Monday, June 11, 2018

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் வாசிப்பனுபவம்


தமிழ் இலக்கிய உலகில் தன் படைப்புகளுக்காக அதிகம் பேசப்பட்டவரும், தன் கட்டுரைகளுக்காக அதிகம் விமர்சிக்கப்படவரும், தன் சார்பு கட்சி, அரசியலில் முயற்சிகளுக்கா அதிகம் கேலிக்குள்ளானவரும், தன் தனிப்பட்ட ஆசாபாங்களை பொதுவில் வெளியிட்டதினால் அதிகம் வசைபாடப்பட்டவரும் என ஒருவர் உண்டென்றால் அது ஜெயகாந்தனாக தான் இருக்கும்.ஆனால் அவரது நாவல்கள் வெகுஜன உலகில் கொண்டாடப்பட்ட அளவில் நவீன இலக்கிய உலகில் கொண்டாடப்படவில்லை. உரத்து ஒலிக்கும் குரல் அவரது படைப்பில் ஒலிக்கிறது என்கிற காரணம் முன்னிறுத்தப்பட்டு விலக்கி வைக்கப்பட்டார். உண்மையில் அவரது கதைகள் உரத்து ஒலித்ததா? உரத்து ஒலித்த காரணத்தால் அவரது படைப்புகள் முற்றிலும் நிராகரிக்கபடவேண்டுமா? நவீன தமிழ் உலகை அவரது படைப்புகள் ஒரு சதவிகிதம்கூட முன்னோக்கி கொண்டு செல்லவில்லையா? என்கிற பல்வேறு கேள்விகள் இன்று நாம் கேட்டுக் கொள்ளவேண்டிய இடத்தில் இருக்கிறோம்.
 

ஒரு இந்திய ஞான மரபின் தொடர்ச்சியாக அவரது நாவல்கள் இருப்பதும், நவீன இலக்கியத்தில் கீழை அழகியலை கொண்டவருமான ஜெயகாந்தனின் படைப்புகள் வெறும் முற்போக்கு எழுத்துகள் என்றே வகைப்படுத்தப்படுகின்றன. 

அவரது பல நாவல்கள் குறீயிட்டு தன்மையுடன் எழுதப்பட்டிருக்கின்றன. அதன் தலைப்புகளே அதற்கு சாட்சி. அவர் எழுதிய முக்கிய குறீயிட்டு நாவல் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம். அவரது மற்ற எந்த படைப்பையும் நிராகரித்தாலும் அவரது ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலை நிராகரிக்கமுடியாது.

அந்த படைப்பு இன்றுவரைக்கூட சரியாக உள்வாங்கப்படவில்லை. அதன் குறைகள் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கப்படுவதும், நிராகரிக்கப்படுவதும் நடக்கிறது. அதன் குறைகளைத்தாண்டி நிறைகளை நிறுத்தி அது ஏன் கொண்டாடப்படவேண்டும் என பேச நினைக்கிறேன். அதற்காகவே இந்த படைப்பை தேர்வு செய்து கொண்டேன்.

யோசித்துப்பார்த்தால், வீட்டில் மனிதரும், மனிதரில் உலகமும் என்கிற கருத்தில் இந்த தலைப்பு இடப்பட்டிருக்கிறது. உலகம் என்பது உருண்டையாக உலகத்தை குறிக்கவில்லை. உலகமான மனிதர் என்கிற அர்த்தத்தில் இருக்கிறது எனறு புரிபடும்போதுதான். இந்த நாவலை புரிந்துக் கொள்ள முடியும். 

மிகச்சிறந்த சிறுகதை ஆக்கங்களைக் கொடுத்திருக்கும் ஜெயகாந்தன் நாவல்களில் முழுமையை அவரால் பெறமுடியவில்லை. சில நாவல்களை ஒருங்கிணைத்து ஒரு பெரிய நாவலாக உருவாக்கிக் கொள்ளமுடியும். ஆனால் அவர் எழுதிய நாவல்களில் முழுமையானதாக இருப்பதும், ஹென்றி என்கிற கதாபாத்திரத்தின் மூலம் உலகலாவிய நாவலாக உருவாக்கிவிட்ட ஒரு நாவலாக ஒரு வீடு ஒருமனிதன் ஒரு உலகம் என்கிற நாவலை சொல்லலாம்.

