ஒவ்வொரு ஆண்டும் சுஜாதா விருதுகள் வெளியிடப்படுகின்றன. வந்த
மற்ற ஆண்டுகளில் அவ்விருதுகளைப் பற்றியும் பெற்றவர்களைப் பற்றியும் பாராட்டி அல்லது
விமர்சித்து எதுவும் எழுதியதில்லை. இந்த ஆண்டு அப்படி விடமுடியவில்லை. எதாவது சொல்லிவைப்போமே
என்று தோன்றுகிறது. முக்கிய காரணம் நான் விரும்பும் எழுத்தாளர்களான பாவண்ணன், போகன், சமஸ் போன்றவர்களுக்கு கிடைத்திருப்பது
ஒருகாரணம். மற்றவர்களை விரும்புவதில்லை என்று சொல்லமுடியாது. நான் சரியாக கவனித்ததில்லை.
சுரேஷ் கண்ணன், சந்தோஷ் நாராயணன் இருவரின் எழுத்துக்களை
வாசித்திருக்கிறேன் அல்லது கடந்துபோயிருக்கிறேன். சுரேஷை சினிமாவை எழுதுவதால் கவனிக்காமல்
விட்டிருக்கலாம். சந்தோஷின் எழுத்துக்களை விகடனை பிரதிபலிப்பதால் விட்டிருக்கலாம். இப்போது இருவரின் எழுத்துகளை
பார்க்கும்போது இளமையாகவும் புதுமையாகவும் இருந்து ஆச்சரியப்படுத்துகிறது. இதற்காகவே
விருதுகளை அளிக்கலாம் போலும்.