நாவலை விமர்சிக்க வேண்டும் என்கிற எண்ணம் அதை படிக்கிற ஒவ்வொருவருக்கும் படிக்கும்போது ஏற்பட்டுவிடுகிறது. நாவலின் மீதான நேர்மறை எதிர்மறை கருத்துகளின் வழியாகவே அதை வாசிக்கிறார்கள். ஆனால் குறைவாக வாசிப்பை கொண்டிருக்கும் வாசகர்கள், பொதுவெளியில் நாவல் மீதான விமர்சனங்களை தவிர்த்து அதன் சிறப்பு கூறுகளை மட்டும் பேசினால் போதும் என கூறுவார்கள்.
அவற்றின் இலக்கிய மதிப்பு அது எழுதுவதனாலேயே எற்பட்டிருக்கிறது எனவும், அது எதைக் குறித்து பேசுகிறதோ அதன் மூலம் வாசிப்பவர் சில சிறந்த கருத்துக்களை பெற்றுக் கொள்கிறார் எனவும், வாசிப்பவர் வாழ்க்கையில் சிறந்து விளங்கக் கூடும் எனவும் யோசித்திருக்கிறார்கள். அத்தோடு விமர்சன கருத்துக்களால் எழுதிய ஆசிரியரின் வளர்ச்சியை தடுப்பதாக அமைந்திருக்கும் என்றும் கூறுவார்கள்.
உண்மையில் நாவல் அப்படியெல்லாம்
யாருக்கும் பயன்பட்டதில்லை. ஆனால் இலக்கியம் என்னும் துறையை தன் வாழ்க்கை வழியாக கொண்டவர்களுக்கு
அது பெரிய பயனை அளித்திருக்கிறது. அதன் மூலம் அறிந்துக் கொண்டவற்றை தன் வாழ்வு நடப்புகளை
குறித்து ஒரு தெளிவையும் அதை எதிர்கொள்ளுதலில் முதிர்ந்தஅனுபவத்தையும் அளிக்கிறது.
நாவல் என்கிற ஒரு வகைமையினால்
வாசகர் அறிந்து கொள்வது என்னவாக இருக்கும்? வாழ்வின் சில நேரடி தரிசனங்களை, அதன் உச்சங்களையும்,
அதன் கீழ்மைகளையும் ஆசிரியர் சொல்லும் ஒரு பார்வையில் தன்னை விரித்துக் கொள்கிறார்.
அதன் கருத்துக்கள், சிந்தனைகள் அந்த நாவலில் மட்டுமே செல்லுபடியாகக் கூடிய ஒன்று. அதை
வாசகர் தன் வாழ்வில் மூலம் பெற்றிருந்த கொள்கைகளை மாற்றம் செய்யவோ அல்லது மேலும் செம்மைபடுத்திக்
கொள்ளவோ விழைய போவதில்லை. நாவல் அனுபவத்தின் உண்மைதன்மை வாசகரை அவர் வாழ்க்கை குறித்து
அதுவரை அவர் கொண்டிருந்த எண்ணங்களை முடிவுகளை பரிசீலனைக்கு மட்டுமே உட்படுத்துகிறது.
தன் வாழ்விற்கு நிகரான ஒன்றை,
இதுவரை கண்டிராத வாழ்வையும் அதை வாழ்ந்துப் பார்க்கும் நிறைவை நாவல் அளிக்கிறது. அதன்
மூலம் நீண்ட வரலாற்றை கொண்ட பலநூறு மனித வாழ்வு குறித்த அனுபவங்களை பெற்றுக் கொள்கிறார்.
அது எந்தளவிற்கு தன் வாழ்வின் அனுபவத்தோடு நெருங்கிச் செல்கிறது என்பதை மிக அந்தரங்கமாக
உணர்ந்தும் கொள்கிறார்.
ஆற்றில் அள்ளும் கையளவு நீரில்
பிரதிபலிக்கும் எல்லையற்ற வானத்தை ஒத்தது அந்த அனுபவம். அதை உணர்வதன் வாயிலாக வாசகன்
அடைவதை பிறருக்கு முழுமையாக சொல்லிவிடமுடியாது. நிறைய வாசிப்பதன் வழியாக ஒருவர் அந்த
பிரதியில் வாயிலாக தான் அடைந்த சில நுண்அவதானிப்புகளை பிறருக்கு ஓரளவிற்கு சொல்லிவிடமுடியும்.
வாசிப்பு மூலம் பெற்ற அனுபவம்
வாசகரது அனுபவ கோணத்தையும், அவரது ஒரு பரிமாணத்தை அடைந்திருப்பார். அவர் சிறிது காலம்
கழித்து மீண்டும் அதே பிரதியை வாசிக்கையில், அவர் அடைந்த கோணமும், பரிமாணமும் மாறிவிட்டிருக்கும்.
இடைப்பட்ட காலம் அவர் அடைந்த வாழ்க்கை அனுபவம் அவரை மாற்றிவிட்டிருக்கும். ஒருவரது
சொந்த அனுபவம் மாறும்போது வாசிப்பனுபவமும் மாறுகிறது. சொந்த அனுபவம் எப்போதும் மேல்நோக்கிதான்
செல்லவேண்டும் என்கிற அவசியமில்லை. வயது கூடும்போது அனுபவம் மாறுவது வாசிப்பனுபவத்தை
பாதிக்கிறது. தராசின் இருதட்டுகள் போல, ஒன்று மற்றொன்றை மேலேற்றுகிறது. வாசிப்பனுவம்
அதிகரிக்கும்போது கள அனுபவம் குறைந்திருந்திருக்கிறது. நேரடியான அனுபவங்கள் கூடும்போது
நம் வாசிப்பனுபவத்தை மாற்றியமைக்கிறது. மேலும் வேறுகோணத்தில் பொருள் கொள்ள விழைக்கிறது.
அல்லது சிறந்த புத்தகங்களை தேடி செல்ல வைக்கிறது.
அனுபவ அல்லது வாழ்க்கை விதிகளாக
நாவல் அமைவதில்லை. உண்மையில் அப்படி சிலர் எடுத்துக் கொள்வதினால் ஏற்படும் குழப்பமே
அதை விமர்சிக்க கூடாது என்று சொல்லவைக்கிறது. தேர்ந்த வாசகன் ஒருவன் அனுபவ குறைவினால்
எழுதப்படும் நாவல்களை எளிதில் கண்டுக் கொள்கிறான். அதன் கூறுகள் நேரடி அனுபவமற்றவை
என்றும் தன் அனுபவ அல்லது வாசிப்பனுபவத்தை பூர்த்தி செய்யவில்லை என்றும் கண்டுகொள்கிறான்.
ஆகவே அதை விமர்சிக்க வேண்டும் என கூறுகிறான். அதன் கூறுகள் மேலும் சில வகையில் அமைந்திருக்க
வேண்டும் என நினைக்கிறான். அதே கருத்தை வேறு ஒரு வாசகன் எதிர்திசையில் புரிந்துக் கொள்வது
உண்டு. மிகச்சிறந்ததாக அது அவருக்கு உணர்த்தியிருக்கும். ஏனெனில் அவனது அனுபவங்கள்
ஆசிரியரின் அனுபவத்தை மிக நெருக்கமாக உணர்வதனால் இதனால் விமர்சனம் தேவையாக இருக்கிறது..
ஒரு நாவலின் மீதான வேவ்வேறு அனுபவ
பதிவுகளை கொண்ட வாசகர்களின் கூற்றுகளின் மோதலால் நாவலின் புதிய கோணங்கள், பார்வைகள்
துலங்கி வருகின்றன. சொல்லப்பட்டது இதுதான் என்பதை தாண்டி அது உணர்த்துவது வேறுஒன்றை
என்று சில வாசகர்களால் உணரப்படுகிறது. அந்த புதிய அனுபவம் நாவல் மீதான விமர்சனத்தால்
எழுத்தது என உணர்கிறான். மின்கலத்திற்கு இரு முனைகள் இருப்பதுபோல வாசிப்பிற்கு இரு
அல்லது அதற்கு மேற்பட்ட விமர்சன கருத்துகள் தேவையாகிறது.
சிறந்தவை என்று சொல்லப்பட்ட நேர்மறை
கருத்துகளால் மட்டும் நாவல் பேசப்படுவதில்லை. அதன் எதிர்மறை கருத்துகளாலும் விமர்சிக்கப்படுகிறது.
எதிர்மறை கருத்துகள் நாவலை கீழே தள்ளும் நோக்கத்தில் சொல்லப்படுபவை அல்ல. மாறாக வாசிப்பனுபவத்தையும்
வாழ்வனுபவத்தையும் சரியாக புரிந்துக் கொள்ள உதவுபவை. ஆரம்ப நிலை வாசகனால் நேர்மறை கருத்துகளைக்
கொண்டே நாவலை புரிந்துக் கொள்ள முடியும். தேர்ந்த வாசகனாக மாறும்போது அதன் எதிர்மறை
கருத்துகள் தோன்ற சமநிலையில் நாவலை புரிந்துக் கொள்ளமுடியும். தேர்ந்த வாழ்பனுபவம்
கொண்டவர்களாலும் நாவலை சரியாக புரிந்துக் கொள்ளமுடியும்.
தேர்ந்த விமர்சனம் வாசிப்பின்
புதிய உயரத்தை அது அடைய உதவுகிறது. சிறந்த நாவல்கள் எப்போதும் அதிக விமர்சனத்திற்கு
உட்படுத்தபடுகிறது என்பதை கவனித்தால் புரியும். மோகமுள், புயலிலே ஒரு தோணி போன்ற நாவல்கள்
மீது அதிக விமர்சனங்களும், கேள்விகளும் எழுப்பப்பட்டன. அப்படி எழுப்பியும் நீரில் அமிழ்த்து
வைக்கப்பட்ட குடம்போல மேலேறி வந்தன.
அப்படி கேள்விகள் எழுப்பமுடியாத
அல்லது புனிததன்மையுடன் வைக்கப்பட்ட நாவல்கள் காலப்போக்கில் காணாமல் போயின. மேலும்
மேலும் விவாதிக்கப்பட்டு புதிய உச்சங்களை ஒரு நாவல் வாசகருக்கு அளிக்க முடியுமெனில்
அது சிறந்த நாவலாக எப்போது இருக்க தகுதியாகிறது.
(19/1/20 தஞ்சை கூடலில் பேசியதன்
கட்டுரை வடிவம்)
1 comment:
ஆரம்ப கட்ட வாசகர்களுக்கு நாவல் பற்றிய தெளிவான விளக்கம் தந்துள்ள கட்டுரையாக அமைந்துள்ளது.அருமை ஐயா
Post a Comment