ஏன் இந்த நாவலை சிறந்த நாவலாக பார்க்கப்படவேண்டும். நாவல் வெளியான காலத்தை முதலில் புரிந்துக் கொள்ளவேண்டும். உலகப்போர்களுக்கு பின்னும், இந்திய சுதந்திரத்திற்கு பின்னும் உண்டான வெறுமை சமூக மனங்களில் குடிகொண்டிருந்தது. அதை உள்வாங்கிக்கொண்டு 70பதுகளின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட நாவல் இது. இதன் தலைப்பே ஜெயகாந்தன் அவர் விரும்பிய சித்தர் மரபையும், அவர் கொண்டிருந்த கருணையின் வடிவையும் வெளிப்படுத்துகிறது. ஒரே உலகம் என்கிற பெரிய கனவை தன் வாழ்க்கை முழுவதும் கொண்டிருந்த ஒருவர் அடைந்த மிகப்பெரிய லட்சிய ஆக்கமாக இந்த நாவல் அமைந்துவிட்டது.

மேற்குலகை நோக்கி நின்ற இந்திய மனங்களை கண்டு வெறுப்புற்று, இந்தியாவின் மனதை அறிவதற்காக தான் ஆதர்ஷியமாக நினைக்கும் ஒன்றை நோக்கி பெரும் வலிமையுடன் இந்த நாவல் மூலம் அவர்களை எதிர்கொள்கிறார். மேற்குலகின் தாக்கத்தை மட்டுமே கொண்ட எந்த லட்சியமும் இல்லாத அப்போதைய இந்திய மனதை சீண்டும் விதமாகவே இந்த நாவலின் தலைப்பும் இருக்கிறது. இன்டுசூவலிசம் பற்றி தீவிரமாக பேசிக் கொண்டிருந்த உலகத்தில் ஒரு உலகமனிதனாக ஹென்றியை படைத்திருக்கிறார்.

மொழியறிவு, கற்பனை திறன், வாழ்க்கையை அவதானிக்கிற தன்மை இந்த மூன்றும் சரிவிகிதத்தில் இருந்தால் ஒரு நல்ல இலக்கிய வாசிப்பை அறிந்துக் கொண்டுவிடமுடியும். ஜெயகாந்தனின் நாவலில் பல பெரியளவில் வெகுஜனபரப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் இன்று நவீன இலக்கிய உலகில் அவரது ஒரு படைப்பு முக்கிய இடம் இருக்கும் என்றால் அது ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் தான்.

ஜெயகாந்தன் வாசகர்களிடம் நேரடியாக பேசுவதில்லை. ஒரு கிழவி அமர்ந்து பின்னல்களை உருவாக்குவதுபோல, கதைகளை ஒரு விவாதத்தின் மூலம் பின்னிக்கொண்டே செல்கிறார். சுவாரஸ்யங்களை மட்டுமே சொல்லாமல் கனமான விஷயங்களை சொல்ல வேண்டும் என்கிற ஆதங்கத்துடன் எழுதுபவர். 

நாவலின் கதை மிக எளியதுதான். ஊரிலிருந்து சில பிரச்சனைகளால் வெளியேறிச் செல்லும் சபாபதி பிள்ளை இந்தியாவிற்காக போரில் ஈடுபட்டு அங்கே அனாதையாக ஆகிவிட்ட பெண்ணை சேர்த்துக் கொண்டும், அனாதையாக கிடந்த பிள்ளையையும் எடுத்துக் கொண்டும் தன் வாழ்க்கையை தொடர்கிறார். அந்த மூன்று பேரும் அப்பழுக்கிலாமல் வாழ்கிறார்கள். பள்ளிக்கு ஹென்றி செல்லவில்லை. மிக நிறைவான வாழ்வை வாழ்ந்து மடிகிறார்கள் இருவரும். ஹென்றி கிராமத்திலிருந்து முழுமையாக துண்டித்துக் கொண்ட தன் தந்தையின் இறப்பிற்கு பின், அவரது கிருஷ்ணராஜபுரம் கிராமத்திற்கு வருகிறார். எல்லா மனிதர்களிடம் பேசி நான் அவரது சுவீகாரப்பிள்ளை என்பதை நிறுவி அவர் வாழ்ந்தை வீட்டைப் பெற்று மீண்டும் புனரமைத்து அங்கே வாழ தொடங்குகிறார். இதுதான் நாவலின் கதை. 

ஹென்றி கிருஷ்ணராஜபுரம் கிராமத்திற்கு வந்து இறங்கியதும் லாரி ஓட்டுனர் துரைக்கண்ணு அவரிடம் ஆங்கிலத்தில் பேச ஆர்வம் கொள்ளும்போது கிளீனர் பாண்டு கொள்ளும் பெருமிதம் நமக்கும் தொற்றிக் கொள்கிறது. அந்த தொடக்கமே கதையை அழகாக கொண்டு சென்றுவிடுகிறது. தேவராஜன் வீட்டில் தங்குவது, அப்பாவின் தம்பியான துரைக்கண்ணுவின் வீட்டில் தங்குவதுமாக இருக்கும் ஹென்றி, எங்கும் எந்த அவசரமும் படாமல், தன் தெளிந்த மனதோடும், தன் குறைகளை மற்றவர்களுக்கு தெரியும்படியாக, சைக்கிள் விட தெரியாதது, பள்ளியில் படிக்காதது, எந்த மறைவும் இல்லாமல் வெளிப்படுத்தும் மனதோடு இருக்கிறார்.

கிராமத்தில் சந்திக்கும் மனிதர்கள், பெண்கள், குழந்தைகள் எல்லாமே அவருக்கு குதுகலமாக இருக்கிறது. இதுவரை அவர் யாரையும் பார்க்காதது மாதிரி. வீடு யாருக்கு சொந்தம், ஹென்றிக்கா, துரைக்கண்ணுவிற்கா என்று கிராம முக்கியஸ்தர்கள் பேசும்போது குழந்தைகளின் விளையாட்டை கவனித்துக் கொண்டிருக்கிறார் ஹென்றி. அவருக்கு அந்த வீடு கிடைக்கவில்லையென்றாலும் பரவாயில்லை என்பதுபோல இருக்கிறார். தன் பெரும் பணத்தை தேவராஜுவிடம் கொடுத்து வைக்கிறார். ஏமாற்றப்படலாம், காணாமல் போகலாம் என்கிற பயம் அவரிடம் இருக்கவில்லை.

இந்த நாவலே ஹென்றி என்கிற இலட்சியவாத மனிதனை உருவாக்குவதற்குதான். இந்த நாவலை புரிந்துக்கொள்வதற்கு ஹென்றியை நாம் புரிந்துக் கொண்டாலே போதுமானது. ஹென்றி ஒரு உலகமனிதன். 70களில் இருந்த மனிதர்களில் உலத்தின் ஏகபோக சுகத்தை மட்டுமே அனுபவிக்க வந்தவன் போல் இல்லை அவன். 

அனைத்தையும் அறிந்துக் கொண்டவன் மனிதன். கடலின் ஆழ்த்தை அறிந்தவன், மலைகளின் உயரத்தை அறிந்தவன், விண்வெளியில் பறந்தவன் என்கிற அதீத நிலையை புறந்தள்ளி சித்தர் போன்று தனக்கு எது தேவையோ எது அதிகமின்மையோ எது தன்னை உருவெடுக்க போதுமானதோ அதை மட்டுமே நினைத்து செய்யும் குணமுடையவன் ஹென்றி.

இன்றைக்கும் மனிதன் எப்படி இருக்க வேண்டும். அவன் அவசியங்கள் என்ன என்பதை நாம் அறிந்துக் கொள்ளும் விதமாகவே ஹென்றி இருப்பவன். அதீத நுகர்வு கலாச்சாரத்தின் பிடியில் இருக்கும் மனிதனை அவன் மட்டுமே மையமாக நினைத்து செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுபவனாக இருக்கிறான் ஹென்றி. காந்திய கொள்கைகளைக் கொண்டு வாழும் மனிதன் ஹென்றி. இந்த நாவலின் முன்னுரையிலும் அதைதான் குறிப்பிடுகிறார். காந்திய சிந்தனைகளை நாம் விட்டு வெகுதூரம் வந்துவிட்டோம் என்கிற எண்ணத்தை நம் மனதில் விதைக்கவே அவர் அப்படி ஒரு பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் என்று நினைக்க தோன்றுகிறது.

ஜெகே ஹென்றியை அறிமுகப்படுத்தும் போதெல்லாம் மேலுதட்டை மீட்டியவாறு வருவதை வர்ணனைகளோடு கூறுகிறார். கிட்டதட்ட எல்லா இடங்களில் அப்படி கூறுகிறார். இதுவே ஹென்றிமேல் நமக்கொரு ஆர்வத்தை அனுதாபத்தை ஏற்படுத்துகிறது. ஹிப்பி ஹிபிங்கிறாங்களே அதுவா நீங்க... என்று கேள்வி வரும்போது நோ என்று மறுத்துவிட்டு ‘I don’t know’ என்கிறார். ஆம் இதுதான் ஹென்றியின் உண்மையான சித்திரம். ஒரு இடத்தில் அக்கம்மா ஹென்றி ஜீசஸ் போல் இருப்பதாக கூறுவதை கேட்டு, ஹென்றி இப்படி கூறுவார்: மனுஷனைய் பத்தியோ, கடவுளைப் பத்தியோ முன்கூட்டியே தீர்மானம் ஒன்னுமில்லாமல் திறந்த மனசோட பார்த்த எல்லா மனுஷங்கலேயும் கடவுளைப் பார்க்கலாம். அதேபோல் மற்றொரு இடத்தில் கஞ்சா அடிப்பதைப் பற்றி தேவராஜ் துரைக்கண்ணுவிடம் அன்னிக்கு இருந்தமாதிரி இல்லை என்கிறார். இடையில் புகுந்த ஹென்றி “ஒரு அனுபவம் இன்னொரு அனுபவத்திற்கு தடையாகி போகும்” என்பார்.

இப்படி நாம் ஹென்றி புரிந்துக் கொள்ளூம்போதெல்லாம் நாம் இழந்தது என்ன என்பது புரியவே செய்கிறது. பெரிய உணர்ச்சிகள், பெரிய திருப்பங்கள் எதுவும் இல்லையோ இந்த படைப்பில் இல்லையோ என எண்ண தோன்றுகிறது. ஆனால் உண்மையில் பல அப்படி பல நடக்கின்றன. ஆனால் அன்றாட வாழ்வின் நாம் தவறவிடும் சின்னச் சின்ன அழகுகளை ஹென்றியே நமக்கு எடுத்து கூறுகிறார். அல்லது நினைவில் வைத்திருக்கிறார். மற்ற திருப்பங்களை, உணர்ச்சிகளை அவர் பெரிதாக எண்ணாமல் விட்டுவிடுகிறார். உதாரணமாக அப்பாவின் முதல் மனைவியின் ஓட்டம்.

