Thursday, December 20, 2018

சிலுவைராஜும் புஷ்பராஜும்

ராஜ் கெளதமன் எழுதியிருக்கும் சிலுவைராஜ் சரித்திரத்தை படிக்கும் வாசகன் நாவலாக அணுகுவதா அல்லது தன்வரலாறின் கூறாக அதை அணுகுவதாக என்பதை ஓவ்வொரு பக்கத்தை தாண்டும்போதும் வாசகன் குழம்புவான் என நினைக்கிறேன். ஏனெனில் நாவலாக பார்ப்பதில் இருக்கும் தன்முனைப்பு தன்வரலாற்றிற்கு தேவையிருக்காது. அது தன்பாட்டிற்கு நிகழ்ந்ததை 'கவனத்துடன்' கூறும் நேர்மையை மட்டுமே தன் வழியில் கொண்டிருப்பதை வாசகன் அறிந்தேயிருப்பான். நாவல் புனைவு எனும் சுதந்திரத்துடன் பலவழிகளில் தன்னை முன்னிறுத்து முயற்சியின் சாயலை உடையது. நாவலுக்குரிய விரிவும் வாசக இடைவெளிகளும் வாசகனை தொடர்ச்சியாக சிந்திக்க தூண்டிக் கொண்டேயிருக்கும். தன்வரலாற்றின் எடுத்துரைப்புகள் ஒரளவிற்குமேல் வாசகனை உள்நுழையவிடாமல் தடுப்பவையும் கூட. ஆனால் சிலுவைராஜின் சரித்திரம் ஒரு தன்வரலாறாக (?) இருந்தாலும் அதில் வரும் அங்கதமும், சூழல்விவரிப்பும் நம்மை மிக நெருக்கமாக கொண்டு செல்கின்றன. சிலுவைராஜை ஒரு நெருங்கிய தோழனாக உருவங்கொள்ள செய்கிறது.
ஆசிரியரின் பால்யத்தையும் பதின்பருவத்தையும் பேசுகிறது சிலுவைராஜ் சரித்திரம். இத்தனை விரிவாக பேசமுடியும் என்பது அதில் நிகழ்பவை இத்தனை துல்லியத்துடன் அமைந்திருப்பது தான் காரணம். பொதுவாக நேர்க்கோட்டிலேயே பயணிக்கிறது. வருடங்கள், மாதங்கள்கூட சரியாக கூறிவிடுகிறது. ஆனால் நம்பகத்தன்மை ஏற்படுத்தவேண்டும் என்று ஆசிரியர் எண்ணுவதாக தெரியவில்லை.

பால்யம் பதின்பருவம் என்று இரண்டாக நாவலை பிரிக்கலாம். பால்ய பருவத்தின் இரண்டுகெட்டான் நிலையில் சிலுவை செய்யும் சேட்டைகள் நாளெல்லாம் சிரிப்பை வரவழைப்பவைகள். குறிப்பாக பல்லிக்கு பிரசவம் பார்த்தல், சிறுவர் கூட்டத்தோடு பன்றி கூட்டத்தை வேட்டையாட செல்லுதல். சிறுவனாக நாம் செய்த விளையாட்டுதனங்கள் அந்தரங்கமாக நமக்கானது மட்டுமே என்று நினைத்திருக்கிறோம். அவற்றின் பொதுமைகள் காலத்தில் மாறாது என்றென்றும் நிலைபெற்றே யிருக்கின்றன. சிலுவைராஜின் பால்யகாலத்தை நாவல் விரிவாகவே சொல்லிவிட்டது.

மகன்களை ஊருக்கு அழைத்துச் செல்லும் அம்மாக்கள், வண்டி ஏற்ற வந்திருக்கும் அப்பாவிடம் இவனை அடம்பண்ணாம இருக்க சொல்லிட்டுப் போங்க என்று புகாரை முன்பே வைக்கும் அம்மாக்களை அப்பாக்கள் புரிந்துக் கொள்கிறாரோ இல்லையோ மகன்கள் புரிந்துக் கொள்வார்கள். மிலிட்டிரியில் இருக்கும் அப்பா வந்ததும் அவரிடம் சொல்லப்போவதாக சொல்லியே மிரட்டும் அம்மாவை சமாளிக்க கற்றுக் கொள்வதும், வந்ததும் அடிவாங்க வைக்கும் அம்மாவுடம் அப்பாவை சமாளிப்பதும் என இருக்கிறான் சிலுவை. 60களிலிருந்து 80பதுகளின் ஆரம்பம் வரை முரட்டு அப்பாகளின் காலம். வேலைகளுக்காக தனியாக வாழ்க்கை அமைத்துக் கொண்ட குடும்பங்கள் அப்போதுதான் உருவாகிவந்தன. தனிக் குடும்பங்களில் வளரும் பிள்ளைகள் குறிப்பாக ஆண்பிள்ளைகள் அப்பாக்களின் கொடூர கைகளில் சிக்கி தவித்தார்கள். சிலுவையும் பால்யபருவத்தில் அப்பாவின் வெறுப்போடு அம்மாவின் சீண்டல்களோடு வளர்கிறான். அதனாலேயே இருவரிடமிருந்து விலகலுடன் வளர்கிறான். பாட்டியின் வழியாக சாதியின் தாழ்வுகளை உணர்வதும் (அதுதானேப்பா நாம!), நண்பர்களின் வழியே வாழ்வின் சிடுக்குகளை போக்குகளையும் அறிகிறான். பதின்பருவத்தில் வேறு பள்ளிக்கு சென்றதும் வாழ்க்கை வேறுதிசையில் புதிய கண்டடைதலுடன் வளர்கிறது. பால்யத்தில் விளையாட்டாக இருந்தவைகள் பதின்பருவத்தில் தீவிரம் கொள்கின்றன.

காடு (ஜெயமோகன்) நாவலின் கிரிதரனை போன்றவன் சிலுவை, அனைத்தையுமே தன் வாழ்வின் அனுபவத்தின் முன்வைத்து விளங்கிக்கொள்ள முயற்சிக்கிறான். எது தேவை என்பதை கண்டறிய படாதபாடு படவேண்டியிருக்கிறது. கிரிக்கு இருக்கும் தனிமைதான் சிலுவைக்கும். தனிமையில் ஒவ்வொரு நாளும் சிறுகுறிப்புகளாக நடந்தவைகளை தொகுத்துக் கொள்கிறான். கிறுக்குதனத்தில் இருக்கும் ஆர்வத்தோடே அனைத்தையும் மனம் அசைப்போட்டுக்கொள்கிறது.

பதின்பருவத்தில் சற்று மேம்பட்டவனாக தெரிகிறான் சிலுவை. பால்யத்தில் செய்தவைகளை பருவத்தில் புதிய முயற்சிகளாக அறிந்துக் கொள்வது நடக்கிறது. நேர்மையாக வாழவேண்டும் என்கிற எண்ணம் பால்யத்தைவிட அதிகமாகவே எண்ணுகிறான் சிலுவை. எல்லாவற்றையும் கேள்விகளுடன் சந்திக்கும்போது புதிய தெளிவுகளையும் பெறுகிறார். பங்குபாதிரியார்களின் தேவையற்ற அலட்டல்கள், எம்ளாய்மெண்ட் அலுவலக ஊழியரின் கேள்வியால் வெறுப்படைந்து கத்துவது, சித்தப்பாவுடனாக சண்டை, பெங்களூர் நண்பரின் மூலம் வாழ்க்கையின் சில முக்கிய தருணங்களை சந்திப்பது என்று சிலுவைக்கு இந்த உலகில் விளையாட்டுதனத்திலிருந்து தெளிவு பெறவேண்டியதை பெற்றுக் கொள்கிறான்.

தீவிரமான ஆய்வுநூல்களை எழுதும் ஒருவர் நாவல் எழுதவரும்போது அதுவும் தன் பால்யத்தையும் பதின்பருவத்தையும் எழுதும்போது (கடைசி சில அத்தியாயங்கள் தவிர) எந்த அகவினாவையும், வாழ்க்கைகுறித்த விவாதங்களை எழுப்பாமல் மென்மையாக தன்வரலாற்றைப்போன்ற பாவனையில் எழுதுவது ஏன் என்கிற கேள்வி படித்து முடிக்குவரை எழுந்துக் கொண்டேயிருக்கிறது. ஆனாலும் நாவல் நீண்ட கேள்விகளை விட்டுச் செல்கிறது. தமிழில் முக்கியமான நாவல் என்பது சந்தேகமில்லை. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை, ஒரு சாதியின் மேலேழுதலை சொல்லவேண்டிய அவசியமும் இருக்கிறது. எழுத்தில் இருக்கும் பிரச்சாரமற்ற தன்னிலையழித்த கலையை நாம் வரவேற்க வேண்டும்.


3 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வாசகனின் மனதில் எழும் கேள்விகளை உங்கள் கேள்விகளாக எழுப்பி, ஊடாக சிலவற்றிற்கு மறுமொழி கூறிய விதத்தினை ரசித்தேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

நூலினைத் தாங்கள் அணுகிய விதம், நூலினைப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. நன்றி ஐயா

kaliyaperumalveerasamy said...

அந்த புத்தகம் மிகவும் சிறந்த வாசிப்பை முன்வைக்கிறது , அந்த கதை சொல்லும் முறையும் வரவேற்கதக்கது