Wednesday, June 3, 2015

இந்தியும் பானிபூரியும்

இந்தி படித்தால் வேலை கிடைக்குமென்றால் இந்தி படித்த வடநாட்டுகாரன் ஏன் இங்கு வந்து பானிபூரி விற்கிறான் என்று சொல்லப்படுவதை முகநூல் உலகத்தில் இருக்கும் யாரும் கேட்டிருக்காமல் இருக்க முடியாது. ஒரு வகையில் நல்ல கேள்விதான், நல்ல சிந்தனையும் கூட. ஆனால் பானிபூரி விற்க வரும் வடநாட்டுகாரர்களின் தாய்மொழி போஜ்பூரி, மைதிலி அல்லது வேறு எதாவது ஒரு மொழியாக இருக்கும். நமக்கு இந்தி தெரியாதததால் அதுவும் தெரிவதில்லை. ஏனெனில் இந்தி மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் மிக குறைவுதான். வடநாட்டில் இருக்கும் மக்களின் முதன் மொழி வேறு ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் நாம் எதாவது ஒரு வேலை கிடைத்தால் மட்டும்தான் ஒரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதை அல்லது புரிந்து கொள்வதை எப்படி எதிர்கொள்வதென தெரியவில்லை.
தில்லியை சுற்றி இருக்கும் மிக குறைந்த மக்கள்தாம் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள். இந்தி மற்ற எந்த வடநாட்டு மொழிகளுக்கும் நடுநிலையாக இருக்கிறது. பல மொழிகளில் இருக்கும் பல எழுத்துகள் இந்தியில் இல்லை. மற்ற மொழிகளுக்கு ஒரு எளிய அமைப்பாக இந்தி இருக்கிறது. தென்இந்தியா, கிழக்குஇந்தியா, வடகிழக்குஇந்தியா, மேற்குஇந்தியா போன்ற பகுதிகளுக்கும் இந்தி அவசியமான மொழியாகதான் இன்றும் நினைக்கிறார்கள்.

ஒரு மொழி திணிப்பு இருந்தால் நிச்சயம் எதிர்க்க வேண்டிய ஒன்றுதான். அதே வேளையில் இந்தியின் முக்கியத்துவத்தை நாம் இதனால் இழந்துவிடக்கூடாது என்று வழியுறுத்தவும் விரும்புகிறேன். உண்மையில் தமிழகத்தில் இருப்பது ஆங்கில திணிப்புதான். சந்தேகமிருந்தால் ரோட்டில் செல்பவர் யாரிடமும் பேசிப்பாருங்கள், பின் கூர்ந்து கவனியுங்கள் அவர் பேசுவது ஆங்கிலம் என்று தெரியும். 'நா ஈவினிங்க் நயன் ஓ கிளாக் மீட் பண்றேன்'. இது தமிழா ஆங்கிலமா என்று நாமே முடிவு செய்துக்கொள்ளலாம்.
ஆனால் இணைப்பு மொழி என்பது வேறு. ஐரோப்பாவிற்கு ஆங்கிலம் எப்படி இணைப்பு மொழியாக இருக்கிறதோ அதுபோல இந்திய மாநிலங்களுக்கு இந்தி ஒரு இணைப்பு மொழி. இந்தியாவில் நடக்கும் ஒரு கூட்டு முயற்சிக்கு இந்தியின் தேவை இருக்கிறது. எல்லோரும் சேர்ந்து ஒரு இடத்தில் நின்று வேலைசெய்யும்போது பரிமாறிக்கொள்ளும் வார்த்தைதகளுக்கும் இந்தி தேவையாக இருக்கிறது. ஏன் அரபு நாடுகளிலும் இந்தி தேவையாகதான் இருக்கிறது.
ஆங்கிலம் படிப்பதனால் அறிவு வளர்ந்துவிடுவதாக நினைப்பது மாதிரியானது இந்தி படிப்பதனால் அறிவு வளர்ந்துவிடும் வேலை கிடைத்துவிடும் என்று நினைப்பது.
வேலைக்கு தேவை திறமைதானே தவிர மொழியல்ல. சொல்லப்போனால் வடமாநிலங்களில் அதிக வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவது தமிழக மக்கள்தாம். உண்மை சொல்வதென்றால் குறைந்த ஊதியம்தான் தமிழ்மக்களுக்கு அளிக்கப்படுகிறது. குறைந்த ஊதியத்திற்கு இவர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளமுடியும் என்று அறிந்து இருக்கிறார்கள். மொழிதெரியாதவன் எதிர்த்து பேசமுடியாதல்லவா? இந்தி தெரியாமலே அங்கு வேலைக்கு சேர்ந்து வாழ்கிறார்கள். ஒரு ஆறுமாதத்தில் கற்றுக்கொண்டு எழுத்து தெரியாததனால் வேறும் பேச்சுமட்டும் அறைகுறையாக பேசி வாழ்கிறார்கள். ஆனால் அடுத்தடுத்த கட்டங்களுக்கு தன் வேலையில் உயர மொழி கண்டிப்பாக அவசியமாக இருக்கிறது. நாம் எவ்வளவுதான் ஆங்கிலத்தில் திறமைசாலியாக இருந்தாலும் இந்தி இல்லாமல் நம் வேலையில் உயரமுடியாது. இந்தியோ வேறு மொழியோ கற்றுக்கொண்ட கொஞ்ச நாளிலேயே நாம் இழந்தது எவ்வளவு பெரிய விஷயம் என்று புரிய ஆரம்பித்துவிடும்.
ஆங்கிலம் ஒரு இணைப்பு மொழியாகத்தான் கடைசிவரையும் இருக்கும். அதிலிருந்து எந்த பண்பாட்டு நிகழ்வையும் தகவல்களையும் புரிந்துக் கொள்ளமுடியாது. ஆனால் இந்தி எழுதப்படிக்க தெரிந்த ஒருவர் வடமாநிலங்களில் போகும்போது பண்பாட்டு சிக்கல்களை புரிந்துக் கொள்கிறார். சமூக வளர்ச்சி/சிதைவுகளின் காரணங்களைப் புரிந்துக் கொள்கிறார். நாம் அறிந்த மொழியான தமிழுடன் எந்த இடத்தில் இந்தி மற்றும் இதரமொழிகள் வேறுபடுகின்றன அல்லது ஒன்றுபடுகின்றன என்கிற விஷயங்களும் அவர்கள் உணர்ந்துக் கொள்ளமுடிகிறது. இந்த மொழிகளால் தமிழ் அடைந்த மாற்றங்களும் தமிழால் இந்த மொழிகள் அடைந்த மாற்றங்களும் நமக்கு புரிய ஆரம்பிக்கும். அதனால் நம் சிந்தனையில் புதிய புரிதல்களை அடைகிறோம் என்பதும் உறுதி. உதாரணமாக மராட்டியில் உள்ள மாய், அய், மா போன்றவைகள் அம்மாவை குறிக்கும் சொற்கள், இதே சொற்கள் பழந்தமிழ் சொற்களாக இருப்பதும் தமிழுடனான உறவை அது எங்கிருந்து பெற்றது என்பதைப் பற்றிய சந்தேகங்களும் தோன்றியபடி இருக்கும். அதேபோல இந்தி, கன்னடம், குஜராத்தி, ஒடியா, பெங்காலி போன்ற மொழிகளில் உள்ள வார்த்தைகள் நேரடியான தமிழ் சொற்கள் இருப்பதையும், தமிழில் அந்த மொழிகளின் சொற்கள் தினப்படி வழக்கத்தில் இருப்பதையும் காணமுடியும். பழங்கன்னடமும், பழமையானஓடியாவும் தமிழ் மொழியுடன் மிக அருகில் வருவதை காணமுடியும். அதேபோலவே வெவ்வேறு மொழிகள் மற்றமொழிகளுடன் கலந்ததால் அதன் வேர்சொற்கள் எப்படி பரிமாறப்பட்டன என்றும் புரியும்.
வெறும் வேலை, பணம் போன்றவைகள் மட்டுமே நம் வாழ்வின் அர்த்தங்க‌ள் என்று நினைப்பவர்களும் தமிழ்மொழியில் அனைத்துமே உள்ளன என்று கூறுபவர்களுக்கும் அதிக வேறுபாடு இல்லை. அவர்கள் கடைசிவரை இந்த கூட்டதின் மந்தைகள்தான். இன்னும் 20 ஆண்டுகள் இந்த நிலை நீடிக்குமெனில் அது நம் சமூகத்தையும் நம் மக்களையும் எவ்வளவு சீரழிக்கிறது எனபதை நேரடியாகவே நாமே காணமுடியும்.

No comments: