Tuesday, June 12, 2018

தஞ்சை வாசகசாலை இரண்டாம் நிகழ்வு


இலக்கிய விழா மனநிலை வருவது என்பது ஒருவகை கொண்டாட்ட உணர்ச்சிதான். பார்வையாளனாக இருக்கும்போது பெரிய கவலையற்று, பிரச்சனைகளை மறந்த சந்தோஷ நிலைதான் இருக்கும். அது சிறு தூறலில் நனையும் சுகமும் கூட. விழாவின் பங்கேற்பாளனாக/பேச்சாளனாக இருக்கும்போது ஜன்னல்கள் மூடப்பட்ட இறுக்கமான அறையில் அடைப்பட்ட உணர்வே மேலோங்குகிறது. பெருமழையில் நனைந்து ஒடுங்கும் மனநிலை. இந்த ஆண்டு எனக்கு மூன்றாவது நிகழ்வு என நினைக்கிறேன். பேச்சு தயாரிப்பிலேயே மனம் தோய்ந்து மற்றவைகளை யோசிக்க திராணியில்லாமல் கிடந்தன விழா நிகழ்வின் முந்தைய நாட்கள். விழா தொடங்க நாளிலிருந்து நடப்பது நடக்கட்டும் என்று தோன்ற ஆரம்பித்துவிடும்.



ஞாயிறு (10/6/18) அன்று மாலை நிகழ்விடத்திற்கு வந்தபோது கீழே கவிஞர் வியாகுலம் மட்டும் வந்திருந்தார். அவருடன் பேசியபடி மேலே போனபோது தினேஷும் கேசவனும் உடன் பார்வையாளர்களில் இருவர் மட்டும் வந்திருந்தார்கள். கேமரா செட் செய்வதிலும் இருக்கைகளை ஒழுங்கமைப்பதிலும் தினேஷும் கேசவனும் தீவிரமாக இருந்தார்கள். 5.30 ஆகிவிட்டிருந்தது. தொடங்கவேண்டிய நேரம், இலக்கிய ஆர்வலர்கள் மற்ற இலக்கிய விழாக்கள்போல் மெதுவாகதான் தொடங்கப்படும் என நினைத்திருக்கலாம்.

முகநூல் வழியாகவும் வாட்ஸப் வழியாக்வும் அழைப்பிதழை எண்ணற்ற அமைப்புகளுக்கு அனுப்பியிருந்தார் தினேஷ். அந்த வகையில் ஒரு 100 பேராவது வரவேண்டும். ஆனால் சனி, ஞாயிறுகளில் எல்லா இலக்கிய, வரலாற்று, அரசியல், திருமண, சோதிட, கோயில், ஓய்வுபெற்றோர் விழாக்கள் நடப்பதால் அங்கெல்லாம் பிரிந்துவிடுகிறார்கள் போலும்.
முக்கிய பங்களிப்பாளர்களான திருமதி. கண்ணம்மாள் மனோகரனும், பொ.திராவிடமணி தன் மகளுடனும் வந்தார்கள். கண்ணம்மாள் அவர்கள் ஆர்வமாக என் இலக்கிய செயல்பாடுகளைப் பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டார்.

விழா தொடங்கியபோது நல்ல கூட்டம் கூடிவிட்டிருந்தது. சரியான நேரத்தில் சொன்னபடி தொடங்கியது. வியாகுலன், . செல்லதுரை, சுந்தர்ஜி ப்ரகாஷ், நா.விச்வநாதன், இளங்கோ ராமசாமி வந்திருந்தார்கள். இலக்கிய ஆர்வலர்கள் நிறையபேர் வந்திருந்தார்கள். ஹரணி சற்று மெதுவாக வந்துசேர்ந்தார்.


வரவேற்புரையை கண்ணம்மாள் அவர்கள் வழங்கினார். குந்தவை நாச்சியார் ல்லூரியில் தமிழ்துறை பேராசிரியர் அவர். தமிழ்துறை ஆசிரியருக்குரிய அழகான சொற்சேர்கையில் பேசினார். சின்னதாக எங்களைப் பற்றிய அறிமுக உரையை கொடுத்தார். முதலில் பொ.திராவிடமணி அவர்கள் வாசகப்பார்வையாக ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலைப் பற்றி உரையாற்றினார். நாவலின் எந்த பகுதியையும் விட்டுவிடாமல் பேராசிரியைக்குரிய அழகுடன் பேசினார். இவரும் குந்தவை நாச்சியார் கல்லூரியில் தமிழ்துறை ஆசிரியர். நாவலில் ஹென்றி பிள்ளை என்ற பத்ததின் அழகையும், அக்கம்மாள் உள்ளிட்ட பெண் பாத்திரங்களின் இருப்பை பற்றியும் சிலாகித்தார். ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே நாவலை நிறுத்தியிருக்கலாம் என்றும், மணியக்காரரின் தற்கொலை போன்றவைகள் நாவலில் தேவையில்லை என்றும் கூறினார்.

அடுத்து நான் பேசினேன். தமிழ் இலக்கிய சூழலில் ஜெயகாந்தனின் இடம் குறித்தும் இந்த நாவல் வெளியான காலத்தின் சமூக நிலைகளும், அதனால் ஏற்ப்பட்ட இந்நாவலின் அவசியம் குறித்தும் முதலில் பேசினேன். ஜெயகாந்தனின் மற்ற நாவல்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும், ஹென்றி கதாப்பாத்திரத்தின் தேவை பற்றியும் எப்படி அவரது நடை, உள்ளடக்கத்தால் நிறுவுகிறார் என்பதையும் அடுத்து பேசினேன். பின் நாவலின் கதாபாத்திரங்களின் குணங்களையும், அவர்களுக்கிடையே உள்ள தொடர்ப்புகளையும் பற்றி பேசினேன்.

தினேஷ் எங்கள் பேச்சுகளை லைவாக எடுத்து வாசகசாலைக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். முதல் கூட்டத்தில் இருந்த ரெக்காடிங் பிரச்சனைகள், இடப் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டதால் எளிதாக செய்து கொண்டிருந்தார்.


பின் கலந்துரையாடல் நிகழ்ந்தது. ஒருவர் ஹென்றி பிள்ளை என்கிற சாதி பெயரின் பெருமிதம் தன்னை பாதிப்பதாக ஜெகேயிடம் எதிர்பார்க்கவில்லை என்பதை பொ.திராவிட மணியிடம் தெரிவித்தார். பொ.தி. தன் புரிதலாக அது வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்றும், அதன் காரணங்கள் நாவலில் இருப்பதையும் கூறினார்.

நா.விச்வநாதன் அவர்கள் நான் பேசிய இலக்கிய சூழலில் ஜெயகாந்தனை ஏற்காத கநாசுவின் பட்டியல்களைப் பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு எதிர்வினையாக திறனாய்வாளராக அவரது பட்டியல் முக்கியமானது என்றும், சில தவறுகள் அவர் செய்திருந்தாலும் அவர் குறிப்பிட்ட பட்டியலில் உள்ளவர்கள், சரவண சுப்பையா, .சிங்காரம் போன்ற சில தவறுகள் தவிர, அனைவரும் ஏற்றுக்கொள்ளப்பட்டே யிருக்கிறார்கல் என்று கூறினேன். அவர் எழுதிய பட்டியல் முக்கியமானதுதான் என்று ஏற்றுக்கொண்டார் நா.வி.

வல்லம் தாஜ்பாய், கலியபெருமாள் போன்றவர்கள் நாவல் குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள். பின் கண்ணம்மாள் அவர்களது நன்றி நவிலலுடன் விழா நிறைவடைந்தது. வெளியில் பிஸ்கட், டீ வினியோகிக்கப்பட்டன. குரூப் போட்டாகள், முடிவுக்கு பின்னாலான பேச்சுகள் என்று 8 மணி வரை தொடர்ந்தது. 8 மணிக்கு மேல் அனைவரும் கலைந்து சென்றோம். நிறைவாக முடிந்தது இந்த கூட்டம். என் பெருமழை தூறலாக மாறியிருந்தது.

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அப்படியே ஒரு நேரடிப் பதிவு தந்தமைக்கு நன்றி. பார்வையாளர், பேச்சாளராக ஆகுட் நிலையில் உள்ள சூழலை யதார்த்தமாகப் பகிர்ந்தவிதம் அருமை. வாசகசாலையின் நிகழ்வுகள் சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.