மதத்திற்கு சாமிக்கும் என்ன சம்பந்தம் என கூறும் ஹென்றி, புதிய உறவாக வரும் விசித்திர பெண் பேபி பிரிந்து செல்லும்போது அவருக்காக கதவு திறந்திருக்கும் என நினைத்துக் கொள்வதும் ஹென்றியின் பாத்திரப்படைப்பின் உச்சகட்டம் என நினைக்க தோன்றுகிறது. ஆனால் ஹென்றி பாத்திரம் மட்டுமல்ல எல்லா மனிதர்களும் கிட்டதட்ட நல்லவர்களாகவே இருக்கிறார்கள். கொடூரமான பாத்திரமென்றால் மணியக்காரரின் மனைவி மட்டும்தான்.

பப்பாவிற்கு ஹென்றிக்கு இடையே இருக்கிற பந்தம் மிக அழகானது. மலைமுகட்டில் ஒரு இடத்தில் நின்று பப்பா…ஆ என்று கத்த அது எதிரொலித்தது. மகனே என்று எதிரொலிக்க கூடாதா என்று நினைத்துக் கொள்கிறான். அதேபோல தேவராஜனுக்கு ஹென்றிக்குமான உறவு மானசீகமானது. இருவரும் ஒத்த கருத்துகளை வெவ்வேறு கோணத்தில் காண்கிறார்கள். “குழந்தைகள் மட்டும்தானா மற்ற ஜீவராசிகளும் அப்படியே உள்ளன” என்று ஹென்றி கூறுபோது தேவராஜன் நினைத்துக் கொள்வார் “மிருகங்களுக்கும் மற்றவற்றுக்கும் சமூக வளர்ச்சி, வாழ்க்கைப் பிரச்சனைகள், தார்மீகப் பொறுப்புகள் ஒன்றும் கிடையாது. மனிதன் அப்படி ஆககூடுமா என்ன? அப்ப ஆனால் அது சரியும் ஆகாதே. பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை வளர்ச்சி ஏது” என நினைப்பார்.
ஹென்றிக்கும் துரைக்கண்ணுவிற்குமான உறவு உணர்வுபூர்வமானது என சொல்லலாம். இருவரும் பேசிக் கொள்வதில்லை. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுகிறார்கள். தன் அண்ணனின் சொந்த மகன் என்றே ஹென்றியை நினைக்கிறார்.

ஜெயகாந்தனது மற்ற எல்லா நாவல்களும் தனிமனித அடையாளத்தை முன்நிறுத்துபவை. ஆனால் இந்த நாவல் தனிமனிதனைவிட ஒட்டுமொத்த சமூகத்தையும் அது ஒன்று திரண்டு பலம்வாய்ந்த சமூகத்தை உருவாக்குவதுதான் இந்த நாவலை உருவகப்படுத்துகிறார்.

ஹென்றி தங்கும் தேவராஜன் வீடு தெலுங்கு பேசும் குடும்பம், மணியக்காரர் கவுண்டராகவும், பெரிய மனிதர் முதலியாராகவும், துரைக்கண்ணு பிள்ளையாகவும், வெவ்வேறு மனிதர்களாக இருக்கிறார்கள். ஹென்றியே கூட சபாபதியின் பிள்ளையில்லை, ஒரு வெள்ளைக்காரர். எல்லா சாத்தியங்களையும் ஒருங்கிணைத்து ஒரு திரளை உருவாக்கியிருக்கிறார்.

மிதமிஞ்சிய உணர்ச்சிவேகத்தில் எழுதிய மற்ற நாவல்கள் போல் அல்லாமல் தெளிந்த மனநிலையோடு எழுதிய நாவலாக இதை சொல்லலாம். இந்த கதாப்பாத்திரம் அனைத்துமே ஒருவகையில் ஜெயகாந்தந்தான். சபாபதிப் பிள்ளையும், ஹென்றியும், துரைக்கண்ணுவும் ஜெயகாந்தந்தான். கஞ்சா அடிப்பவனும் ஜெயகாந்தந்தான், உலகத்தை பார்த்து வியப்பவரும் ஜெயகாந்தந்தான். நிஜவாழ்க்கையிலும் அவர் அப்படிதான் இருந்தார்.

ஒரு நாவல் மூன்று விஷயங்களை கொண்டிருக்க வேண்டும். நடை, உள்ளடக்கம், தரிசனம் என்கிற மூன்றும் கொண்ட நாவல்கள் சிறந்த நாவல்கள் என்று சொல்லிவிடமுடியும். இந்த நாவல் இந்த மூன்றையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. நடை அவரது எப்போது எழுதும் உரையாடல் தன்மை கொண்டதாக இதிலும் இருக்கிறது. வாசகனை எளிதாக உள்ளிளுத்துவிடுகிறது. உள்ளடக்கம் எனும்போது பேசுபொருளைதான் நேரடியாக குறிக்கிறது. இந்த பேசும்பொருள் நேரடியாக சைவசித்தர், சூஃபி மரபை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களும் அப்பளுக்கில்லாத வெள்ளை மனிதர்களையும் எதையும் கருணையுடனும் நம்பிக்கையுடனும் அனுகும் மனிதர்கள்தான் இவர்கள். தரிசனம் என்று சொல்லும்போது உலகலாவிய ஒற்றை சமூகத்தை கனவாக கொண்டிருக்கும் தன்மையை விடாமல் தன் எழுத்தில் எழுதிவருவதும் அது இந்த பிரதியில் அழகாக வெளிப்படுத்தியிருப்பதும்தான். நாவலுக்குரிய விரிவு இல்லாமல் ஒரே இடத்தில் நாவல் முழுவதும் பயணிக்கிறது என்கிற தோற்றத்தை அளிப்பது ஒரு குறை என்று சொல்லலாம்.

ஜெயமோகன் எழுதியிருக்கும் வரி முக்கியமானது என நினைக்கிறேன். //ஜெயகாந்தன் ஆக்கங்கள் இருளை ஒளியைச் சித்தரிக்கும் நோக்கத்துடன் மட்டுமே சொல்ல முற்படும் இலட்சியவாத ஆக்கங்கள். அனைத்து குறைகளுடன், எல்லைகளுடனும் ஜெயகாந்தன் தமிழ் இலக்கிய உலகில் ஒளியுடன் இருந்து கொண்டுதான் இருப்பார், ஏனெனில் இலட்சியவாதம் எப்போதுமே அவநம்பிக்கைக்கு உள்ளாகும், ஒருபோதும் காலாவதியாவதில்லை.// ஜெயமோகனின் இந்த வரி ஜெகேயின் அனைத்து படைப்புகளுக்கும் பொருந்து, இந்த நாவலுக்கு சரியாக பொருந்துகிறது.

சில ஒருமுறை படிக்க, சிலவற்றை அவ்வப்போது படிக்க என்று புத்தகங்கள் நபர்களுக்கு நபர் மாறிக்கொண்டேயிருக்கிறது. அகராதியை பலமுறை படிக்க வேண்டியிருக்கும். சில புத்தகங்கள் படிக்க தொடங்கவே பலகாலம் எடுக்கும். இந்த நாவல் பலமுறை படிப்பதற்கானது. படிப்பதற்கானது மட்டும் அல்ல, அதில் லயிப்பதற்கானது. நாவலில் தோய்ந்து அந்தந்த பாத்திரமாகவே மாறி சில காலம் வாழ்வதற்குமானது. படிக்கும் ஒவ்வொரு சமயமும் ஃபில் குட் தன்மையை கொடுத்து. விஷேசமான அனுபவத்தை ரசிப்பதற்காக இருக்கிறது என்றே இந்த நாவலைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

இந்த நாவலின் கடைசிவரி நமக்கு மிக முக்கியம். அந்த வரியுடனே உரையை நிறைவு செய்யலாம் என நினைக்கிறேன்.

//அந்த வீட்டுக்குள் மேளதாளத்துடன் ஒரு கிராமமே சஞ்சரித்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறது....//

நன்றி வணக்கம்.

[தஞ்சை வாசகசாலை கூட்டத்தில் (10/6/18) பேசிய உரையின் கட்டுரை வடிவம்]

No comments: