நாவல்களைப் பற்றி பேசுவதற்கு முன்னால் மனிதர்கள் உண்டாக்கின மொழியும் இலக்கியங்களும் எவ்வாறு காலங்களை கடந்து வந்திருக்கிறது என்பதை நாம் கொஞ்சம் உற்று நோக்கினாலே புரிந்துக் கொண்டுவிடமுடியும்.
ஆதியில் இருந்த மனிதர்கள் தினசரி வாழ்வில் இருக்கும் வேட்டையாடுதல், உணவு சேகரித்தல், இனக்குழு சண்டை, ஒய்வு, போன்றவற்றிற்கு மேல் அவர்கள் தேடியது கலையும் இலக்கியமும் இசையும் தான். மனிதர்களுக்கு ஒரு முக்கியமான இந்த வாழ்வின் மீதான நம்பிக்கையை அவர்களுக்கு அவை அளித்தன. கலையும் இசையும் தினசரி வாழ்வில் ஒரு இனிமையை அளிக்கும்போது இலக்கியம் மனிதர்களுக்கு வாழ்வில் ஒரு அர்த்தத்தை அளித்தது.
குகைகளில் அவர்கள் ஓவியங்களை வரைந்து வைத்தார்கள். தங்களின் வேட்டையாடுதலை, எங்கே விலங்குகள் உள்ளன என்பதை குறிக்க, தங்கள் சடங்குகளை குறித்து மற்றவர்களுக்கு தெரிவிக்க என்று அனைத்தையும் ஓவியங்களாக வரைந்து வைத்தார்கள்.
மொழியறிவிற்கு முன்னால் சைகை மொழி வளர்ந்தது. அதைக் கொண்டு மற்றவர்களோடு உரையாடினார்கள். பிற்பாடு மொழி வளர தொடங்கியது. தலையசைப்பு, கையசைப்பு மூலம் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தினார்கள்.