Tuesday, February 18, 2020

முத்து70: வரவேற்புரை

அனைவருக்கும் வணக்கம்.

மேடையில் அமர்ந்திருக்கும் பெரியோர்களுக்கும், விழாவிற்கு வந்திருக்கும் நண்பர்களுக்கு என் முதற்கண் வணக்கம்.

விழா நாயகன் திரு சி.எம். முத்து அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன். குடந்தையிலிருந்து ஆர்வத்துடன் சிஎம் முத்துவின் மீது அளப்பரிய அன்புடன் இங்கு வந்திருக்கும் ஜி.பி. இளங்கோவன், ஜி.சரவணன் ஆகியோர்களை வருக வருக என வரவேற்கிறேன். தஞ்சை நாயகர்கள், சி.எம் முத்து அவர்களின் இனிய நண்பர்கள், அவரை குறித்த நட்பு அனுபவத்தை பேச இருக்கும், திருவாளர்கள் நா.விச்வநாதன், நந்தி செல்லதுரை ஆகியோரை வருக வருக என வரவேற்க்கிறேன்.

தஞ்சைகூடல் வாசக குழுவிலுள்ள என் நண்பர்கள், திருவாளர்கள் செழியரசு, வீ.கலியபெருமாள், பா.சாமிநாதன், கலைச்செல்வி, தி.ஹேமலதா, கவியரசுநேசன், ஆசைத்தம்பி, சு.பார்த்திபன், ஆகியோரை வருக வருக என வரவேற்கிறேன்.


பிரான்சிலிருந்து இந்த விழாவிற்கு மிகுந்த ஆர்வத்துடன் வந்திருக்கும் நா.கிருஷணா, சிதம்பரத்திலிருந்து வந்திருக்கும் கல்பனா சேக்கிழார், ஆகியோரை வருக வருக என வரவேற்கிறேன். மற்றுமுள்ள அனைத்து அறிஞர் பெருமக்களையும், வாசகர்களையும் பொதுமக்களையும் வருக வருக என வரவேற்கிறேன்.

தஞ்சைக் கூடல் என்கிற இலக்கிய குழுமத்தை தொடங்குவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. அதில் முக்கியமான ஒன்று ஒரு படைப்பை அனைவரும் விவாதிக்க வேண்டும், அந்த விவாதத்தில் கலந்துரையாடலில் அந்த படைப்பின் மீதான‌ ஒரு புதிய புரியலை சென்றடையவேண்டும் என்பதுதான். நானும் எழுத்தாளர் ஹரணியும் முதன்முதலாக பேசி இந்நிகழ்வை தொடங்கினோம். முதன்முதலில் சுப்பையா பிள்ளை பள்ளியில் அதன் தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்று இருட்டறையில் தொடங்கினோம். அங்கு நா.விச்வநாதன் அவரது நண்பர்கள், எழுத்தாளர் தூயன் மட்டுமே வந்திருந்தோம். அடுத்த நிகழ்வே மேக்ஸ்வெல் பள்ளிக்கு வந்தது. சற்று பெரிய வட்டமாக இந்தநிகழ்வு தொடங்கியது. 35வது நிகழ்வாக நடக்கும் இந்நிகழ்வு நடுவில் ஒரு 3 அல்லது 4 மாதங்கள் மட்டும் நடக்கவில்லை. மற்ற எல்லா மாதங்களிலும் நடந்திருக்கிறது.

ஆரம்பத்தில் சிறுகதைகளைதான் பேச ஆரம்பித்தோம். ஒரு சிறுகதையை அனைவரும் பேசுவது, ஆளுக்கு ஒரு சிறுகதை, பின் ஒரு இதழில் வந்த சிறுகதைகள் ஒருவருக்கு என்று பல்வேறு சோதனைகள் செய்து பார்த்தோம். பிறகு நாவல்கள். நாவல்களை தொடங்க பெரிய தயக்கம் இருந்தது. எல்லோராலும் ஒரு நாவலை படித்துவிட்டு வரமுடியுமா? அல்லது சிக்கலான நாவலாக இருந்தால் ஏற்படும் விலகல், சிறுகதை போன்று ஒரு மையத்தை சென்றடைதல் எதுவும் நாவலில் நிகழாது பலவகை யோசனைக்கு பின் தான் பேசஆரம்பித்தோம். முதலில் சிறிய நாவல்கள். பிறகு நாவல்களை தேர்வு செய்து ஓட்டெடுப்பு செய்து கொண்டோம். அதிக வாக்குகள் பெறும் நாவல்கள் மட்டுமே பேசுபொருளானது. ஓட்டுகள் பெறும் நாவல்கள் ஒரு ஆறு நாவல்கள், வரிசையாக ஒரு ஆறு மாதத்திற்கு முன்பே தேர்வாகியிருக்கும். ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்புபேச்சாளர் பிறகு தீர்மாணித்துக் கொண்டோம்.

