Friday, August 25, 2017

கிராமத்தின் பாடல்கள்



ஒரு தனியார் பேருந்தில் சமீபத்தில் பயணம் செய்தேன். தனியார் வண்டி என்பதால் கிராமமக்கள் எல்லாம் ஏறினார்கள். அவர்கள் நிற்கும் இடங்கள் ஓட்டுனர் நடத்துனருக்கு தெரிந்திருந்தது. அரசு பேருந்தைவிட கட்டணம் மிகக்குறைவு, எல்லா இடங்களிலும் நிற்கிறார்கள், ஆனால் குறித்த நேரத்தில் அரசு பேருந்தைவிட முன்பே சென்றுவிடுகிறார்கள். ஆச்சரியம்தான். நடத்துனரின் சிடுசிடுப்புகள் இல்லாமல் சரியாக கொண்டு சென்றுவிடுகிறார்கள். ஆகவே கூட்டம் அம்முகிறது.

என்னைச் சுற்றி அமர்ந்திருந்தவர்கள், நின்றிருந்தவர்கள், ஆண்கள், பெண்கள் எல்லாருமே கிராமத்துகாரர்கள். ஒயர் கூடையை வைத்திருக்கிறார்கள் அல்லது பெரிய துணிப்பை வைத்திருக்கிறார்கள் அல்லது பெரிய தூக்குவாளி. மெல்லிய புன்னகையுடன் ஒவ்வொருவரிடமும் நலம் விசாரித்து பேசியபடி வருகிறார்கள். திரும்பி பார்ப்பதற்குள் அடுத்த ஸ்டாப்பில் இறங்கிக் கொள்கிறார்கள்.
பாடல்கள் உச்சஸ்தானியில் ஒலித்தன. பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தது சில நிமிடங்கள் ஆனபின்னுதான் தெரிகிறது, இந்த பாடல்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட ஒருவகை படங்களாக இருந்தன. கிராமத்து பின்னணி படங்கள். எல்லாமே தேவாவின் இசை அல்லது எஸ்.ஏ.ராஜ்குமார், சிற்பி போன்றவர்களின் பாடல்கள். தேடித் தேடி தேவா, எஸ்.எ.ராஜ்குமார், சிற்பி இசையமைத்த பாடல்களாக ஒலித்தது.

கிராம மக்களுக்கு இளையராஜா பிடிக்கும் என்றுதான் அதுவரை நினைத்திருந்தேன். கரகாட்டக்காரன் போன்ற ராமராஜன் படங்கள் அவர்களுக்கு பிடித்துதான் இருக்கும். ஆனால் நாட்டமை போன்ற கிராமத்து படங்கள், விக்ரமன் படங்களின் பாடல்கள் மட்டுமே ஒலித்தன. கொஞ்சம் யோசித்தால் 90களில் வந்த இளையாராஜா தவிர்த்த கிராமத்து படங்களாக இருந்தன என்றால் சரியாக இருக்கும்.

ரவிக்கை, தாவணி, முந்தானை, கொண்டை, மாராப்பு, என்ற வார்த்தைகள் எல்லா பாடல்களில் இருந்தன. ஆண் குரல் எப்போதும் பெண் குரலை அதட்டுகிறது. பெண்குரல் எப்போதும் சினுங்குகிறது. அடிக்கடி மூச்சிறைப்பு வருகிறது. இந்தமாதிரியான சமங்களில் பயணிக்கும் பெண்கள் லேசாக மறைவாக சிரிக்கவில்லை, நேரடியாக பற்கள் கூச்சத்தோடு சிரித்துவிடுகிறார்கள். உதாரணமாக உன்னை சோள காட்டில் கொண்டு சென்று செய்கிறேன் பார் என்று மறைமுகமாக இல்லை, நேரடியாக அதை சொல்கிறது ஆண்குரல், பெண் குரல் சிணுங்கி அது உன்னால் முடியுமா என்று சவால் போல் விடுகிறது.

கிராமிய இசை, கிராமிய நடனம், கிராமிய பாடல்களில் தெரியும் அதே நேரடித்தனம் இந்த பாடல்களிலும் ஒலிக்கிறது.

கொஞ்சம் யோசிக்கும்போது மூன்றே விஷயங்கள்தான் கிராம மக்களிடம் இருக்கின்றன. ஒன்று உழைப்பு அடுத்து உணவு. அதன்பின் அவர்களுக்கு தேவையாக இருப்பது உடலுறவு. முதலாவது அவர்கள் செலுத்த நினைப்பது, மற்ற இரண்டும் அவர்கள் பெற விரும்புவது. இந்த கடைசி இரண்டின் தேவையை அவர்கள் மறுப்பதில்லை, நேரடியாக அதன் மீதான விருப்பத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

நகரமும் கொஞ்சம் நாகரீமாக நாம் நினைக்கும் மக்களிடம் வெற்றி, தோல்வி, நன்மை, தீமை, குரோதம், பக்தி, கீழ்மை, காழ்புணர்ச்சி, போட்டி, பொறாமை, ஏமாற்று போன்றவைகளை தாண்டி தன் வாழ்க்கையை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. வெற்றி, நன்மை, போட்டி இன்னபிற போன்றவைகளை முன்நிறுத்தி மற்ற அனைத்தையும் முக்கியமற்றவைகளாக முன்நிறுத்துகிறார்கள் நகர நாகரீகவாசிகள். உணவு, உடலுறவும் மிக பின் தங்கியவையே என்று நினைக்க தலைப்படுகிறார்கள். அதற்கு தங்களுக்கு சம்பந்தமற்றவைகளாக காட்டிக் கொள்ள முனைகிறார்கள். பாடல்களில், இசையில், இலக்கியங்களில் அதுகுறித்து மறைமுகமாக சொல்லிக் கொள்கிறார்கள்.

மனோவும் மலேசியா வாசுதேவனும் ஏய், எம்மா என்று குரலெழுப்பியும் அதட்டியும் கொண்டிருக்கிறார்கள். மிக இனிய ஒரு சிறிய தருணம் போதுமானதாக இருக்கிறது. வாழ்க்கை குறித்த விமர்சனங்கள் இல்லாமல் கவலைகள் மறந்து 3 நிமிடப் பாடல்கள்போல் நிம்மதியாக இருக்க முடிகிறது. பின் வேறு வேலைகளை கவனிக்க போய்விடுகிறார்கள். இறங்கியதும் சிரித்து பேச ஆட்கள் இருக்கிறார்கள்.

நமக்குதான் கொடுத்து வைக்கவில்லை இந்த வாழ்க்கை.

No comments: