Monday, February 10, 2020

உலகின் முதன்மை விமரிசகன் நமக்கு அளிக்கும் செய்தி என்ன? - நட்பாஸ்


நண்பர் கே.ஜே. அசோக்குமார் 'நாவலை ஏன் விமர்சிக்க வேண்டும்,' என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறார்  (நாவலை ஏன் விமர்சிக்க வேண்டும்). கடந்த சில நாட்களாக அதைப் பற்றி அவ்வப்போது யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

சமஸ்கிருத வேர்ச்சொல் ஆராய்ச்சிக்கு எல்லாம் போகத் தெரியாது. தமிழில் ‘விமரிசை’ என்ற சொல் இருக்கிறது. ‘விமரிசையான வரவேற்பு தந்தார்கள்’ என்று சொன்னால், ‘கொண்டாடி வரவேற்றார்கள்,’ என்று எடுத்துக் கொள்கிறோம். ஆனால் விமரிசனம் என்று சொன்னால் மட்டும் எதிர்மறை விமரிசனம் என்று நினைக்கிறோம் (இணையத்தில் பெரும்பாலான விமரிசனங்கள் நல்லபடி பாராட்டிதான் வருகின்றன, நாம் எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிந்தவர்களாய் போய் விட்டோம் என்பதால். அதனாலேயே எதிர்மறை விமரிசனம் ஒன்று வந்தால் தனிப்பட்ட பகை, காழ்ப்பு என்று மனம் இயல்பாகவே கணக்கு போட ஆரம்பித்து விடுகிறது).


எதற்குச் சொல்கிறேன் என்றால், விமரிசனம் என்பதை ஒரு படைப்புக்கு அளிக்கப்படும் வரவேற்புக்கு சேர்த்தியாக எடுத்துக் கொள்ளலாம். இதைச் சொல்லி விட்டால், ‘நாவலை ஏன் விமரிசிக்க வேண்டும்?’ என்ற கேள்விக்கு பதில் கிடைத்து விடுகிறது. நாவல் என்றில்லை, கதையோ கவிதையோ கட்டுரையோ, எதுவானாலும் ஒருத்தர் எழுதி முடித்து விட்டால் அதற்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கிறது என்று எதிர்பார்க்கிறார். இதில் நியாயமில்லாமல் இல்லை. அவரது எதிர்ப்பார்ப்புகளை நாம் பொய்ப்பிக்கக் கூடாது.

இதில் இரண்டு மூன்று விஷயங்கள் இருக்கின்றன. பல நண்பர்கள் விமரிசனம் என்பது சமநிலையோடு இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். குறைகளைச் சொன்னால் நிறைகளையும் சொல்ல வேண்டும், அல்லது, எழுத்தாளன் உணர்வுகளையும் நோக்கங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும், அல்லது, மிகையாகப் புகழவோ இகழவோ கூடாது என்று இன்னும் என்னவெல்லாமோ. நான் ஒரு காரியத்தைச் செய்கிறேன் என்றால் அதன் சாதக பாதகங்களை யோசிக்கலாம், அல்லது, ஒரு பொருள் வாங்குகிறேன் என்றால் அதன் குறை நிறைகளை யோசிக்கலாம். ஒரு கதை என் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால் அது என்னை என்ன சொல்லச் செய்கிறது என்பதுதானே முக்கியம்?

சமநிலை என்பது படைப்பு சார்ந்து இல்லாமல் வாசிப்பவன் சார்ந்து இருக்கிறது. போதை தலைக்கு ஏறியது போல் தன்னிலை இழந்து உளறாமல் தான் முன் சொன்னது, இனி பின் சொல்லப்போவது, என்று தன் நிலை இழக்காமல் படைப்பை அணுகுவது சமநிலை என்று சொல்லலாம். ஒரு இடத்தில் புகழ்ந்து விட்டு (கால வரிசையைக் கலைத்துப் போடுவது சமகால கட்டாயம், பல குரல்களை ஒலிக்க விட வேண்டும், இதெல்லாம் இவருக்கு கை வந்த கலையாக இருக்கிறது), இன்னொரு இடத்தில் வேறு மாதிரி எழுதக் கூடாது (எல்லாரும் கால வரிசையைக் கலைத்துப் போட்டால் அப்புறம் நேரான கதைகளை யார் எழுதுவது, பல குரல்கள் ஒலிப்பது கதையின் ஒருமையைக் குலைத்து விடுகிறது ) – இப்படி ஒருத்தர் மாற்றி மாற்றி எழுதினால் அப்புறம் அவர் பேச்சுக்கு என்ன மதிப்பு இருக்கும்? நம்மைப் புகழ்ந்தால் கூட சந்தேகமாக இருக்கும், வைதாலோ, சொல்ல வேண்டாம். நினைத்த மாதிரிதான், கன்ஃபர்ம்ட் !

ஆங்கிலத்தில் critique என்று ஒரு வார்த்தை இருக்கிறது. ஆங்கில கதை எழுதுபவர்கள் நண்பர்களுக்கு அனுப்பி என் கதையை critique பண்ணு என்று சொல்வது வழக்கம் (எழுத்துப் பட்டறைகளில் எழுதப்பட்ட கதைகளை critique செய்வதாய்தான் சொல்லிக் கொள்கிறார்கள்). Critique, Criticism என்ற சொற்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும்போது ஒரு நடைக் குறிப்பேட்டில் இப்படிச் சொல்கிறார்கள்: https://style.mla.org/critique-versus-criticize/

Criticism usually means “the act of criticizing” or a “remark or comment that expresses disapproval,” but it can also refer to the activity of making judgments about the qualities of books, movies, etc. (as in “literary criticism”). Critique is a somewhat formal word that typically refers to a careful judgment in which someone gives an opinion about something.

இதில் கறாராக இதை இப்படித்தான் சொல்ல வேண்டும் என்று எழுத முடியாது என்றாலும், critique என்பது உதவும் நோக்கம் கொண்டு பிரித்து மேய்வது என்றும் criticism அப்படிப்பட்ட நோக்கங்கள் இல்லாதது என்றும் வைத்துக் கொள்ளலாம். இதில் எதற்கு நோக்கத்தைக் கொண்டு வர வேண்டும்? ஒரு வழிக்குறிப்பாக இப்படிச் சொல்லலாம்: ஒருத்தர் ஒரு கவிதையை உங்களுக்கு அனுப்பி, கொஞ்சம் critique செய்யுங்கள் என்று சொன்னால், நீங்கள் எழுதப் போகும் பதில் அந்தப் படைப்பை மேம்படுத்த அவருக்கு உதவியாக இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அதைச் செய்யாமல், கண்டராதித்தன் எழுதிய கவிதை விமரிசனத்துக்கு ராபர்ட் ஃபிராஸ்ட்டை துணைக்குச் சேர்த்துக் கொண்டு அடித்தால் என்ன அர்த்தம்? நீங்கள் அவர் எழுதியதை criticize செய்கிறீர்கள் என்று அர்த்தம். எனவே நாம் விமரிசனம் செய்கிறோம் என்றால் நமக்கு இந்த வேறுபாடு தெரிந்தால் நன்றாக இருக்கும். அது இல்லாமல் போகும்போது ஃபீட்பேக் கொடுப்பதற்கும் விமரிசனம் செய்வதற்கும் வித்தியாசம் மாறிப் போகிறது.

இரண்டு மூன்று விஷயங்கள் இருக்கின்றன என்று சொன்னேன், இரண்டு ஆச்சு, இது மூன்றாவது விஷயத்துக்கு நம்மைக் கொண்டு வருகிறது. வாசகர் கடிதம் விமரிசனம் ஆகுமா? இதைப் பேசுவது ஆபத்தான விஷயம். எழுத்தாளர்களேகூட வாசகர்களுக்கு இருக்கிற அறிவும் தெளிவும் விமரிசகர்களுக்கு இல்லை என்று நினைக்கிறார்கள். தமிழ்ச் சூழலில் தேக்க நிலை இருக்கிறது என்று ஒரு நண்பர் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார், அவரிடம் போய் இதைச் சொன்னால் ஏற்றுக் கொள்வாரா என்பது சந்தேகம். விமரிசகன்தான் அவனுக்கு உரிய இடத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் சொல்லவே வாய்ப்புகள் அதிகம்.

அண்மையில் ஒரு எழுத்தாளர், இருபது வருஷத்தில் என்னை எத்தனையோ தடவை திட்டி நீங்கள் பெரிய ஆள் ஆக்கியிருக்கலாம், ஆனால் கண்டு கொள்ளாமல் இருந்து என்னை அழித்து விட்டீர்கள், என்று எழுதியிருந்ததை ஒரு நண்பருக்கு காட்டியபோது, அது சரி, ஆனால் எழுத்தாளன் இறந்து விட்டான் என்று டீசண்டாக ஸ்க்ரீன் போடாமல் இவர் பதிலுக்கு திட்டுவாரே, அப்புறம் யாருக்கு பேசத் துணிச்சல் வரும், என்று சரியாகவே கேட்டார்.

உலகத்தில் ஒரு விமரிசகனுக்குக்கூட யாரும் சிலை வைத்ததில்லை, என்பதை விமரிசகனுக்கு எதிராகச் சொல்வார்கள். ஆனால் உண்மை அப்படியில்லை. விமரிசகனின் வேலையே சிலை வைக்க முடியாதவனாக இருப்பதுதான். அவன் செய்வது அப்படியொன்றும் அசாதாரண வேலையல்ல, ஆனால் அவன் எழுதுவது குறை நிறைகளை அலசுவதாகவோ இது இன்ன காரணத்துக்காக நன்றாக இருக்கிறது இன்ன காரணத்துக்காக நன்றாக இல்லை என்ற மதிப்பீட்டாகவோ வாசகர் கடிதமாகவோ இல்லாமல் இருந்தால், ஒரு வேலை அவன் நல்ல விமரிசகசனாகும் வாய்ப்பு இருக்கிறது. பிறர் உண்மையைச் சொல்லத் தயங்கினார்கள், நான் எனக்கு உண்மை என்று பட்டதை உண்மை என்று சொன்னேன், அவ்வளவுதான், என்று சொல்லுமளவு எளிமையான விஷயம்தான் விமரிசனம். ராஜாவுக்கு ஆடை இல்லை என்று சொன்ன சிறுவன்தான் நம் ஆதர்ச விமரிசகன். ஆனால், இதைச் செய்பவர்களுக்கு சிலை வைக்க ஆள் இருக்க மாட்டார்கள் என்பதில் என்ன சந்தேகம்!

ஆரம்பத்தில் விமரிசை என்று சொன்னேன், இல்லையா, இப்படிப்பட்ட ஆட்கள் இருந்து அவர்கள் ஒரு படைப்பு குறித்து நல்லதோ கெட்டதோ எதைச் சொன்னாலும் அப்போது மற்றவர்களைக் கவனிக்கச் செய்து அப்படிப்பட்ட விமரிசையான வரவேற்பை படைப்புகளுக்கு கொடுக்கும். “Vimarsana - This Sanskrit word is usually interpreted as ' producing experience,” என்று ஒரு அத்வைதி எழுதுகிறார். உண்மைக்கு அந்தச் சக்தி உண்டு. ஏன் விமரிசிக்க வேண்டும், என்றால், உண்மையைச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. அப்படியென்ன உண்மையைச் சொல்லும் தேவை? ஒரு அனுபவம் ஆழமானதாக இருந்தால் நம்மால் அது குறித்து விமரிசனம் செய்யாமல் இருக்க முடியாது.
விமரிசகன் என்றில்லை, யாராக இருந்தாலும் எழுதுவதே அதனால்தானே?

கே.ஜே. அசோக்குமார், 'நாவலை ஏன் விமர்சிக்க வேண்டும்,'