Thursday, June 25, 2015

ஒரு நகரத்தின் குழந்தைகள்

இந்த விடுமுறையில் என் மகனை அழைத்துக்கொண்டும் என் மனைவியுடன் அவளின் உறவினர்கள் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தோம். ஒரு முதிய தம்பதிகள் இருவர் மட்டும் இருக்கும் இல்லம். சென்ற கொஞ்ச நேரத்திலேயே உங்களுக்கு குழந்தைக இல்லையா என்றான் மகன். எனக்கு சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது. அந்த பெண்மணி இருக்காங்கபா, நாலு பசங்க இருக்காங்க இந்த போட்டோவுல பார்த்தா தெரியும் என்றார். மேலே தொங்கவிடப்பட்டிருந்த போட்டோக்களைக் காட்டி. எங்க அவங்ககெல்லாம் என்றான். வருவாங்க காட்றேன் என்றார். ஒரு மகன் மட்டும் உள்ளூரில் வேறு வீட்டில் இருக்கிறார். மற்றவர்கள் வேறு ஊரில் இருக்கிறார்கள். அவர்களுடம் பேசிக் கொண்டிருந்த கொஞ்ச நேரத்திற்குபின் அவரின் முதல் மகன் அங்கு வந்தார். இவன் தான் என் மகன் என்று அறிமுகப்படுத்தியதும், இல்ல சின்ன குழந்தைக இல்லையா என்றான் என் மகன். ஒருவீட்டில் பிள்ளைகள் என்று இருந்தால் அவர்கள் குழந்தைகளாக இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறான்.
நான் இருக்கும் புனே நகரத்தில் அம்மா அப்பா இரு குழந்தைகள் மட்டுமே கொண்ட குடும்பங்கள்தான் எல்லா வீடுகளிலும் என்பதை அவன் கூறியதும் அவதானிக்க முடிந்தது. தினமும் அவன் வெளியே சென்று அவனுடம் விளையாடும் அந்த குழந்தைகளுக்கு கிட்டதட்ட ஒரே வயதுதான். 10 வயதிற்குள் இருக்கும் குழந்தைகள்.

Monday, June 22, 2015

பொருள்வயின் பிரிவு

ஒருமுறை திருவாரூர் சென்றிருந்தபோது பஸ் நிலையத்தில் பெரிய குடும்பம் நின்றிருந்தது. அம்மா அப்பா, மனைவி, அவள் அம்மா, அப்பா, கூடப் பிறந்தவர்கள் என்று புதுத் துணிகளை அணிந்து முகத்தில் புன்னகையோடு வழியணுப்ப வந்ததிருந்தார்கள். அவர்களின் சத்தமான பேச்சில் அதிரடியான உடல்மொழியில் அவர்கள் மிக சந்தோசத்தில் இருக்கிறார்கள் என்று தெரிந்தது. அவர்கள் செல்லவேண்டிய பேருந்து வர சற்று தாமதமானதால் நின்று அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள். பேருந்து வந்ததும் வேறுப்பக்கதில் இருந்தெல்லாம் மக்கள் வந்து ஏறினார்கள். சென்னை செல்லும் பேருந்து. இந்த கூட்டதிலிருந்து புதுமாப்பிள்ளை போன்றிருந்தவர் மட்டுமே ஏறினார். பின் அவர் வெளிநாடு செல்கிறார். டிரைவருக்கு பின்சீட்டில் அவர் அமர்ந்திருந்தார். மற்றவர்கள் வண்டியைப் பிடித்துக்கொண்டு அருகில் நின்று அங்கேயே அந்த புதுப்பெண் உட்பட, இனிமையாக பேசிக்கொண்டிருந்தார்கள். நடத்துனர் விசில் ஊதியதும் புதுப் பெண்ணின் கண்கள் கலங்கின, பின் வேகமாக விசும்ப ஆரம்பித்தார். புது மாப்பிள்ளைக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. லேசாக சமாதானப்படுத்தினார். பொதுவாக பெண்கள் சில இடங்களில் அழுதிடவேண்டும் இல்லையென்றால் மற்றவர்களின் பார்வைக்கு அவள் அழுத்தகாரி என்று பெயர் வந்துவிடும் என்கிற பயம் அவர்களுக்கு இருக்கும் என நினைக்கிறேன்.

Friday, June 19, 2015

ஹெல்மெட் அவசியமா?

