Monday, November 25, 2019

சாமத்தில் முனகும் கதவு விமர்சனம் - சுரேஷ் சுப்ரமணி


எழுத்தாள நண்பர் திரு. கே.ஜே.அசோக்குமார் அவர்கள் எழுதிய இத்தொகுப்பில் மொத்தம் 18 சிறுகதைகள் உள்ளன. இக்கதைகள் உயிர் எழுத்து, வார்த்தை போன்ற அச்சு இதழ்களிலும் சொல்வனம், மலைகள்.காம், ஜெயமோகன்.காம் போன்ற இணைய இதழ்களிலும் வெளிவந்துள்ளன. எழுத்தாளர் கே.ஜே.அசோக்குமார் அவர்கள் இக்கதைகளை பல மாறுபட்ட களங்களில் எழுதியிருந்தாலும் அனைத்துமே மனிதர்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கை சிக்கல்களை, வேதனைகளை வெளிப்படுத்துபவையாக உள்ளன. அதற்கான மொழிநடை அவருக்கு சிறப்பாக கைவந்துள்ளது அவர் கதைகளை வாசிக்கும்போது தெரிகிறது. கதைகள் யதார்த்த வகை கதைகளாகவும் சில கதைகள் மாய யதார்த்த வகை கதைகளாகவும் அமைந்திருப்பது பலதரப்பட்ட வாசிப்பு அனுபவங்களை வாசகர்களுக்கு அளிக்கிறது.

முதல்கதையான "வெளவால்கள் உலவும் வீடு" உறவுகளுக்கிடையேயான போலியான அன்பையும் அதனூடே உண்மையான அன்பை செலுத்தும் உறவுகளையும் தெரிவிக்கிறது. தந்தையைப் போல நினைக்கும் தன் பெரிய அண்ணனைக் காண வரும் சின்னத்தம்பி அண்ணனின் அவல வாழ்வை கண்டு வருந்துகிறான். மாறாக அவர்களின் சகோதரிகள் குடும்ப சொத்தின் பொருட்டு அவர்களிடம் போலித்தனமான பாசத்தை வெளிப்படுத்துகிறார்கள். இறுதியில் வெளவால்கள் உலவும் பாழடைந்த கட்டிடம் போல் தங்கள் அழுக்கடைந்த, சுயநலமான மனதை காட்டிவிடுகிறார்கள்.

பொறியாளரான கதைசொல்லி தன் ஓவியம் வரையும் திறனால் மனிதர்களின் முகங்களை எப்போதும் அவதானித்து வருவதையும் பல்வேறு முகங்களின் கட்டமைப்புகளையும் அதன் மாறுதல்களையும் பற்றி விளக்குவதையும் சொல்கிறது "முகங்கள்" சிறுகதை. உடல்மொழி போல முகமொழியும் மனிதர்களின் அடையாளங்கள் என சொல்லும் கதைசொல்லி உடல்மொழியை மாற்றுவதைப்போல் முகமொழியை மாற்ற முடியாது என்பதை வலியுறுத்திச் சொல்கிறார். தான் கண்ட மனிதர்களின் முகங்கள் அவர்களின் உடம்புடன் எப்படியெல்லாம் பொருந்தி வருகிறதென சொல்வது ரசிக்கத்தக்கது.

ஒரு புலி ஒருவனின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களை சுவாரஸ்யத்துடன் சொல்கிறது "வருகை" சிறுகதை. கதை நாயகன் சசியின் படுக்கை அறை வாசலில் தினமும் இரவில் வந்து ஒரு புலி படுத்துத் தூங்குகிறது. காலையில் சென்று விடுகிறது. புலி அவனை ஒன்றும் செய்யாமல் உறங்க மட்டுமே அங்கே வந்து செல்வதாக நடந்துகொள்கிறது. புலியின் வருகை அவனை பொதுவெளியில் ஒரு சாகசக்காரணமாகவும் ஊடகங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவனாகவும் மாற்றுகிறது. இறுதியில் புலி தன் வருகையை நிறுத்திக்கொண்டவுடன் அவனிக்கிருந்த அந்தஸ்தும் மரியாதையும் இல்லாமல் போய் அவனிடம் வெறுமை சூழ்கிறது. புலியின் வருகை என்ற வித்தியாசமான கருவைக் கொண்டு இச்சிறுகதை அமைந்திருப்பது எழுத்தாளரின் ரசிக்கத்தகுந்த கற்பனைத்திறனை வெளிக்காட்டுகிறது.

