Sunday, November 27, 2022

பொம்மைகளின் உரையாடல் பற்றி கிறிஸ்டி

 



அன்புள்ள அஷோக் சார்,
 
பொம்மைகளின் உரையாடல்களிலிருந்து ஒன்றுமட்டும் நன்றாகத் தெரிகிறது. நம் நாட்டின் கலாச்சாரம் பண்பாட்டில் எந்தளவு தெய்வ நம்பிக்கை ஊடுருவி உள்ளது என.  தெய்வ நம்பிக்கை கொண்டுதான் இந்த பூலோகவாசிகளை நல்வழிப்படுத்தமுடியும் என முன்னோர்கள் நினைத்ததால்தான் கடவுள் மதம்  என்கிற கலாச்சாரத்தைக் கொண்டுவந்தார்கள். ஆனால் காலம் போகப்போக மனிதன் அந்த தெய்வ நம்பிக்கையைக்கொண்டே சக மனிதனை ஏமாற்றி தான் எவ்வாறு சுகித்திருப்பது எனக் கண்டுகொண்டான்.
பண்பாடு போனாலும் பரவாயில்லை கலாச்சாரம் மாறும்போதெல்லாம் தானும் மாறவேண்டும் அப்போதுதான் ஊரார் நம்மை ஏற்றுக்கொள்வர் என நடிக்க ஆரம்பித்துவிட்டான். சாமியாடுவதன்மூலம் தனக்கு எல்லா வசதிகளையும் வரவழைத்துக்கொள்வது தெய்வத்தை நம்பும் ஊராரை வைத்தே தனக்கு பிடிக்காதவனை ஊரைவிட்டு ஒதுக்குவது ஏன் கழுத்தையே அறுத்து கொலை செய்தாலும் அப்போது அவனை ஏன் என யாரும் கேட்கத் துணியமாட்டார்கள். இதுபோல செய்து நல்லவைகளும் சில ஊர்களில் நிகழ்ந்திருக்கின்றன. நல்லது கெட்டது அனைத்திற்கும் சாமி பெயரைச் சொல்லி சமாதானப்படுத்துவது இக்காலத்தில் மிகவும் சாதாரணமாகப் போய்விட்டது. தங்கள் பொம்மைகள் கூட தற்போதைய காலத்தைக் கண்டு மனம் நோகின்றன. தண்ணீர் பிரச்சனையை அவைகளும் உணர்ந்திருக்கின்றன. ஆனால் மரப்பெட்டிக்குள் மீண்டும் புகுந்துகொண்டுவிடுகின்றன. அவைகளால் எதையும் செய்ய இயலவில்லை. சொல்லப்போனால் மனிதனும் இவ்வகையான மரப்பாச்சி பொம்மைதான். தன்னையொத்த கோழையிடம் நன்கு வாய்கிழிய பேசிவிட்டு மீண்டும் தன் இருப்பிடத்திற்கு வந்து இழுத்துப் போர்த்திக்கொண்டு உறங்கிவிடுகிறான். பொம்மைக்கும் அவனுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இக்கதையில் குடும்பத்தலைவி சந்தோஷமாக இருந்தால்தான் இந்த வீட்டுக்கு மருமகளாக வந்த தான் நன்றாக இருக்கமுடியும் என கணக்கிட்டு அந்த சாமியாடுவதை தனக்கு சாதகமாக்கிக்கொள்கிறாள் அன்னம்.  இன்னொரு நேரம் வரும்போது இதே சூழ்நிலையை அவ்வீட்டுப்பெண் மாலினி பயன்படுத்திக்கொள்ளலாம். இப்படியே போனால் நாம் எங்கு போய்க்கொண்டிருக்கிறோம் என்ற சந்தேகம் எழுகிறது. உங்கள் கதை பல சிந்தனைகளை என்னுள் தூண்டிவிட்டிருக்கிறது. உலகத்துப் பொருட்கள் மீது பற்று வைக்காதே என்பதை முக்கியமாக அறிவுறுத்துகிறது. ஏனெனில் அவை இன்று நம்முடன் இருக்கும். நாளை மற்றவனுடையதாகிவிடும். ஆதலால் எளியவற்றுக்கு ஆசைப்படாமல் நம்மிடமிருந்து பிரிக்க இயலாத உயர்ந்த ஒன்றுக்காக போராடவேண்டும் என்கிறது. இதை கதவிடுக்கு வழியாக உடல் குறுகி பார்த்துக்கொண்டிருக்கும் மாலினி உணர்ந்துகொண்டால் அவள் இன்பமாய் வாழ்ந்து பெருமையுடன் இவ்வுலகை விட்டுப் பிரியலாம்.
சிந்திக்க வைத்த உங்கள் கதைக்கு மிக்க நன்றி சார்!

கிறிஸ்டி

அன்புள்ள கிறிஸ்டி,

பொம்மைகளின் உரையாடல் கதையை உடன் வாசித்து அது குறித்த உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. கருத்துகளை உங்களுடையவை. நீங்கள் சரியாகவே புரிந்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் புரிதலுக்கு நன்றி.

கே.ஜே. அசோக்குமார்

கதையின் லிங்க்: https://kalakam.in/2022/11/boomaikalain-uraiyadalgal/

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துகள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சிறப்பான மதிப்புரை. வாழ்த்துகள்.

சோழ நாட்டில் பௌத்தம் என்ற என்னுடைய நூல் அச்சேற்றப்பணி காரணமாக சில மாதங்களாக வலைப்பூக்களின் பக்கங்கள் வர இயலா நிலை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். அண்மையில் இந்நூல் வெளியாகியுள்ளது. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மகிழ்ச்சி. வாழ்த்துகள்.