள். உளவியல் பகுப்பில் மிக நுட்பமாக உள்ளே சென்றால், அகம் சார்ந்த தன்மைகளை கதைக் கருவாக வைத்திருப்பதை உணரமுடியும்.
(முனைவர். அகிலா கிருஷ்ணமூர்த்தி)

Saturday, June 11, 2016

முன்னுரை: சாமத்தில் முனகும் கதவு சிறுகதை தொகுப்பு



எழுதுவதைத்தவிர வேறு கதியில்லை என்று வந்தபோதுதான் எழுத ஆரம்பித்தேன். அதுவும் எழுதி என்ன ஆகபோகிறது என்கிற‌ பெரும்தயக்கதோடு. இத்தனைக்கும் என் சிறுவயது லட்சியம் எழுத்தாளன் ஆவதாகத்தான் இருந்தது. சிறுவயதில் என் வீட்டை சுற்றியுள்ள என் வயதொத்த சிறுவர்களுக்கு இட்டுக்கட்டி கதைகளைகூறி சந்தோஷப்படுத்திய‌ இடமான‌ சித்தி விநாயகர் கோவிலில் அமர்ந்து வேண்டிக் கொண்டது இன்றும் நினைவிருக்கிறது. மேஜைமுன் அமர்ந்து பேனா பிடித்து வடக்கே பார்த்து யோசிக்கும் என் சித்திரம் அப்போதிருந்தே என்மனதில் இருக்கிறது. படிப்பு, வேலை, அலைச்சல்க‌ள், என்று தேவையற்ற வேலைகளில் நான் ஈடுபடுவேன் என்று இன்றுவரை நினைத்ததில்லை. எழுத்தாளனுக்கு தேவையான அகங்காரமும், எந்த வேலையும் சரியாக செய்ய தெரியாமையும் எப்போதும் என் வாழ்வில் தொடர்ந்து வருவதை அவதானித்து இருக்கிறேன். என் சிறுவயதில் என் அம்மா ஒளித்துவைத்து பென்சிலால் பேப்பரில் இருபக்கங்களிலும் கதை எழுதுவதை கவனித்திருக்கிறேன். ரொம்பநாள் வரை கதையெழுதி பிரசுரிக்க அனுப்பியிருக்கிறார். இதுவரை ஒரு கதையும் வந்ததில்லை. இந்த ஒற்றை ஆதாரத்தைத் தவிர என் குடும்பவகையில் எழுத்தாளர் என்று யாருமில்லை. என் அம்மாவின் ஆசை, அவர் மனதோடு கூறிய ஆசிகள் என்னிடம் வந்துவிட்டதாக நான் நினைத்துக் கொள்கிறேன். இத்தொகுப்பு அவர் கைகளில் வரும் நாளில் நிச்சயம் அவர் கண்களைப் பனிக்கச் செய்யும்.

Friday, June 10, 2016

அணிந்துரை: கே.ஜே. அசோக்குமாரின் கதையுலகம் -- பாவண்ணன்



தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் கணிப்பொறியில் நேரிடையாக தமிழில் எழுதும் முறை பரவலாக அறிமுகமானபோது, அப்போது எழுதிக்கொண்டிருந்த ஒருசிலர் உடனடியாக அந்தப் புதுமுறையைப் பயின்று தேர்ச்சி பெற்றுவிட்டார்கள். தினந்தோறும் கணிப்பொறியைக் கையாளக்கூடியவனாக இருந்தும்கூட, என்னால் அப்படி உடனடியாக  மாறமுடியவில்லை. ஒரு படைப்பை முழுமையாக கையெழுத்துப் பிரதியாக எழுதி வைத்துக்கொண்டு, அதற்குப் பிறகு ஓய்வாக அதைப் பார்த்து கணிப்பொறியில் எழுதும் வழிமுறைதான் எனக்கு வசதியாக இருந்தது. கணிப்பொறி என்பதை கிட்டத்தட்ட ஒரு தட்டச்சுப்பொறியாகவே நான் பயன்படுத்தி வந்தேன்.

Thursday, April 29, 2010

நகரத்திற்கு வெளியே - சிறுகதை தொகுப்பு


விஜய் மகேந்திரன் எழுதியள்ள சிறுகதைகளின் தொகுப்பு 'நகரத்திற்கு வெளியே'. இது அவரது முதல் சிறுகதை தொகுப்பாக இருக்கும். மிக குறைந்த சிறுகதைகளை (10 சிறுகதைகள்) கொண்ட இத்தொகுப்பு எல்லா சிறுகதை ஆசிரியர்களின் முதல் தொகுப்பு போல குறைநிறைகளை கொண்டுள்ளது. சில சிறுகதைகள் கதைகளாக உருகொள்வதற்கு முன்பாகவே கீழிறங்கிவிட்டதாக தோன்றினாலும், வேறுசில கதைகள் நல்ல தரத்துடன் உள்ளன. குறிப்பாக ‍‍புயல்மழை சின்னம், நகரத்திற்கு வெளியே, சனிபெயர்ச்சி போன்றவைகள். அவைகள் கூட ஜனரஞ்சக தளத்தில் இருப்பதாக சில சமயம் தோன்றினாலும், கதைகளனும் அதன் திருப்பங்களும் மிக புதியவையே. நகரத்து வாழ்க்கையை பிரதிபலிக்கும் இக்கதைகளை நாம் எங்கே செல்கிறோம் என பதபதைக்க வைக்கினறன. ஒரு நல்ல தொகுப்பு. 
உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மேலும் வெற்றிகளை பெற விஜய் மகேந்திரனுக்கு என் வாழ்த்துக்கள்.