Saturday, June 16, 2018

ஒப்பனை

சின்னதாக தாடி முகத்தில் தெரிந்தால் வீட்டில் உள்ளவர்கள், நாயை கட்டாய குளியல் வைப்பதுபோல, எப்போது தாடி எடுக்க போறே என்று கேட்டு தொல்லை செய்து எடுக்கும் வரை வரமாட்டார்கள். அம்மா, மனைவி, பிள்ளை எல்லோருக்கும் அதில் தெரியும் சங்கடத்தை புரிந்துக் கொள்ள முடிவதில்லை. முக்கியமாக மனிதன் ஒரே மாதிரியான தோற்றத்தில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள் போலும். இத்தனைக்கும் எனக்கு குறுந்தாடியாக மட்டுமே முளைக்கும்.

மனைவி, அம்மா என்று வீட்டில் உள்ள பெண்கள், கல்யாணம், கோயில் என்று கிளம்பும்போது ஆளே மாறியிருப்பார்கள். முகத்தில் வெள்ளையாக சுண்ணாம்பு அடிக்கப்பட்டு பொங்கல் வீடு போன்று இருப்பார்கள். ஆனால் வீட்டில் எண்ணெய் வழியும் முகத்துடன் இருப்பது அவர்களின் சமையல் வேலைதான் காரணம் என்று கூறிக் கொள்வார்கள்.

Tuesday, June 12, 2018

தஞ்சை வாசகசாலை இரண்டாம் நிகழ்வு


இலக்கிய விழா மனநிலை வருவது என்பது ஒருவகை கொண்டாட்ட உணர்ச்சிதான். பார்வையாளனாக இருக்கும்போது பெரிய கவலையற்று, பிரச்சனைகளை மறந்த சந்தோஷ நிலைதான் இருக்கும். அது சிறு தூறலில் நனையும் சுகமும் கூட. விழாவின் பங்கேற்பாளனாக/பேச்சாளனாக இருக்கும்போது ஜன்னல்கள் மூடப்பட்ட இறுக்கமான அறையில் அடைப்பட்ட உணர்வே மேலோங்குகிறது. பெருமழையில் நனைந்து ஒடுங்கும் மனநிலை. இந்த ஆண்டு எனக்கு மூன்றாவது நிகழ்வு என நினைக்கிறேன். பேச்சு தயாரிப்பிலேயே மனம் தோய்ந்து மற்றவைகளை யோசிக்க திராணியில்லாமல் கிடந்தன விழா நிகழ்வின் முந்தைய நாட்கள். விழா தொடங்க நாளிலிருந்து நடப்பது நடக்கட்டும் என்று தோன்ற ஆரம்பித்துவிடும்.


Monday, June 11, 2018

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் வாசிப்பனுபவம்


தமிழ் இலக்கிய உலகில் தன் படைப்புகளுக்காக அதிகம் பேசப்பட்டவரும், தன் கட்டுரைகளுக்காக அதிகம் விமர்சிக்கப்படவரும், தன் சார்பு கட்சி, அரசியலில் முயற்சிகளுக்கா அதிகம் கேலிக்குள்ளானவரும், தன் தனிப்பட்ட ஆசாபாங்களை பொதுவில் வெளியிட்டதினால் அதிகம் வசைபாடப்பட்டவரும் என ஒருவர் உண்டென்றால் அது ஜெயகாந்தனாக தான் இருக்கும்.ஆனால் அவரது நாவல்கள் வெகுஜன உலகில் கொண்டாடப்பட்ட அளவில் நவீன இலக்கிய உலகில் கொண்டாடப்படவில்லை. உரத்து ஒலிக்கும் குரல் அவரது படைப்பில் ஒலிக்கிறது என்கிற காரணம் முன்னிறுத்தப்பட்டு விலக்கி வைக்கப்பட்டார். உண்மையில் அவரது கதைகள் உரத்து ஒலித்ததா? உரத்து ஒலித்த காரணத்தால் அவரது படைப்புகள் முற்றிலும் நிராகரிக்கபடவேண்டுமா? நவீன தமிழ் உலகை அவரது படைப்புகள் ஒரு சதவிகிதம்கூட முன்னோக்கி கொண்டு செல்லவில்லையா? என்கிற பல்வேறு கேள்விகள் இன்று நாம் கேட்டுக் கொள்ளவேண்டிய இடத்தில் இருக்கிறோம்.