இப்போது பெரிய நாவல்களை பேசுமளவிற்கு எங்கள் குழுவில் இருப்பவர்கள் பயிற்சி பெற்றுவிட்டார்கள். குறிப்பாக விவாதித்த நாவல்களை கட்டுரையாக வெளியாகவேண்டும் என்கிற முனைப்புடனும் எழுதிவருகிறார்கள். முக்கியமாக சிறப்புபேச்சாளர் கட்டாயம் கட்டுரையை வெளியிடவேண்டும். கலைச்செல்வி, செழியரசு, அண்டனூர் சுரா, சு.பார்த்திபன், வீ.கலியபெருமாள், கதிரேசன் போன்றவர்கள் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார்கள்.

இடையிருப்பிலிருந்து சிஎம் முத்து அவர்களும் எங்கள் கூட்டங்களுக்கு வரஆரம்பித்தார். உடல்நலம் சரியில்லாதபோதும் அவர் வந்திருக்கிறார். அவர் இலக்கிய அனுபவமும், இலக்கியத்தை எப்படி புரிந்துக் கொள்வது என்பதை முதல் அரைமணிநேரம் அவர் பேசுவார்.

ஒரு படைப்பை சரியாக புரிந்துக் கொள்ள வேண்டும் என்கிற முனைப்புதான் இந்த விவாதங்கள். எல்லாமும் ஒரு நாளில் நிகழ்ந்துவிடவில்லை. பலதவறுகள், பரிச்சார்த்த முயற்சிகள், தோல்விகள், என்று பல நிகழ்ந்துக் கொண்டே இருந்திருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஏதோ ஒரு புதிய விஷயம் சேர்த்துக் கொண்டேயிருக்கிறோம்.

இலக்கியத்தை பேசுபவர்கள் மிக குறுவட்டமாகத்தான் செயல்படவேண்டியிருக்கிறது. அதுதான் உண்மையில் உகந்ததாகவும் இருக்கிறது. இன்றைக்கு திரும்பி பார்க்கும்போது மனதிற்கு இனிமையாகவும், நிறைவாகவும், இருக்கிறது. இன்றைக்கு அதன் தொடர்ச்சியாக அடுத்த கட்ட நிகழ்வாக ஒரு ஆசிரியரின் ஒட்டுமொத்த படைப்புகளைப் பற்றி பேசுவது என்று மாறி வந்திருக்கிறோம். முதலில் சி.எம். முத்து அவர்களது ஐந்து பெண்களும் ஒரு அக்ரஹாரது வீடும் மட்டுமே பேசுவதாக தான் இருந்தது. அவரது பிறந்தநாள் இந்த மாதத்தில் வருவதால், அதையே காரணமாக வைத்து அவரது பிறந்தநாள் விழாவும், அவரது ஒட்டுமொத்த படைப்பை பற்றி பேசுவதுமாக அமைத்துக் கொண்டோம்.

இந்த விவாதம் அவரது படைப்புலகை மறுவாசிப்பு செய்ய உதவும் என்று நம்புகிறேன். தஞ்சை மாவட்டதின் தி.ஜாவின் முகம் ஒரு பக்கமென்றால் சி,எம், முத்துவின் முகம் மற்றொரு பக்கம். அதிகம் கவனம் பெறாத ஆனால் சிறப்பாக 40 ஆண்டுகள் எழுதியும், தஞ்சையில் வாழ்த்துவரும் சி.எம். முத்து அவர்களது படைப்புகள்தான் இன்று பேச இருக்கிறோம். அது நம் ஒவ்வொருவருக்கும் பெருமைதான்.

இந்நிகழ்விற்குள் செல்ல, மீண்டும் ஒருமுறை அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். நன்றி வணக்கம்.

No comments: