Saturday, June 16, 2018

ஒப்பனை

சின்னதாக தாடி முகத்தில் தெரிந்தால் வீட்டில் உள்ளவர்கள், நாயை கட்டாய குளியல் வைப்பதுபோல, எப்போது தாடி எடுக்க போறே என்று கேட்டு தொல்லை செய்து எடுக்கும் வரை வரமாட்டார்கள். அம்மா, மனைவி, பிள்ளை எல்லோருக்கும் அதில் தெரியும் சங்கடத்தை புரிந்துக் கொள்ள முடிவதில்லை. முக்கியமாக மனிதன் ஒரே மாதிரியான தோற்றத்தில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள் போலும். இத்தனைக்கும் எனக்கு குறுந்தாடியாக மட்டுமே முளைக்கும்.

மனைவி, அம்மா என்று வீட்டில் உள்ள பெண்கள், கல்யாணம், கோயில் என்று கிளம்பும்போது ஆளே மாறியிருப்பார்கள். முகத்தில் வெள்ளையாக சுண்ணாம்பு அடிக்கப்பட்டு பொங்கல் வீடு போன்று இருப்பார்கள். ஆனால் வீட்டில் எண்ணெய் வழியும் முகத்துடன் இருப்பது அவர்களின் சமையல் வேலைதான் காரணம் என்று கூறிக் கொள்வார்கள்.


மனிதர்களின் முக்கிய நோக்கமான தன்னை மற்றவர்களிடம் வெளிப்படுத்துவதில் இருக்கும் அதீத ஆவலை வெல்வது எளிதானது இல்லை என நினைக்கிறேன். மிக இளம் பருவத்தில் அந்த எண்ணம் ஆழமாக இருக்கும். வயதடையும்போது இயல்பாக சகஜ நிலைக்கு மாறிவிட்டிருக்கும். ஆனால் சிலருக்கு அப்படி இல்லை என்று உறுதியாக சொல்லலாம்.

நான் அறிந்த சில நண்பர்கள், நபர்கள், உறவினர்கள், இவர்களில் சிலர் தங்கள் வயது, பொருளாதர நிலை, சமூகத்தின் இடம் எல்லாம் கடந்து தங்கள் உலகில் மட்டும் வாழ்பவர்கள் என நினைக்க தோன்றுபவர்கள். அவர்களின் முகங்கள், உடைகள், அணிகலன்களில் தெரியும் அப்பட்டமான நேரடிதன்மை நம்மை ஒருநிமிடம் துணுக்குறவைப்பவைகள்.

என் நண்பர் (அல்லது தெரிந்தவர்) ஒருவரது நிலையை சொல்கிறேன். அவர் எப்போது பேண்ட் சட்டை அணிபவர். ஞாயிற்றுக்கிழமை மாலையானாலும் அயர்ன் செய்த பேண்ட் சட்டை மட்டும் அணிந்திருப்பார். சட்டை இன் செய்யப்பட்டு அழகிய பெல்ட், அது அவர் வயதிற்கு பொருத்தமற்று இருந்தாலும், அணிந்திருப்பார். வலது கையில் தங்கநிற வாட்ச், வலது கை மோதிரவிரலில் அவர் இனிசியல் பொறித்த மோதிரம், மணிக்கட்டில் பிரேஸ்லெட். இவை மூன்றும் தங்கள் கடமைகளை செய்யாமல் வேறுபக்கம் திரும்பிவிட்டால், திருப்பி பழைய நிலைக்கு அவ்வப்போது கொண்டுவந்துவிடுவார். இடது மணிக்கட்டில் கயிறு ஒன்று கட்டியிருப்பார். இடது கைவிரலில் ஒரு பெரிய மோதிரமும் இருக்கும். கழுத்தில் ஒரு செயின் அவ்வப்போது மின்னுவதை காணலாம். முகம் பொலிவுடன் காணப்படும். அதாவது ரோஸ்நிறமான பூச்சு ஒன்று முகத்தில் படர்ந்திருக்கும். அது நேரமாக ஆக வெள்ளையாக மாறலாம். தலையில், முகத்தில், காதோரத்தில் வெள்ளை முடிகள் திரண்டிருக்கும். ஆனால் ஒன்று தெரியாது. அவைகள் நிறம் மாற்றப்பட்டும் கருப்பாக்கப் பட்டிருக்கும்.

இது ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த மாதிரி பல நபர்களை ஆண் பெண்களை, பல சமயம் சந்திக்க முடியும். வெவ்வேறு வகையான ஆர்வங்கள் அவர்களிடம் கூட-குறைய இருக்கும்.

அவர்களிடம் ’என்னங்க பழைய சட்டையாக இருக்கு’ என்றோ, ’வெள்ள முடி தெரியுதே’; என்றோ சொல்லிவிட்டால், பதறிவிடுவார்கள். நாளெல்லாம், குற்றம் செய்தவனை பார்ப்பதுபோல பார்க்கவும் செய்வார்கள்.

இவையெல்லாம் பல நேரங்களில் நம்மால் பொருத்துக் கொள்ளவும் முடியும். பொதுஇடங்களில் அவர்கள் செய்யும் அலம்பறை தான் தாங்க முடியாதவைகள்.
கல்யாண வீடுகளில் பெண்கள் செய்யும் அலம்பறைகள் சில நேரங்களில், பொதுப் பெண்கள் என்கிற வகையறைக்குள் எடுத்துக் கொண்டு, சாதாரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் நண்பர்கள் சந்திப்பு, கூட்டம், அலுவலக, பார்வையாளர்களின் இடம் என்று சில இடங்களில் அவர்களை எதிர்க் கொள்வது மிகக்கடினம்.

பதினைந்தாம்/பதினாறாம் நூற்றாண்டில் இங்கிலாந்து/பிரிட்டனில் மேட்டிமை எண்ணங்கள், சுதந்திரப் போக்கு தொடங்கியது. அங்கிருந்த ஆங்கிலேயர்கள் தங்கள் உடை, உணவு, உபயோக்கிக்கும் பொருட்கள் மேல் நாகரிகம் என்ற பெயரில் உயர்ந்தவைகளை தேர்ந்தெடுத்து உடுத்த ஆரம்பித்திருந்தார்கள். அதற்கு முன்னால் அவர்கள் ஒரு காட்டுவாசியின் உடைகள் போன்றே அணிந்திருக்கிறார்கள். அதற்கு முன்னால் யவர்கள் இங்கு வந்தபோது இந்தியா, சீனாவைப் பார்த்து மோஸ்தர்களை தேர்ந்தெடுத்தார்கள். பின்னாலில் எல்லா நாடுகளிலும், புதிய நிலங்களை கண்டறியவும், புதிய இனங்களை காணவும், மதங்களை பரப்பவும், கால் வைத்தபோது கூடவே இந்த மேட்டிமைகளும் வந்து சேர்ந்தன.

வெள்ளை நிறமான அவர்கள் முகத்தையும், கைகளை கால்களை மறைக்கும் நீளமாக தைத்த உடைகளை நகல் செய்தார்கள் ஆண்கள். பெண்களும் அதேபோல முகங்களையும், நீண்ட அங்கிகளையும் அணிந்தார்கள். முகத்திற்கு பவுடர் பூச்சு போடுவது கருப்பு வெள்ளை புகைப்படத்திற்க்கு தங்கள் முகத்தை வெண்மையாக்க் என்று மட்டும் தெரிந்து, என்னேரமும் புகைப்பட முகம்போல வெள்ளையாக அலைய ஆரம்பித்தார்கள். இந்த அலைச்சல் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு என்று சொல்லலாம்.

அவர்களிடம் இந்த விஷயத்தில் சுணக்கம் ஏற்பட்டதாக நாம் நினைக்கமுடியாது. ஒரு வகையில் அங்கிகாரம் கேட்கும் புன்னகையுடன்தான் காணப்படுவார்கள். அவர்கள் பொருளாதார நிலையை உயர்த்தி காட்ட மட்டுமே என்று சொல்ல முடியவில்லை. தன் வயதை குறைத்துக் காட்ட, பொதுஇடத்தில் மற்றவர்களிடத்தில் தன்னை கவனிப்பில் வைக்க, உற்சாக மனிதன்(மனுஷி) என்று காட்ட, என்று பலவகையில் இதை புரிந்துக் கொள்ளலாம்.

இது ஒருவகையான தாழ்வு மனப்பான்மைதான். தன் அழகு, அந்தஸ்து, உயரம், பருமன், பொருளாதார நிலை, ஏதோ ஒன்றில் தோன்றும் கவலை அவர்களை நிலைகுழைய வைக்கிறது. பெரிய தொப்பை உடைய மனிதர் ஒருவர் தன் தொப்பைக்கு மேல் வரை அணிந்து சட்டையை இன் செய்திருப்பார். இதில் அவர் என்ன நினைக்கிறார் தொப்பையை மறைக்க நினைக்கிறாரா அல்லது தன் உடையின் ஆர்வத்தை மீறமறுக்கிறாரா?

ஒருவர் வெள்ளைநிற பவுடர் பூசிய முகத்தின் நெற்றியில் முதலில் விபூதியும் அதன் மேல் குங்குமம் பட்டையாகவும் இரண்டிற்கும்மேல் சந்தனம் ஒரு பற்றை தீற்றாக ரோட்டின் நடு மஞ்ச கோடு போல இருக்கும். தன் பக்தியை வெளிப்படுத்துகிறாரா? அல்லது தன் நிரந்தர அடையாளத்தை நிறுவ முயற்சிக்கிறாரா?

மற்றொருவர் எந்த வெப்ப காலத்திலும் நன்கு பாலிஷ் செய்யப்பட்ட புதிய ஷூ ஒன்றுடன் காணப்படுவார். பேண்ட்டின் கீழ்பகுதி மடித்து தைக்கப்பட்ட மோஸ்தரில் இருக்கும். அது பழைய மோஸ்தர் இப்போது எங்கும் இல்லை என்பது அவருக்கு தெரிந்திருக்கும், ஆனால் அதன் மீதான அவரது ஆர்வத்தில் விடமுடியாதவர்.

உண்மையில் சிறந்த ஒப்பனையை நாம் பார்த்தது தெரிந்துவிடும். விகாரமாக இருப்பது எதிராளிக்கு மட்டுமே தெரியும்போதே சங்கடங்கள் தோன்றுகின்றன.

எதுவாகினும் இம்மனிதர்களிடம் அவர்களின் உடைகள், முக ஒப்பனைகள், அணிகலன்கள் மேல் சந்தேக பார்வையை பார்த்துவிடக்கூடாது. நட்பை இழக்க நேரலாம்.
ஒன்று செய்யலாம் அவர்களைவிட சிறந்த ஒன்றை இல்லாமல் அல்லது நாம் செய்யாமல் இருப்பது நமக்கு பொதுவாக நல்லதாக முடியும்.

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

"அவர்களைவிட சிறந்த ஒன்றை இல்லாமல் அல்லது நாம் செய்யாமல் இருப்பது நமக்கு பொதுவாக நல்லதாக முடியும்" என்பதை என்னால் ஏற்கமுடியவில்லை. அவரவர் நிலைக்கேற்ப தம்மை தயார் செய்துகொள்கிறார்கள். ஒருவருக்குச் சிறந்தது என்பது மற்றவருக்குச் சாதாரணமானதாகக் கூட இருக்க வாய்ப்பு உண்டு. அந்நிலையில் மற்றவரோடு ஒப்பு நோக்கி நாம் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்பதே என் எண்ணம்.