சொல்ல நிறைய இருப்பதனால்தான் நாவல் எழுத தொடங்கினேன். ஆனால் போதாமையை மேலும் கூட்டிவிட்டது இந்நாவலின் விரிவு. யோசித்து பார்க்கும்போது யாக்கை இதுவரை என் குழையாத மனஅடுக்குகளை மாற்றியமைத்துவிட்டது என்று சொல்லலாம். யாக்கையில் வழியே கண்டடைந்தவைகளை மற்றொரு புனைவில் எழுத வேண்டும்.
வாழ்கையிலிருந்து புனைவுகளாக ஆக்கும் முயற்சிகள் ஆற்றுநீரிலிருந்து மணலை சலித்து அள்ளும் செய்கை போல இருந்தது. யாக்கையை எங்கே தொடங்கி எங்கே முடிப்பது என்பதை நான் தீர்மானிக்கவில்லை. ஆழ்மனம்தான் தீர்மானித்தது. நான் வெறும் கருவி என்று சொல்லலாம். அப்படியும் சொல்லிவிட முடியாது. சில அணுக்கங்கள் எனக்கு ஏற்பட என் ப்ரக்ஞையும் தன்பங்கிற்கு கொஞ்சம் செய்திருக்கிறது. மீளாத பல புனைவு தருக்கங்களை நான் என் ஆழ்தூக்கத்தில் அறிந்திருக்கலாம். கனவுகளில் கண்டடைந்திருக்கலாம். மறந்தவைகளில் நானும் ஒளிந்திருக்கலாம். எப்படியானாலும் சொல்லவந்தது என்னையும் அறியாமல் சொல்லியிருக்கிறேன். நான் பார்த்த வாழ்க்கைதான் இதில் இருக்கிறது. சில உண்மைகள், சில பொய்கள், சில அச்சு அசலாக நானறியாதவைகள்.
