Friday, January 6, 2023

பனி இறுகிய காடு பற்றி சுரேஷ் வெங்கடாத்ரி



சென்ற ஆண்டு படித்தவற்றில்  கே.ஜே. அசோக்குமாரின்  'பனி இறுகிய  காடு' குறுநாவலை ஒரு முக்கியமான படைப்பாக உணர்ந்தேன். கணவனை இழந்த ஒரு பெண்ணால், பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட மகன், அவளது இழப்பைத் தாங்க முடியாமல், பரிதவிக்கும் கதையை, ஒரு மிக இறுக்கமான மொழியில், மிகையில்லாமல், தொய்வில்லாமல் சொல்லியிருக்கிறார். இந்த குறுநாவலில் அமைந்திருக்கும் மொழியும் நடையும் அசோக்குமாரின் எந்த படைப்புகளிலும் நான் இதுவரை காணாதது. கதையில் இடம்பெறும் அன்றாடச் சம்பவங்கள் கூட அசோக்கின் இந்த மொழியாலும், நடையாலும், ஒரு அசாத்தியமான கனபரிமாணத்தை அடைகின்றன. அதுவே இக்கதையின் நாயகனின் இழப்பை நமது சொந்த இழப்பாக உணரச் செய்கின்றன. நாயகனின், தாயார், நண்பன், அவரது மனைவி, ஏன், கதையில் அதிகம் கட்டப்படாத  நாயகனின் மனைவி  பாத்திரமுமே கூட மிக நன்றாக வந்திருக்கின்றன.

சொல்வனம் இணைய  இதழில் இரண்டு பகுதிகளாக வெளிவந்திருக்கிறது இது. இரண்டு பகுதிகளாகத்தான் எழுதப்பட்டதா என்று தெரியவில்லை. இரண்டாம் பகுதியை விட முதல் பகுதியே  அபாரமாக இருந்தது. நாவலின் முடிவு எதிர்பார்த்த மாதிரிதான் இருக்கிறது. (ஆனால் ஒப்புக் கொள்ளக்கூடிய இயல்பான முடிவுதான்.)  இரண்டாம் பகுதி முதல் பகுதியை விட  மாற்றுக்  குறைவாக தெரிய இது ஒரு காரணம். இன்னொரு காரணம் அப்பகுதியில், வரும் அந்த புத்தர் சிலைக்கு நாயகனுக்கும் உருவாகும் பந்தமும் அங்கே அந்த நாயகனின் செயல்களும்.அதை என்னால், நாவலின் போக்கோடு இணைத்து புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தப்பகுதி இல்லாமல் இருந்தாலும் படைப்புக்கு  ஒரு குறைவும் வந்திருக்காது என நினைத்தேன். ஒருவேளை இன்னொரு வாசிப்பில் அந்தத் தொடர்பு எனக்கு புலப்படலாம்.இந்த இடம் சு.வேணுகோபாலின் கூந்தப்பனை குறுநாவலின் இறுதிக் காட்சிகளையும், நினைவு படுத்தியதென்பதையும் சொல்ல வேண்டும். மொத்தத்தில் நல்ல வாசிப்பனுபவத்தைத் தந்த ஒரு படைப்பு.


https://solvanam.com/2022/12/25/%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-2/

No comments: