Sunday, August 20, 2017

யுவன் சந்திரசேகரனின் பரமபதம் (அ) அறுந்த சரம்




எனக்கு தெரிந்து மூன்று வகையான எழுத்துகள் இலக்கிய வகை எழுத்திற்கு உண்டு என நினைக்கிறேன். ஒன்று நேரடியான அனுபவங்களை எந்த சிக்கல் இல்லாமல் விவரிப்பது, எளிய முயற்சியால் அதை படித்துவிட முடியும். இரண்டாம் வகை இரண்டாம் முறை படித்தால் மட்டுமே புரிந்துக் கொள்ளக் கூடியது. நம் அனுபவதளத்தை சற்று ஒருபடியேனும் உயர்த்தி காட்டிவிடுபவையாக இருக்கும். மூன்றாம் வகை படிக்க எளிதாக இருக்கும் அனுபவ தளமும் நாம் அறிந்தஒன்றாக இருக்கும். இருந்தும் புரிந்துக் கொள்வதில் சிக்கல் இருக்கும். எப்போது படித்தாலும் புதியதாக படிப்பது போலிருக்கும். முதல்வகைக்கு நிறைய உதாரணங்கள் உண்டு. மூன்றாம் வகைக்கு மெளனி, கோணங்கி போன்றவர்களை சொல்லலாம். இரண்டாம் வகைக்கு உள்ளவர்களில் யுவன் சந்திரசேகரும் உண்டு. அவர் எழுதிய பரமபதம் (அ) அறுந்த சரம் அப்படியான ஒன்று. சற்று முயற்சி எடுத்து மட்டுமே புரிந்துக்கொள்ளக் முடியும். (காலச்சுவடு ஆகஸ்ட்'17 இதழ் கதை.)


ஒரு மடத்தில் கடைசி பேருந்திற்காக காத்திருக்கும் மூன்று பேர்கள் அந்த மடம் குறித்த, தங்கள் வாழ்க்கைக் குறித்த, தங்கள் அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ளுதலே கதை. கதை என்று பார்த்தால் மிக எளிமையான கதைதான் இது. ஆனால் அவர்களின் அனுபவங்கள் கூறும்விதமும், சொற்களின் சேர்கையும் நமக்கு ஒரு நீண்ட பிரயாணத்தில் இருக்கும் சலிப்பை போன்ற பிரம்மையை நமக்கு ஏற்படுத்துகிறது. மூவரும் வயதானவர்கள் தங்கள் இளமையில் ஏற்பட்ட சூப்பர்ஸ்டிசியஸ் அனுபவங்களைதான் பகிர்ந்துக் கொள்கிறார்கள். நிஜவாழ்க்கைக்கு அப்பாற்பட்டு நடக்கும் அதீத கற்பனைகளை உள்ளடக்கிய அனுபவங்களை பேசுகிறார்கள். பேசும் இடமான ஒரு மடமும் அது அமைந்த அடர்ந்த காடும் கற்பனைகளை நிஜம் என நம்பவைக்கிறது.

அனுபவங்களை சொல்வதில் புதிய உத்தியை பயன்படுத்துகிறார். ஒரிடண்டு இடங்களைத் தவிர அனுபவங்கள் உரையாடல்களாக இல்லாமல் எழுத்து வடிவில் தன் தன்னிலை விளக்கம்போல் அமைந்திருக்கிறது.

ஒரு சிறுகதையில் நாம் எதிர்ப்பார்க்கும் விஷயம் அதிலிருக்கும் உவமைகள்தான். இந்த கதையில் அது மிக குறைவாக இருந்தாலும் நேர்த்தியான அழகுடன் இருக்கிறது.
முன்னம்பல் ஒன்றை இழந்த வாய்போல இருப்பதை

எத்தனை வலுத்த சூழாவளிக்கும் அலுக்காமல் பிடிவாதமாய் தொங்கும் தூங்கா விளக்குபோல
வெயிலுக்கும் காற்றுக்கும் மழைக்கும் சுரணையற்று வெட்டவெளியில் தவம் கிடக்கும் கல் இருக்கை போல.

ஒரு சிறுகதைக்கு தேவையான சிறந்த தொடக்கமும், அதை வளர்த்துச் கொண்டு செல்லும் நடுப்பகுதியும், ஒரு தத்துவ முடிச்சுடன் கூடிய முடிவும் அமைந்திருக்கிறது. கதை முடிந்த பின்னும் அது குறித்து சிந்திக்க தூண்டிக் கொண்டிருக்கிறது. எல்லாம் இருந்தும், விலகி நின்று பார்க்கும்போது, எதற்கு இதையெல்லாம் வலிந்து சொல்லப்படுகிறது என்கிற எண்ணம் ஏற்படுகிறது. இம்மாதிரியான கதைகளுக்கு தேவைப்படும் அகஅனுபவ தொடர்ச்சி இக்கதையில் இல்லை என்று சொல்லலாம். ஆழ்மன எண்ணங்களை சார்ந்து எழுதாமல் வலிந்து எழுதப்பட்ட பகுதிகள் அதிகம் என்கிற தோற்றமும் உண்டாகிறது. ஆனால் அதையும் கலைவெற்றியை இக்கதை எட்டியிருக்கிறது.

முதலாமவர் நாதஸ்வர கலைஞர், இரண்டாமவர் சமையல் கலைஞர், மூன்றாமவர் பக்தராக தெரிகிறார். மூவரும் தங்கள் அதீத அனுபவங்ளில் திளைத்திருக்கும்போது நான்காமவரது குரல் கேட்கிறது. அவர் அந்த மடத்தின் அதிபதி என்கிறார். மூவர் மட்டும் இருக்கும் இடத்தில் தோன்றும் நாலாவது நபர் கூறுவது தன் மரண அனுபவத்தைதான்.

இந்த கதை மாந்தர்கள் வேவ்வேறு மனிதர்கள், வேவ்வேறு சூழலில் வளர்ந்தவர்கள். ஆனால் அவர்களின் மனங்கள் ஒன்றை நோக்கியே எழுகின்றன. இசையை அறிந்தவன் கேட்டிறாத கானத்தையும், ருசியை அறிந்தவன் சுவைத்திராத ருசியையும், பக்தன் கண்டிராத அதிசயத்தையும் சொல்கிறார்கள்.

அங்கே இல்லாத நான்காவது நபர் சொல்லும் கதை அதிசயத்திற்கெல்லாம் அதிசயமாக அவர்கள் அவர் கேட்டிறாத இதுவரை உணர்ந்திராத அவர்களின் அனுபவங்களையும் தாண்டி இருக்கிறது. அதை ஒரு பேருந்தின் ஒலிப்பான் யானையின் பிளிறலாக அலறுவதை கண்டு எழுந்து அமரும்போதுதான் அதில் எத்தனைநேரம் லயத்திருக்கிறோம் என உணருகிறார்கள்.

பல்வேறு கதைகளின் இணைப்பாக ஒரு கதையை உருவாக்கிவிடுவது யுவன் சந்திரசேகரனின் பாணி. இதற்கு முந்தைய கதைகளில் அவர் எடுத்துக்கொண்ட கதைக் கரு, தளம் நேரடி அனுபவத்தை கூறுவதாக இருந்திருக்கிறது. இக்கதை முற்றிலும் வேறுவகை.

அன்றாட உண்மைகளை பேசாமல் மனிதனின் உச்ச நிலைகளை மட்டுமே பேசுகிறது. கதைக்கு தேவையான ஒருமை இல்லாமல் சிதறிய நிலையில் இருக்கிறது.

மூன்று நபர்கள் பேசும் அனுபவ தளமும், நான்காவது நபர் பேசும் அனுபவ தளம் எந்த இடத்தில் ஒன்று சேறுகிறது, அந்த மூன்று நபர்களும் ஒருவொருக்கொருவர் முன்பு சம்பந்தப்பட்டவர்களா, அவர்கள் கூறும் கதைகள் இருக்கும் தொடர்ப்பு பற்றி நாம் தெரிந்துக் கொண்டது என்ன போன்ற கேள்விகள் வாசகர்களாக நாமே நம் அனுபவ தளத்திலிருந்து மட்டுமே புரிந்துக் கொள்ளக் கூடியது. புரிந்துக் கொள்ள முடியாத இடங்கள் சில உண்டு. அதுதான் கதையை மேலும் சிந்திக்க தூண்டிக் கொண்டேயிருக்கிறது.

உலக வாழ்க்கை எளியது. மிகதீவிரமாக ஓடிக் கொண்டிருந்த இளமைக்கு பின் சலிப்பான வாழ்வின் எந்த அனுபவங்களும் அதீத கற்பனைகளைக் கொண்டு நிரப்பிக்கொள்ள ஆசைப்படும் முதுமையில் அது தரும் போதை நம் எல்லோர் மனங்களிலும் இருக்கிறது. வாழ்க்கையில் ஒரு கட்டத்திற்குபின் மூவரும் தோற்றவர்களாக இருக்கிறார்கள். தோல்வியின் நிறைவு அவர்களை பேச வைக்கிறது. வெற்றியின் களிப்பு அவர்களிடம் இருந்திருந்தால் உலகத்தை கவனித்துக் கொண்டிருக்கும் அமர்த்தலான பார்வையோடு அங்கே அமர்ந்திருப்பார்கள். மரணம் என்கிற ஒன்று எல்லா அதீதங்களையும் வெட்டி வீழ்த்திவிடும் எனவும், எல்லா அதீதங்களுக்கு முதன்மையானதாக மரணம் மட்டுமே இருக்கும் எனவும் உணரும் ஒரு இடம் கதையின் மையம்.

தத்துவ ஒருமையும், இலக்கிய அமைதியும் கொண்ட ஆக்கம் இது. ஒரு நாவலுக்குரிய விரிவுடன் அமைந்த இந்த சிறுகதை. பொறுமையும், வாசகனாக மட்டுமல்லாமல் அதில் பங்குபெரும் நான்காவது நபராக பங்குகொண்டால் மட்டுமே புரிந்துக் கொள்ள முடியும்.

[தஞ்சை கூடல் 19-8-17 அன்று பேசிய உரையின் கட்டுரை வடிவம்.]