Thursday, June 25, 2015

ஒரு நகரத்தின் குழந்தைகள்

இந்த விடுமுறையில் என் மகனை அழைத்துக்கொண்டும் என் மனைவியுடன் அவளின் உறவினர்கள் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தோம். ஒரு முதிய தம்பதிகள் இருவர் மட்டும் இருக்கும் இல்லம். சென்ற கொஞ்ச நேரத்திலேயே உங்களுக்கு குழந்தைக இல்லையா என்றான் மகன். எனக்கு சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது. அந்த பெண்மணி இருக்காங்கபா, நாலு பசங்க இருக்காங்க இந்த போட்டோவுல பார்த்தா தெரியும் என்றார். மேலே தொங்கவிடப்பட்டிருந்த போட்டோக்களைக் காட்டி. எங்க அவங்ககெல்லாம் என்றான். வருவாங்க காட்றேன் என்றார். ஒரு மகன் மட்டும் உள்ளூரில் வேறு வீட்டில் இருக்கிறார். மற்றவர்கள் வேறு ஊரில் இருக்கிறார்கள். அவர்களுடம் பேசிக் கொண்டிருந்த கொஞ்ச நேரத்திற்குபின் அவரின் முதல் மகன் அங்கு வந்தார். இவன் தான் என் மகன் என்று அறிமுகப்படுத்தியதும், இல்ல சின்ன குழந்தைக இல்லையா என்றான் என் மகன். ஒருவீட்டில் பிள்ளைகள் என்று இருந்தால் அவர்கள் குழந்தைகளாக இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறான்.
நான் இருக்கும் புனே நகரத்தில் அம்மா அப்பா இரு குழந்தைகள் மட்டுமே கொண்ட குடும்பங்கள்தான் எல்லா வீடுகளிலும் என்பதை அவன் கூறியதும் அவதானிக்க முடிந்தது. தினமும் அவன் வெளியே சென்று அவனுடம் விளையாடும் அந்த குழந்தைகளுக்கு கிட்டதட்ட ஒரே வயதுதான். 10 வயதிற்குள் இருக்கும் குழந்தைகள்.

மற்றொரு வீட்டிற்கு என் மகனுடன் சென்றிருந்தேன். அந்த நண்பரின் டேபிளில் இருந்த போட்டோவில் தன் இரு மகன்களுடன் இருந்தார். அதைக் கண்டது அவர்கள் எங்கே என்று கேட்டான். அவர்கள் இருவரும் பத்துவயதிற்கு மேற்பட்டவர்கள் கிரிக்கெட் விளையாட பெரிய கிரவுண்டிற்கு சென்றிருக்கிறார்கள். வர மாலை ஆகலாம். விளையாட சென்றிருக்கிறார்கள் என்று கூறியபின் எப்போது வருவார்கள் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தான்.
அந்த குழந்தைகளுடன் விளையாட வேண்டும் என்கிற ஆர்வம் ஒருபக்கம் இருந்தாலும் எல்லா வீட்டிலும் பிள்ளைகள் தன் வயதொத்தவர்கள் என்று அவன் நினைப்பது நகரத்தின் கொடை என்று நினைக்கிறேன். நகரவாழ்க்கையில் சின்ன குடும்ப உறுப்பினர்களாக இருக்கிறார்கள், வயதான நபர்கள் அவர்களின் வேகத்திற்கு இருக்க முடிவதில்லை. ஒன்று இடப்பிரச்சனை மற்றொன்று இருவரும் வேலைக்கு செல்லும்போது பெரியவர்களுக்கு சமையல் செய்வதை பாரமாக நினைக்க ஆரம்பிக்கிறார்கள்.
வயதானவர்களாலும் நகரங்களில் இருக்க முடிவதில்லை அவர்கள் விரும்பும் தனிமை பேச்சுதுணை போன்றவைகள் நகரத்தில் கிடைப்பதில்லை. நகரவீடுகள் எப்போதும் மூடியே இருக்கின்றன. காலையும் மாலையும் மட்டுமே அவங்கு மனிதர்கள் இருப்பது போன்ற தோரனை தெரிகிறது. வேலைக்கு செல்லா மனைவிகளுக்கு குழந்தைகளை கவனிக்க நேரம் சரியாக இருக்கிறது. ஆனால் கிராமத்திலும் சிறு நகரத்திலும் நிறைய நேரம் இருப்பதுபோன்ற பிரம்மை எப்போது உண்டு. அது நகரத்தில் இருந்து வாழ்ந்துவிட்டு வருவதனால் அப்படி தோன்றலாம்.
பெரிய மருத்துவமனைகள், உணவகங்கள், எல்லாம் இருக்கும் எல்லா நேரத்தில் எல்லா வசதிகள் கிடைக்கும் நகரத்தில் வயதானவர்களால் இருக்க முடிவதில்லை என்பது ஆச்சரியம். எந்த வசதியும், உடனே எந்த மருத்துவ உதவிகளும் கிடைக்காத ஊரில் அவர்களால் இருக்க முடிகிறது.
நாமேகூட வயதானபின் கூறுவது இதுதான்: ஓய்வுகாலத்தை என் கிராமத்தில்/சிறுநகரத்தில் என் வாழ்வை கழிக்க விரும்புகிறேன். முன்பு ஒரே குடும்பமாக இருந்து குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் அன்பும் அரவனைப்பும் இருந்தது. குழந்தையை பிரத்யேக கவனிப்பு தேவை என்கிற நிலை அப்போது இருந்ததில்லை. 
இன்று எல்லாவற்றிற்கும் குழந்தையை சார்ந்தே முடிவெடுக்கிறார்கள். நல்ல பள்ளிகள், நல்ல கல்லூரிகள், என்று யோசித்து அந்த ஊருக்கு செல்லவேண்டியிருக்கிறது. திருமணத்திற்குபின் அவர்களின் விரும்பும் ஊருக்கு சென்று கொஞ்ச காலம் இருக்கிறார்கள். குழந்தைகள் வளர்ந்தபின் தங்கள் ஊருக்கு திரும்பிவிடுகிறார்கள்.
ஒரு நகரத்தின் குழந்தைகளை எல்லாம் நிற்கவைத்தால் அவர்களின் பொருளாதார அடிப்படையிலும் பள்ளிகளின், மற்றகுழந்தைகளின் சேர்க்கையையும் கொண்டும் சில ரகங்களாக பிரித்துவிடமுடியும் என நினைக்கிறேன். அவர்கள் வேவ்வேறு குழந்தைகளாக தங்கள் வயதிற்கு ஏற்றாற்போல் இருக்ககூடும். ஆனால் கிராமத்து குழந்தைகள் அப்படி இருக்க வாய்ப்பில்லை, எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரியாக இருப்பார்கள். அவர்களின் எண்ணங்களும் செய்கைகளும் ஒன்றாகவே இருக்கும். ஆனால் கிராமத்திற்கோ/சிறுநகரத்திற்கோ எல்லோரும் ஒட்டுமொத்தமாக சென்றுவிடமுடியாது என்பதும் உண்மை.

1 comment:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.