இந்தியாவில் எதாவது புது சட்டம் வந்தால் அத‌ற்கு பெரிய எதிர்ப்பு இருந்துகொண்டே இருக்கும். பழைய ராஜா காலத்தில் சில மோசமான சட்டங்கள் போடப்பட்டதால் அதை எதிர்க்கமுடியாத அந்த காலத்தை நினைத்துக் கொண்டு எதை அரசு சொன்னாலும் எதிர்ப்பது என்று வழக்கமாகிவிட்டது என நினைக்கிறேன். நான் தில்லியில் இருந்தபோது ஹெல்மெட் அவசியம் என்று இருந்தது. மிக அதிகமான மோசமான சாலைவிபத்துகள் அங்குதான் நிகழ்கின்றன. சர்தார்கள் இதற்கு விலக்கு வேண்டும் என்று போராடினார்கள். டர்பன் கட்டியிருக்கும்போது ஹெல்மேட் போட முடியாதே. அதற்குபின் கொஞ்ச காலத்தில் பின் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியவேண்டும் என்கிற சட்டம் வந்தது. அப்போது வேறு மாதிரியான விலக்கு வேண்டும் என்று போராடினார்கள். அதாவது சர்தார்களுக்கு பின்னால் அமர்ந்து வரும் அவர்களின் மனைவிகளுக்கு விலக்கு வேண்டும் என்று. இதைவிட வேறு காமெடி இருக்குமா தெரியவில்லை. கொஞ்சநாளில் அவர்களுக்கும் விலக்கு கிடைத்தது.
பலர் ஹெல்மெட் அணிவதை சங்கடமாக, தண்டனையாக நினைக்கிறார்கள். இந்த வெய்யில்ல எப்படி ஹெல்மெட்ட போட்டுகிட்டு போறது, தலைமுடியெல்லாம் இதனால உதிர்ந்திடும், சரியாவே தெரிய மாட்டேங்குது, போன்ற நொண்டி சாக்குகள் நிறைய இருக்கும்.

Thursday, June 18, 2015

சதுரங்ககுதிரை

சதுரங்கத்தில் இருக்கும் குதிரை பாய்ந்து மூன்று கட்டங்களை இடம் அல்லது வலமாக தாவிச் செல்லும். அதனால் அது எப்படி முன்னேறுகிறது என்பதை நம்மால் சில சமயம் கணிக்க முடியாமல் போய்விடும். இரண்டு குதிரைகள் இருந்துவிட்டால் போதும், மற்ற எந்த காய்களை இழந்திருந்தாலும், நாம் வென்றுவிட முடியும். சதுரங்கத்தில் அந்த காய்களை இழக்கும்போது மிக முக்கியமான ஒரு போர் தந்திர முறையை நாம் இழந்துவிடுகிறோம். ஆனால் இதெல்லாம் சதுரங்கத்தில் மட்டுமே தான். நிஜவாழ்வில் அந்த காய்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. திருமணமாகாத பேச்சலர்கள் இந்த சதுரங்க குதிரைகளை போன்றவர்கள்தான். ஆம் அவர்கள் வெளியிடங்களில் தங்கள் வேலைகளில், தங்கள் பழக்க வழக்கங்களில், நண்பர்களிடத்தில் மிக முக்கிய ஆளுமையாக இருந்தாலும் உறவுகளிலும், பெண்கள் உடனாக நட்பிலும் ஒரு பொது விழாவிலும் அவர்கள் செல்லாகாசாகதான் இந்திய, தமிழக சூழலில் மதிப்பிடப்படுகிறார்கள்.
என் உறவுக்காரப் பெண் சிறுவயது முதல் என்னுடன் நட்பாக இருந்தவர், அவளுக்கு திருமணம் ஆனதும் என்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டாள். அதுவரை எங்களிடையே இருந்த வாழ்க்கை குறித்த, புத்தகங்கள் குறித்த, புதிய தொழில்நுட்பங்களை குறித்த பேச்சுக்கள் அப்படியே நின்றுவிட்டன. பல நாட்கள் அவள் என்னுடன் பேசவில்லை. எங்களிடையே மிக நீண்ட தூரத்தை மெதுவாக உருவாகிவந்ததை மிக ஆச்சரியத்துடன் கவனித்திருக்கிறேன். பேசுவதற்கு பலசந்தர்பங்கள் வந்தும் அவள் தவிர்த்திருக்கிறாள் என்பது மேலும் புதிராக இருந்தது.

Wednesday, June 17, 2015

குழந்தை விடுமுறைகள்

குழந்தைகளுக்கு விடுமுறை கொண்டாட்டங்கள் அவர்களின் வயதிற்கு ஒரு முக்கியமான நிகழ்வு. தங்களை புதுப்பித்துக்கொள்ள புதிய உலகைப் பற்றி அறிந்துகொள்ள, புதிய பொருட்களும் அது இயங்கும் விதங்களைப் பற்றி அறிந்து கொள்ள இந்த விடுமுறை தினங்கள் பயன்படுகின்றன. நான் பள்ளியில் படித்தப்போது விடுமுறை வந்தததும் முழு நாளும் தெருவில் தான் இருப்போம். எதாவது ஒரு வீட்டில் கும்பலாக கொஞ்ச நேரம் இருப்போம் பின் வேறுஒருவீடு பின் மற்றொரு பொது பகுதி என்று எல்லா இடத்திலும் அலைந்து திரிந்திருக்கிறோம்.

Tuesday, June 9, 2015

கன்யாகுமரி - ஜெயமோகன்

சினிமா, கலை, இலக்கியம் போன்ற துறைகளில் இருக்கும் ஜாம்பவான்கள் நாம் கவனித்துக் அவர்களைப் பற்றி அவர்களின் வளர்ச்சியைப் பற்றி சிலாகித்துக் கொண்டு இருக்கும்போதே அவர்களின் விழ்ச்சியையும் கண்டிருப்போம். பெரிய அதிர்ச்சியை ஏற்படித்தியிருக்கும். சில நேரங்கள் அது ஒரு பொருட்டாகவே இருந்திருக்காது. அதுதான் அவர்கள் உயரம் என்று நினைத்திருக்கலாம். பலபேர் ஒரு சின்ன உயரம் அடைந்ததும் அதற்குமேல் செல்லமுடியாமல் கீழே இறங்கவும் வழி தெரியாமல் பரிதவிப்பதை ஒவ்வொரு சமயமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அவரால் நாம் நினைத்திருந்த ஒரு உச்சத்தை அடைய முடியாமல் போனதற்கு அவர்களின் அகங்காரமும் ஒரு காரணம் என்பதை அறிந்திருக்க ஞாயமில்லை. படைப்பாளியின் படைப்பு திறன் என்பது அவனின் அகங்காரத்திற்கு எதிரானது. தன்னால் படைக்கமுடிந்ததைவிட ஒருபோதும் தாண்டி சென்றுவிடமுடியாது.
அகங்காரம் என்பது மனதில் இருக்கும் ஒரு சின்ன கர்வம் மட்டுமல்ல, தன் படைப்புஆழத்தை தொடமுடியாமல் போகசெய்யகூடிய இடையில் வரும் ஒரு மந்திர கண்ணாடியும் தான். அக்கண்ணாடியில் தன் முகத்தை கண்டும் தன் அழகைக் கண்டும் திருப்தியடைந்துவிட்ட ஒரு பரிதாபகரமான கலைஞனைதான் நாம் இப்படி நினைத்துக்கொள்கிறோம். இங்கே இன்னோன்றையும் சொல்லிவிடவேண்டும். தன்னகங்காரம் சின்ன எழுத்தாளனுக்கும் தேவையானது. அதுவே அவனை எழுத தூண்டும் ஒரு சக்தியாகவும் இருக்கிறது. ஆனால் மற்றவர்கள் மேல் கொள்ளும் அதே அகங்கார துவேசம் அவனையே அழித்துவிடுகிறது.

Saturday, June 6, 2015

பின் தொடரும் முதுமை


படிப்பிற்காக தங்கியிருந்த வீட்டிற்கு பக்கத்து போர்சனில் இருந்த 50 வயது நபர் காலையில் எழுந்ததும் பல்விளக்கிவிட்டு முதலில் செய்யும் வேலை முகத்துக்கு சேவிங்கும் தலைக்கு டையும் அடிப்பதுதான். ஒரு நாள் தவறாமல் செய்வார். அவருக்கு அதில் எந்த அலுப்போ சங்கடமோ இருந்ததாக ஞாபகமில்லை. ஏன் தினமும் செய்கிறீர்கள் என்றால், இல்லன்னா பார்க்க அசிங்கமா இருக்குமே என்பார். ஒரு அவருக்கு தீவிரமாக உடல்நிலை சரியில்லாதபோதுதான் தெரிந்தது நிஜமாக எவ்வளவு பயங்கரமாக இருக்கிறார் என்று. இரு நாட்களில் எல்லா தலை தாடை முடிகளும் வெள்ளையாகி வேறுநபர் போலவே இருந்தார். தோற்றத்தில் தெரிந்த முதுமையை விரட்ட எவ்வளவு பாடுபடுகிறார் என்று தெரிந்தது.

எல்லோருக்கும் முதுமை குறித்து ஒரு பயம் இருப்பதாக நினைக்கிறேன். தினமும் காலையில் எழுந்து கண்ணாடியை பார்க்கும்போது அந்த முகத்தில் தெரிவது சந்தேகத்தின் ரேகைகள்தாம். நான் ஒன்றும் வயதானவனாக/ளாக தெரியவில்லையே கேட்டுக்கொள்ளும் வினாதான் அந்த பார்வை. கண்ணாடி மறந்து இரண்டு நாள் அலைச்சலில் இருந்துவிட்டு மீண்டும் பார்க்கும் எவருக்கும் ஏற்படும் பீதியை தவிர்க்க முடிவதில்லை. சலூன் கடைகளில் மாறாத கண்களோடு நம்மைக் கண்டு முடிவெட்டிக் கொள்ளாத நபர்களே இல்லை என்று ஒரு முறை அனுபவ கட்டுரைகளில் சுஜாதா சொல்லியிருந்தார். நம் முகத்தில் தெரியும் - நாம் நினைத்த - அழகும் அதன் வசீகரமும் இன்னும் தொடர்கிறதா என்கிற பயம்தான் அது என நினைக்கிறேன்.

என் தெருவில் இருக்கும் ஒரு நபர் காலையில் இன்-செய்த நல்ல உடைகளும் வழுக்கையை மறைக்க உயர்ந்த வகை தொப்பியும் அணிந்து சாலையில் செல்வார். நாள் மாறினாலும் இந்த இமேஜை மாற்றாமல் தினமும் அவர் தொடர்வதை கவனித்திருக்கிறேன். ஆனால் நாளுக்கு நாள் வருடாவருடம் அவர் முகத்திலும் நடையிலும் முதிர்ச்சியும் தள்ளாட்டமும் வெளிப்படுவதை, அவர் அறியாவிட்டாலும், அவரால் தடுக்க முடியவில்லை. அவர் செய்வது அந்த வயதிற்கு சற்று அதிகம் என்று தோன்றினாலும், இப்படிதான் இளமையிலிருந்து பயிற்றுவிக்க ப்படுகிறோம் என தோன்றுகிறது. உற்சாகமாக மனதை வைத்துக்கொள்ள நல்ல உடைகளை அணிவதும் இளமை தோற்றத்துடன் எப்போது காட்சியளிப்பது அவசியம் என்றும் வழியுறுத்துகிறோம்.

Thursday, June 4, 2015

நடிகர்களும் விளம்பரமும்

நடிகர்களுக்கும் அவர்கள் நடிக்கும் விளம்பரங்களும் சம்பந்தமில்லை, அது வெறும் நடிப்புதான், அதை சீரியசாக எடுத்துக்கொள்ளகூடாது, அந்த பொருளின் அம்பாசிடர் கிடையாது என்று பலவாறு பேசப்படுவதை கேட்கிறோம். எல்லாமே ந‌ன்றாக போய்க் கொண்டிருக்கும்போது இதைப் பற்றியெல்லாம் பேசுவதில்லை. ஒரு அசம்பாவிதமும், விளம்பரங்களுக்கு எதிரானதும் நடக்கும்போதுதான் இதை பெரிதாக விவாதிக்கவேண்டியிருக்கிறது. அதுவரை சம்பந்தப்பட்ட நடிகர்கள் கவலை கொள்ளாது பணத்தை பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

சினிமா நாடகம் போன்றவைகள் நடிப்புதான். அவர்கள் ஏற்றிருக்கும் பாத்திரத்தை சரியாக இயக்குனர்கள் சொல்வது மாதிரி நடித்துக் கொடுத்துவிடுகிறார்கள். சிலர் வெற்றிபெறுவதும் சிலர் அதில் தோல்வியடைவதும் நடக்கிறது. ஆனால் விளம்பரம் நடிப்பல்ல, நிஜம். நிஜமாக சொல்லப்படுகிற ஒரு விஷயத்தை நடித்து சொல்கிறார்கள். ஆகவே வரும் எல்லா விளம்பரத்திலும் அவர்கள் நடிப்பார்கள் என்று சொல்லமுடியுமா? காண்டம் விளம்பரத்திற்கு இந்த நடிகர்கள் நடிப்பார்களா? அல்லது இரவு 11 மணிக்கு மேல் அந்தரங்கம் பேசும் டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வர சம்பதிப்பார்களா? என்பதையும் யோசிக்க வேண்டும்.

Wednesday, June 3, 2015

இந்தியும் பானிபூரியும்

இந்தி படித்தால் வேலை கிடைக்குமென்றால் இந்தி படித்த வடநாட்டுகாரன் ஏன் இங்கு வந்து பானிபூரி விற்கிறான் என்று சொல்லப்படுவதை முகநூல் உலகத்தில் இருக்கும் யாரும் கேட்டிருக்காமல் இருக்க முடியாது. ஒரு வகையில் நல்ல கேள்விதான், நல்ல சிந்தனையும் கூட. ஆனால் பானிபூரி விற்க வரும் வடநாட்டுகாரர்களின் தாய்மொழி போஜ்பூரி, மைதிலி அல்லது வேறு எதாவது ஒரு மொழியாக இருக்கும். நமக்கு இந்தி தெரியாதததால் அதுவும் தெரிவதில்லை. ஏனெனில் இந்தி மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் மிக குறைவுதான். வடநாட்டில் இருக்கும் மக்களின் முதன் மொழி வேறு ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் நாம் எதாவது ஒரு வேலை கிடைத்தால் மட்டும்தான் ஒரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதை அல்லது புரிந்து கொள்வதை எப்படி எதிர்கொள்வதென தெரியவில்லை.
தில்லியை சுற்றி இருக்கும் மிக குறைந்த மக்கள்தாம் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள். இந்தி மற்ற எந்த வடநாட்டு மொழிகளுக்கும் நடுநிலையாக இருக்கிறது. பல மொழிகளில் இருக்கும் பல எழுத்துகள் இந்தியில் இல்லை. மற்ற மொழிகளுக்கு ஒரு எளிய அமைப்பாக இந்தி இருக்கிறது. தென்இந்தியா, கிழக்குஇந்தியா, வடகிழக்குஇந்தியா, மேற்குஇந்தியா போன்ற பகுதிகளுக்கும் இந்தி அவசியமான மொழியாகதான் இன்றும் நினைக்கிறார்கள்.

Tuesday, June 2, 2015

பள்ளியும் குழந்தையும்

குழந்தைகள் சீருடையில் பள்ளிக்கு செல்வதே அழகுதான். பள்ளி திறந்ததும் சீருடையணிந்த சிறுவனை இடுப்பில் வைத்து தூக்கிச் செல்லும் அம்மாவும், வண்டியின் முன்னால் குழந்தையை வைத்து ஓட்டிச்செல்லும் அப்பாவை காண்பதே இனிமையாக இருக்கிறது. எல்லா குழந்தைகளும் ஆரம்பத்தில் பள்ளிக்கு செல்ல பிரியப்படுவதில்லை. முதல்நாள் நிச்சயம் அழுது ஆர்ப்பாட்டம் செய்வார்கள். அப்படி செய்யாத குழந்தைகள் இல்லை என்று சொல்லலாம். அவர்களுக்கு தெரியாமல் விட்டுவிட்டு வந்தாலும் அம்மா/அப்பாவை காணாமல் அழுவது நடந்துதான் இருக்கிறது. பிரிந்துவரும்போது பெற்றோருக்கு சங்கடமாக இருக்கும், குழந்தை என்ன செய்கிறதோ என்கிற பதபதைப்பு நாள்முழுவதும் இருந்துகொண்டிருக்கும்.
குழந்தை முதன்முதலில் அம்மாவை/அப்பாவை பிரிகிறது. ஒரு இரண்டு அல்லது மூன்று மணிநேரம் பெற்றோரை பிரிந்திருக்க அதற்கு இன்னும் பழக்கப்படவில்லை. மெல்லச் சொல்லித்தான் புரியவைக்க வேண்டும்.