Wednesday, January 22, 2020

மண்ணும் மனிதரும்: எதிர்பாராதவையின் ருசி



மூன்று தலைமுறை மனிதர்களை ஒரு நேர்கோட்டு பார்வையில் சந்திக்கும் தருணம் அமைவது வாழ்வில் மிகச் சில கணங்கள் மட்டுமே. எனக்கு தெரிந்த குடும்பங்களில் எல்லாம் ஏதோ ஒரு தலைமுறை வாழ்க்கையை தொலைத்ததும் அந்த குடும்ப தொடர்ச்சி அறுந்து கிணற்றில் பாதியில் தொங்கும் எட்டா கயிறு போல நின்றுவிடுகிறது. நான் சந்தித்த சத்திய மூர்த்தி என்கிற மனிதர் தன் தந்தையை போன்று வறுமையில் உழன்று எல்லா தோல்விகளையும் சந்தித்து மனைவி, மகள், சொத்து, வீடு எல்லாவற்றையும் இழந்து நின்ற கோலம் இன்றும் நினைவில் இருக்கிறது. அவர் மகள் வயிற்று பெண்ணால் அந்த குடும்பம் மேலே வரும்போது அவர் உயிருடன் இல்லை.

சமூக பார்வையின் இடம் மனிதர்களது வாழ்க்கையை எது வெற்றி அல்லது எது தோல்வி என்று தீர்மானிக்கிறது. அவர்களது மகன் அல்லது மகளின் வெற்றித் தோல்விகளையும் சமூகம் கணக்கில் கொள்கிறது. மகனின் வெற்றி தந்தையின், அந்த சந்ததியின் வெற்றியாக பார்க்கிறது சமூகம். அவர்களது குடும்பத்து வளர்ப்பு முறை, தெய்வ நம்பிக்கை, நற்குணங்கள் ஆகியவை வெளிஉலகிற்கு காட்டிவிட்டதாக சமூகம் நினைத்துக் கொள்கிறது. கூட்டு சமூக பார்வையிலிருந்து மனிதன் தப்பிக்க முடிவதேயில்லை.

சிவராம காரந்த் எழுதியிருக்கும் மூன்று தலைமுறை மனிதர்களை பேசும் மண்ணும் மனிதரும் நாவல், ஒருவகையில் வாழ்க்கையை முழுமையாக அறிந்த ஒருவரால் மட்டுமே எழுத கூடியது. வாழ்க்கையின் வெளிப்பார்வையில் வெற்றி தோல்விகள் என்பது அவர்களது பணம், புகழை பெற்றதை பொருத்தது என்கிற நினைப்பை அறுத்து அது நன்னடத்தை, பிறர் மீதான அன்பு, சேவை போன்றவைகளால் மட்டுமே பார்க்கப்படும் என்கிற எண்ணத்தை மனதில் தோன்றச் செய்துவிடுகிறது நாவல். மூன்று தலைமுறைகள் வெறும் வாழ்க்கை மட்டுமல்ல, உணவும், குழந்தை பேறும், மரணமும் என்கிற லெளகீக வாழ்க்கையும் அல்ல, அது ஐதீகம், மரபு, நெறிகள், கலங்காத தன்மை, நெகிழ்ந்த தருணங்கள், விலகிய மனிதர்கள், இணைந்துக் கொண்ட மனிதர்கள், சோர்வுகள் என்று மிக நீண்ட பட்டியலை தன்னகத்தே கொண்டிருக்கிறது. சோதனைகளும், சோர்வுறா தருணங்களையும் சேர்ந்தது வாழ்க்கை. திரும்பி பார்க்கும்போது நாம் அடைந்தவைகளைவிட நாம் இழந்தவைகள்தாம் வாழ்க்கை என தோன்றுகிறது. மகத்தான தரிசனங்களை அடையாத வாழ்க்கை புல்பூண்டுகள் முளையாத வறண்ட நிலத்தைதான் ஒத்திருக்கிறது.

ராம ஐதாளர், சரஸ்வதி, பார்வதி, சத்தியா, லச்சன், நாகலெட்சும், ராமன் என்று பாத்திரங்கள் காலவரசையில் வந்து கொண்டிருந்தாலும், லச்சனின் மாற்றம் தான் இந்நாவலின் மையம். அவனுக்கு முன்னாலும் வாழ்வு இருக்கிறது, அங்கே வறுமை, இழப்பு எல்லாமும் இருக்கிறது, அவனுக்கு பின்னாலும் வறுமை, தோல்வி என்று இருக்கும் வாழ்க்கை, லக்சனால் வாழ்வின் உண்மை உருவத்தை மற்றவர்களுக்கு காட்டிவிடுகிறது.

ராமா, லச்சன், ராமன் என்று மூன்று தலைமுறை தாத்தா, அப்பா, பேரனின் வாழ்க்கை முறைகள். அதேபோல் பார்வதி, சரஸ்வதி, சத்தியபாமா, நாகவேணி என்று மூன்றுதலைமுறை பெண்களின் வாழ்க்கை கொண்டது மண்ணும் மனிதரும் நாவல். எளிமையான நேர்மையான ஆனால் வறுமை நிலைத்திருக்கும் வாழ்க்கையை வாழ்ந்துவரும் ராம ஐதாளரின் வாழ்வில் நீண்ட காத்திருப்பிற்குபின் அவரது இரண்டாவது மனைவிக்கு மகன் லச்சன் புதிய உயிராக வந்ததும் அதுவரை இருந்த வாழ்க்கை மகிழ்ச்சியும் அலைச்சலையும் கொண்டு புதிதாக உருக்கொள்கிறது. அவரின் மனைவி பார்வதி, தங்கை சரஸ்வதி, இரண்டாம் மனைவி சத்தியா என்று மூன்று பெண்களோடு வாழ்க்கை போகிறது. மகன் பெரியவனானதும் சில நல்ல விஷயங்கள் செய்வான் என நினைத்திருக்கிறார்.

ஆனால் வேறு ஒரு நகரத்திற்கு படிப்பிற்காக சென்றதும், லச்சனின் நோக்கம் சிதறுகிறது, அவன் படிப்பை மறந்து பெண், வீண்செலவு, என்று கழிகிறது. இதனால் குடுமப உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்து, திருமணம் செய்தால் சரியாகும் என நினைக்கிறார்கள். ஆனால் திருமணம் செய்ததும் அவனால் மனைவி நாகவேணிக்கு நோய் தொற்றுகிறது. எல்லோரும் அதிர்ச்சியடைகிறார்கள். கருகலைவிற்கு பின் தன் அப்பா வீட்டிலேயே இருக்கிறாள். தன் சொத்துக்களை மருமகளுக்கு எழுதிவைத்துவிடுகிறார் ராம் ஐதாளர்.

ராம ஐதாளரின் இறப்பிற்குபின் லக்சன் நல்லவனா தன்னை காட்டிக் கொண்டு கொஞ்ச காலம் நாகவேணியுடன் வாழ்ந்து சொத்துக்களை அபகரித்து சென்றுவிடுகிறான். அவளுக்கு பிறக்கும் மகனுடன் அத்தை, பெரியம்மா, மாமி என்று தனியே வாழ்கிறாள். மகன் ராமன் கஷ்டப்பட்டு வறுமையில் உழன்று, வேலையில்லாமல் திண்டாடுகிறான். கடைசியில் எல்லாம் இழந்த பின் புதையல்போல் தாத்தா ஒளித்துவைத்த காசுகள் கிடைக்க அதை வைத்து சிறிது நிலம் மீட்கப்பட அதில் உழுது முன்னேறுகிறான். இடையே அவன் பெரியம்மா, அததை, பாட்டி எல்லோரும் இறக்கிறார்கள். கடைசியாக சரஸ்வதி என்கிற பெண்ணை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்துவந்து அம்மாவுடன் வாழ்கிறான்.

முதல் தலைமுறையில் கிராம வாழ்க்கை, எளிமையான உழவு, புரோகிதம் செய்து வாழ்கிறார் ராமா, பிறகு அவரது மகன் லக்சன் நவீன வாழ்க்கைக்கு மாற எல்லாம் மாறி தலைகீழாகிறது. நோய்கள், துன்பம் என்று வாழ்க்கை மாறுகிறது. மீண்டும் பேரன் ராமன் கிராம வாழ்க்கைக்கு வந்து விவசாயத்தை மேற்கொள்கிறான்.

மீண்டும் அவர்களது வாழ்க்கை பழையபடிக்கு திரும்புகிறது. எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் தன்னிறைவோடு இருக்கும் கிராம வாழ்க்கை சிறப்பு, நவீனம் வந்த பிறகு மனிதன் தன் சொந்தங்களை மனிதர்களை இழந்து தன்னையே இழக்கிறான். அதன் அடுத்த கட்ட வாழ்கையாக மனிதன் மீண்டும் சுயமாக சம்பாதிக்க நிலத்தை நம்புகிறான்.

நவீனம் வந்ததும் மனிதர்களின் இடையேயான தூரம் அதிகமாகிறது. நவீன வளர்ச்சியால் சென்னை, பெங்களூர், மும்பை நகரங்களின் வளர்ச்சியும், தனிமனிதர்களின் மீதமிஞ்சிய ஆசைகளும், தேவையற்ற போதைகளின் மயக்கங்களும் தொடர்ந்து வளர்ந்து செல்கிறது. ராம ஐதாளர் வீட்டில் எல்லோரும் வந்து தங்கிச் செல்வதுபோல, மூன்று தலைமுறைக்கு பின் வரும் ராமன் தன் உறவினர்களின் வீடுகளில் தங்க கூச்சப்படுகிறான். தங்க நேரும்போதெல்லாம் அதற்கான பணத்தை அவர்கள் விரும்பாவிட்டலும் செலுத்திவிடுகிறான். 1800களின் பிற்பாதியிலிருந்து 1900களின் முதற்பாதிவரை கதை நடக்கிறது. இந்திய வாழ்க்கையில் காபி வந்த காலத்தை மிக மென்மையாக இயல்பாக சொல்லிச் செல்கிறான். அதேபோல் புதிய மோஸ்தராக வந்த ஓட்டல்களின் வளர்ச்சி நவீன காலத்தில் நடந்ததை கூறுகிறார். நவீனத்திற்கு பின்னாக நாம் அடைந்த சக்கரையின் பயன்பாடு, புகையிலையின் பயன்பாட்டை கூறுவதும் கூடவே காலமாற்றத்தையும், மக்கள் இடைவெளிகளையும் பேசுகிறது நாவல். உண்மையில் எதையும் அவர் வெளிப்படையாக சொல்லவில்லை. இவையெல்லாம் மிக இயல்பாக நடப்பதை அவர் பாத்திரங்களின் வழியே கடக்கிறார். இந்த நாவல் இன்றளவில் முக்கிய இடத்தில் இருப்பதற்கு காரணங்கள் இவைகள்தாம்.

நாவலின் ஆரம்பத்தில் பார்வதியும் சரஸ்வதியும் பெரிய நிலப்பரப்பை கடந்து செல்லும் சித்திரமும், ஆற்றில் இறங்கி மரங்களை எடுக்கும் சித்திரமும் இந்திய இலக்கியங்களில் வராத நிலக்காட்சிகள். நோயினால் நாகவேணி துயரப்படும்போதும், சரஸ்வதி இறக்கும் தருவாயில் அவளை விட்டு வரமுடியாது என அவள் கால்களில் நாகவேணி விழுந்து அழும் போதும், ராம ஐதாளர் இறக்கும் சமயத்தில் அவர் கால் மாட்டில் அவரது எதிரியான சீனம்மையர் அமர்ந்து மன்னிப்பு கேட்கும்போதும் கண்கள் கண்கலங்க வைக்கின்றன. கசப்புகளாலும் எதிர்பாராத ருசிகளாலும் நிரம்பியிருக்கிறது வாழ்க்கை. எளிமையான விதிகளைக் கொண்டு அதை புரிந்துக் கொள்ளமுடிவதில்லை.

(19/1/20 அன்று தஞ்சை கூடலில் விவாதித்தவைகளின் கட்டுரை வடிவம்)

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இதுவரை படித்ததில்லை. படிக்கும் ஆவலைத் தூண்டிய பதிவு.