உறவுகளற்ற தொன்னூறு வயது அப்ரஞ்சி பாட்டியின் மீதான ஊராரின் சுயநலம் சார்ந்த கரிசனத்தையும் அவளின் இறப்பையும் நெகிழ்ச்சியுடன் விவரிக்கிறது "அப்ரஞ்சி" சிறுகதை. பிள்ளைபேறு, மங்கல நிகழ்வுகள், பூஜை சடங்குகள் போன்றவற்றிற்கு பரோபகாரியாக விளங்கும் அப்ரஞ்சி பாட்டி அந்த ஊரின் அனைத்து நிகழ்வுகளிலும் தன் பங்கை செலுத்துகிறாள். இறுதியில் சாலையில் மயங்கி விழுந்து இறந்ததும் அதுகாறும் அவளின் உழைப்பை அனுபவித்த ஊரார் அவள் பிணத்தை அடக்கம் செய்யும் பொறுப்பைகூட தட்டிக்கழித்து அவளை முனிசிபாலிட்டிக்காரர்கள் மூலமாக அநாதை பிணமாக்கி அனுப்பி வைக்கிறார்கள். மனித உறவுகளின் விகாரங்களையும் மனிதனின் சுயநல புத்தியையும் முகத்திலறைந்தாற்போல இக்கதையில் சொல்லப்பட்டுள்ளது. கதையில் வரும் உரையாடல்கள் மூலம் பல வருடங்களாக தன் உழைப்பால் உதவிகள் பல செய்து அனைவரிடமும் பாசத்துடன் பழகி வரும் அப்ரஞ்சி பாட்டிமீது ஊரார் வைத்திருக்கும் கரிசனத்தை நாம் அறியும்போது அவள் இறப்பை அவர்கள் அந்நியர் ஒருவரின் இறப்பாகவே கருதி அவளை தவிர்ப்பதாக கதையின் முடிவு அமைந்திருப்பது தர்க்க ரீதியாக சற்று கேள்விக்குரியதாகவே தோன்றுகிறது.

"சாமத்தில் முனகும் கதவு" கதையில் கதவு ஒரு படிமமாக காட்டப்படுகிறது. மனைவியை இழந்து இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ளும் கூத்தையன் தன் புதுமனைவியுடனும் சீரான வாழ்க்கையை மேற்கொள்ளவில்லை. அவளிடம் நெருங்கும் சமயமெல்லாம் அவன் வீட்டு கதவு சத்தமாக முனகுகிறது. அது அவனின் முதல் மனைவியின் குரலாகவே அவனுக்கு கேட்கிறது. தன் முதல் மனைவிதான் தன் புது வாழ்க்கையை தடுக்கிறாள் என நினைத்துக்கொள்கிறான். கதவை தன் முதல் மனைவியாக அவனுள் உருவகப்படுத்துவது அவன் குற்றவுணர்வே என்பதை அவன் உணர்ந்து கதவை சீர்செய்து தன் மீதான குற்றவுணர்வை போக்கிக்கொள்ளலாம் என நினைத்து அதன்படியே செயல்படுகிறான்.

ஏமாற்றம் மற்றும் பொறாமை காரணமாக சகோதரிகளுக்குள் ஏற்படும் பிணக்கை பற்றி பேசுகிறது "வாசமில்லா மலர்' சிறுகதை. "மாங்காச்சாமி" குடும்பங்களின் சிதைவுகள் பற்றியும், "பின் தொடரும் காலம்" தவறான கணிப்பாகிப்போன வாழ்க்கை பற்றியும்...பேசுகின்றன.

தொகுப்பின் பிற கதைகளும் தனக்கான தனித்துவமான உள்ளடக்கத்தை கொண்டே அமைந்துள்ளன. கதைகள் அனைத்தும் மனித மனங்களின் விசித்திரங்களை, மனோதத்துவத்தின் செயல்பாடுகளை வெளிப்படுத்துபவையாக அமைத்து வாசகர்களை அதன் பல்வேறு பரிமானங்களை அறிந்துகொள்ளச் செய்கிறது. கதாபாத்திரங்களின் இயல்பான உரைநடைகள் வாயிலாகவும் தர்க்க ரீதியாக நியாயப்படுத்தப்படும் கதைகளின் வாயிலாகவும் பலதரப்பட்ட மனிதர்களைப் பற்றி வாசகர்கள் புரிந்துகொள்ளச் செய்யும் பணியை எழுத்தாளர் கே.ஜே.அசோக்குமார் தன் எழுத்தின் மூலம் சிறப்பாக செய்துள்ளார்.

No comments: