மனம் அதிசயமானது, அதிவினோத பராக்கிரமசாலி. ஐம்புலன்களால்: தொட்டு, பார்த்து, கேட்டு, சுவைத்து, நுகர்ந்து அறிய இயலாதவற்றை மனம் தொடுகிறது, மனம் காண்கிறது, மனம் கேட்கிறது, மனம் சுவைக்கிறது, மனம் நுகர்கிறது.
மனத்தின் உண்மையான சொரூபம் நிர்வாணமானது. உடலைப்போல அலங்கரிக்கப்பட்டதோ, வாசனை ஊட்டப் பட்ட தோ அல்ல. சமயம், சமூகம், அறிவதிகாரம், அனுபவ மூதுரை முதலான கட்டுகள் இறுக மறக்கும் நிலையில் அல்லது தளர்கின்ற கணத்தில் “பசியாற வேட்டையாடுவதில் தவறில்லை” எனபோதிக்கிற மனதின் நியாயத்திற்கு ஐம்புலன்கள் சேவகர்கள். இந்த மனத்தை உளவியல் அறிஞர்கள் நனவு(consciousness), முன்நனவு அல்லது மன உணர்வின் இடைநிலை அல்லது தயார்நிலை(preconciousness), இறுதியாக நனவிலி நிலை (unconsciousness) என வகைப்படுத்துகின்றனர். எழுத்தென்பதே நனவிலி நிலையின் வெளிப்பாடென்பது இவ்வறிஞர்களின் கருத்து.





