Monday, December 31, 2018

நட்ராஜ் மகராஜுக்கு ஒரு கூட்டம்


தஞ்சைக்கூடலின் டிசம்பர் (29/12/18) இலக்கிய கூடல் சந்திப்பு கடந்த ஓராண்டுக்கு மேலாக நடந்த எப்போது போன்ற கூட்டமாக அல்லாமல் எழுத்தாளர் தேவிபாரதியின் சிறப்பு பங்கேற்பாகவும், அவரது பிறந்தநாள் விழாவாகவும் அமைந்து விட்டது. இதுவரை நடந்த கூட்டங்களிலிருந்து சிறிது திளைப்பாகவும், கொண்டாட்டமாகவும் இந்த ஆண்டின் கடைசியில் அமைந்தது அடுத்த ஆண்டிற்கு இன்னும் சிறப்பாக செய்ய உத்வேகமாகஇருக்கிறது. எளிய பண்பான மனிதராகவும் தன்னை இன்றும் சாதாரண மனிதனாக காட்டிக் கொள்வதில் பெருமிதத்துடன் இருக்கிறார் தேவிபாரதி. அவர் எழுதிய நடராஜ் மகராஜ் நாவல்தான் இந்த மாத கூட்டத்தின் கலந்துரையாடல் பேசுபொருள்.

பா.சாமிநாதன், வீ.கலியபெருமாள் இருவரும் சிறந்த வாசகர்களாக மட்டுமல்லாமல் சிறந்த ஒருங்கிணைப்பாளராக மாறியதருணம் இது. எழுத்தாளர் சிஎம் முத்து இடையிருப்பிலிருந்து பஸ்ஸ்டாண்டிற்கு வந்து விட அவரை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். பின் அவருடன் சின்ன பேச்சுகளும் டிபன் டீயும் குடித்துவிட்டு கிளம்பினோம். வாங்கியிருந்த அவர் எழுதிய மிராசு நாவலில் அவரது கையொப்பத்தை பெற்றுக்கொண்டேன். அவரை அழைத்துக் கொண்டு நிகழ்விடத்திற்கு சென்றசிறிது நேரத்தில் கலியபெருமாளும் வந்துவிட்டார். பின் எழுத்தாளர் இதய ஏசுராஜ் வந்தார். சுவாமி மாலை நேராக பேருந்து நிலையம் சென்று தேவிபாரதியையும் அவர் மனைவியையும் அழைத்து கொண்டு நேராக நிகழ்விடத்திற்கு வந்தார்.

அப்போதிருந்தே இலக்கிய பேச்சுகள் தொடங்கிவிட்டன. அய்யனார், பாயும்ஒளி கண்ணன் என்று நண்பர்கள் வந்ததும் அமர்வு இன்னும் சுவாரஸ்யமானது. நடராஜ் மகராஜ் நாவலை பேசு ஆரம்பித்தோம். இதய ஏசுராஜ், கலியபெருமாள், சாமிநாதன், தொடர்ந்து நானும் நூலைப் பற்றி விமர்சித்தோம். இடையே கவிஞர்கள் வியாகுலன், சுந்தர்ஜி வந்தார்கள், அவர்களோடு நந்தி செல்லதுரையும் வந்தார். கலந்துரையாடலின் இடையே தேவிபாரதியின் மனைவி ரெத்தினம்மாளும் நூல் குறித்த வாசிப்பனுபவத்தையும் அதன் மீதான கேள்விகளையும் எடுத்துவைத்தார். நாவலில் வின் ஏழ்மையையும் சாதாரண வாழ்வையும் மீறி வரலாற்றில் இணைவதில் இருக்கும் ஆர்வத்தையும் அதன் அவன் மனதில் நேரும் குழப்பங்களும், அந்த குழப்பங்களை அவன் மனைவிக்கும் கடத்துவதையும், பற்றிய சித்திரத்தை விவாதித்தேன். அவன் மனைவி அறிந்தபின்னும், வரலாறு தனக்கானதல்ல என்று அறியும் கட்டத்தை அடைந்தபின்னும் விடாமல் மனதில் தொடர்நினைப்பதையும், அதன் இறுதியில், வரலாற்று பின்னணியில் தன்னை இணைப்பதற்கு தன்னிடமுள்ள எல்லாவற்றையும் இழக்க தயாரவதில், தன் உடைகளை களைந்து நிர்வாணமாக நிற்பதில் சுட்டுக்கொள்ளப்படுவதைப் பற்றி பேசி முடித்தேன்.

கடைசியாக தேவிபாரதி தன் வாழ்வில் சந்தித்த மனிதனின் கதை என்பதையும், அவரின் புரிதல்களற்ற வாழ்வில் வரலாற்று பின்புலம் அமைவதும் அதை தொடர்ந்து அவர் பயணிக்க முயற்சிப்பதையும் கண்டே இந்நாவல் எழுதியதாக கூறினார். அதற்காக சொல்லப்பட்ட ஒரு கோட்டையையும் நேரில் சென்று பார்த்து வந்ததையும் கூறினார். இந்த நாவல் விவாதத்திற்கு பின்னும், பொதுவாக நாவல்களை பற்றியும் தன் அனுபவ எல்லையில் அமைந்த சில நாவல் பற்றியும் பேசினார். தொடர்ந்து இலக்கிய பேச்சு வேவ்வேறு வழிகளில் பயணித்தது. புதியவர்களின் முயற்சிகள், பழைய எழுத்தாளர்களின் பேச்சு அனுபவங்கள், வாழ்வில் தனக்கேற்பட்ட கொடிய அனுபவங்கள் என்று கலந்துகட்டி பேசிமுடித்தோம்.

தன் நண்பர்களை அழைத்து மறுநாள் பிறந்தநாள் காண இருக்கும் தேவிபாரதிக்கு ஒரு கேக் ஆர்டர் செய்து எடுத்துவர செய்தார் சாமிநாதன். அங்கேயே தேவிபாரதியை கேக்கை வெட்டி செய்து கொண்டாடி  மகிழ்ந்தோம். எப்போதும் போலல்லாமல் ஒருமணிநேரம் அதிகமாக பேசி 9 மணிக்கு மேலே வெளியேறினோம்.

ஒவ்வொருவராக விடைப் பெற்று செல்ல, நானும் சாமியும் சேர்ந்து சத்தாஸ் ஓட்டலில் தேவிபாரதி அவர் மனைவியுடன் சாப்பிட்டுவிட்டு அன்றைய நாளை நிறைவுடன் முடிந்ததுக் கொண்டு பிரிந்து சென்றோம்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்