Thursday, November 3, 2022

குதிரை மரம் பற்றி - ‍குமார நந்தன்


கே.ஜே. அசோக்குமாரின் குதிரை மரம் சிறுகதையை கடந்த சொற்சுனை கூட்டத்திற்காக சிவப்பிரசாத் தேர்ந்தெடுத்திருந்தார். 

படித்தவுடனே கதையைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் சந்தர்ப்ப நிலையால் முடியவில்லை. இப்போதுதான் எழுதுகிறேன்.
கதையைப் படித்துக் கொண்டிருக்கும்போதே, கதை, எழுத்தாளன் என்ற நிலைமைகளைத் தாண்டி இக்கதையை அவர் எழுதி இருக்கிறார் என எனக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. கதையில் அவ்வளவு உயிரோட்டம்.
ஒரு நெசவாளியின் துயர் மிகுந்த வாழ்க்கையைப் பதிவு செய்துவிட வேண்டும் என அர்ப்பணிப்புடன் எழுதி இருக்கிறார்.

நெசவாளிக்கு தற்போது வேலையில்லாத நிலை, வேறு வேலைகளில் அவனால் பொருந்திப் போக முடியாத, பொருந்திப் போகத் தயாரானாலும் அதனால் மீண்டும் நெசவு வேலைக்கு ஏற்றதாய் இல்லாமல் கைகள் மென்மைத் தன்மையை இழந்துவிடுமோ என்ற அச்சம். நெசவை ஒரு தொழிலாய் மட்டும் நினைக்காமல் ஒரு கலையாய் தன்னை ஒரு கலைஞனாய் உணர்பவனின் அதனாலேயே சக மனிதர்களோடு பொருந்திப் போக முடியாமல் உண்டாகும் தவிப்பு எனப் பல விஷயங்களை நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார். அதே போல கணவன், மனைவி உறவில் இருக்கும் சிக்கல் சிடுக்குகள் அதைத் தாண்டி நிலவும் அன்பையும் பிரமாதமாக சொல்லியிருக்கிறார்.
 

வாழ்க்கையின் அழுத்தம் தாங்காமல் அவன் தற்கொலைக்கு முயற்சிக்கிறான். அதிலிருந்து அவன் காப்பாற்றப்பட்டபின், கலை தன்னை கைவிட்டு விட்டதாக மனம் வெதும்பும் அவன் பாவு நூலை அறுத்து, தறியையும் உடைத்தெரிகிறான்.
மனதை துயரத்தில் அமிழ்த்தும் முடிவு
 

தமிழ் கிளாசிக் கதைகளில் ஒன்றாக இருக்கும் தகுதி இந்தக் கதைக்கு இருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது.
 

கே.ஜே. அசோக்குமார் நெசவு தொழில் சார்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவராய் இருக்கக் கூடும். அதனால் தான் இவ்வளவு விஷயங்களை இவ்வளவு துல்லியமாய் எழுதி இருக்கிறார். கதையின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். அல்லது இன்னும் நான்கைந்து நெசவாளிகளின் வேறு வேறான நிலைமைகளையும் இணைத்து ஒரு நாவலாக முயற்சித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அவர் தன் அப்பாவைப் பற்றிய நினைவு கூறுவது கதையில் அதிகப்படியான விஷயமாய் இருக்கிறது என்று நான் சொன்னேன். ஆனால், நண்பர்கள் அதுதான் கதையின் உயிரோட்டமாய் இருக்கிறது என்றார்கள்.
 

குதிரை மரம் என்பது நெசவு இழைகளை சரிபார்க்கும் ஒரு கருவி அந்தப் பெயரை கதையின் தலைப்பாக வைத்திருப்பதும் சிறப்பாக இருக்கிறது.