Monday, April 4, 2022

இலங்கை சாமானியரின் பதில்கள்


கரோனாவிற்கு பின்னான நெருக்கடி என்று ஒருபுறமும் அரசியல்வாதிகளின் அலட்சியம் மற்றொரு புறமும் என இலங்கையை புரட்டியிருக்கிறது இந்த பொருளாதார நெருக்கடி. அங்கிருக்கும் சாமானிய மக்கள் தினம் அவதிக்குள்ளாவதைப் பற்றி பல காணொளியில் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களின் குரலான இலங்கையில் வசிக்கும் நண்பர் பிரகாஷ் மூர்த்தியுடன் முகநூல் வழியாக பேட்டி கண்டதை இங்கு வெளியிடுகிறேன்.

கே: வணக்கம் பிரகாஷ்

ப‌: வணக்கம்

கே: இலங்கையில் எப்படி இருக்கு வாழ்க்கை

ப‌: இந்த நிமிடம் வரைக்கும் நிலமை சீராக கூடிய தகவல் இல்லை. தொலைநோக்கு பார்வையில் சிந்திக்க மறுக்கும் அரசியல்.

கே: இலங்கையில் என்ன மாதிரியான பிரச்சனை என்று இங்கு புரியவில்லை. திடீரென நிகழ்ந்தது போலிருக்கிறதே. க்யூவில் நிற்கும் மக்களின் அவஸ்தைகளை பார்க்கும்போது பெரியளவில் துன்பம் நிகழ்ந்திருப்பதாக தெரிகிறது. நிலைமைக்கு வருந்துகிறேன்.

ப‌: இனவாதம் மற்றும் பிரிவினைகளை தூண்டி தமது அரசியல் இருப்பை தக்கவைப்பதிலேயே தமது கவனத்தை வைத்திருந்ததால் பொருளாதாரத்தை வலுப்படுத்த தவறி விட்டனர். புதிதாக வரும் ஒவ்வொரு ஆட்சியும் முன்னைய ஆட்சியாளர் வெளிநாடுகளில் பெற்றுக்கொண்ட கடன்களை மக்களுக்கு ஊதிப்பெருப்பித்து காட்டிக்கொண்டே தாங்களும் அதே வழியில் போகின்றனர். சொந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய எவ்வித கொள்கைகளும் இல்லை.

சீனாவுக்கு வாலும் இந்தியாவுக்கு தலையையும் காட்டி காட்டி கடன்களை பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள். ஒரு நாட்டின் கடனை அடைக்க இன்னொரு நாட்டிடம் கடன். ஒவ்வொரு நாளும் இரவு நேரங்களில் ஒன்றரை மணிநேரம் கரண்ட் கட். பகலிலும்கூட. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மணிக்கணக்கில் வரிசை. சாதாரணமாக கிடைக்கும் பனடோல் தட்டுப்பாடு. மளிகை கடைகளில் ஒவ்வொருவரும் நினைத்தது தான் விலை.

போதாதற்கு சேதனப்பசளை விவசாயம் என்று தேவையே இல்லாத ஆணியொன்றை பிடுங்கப்போய் எல்லாவற்றையும் கெடுத்து வைத்திருக்கிறார்கள். அரிசி விலை இருநூறு ரூபாயை தாண்டிப்போய் விட்டது.

இவர்களின் ஆட்சி மீது நம்பிக்கையற்ற நிலையில் இலங்கையில் இருந்து போய் வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழ்ச்சமூகம் இங்கு முதலீடு செய்ய தயங்குகின்றது. அதிகம் ஏன் இலங்கையின் மூன்று சமூகங்களையும் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் கூட தமது மாதாந்த வருமானத்தை இங்கு அனுப்புவதை மட்டுப்படுத்தும் நிலையை காணக்கூடியதாக இருக்கின்றது

கே: அரசு மான்யம்/உதவி செய்கிறதா? வருமானம் எப்படி வருகிறது?

ப‌: விவசாய உரவகைகளிற்கான அரச மானியம் தான் முதலில் நிறுத்தப் பட்டது. அதிலிருந்தே விவசாய விளைபொருட்கள் மற்றும் அது சார்ந்த உணவுப்பொருட்கள் விலை சடுதியாக அதிகரித்தது. போதாக்குறைக்கு அதிகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலை மற்றும் டொலர் பற்றாக்குறையினால் ஆன இறக்குமதி தொடர்பான சிக்கல்களினால் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்ததனாலும் உணவுப்பொருள் விலைகள் அதிகரித்தது. அதை விட பணவீக்கம். எமது முந்தைய தலைமுறையினர் கூறுவார்கள் தங்களது காலத்தில் நூறு ரூபாயுடன் கடைத்தெருவுக்கு போனால் வீட்டுக்கு திரும்பும்போது இரண்டு கைகளிலும் கூடைகள் நிறைய அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வரலாம், தற்போது ஆயிரம் ரூபாய் கொண்டு போனால் ஒரு சிறிய shopping bag இல் ஏதாவது ஒன்றிரண்டு பொருட்கள் தான் வாங்கி வர முடிகின்றது என்பார்கள். தற்போதைய நிலை அதைவிட மோசம். அன்றாடம் கூலிவேலை செய்வோர் நிலை தான் பரிதாபகரமானது.

கே: கரோனா ஒரு முக்கிய காரணம் தானே.

ப‌: அதுவும் ஒன்று. அத்துடன் இவர்கள் வீண் ஜம்ப பார்ட்டிகள்.

கே: அரசியல் தலைவர்கள் என்ன முன்னெடுப்புகளை தவற விட்டுவிட்டார்கள் என நினைக்கிறீர்கள். மக்கள் மீது அக்கறையில்லை என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிடமுடியுமா?

ப‌: ஆட்சிக்கு வரும் ஒவ்வொருவரும் தங்களது விருப்பு வெறுப்புக்கேற்ப கொள்கைகளை மாற்றிக்கொண்டிருப்பது. எந்த கட்சி, எந்த நபர் ஆட்சிக்கு வந்தாலும் முன்னையவர்களின் நல்ல திட்டங்களைவ நிறுத்துவது அல்லது தவறுகளை சரிசெய்வதற்கு பதிலாக பொறுப்புகளை அடுத்தவர் மேல் சுமத்தி விட்டு தப்பித்துக்கொள்வது. தமிழர்களை எதிர்ப்பது அல்லது எதுவும் கிடைத்து விடக்கூடாது என்பதில் மட்டும் பாரபட்சமில்லாமல் எல்லா சிங்கள கட்சிகளும் ஓரணியில் இருக்கின்றன. நாட்டிற்கான நீண்ட கால நோக்கிலான கொள்கை ஒன்றை அமுல்படுத்துவதில் மட்டும் பிரிந்து நிற்கின்றன.

கே: அப்படியா, தமிழர்களின் மீதான பாரபட்சம் இன்னும் தொடர்கிறதா? அது வேறு வகையான விரோதங்களை உண்டாக்குமே!

ப‌: உண்மை. அது தொடர்ந்தபடியே உள்ளது. எங்கள் நாட்டில் எந்த வித பிரச்சனையும் இல்லை என்று உலகத்திற்கு காட்டிக்கொள்கிறார்கள். உள்ளே காலைவாரும் அரசியல் நடந்து கொண்டிருக்கின்றது. ஆயுத யுத்தம் மட்டும் இல்லை. அரசியல் கொந்தளிப்பான நிலையில்.

வடக்கு கிழக்கில் தமிழர்களின் இன விகிதாசாரத்தை குறைத்து பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்கும் நடவடிக்கை. தொல்பொருள் ஆய்வு எனும் பெயரில் தமிழர்களின் விவசாய பூமிகளை ஆக்கிரமிப்பது. வனவள திணைக்களத்துக்கு தமிழர்களின் நிலங்களை ஒதுக்கி நுழைய முடியாமல் தடுப்பது.

கே: வடக்கு கிழக்கு தமிழ் நிலமக்களிடையே ஒற்றுமை நிலவுகிறதா? அல்லது மத சாதி வேறுபாடுகள் உண்டா

ப: மத சாதி வேறுபாடுகள் உண்டு. இலை மறை காயாக. இங்கு பாடசாலைகளில் சாதிச்சான்றிதழ் கேட்கும் நடைமுறை இல்லை. சாதிச்சான்றிதழும் இல்லை. ஆனால் ஒரு சில ஆலயங்களில் சாதிக்கட்டுப்பாடு உண்டு. திருமண பேச்சுக்களில் கண்டிப்பாக சாதி பார்ப்பார்கள். விதிவிலக்குகளும் உண்டு. மொத்தத்தில் கலவரம் விளைவிக்கும் அளவுக்கு இல்லை.

கே: நன்றி

ப: நன்றி

No comments: