Wednesday, December 14, 2016

ஆசுபத்திரி



நாம் உள்ளே நுழையும்போது இன்முகத்துடன் வரவேற்கிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளர்கள், ஆயாக்கள், வார்ட் பாய்கள் என்று அங்கு வேலை செய்யும் அனைவரும் ஒரே மாதிரியான மனநிலையிலும் உடல்மொழியிலும் இருக்கிறார்கள். அப்படி பயின்றிருக்கிறார்கள். நோயாளிகளின், கூடவருபவர்களின் மனநிலையை நன்கு உணர்ந்திருக்கிறார்கள். நோயாளிகளின் நோய்க்கு தகுந்தாற்ப்போல் எதிர்வினையாற்றுவதைவிட அவர்களின் முககுறிகளுக்கு மட்டுமே எதிர்வினை செய்கிறார்கள். ஆனால் இது ஒரு பாவனை என்று புரிய அதிக நாட்கள் தேவையிருக்காது. சில காசு அதிக செலவு பிடிக்கும் பெரிய மருத்துவமனைகளைத் தவிர மற்ற சின்ன மருத்துவமனைகள் ஒன்றுபோலதான் இருக்கின்றன.

Wednesday, December 7, 2016

சோ



சோ என்கிற பெயர் எப்படி அவரின் பெயரின் முன்னால் வந்தது என்று நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. சோ என தொடங்கும் ஒரு பெயரின் சுருக்கம் என்று நினைத்துக் கொள்ள அதிக வாய்ப்பிருக்கிறது. சோ எப்படி வந்தது என்று ஒரு பேட்டியில் அவரிடம் கேட்டபோது அந்த ரகசியத்த உங்களிடம் சொல்லுவேன்னு நினைக்கிறீங்களா என்றார். சோ என்கிற பெயர் அவர் நடித்த முதல் நாடகத்தின் (பகீரதன் எழுதிய தேன்மொழியாள் என்ற நாடகம்) ஒரு கதாபாத்திரத்தின் பெயர். அவர் நடித்த அந்த கதாபாத்திரத்தின் பெயரை புனைப்பெயராக தன் முன் இணைத்துக்கொண்டார். சினிமாவிற்கு வந்தபின் சோ மிகப் பிரபல்யமான பெயராக மாறிவிட்டது.

Tuesday, December 6, 2016

ஜெயலலிதா என்னும் மனுஷி

இரண்டாம் முறை ஆட்சியை பிடிப்பவர் இறந்துவிடுவார் என்கிற வாட்ஸ்ஸப் வதந்தி இன்று உண்மையாகிவிட்டது. எம்ஜியார் இரண்டாம் முறை ஆட்சியை பிடித்ததும் (நடுவில் ஒருமுறை கவர்னர் ஆட்சிவந்தது) அவர் இறந்தார். பல்வேறு உடல் பிரச்சனைகள் எம்ஜியாரைப்போலவே ஜெ.வுக்கு ஏற்பட்டு காலமாகியிருக்கிறார். அவரின் மரணம் எதிர்பாராத மிக அசாதாரமான சூழலில் நடந்திருக்கிறது. அவருக்கென்று வாரிசுகள் யாரையும் காட்டாமல் அவர் இறந்திருக்கிறார். ஜெயலலிதா எப்படி எம்ஜியாரின் இறப்பிற்கு பின்னே உருவாகி வந்தாரோ அப்படி யாராவது உருவாகி வரவேண்டும்.

ஜெயலலிதா கட்சியை பிடிக்கவும், ஆட்சியை பிடிக்கவும் ஏற்பட்ட சிரமங்களை போலவே எதிர்கட்சியினரை சமாளிக்க மிகுந்த சிரமப்பட வேண்டியிருந்தது. 89ல் சின்ன கட்சியாக அவர் சட்டமன்றத்தின் உள்ளே வந்தபோதே மக்களாலும், அரசியலார்களாலும் அத்தனை வெறுப்புடன் பார்க்கப்பட்டார். சட்டமன்றத்திலேயே தாக்கப்பட்டார். முழுமையாக விரட்டப்படவேண்டும் என்கிற வெறியில் எழுந்த பல்வேறு அவதூறுகளால் தொடர்ந்து வசைப்பாடபட்டார். இந்த ஒன்றே அவரை தொடர்ந்து அரசியலில் இருக்க செய்துவிட்டது.

Friday, December 2, 2016

விளையாட்டுல என்ன இருக்கு



நான் சிறுவனாக இருந்தபோது என் வீட்டருகே இருந்த பெண்மணியின் முகம் இன்றும் நினைவிருக்கிறது. ஒடுங்கிய கன்னம், துருத்திய கண்களுடன் இருக்கும் அவரின் செய்கைகள் எப்போதும் விசித்திரமாக இருந்ததே அதற்கு காரணம் என நினைக்கிறேன். அவரின் பிள்ளைகளை வெளியே எப்போது விளையாட அனுமதிப்பதில்லை. மாலையானதும் வீட்டில் வைத்து பூட்டிவைத்துவிடுவார் மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடி தன் குழந்தைகள் கெட்டுவிடும் என்பதுதான் அவர் சொல்லும் காரணம். விளையாட்டுல என்ன இருக்கு, படிப்புலதான் எல்லாம் இருக்கும் என்பார். ஆனால் எப்போதாவது அந்த குழந்தைகள் விளையாட வரும்போது அதிக விளையாட்டு தனத்துடன் நடந்துக்கொள்வதைப் பார்க்க வயதிற்குரிய புத்திசாலிதனம் இல்லாமல் இருப்பதாக தோன்றும். கால்நூற்றாண்டாக விளையாட்டை புறக்கணித்த குழந்தைகள் வளர்ந்து இப்போது இருக்கும் இன்றைய தமிழகத்து மனிதர்கள் அந்த 'புத்திசாலிதனம்' இல்லாமல் இருக்கிறார்கள் என்று யாராவது சொன்னால் நம்பித்தான் ஆகவேண்டும்.

Thursday, December 1, 2016

புதுத்துணி



புதுத்துணி வாங்கி தைத்தது வந்ததும், மடிப்பு கலையாமல் இருக்கும்போதே பிரிக்காமல் அதற்கு மஞ்சளோ குங்குமமோ தடவிவிடுவார்கள். பல துவைப்புக்கு பின்னேயும் அதன் அந்த மஞ்சள்/சந்தன நிறம் மாறாமல் இருக்கும். ஒருவர் தன் காலரில் மஞ்சள் அல்லது குங்கும கறையுடன் வந்தால் அது புதுத்துணி என்று அர்த்தமாகிவிடும், அந்த சட்டை எவ்வளவு பழசாக இருந்தாலும். இன்று புதுத்துணிக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்று நினைக்கிறேன். நேரடியாக ஆயத்த ஆடைகளை மக்கள் அணிய தொடங்கியது ஒரு காரணமாக இருக்கலாம். மிக குறைந்த விலையிலும் மக்களிடம் பணப்புலக்கம் அதிகமாகிவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு 15 வருடமாக இந்த நிலை மாறிவிட்டது என நினைக்கிறேன்.

முன்பு வருடத்திற்கு அதுவும் தீபாவளி சமயத்தில் மட்டும் துணி எடுக்கும் பழக்கம் இருந்தது. துணி வாங்குவது ஒரு பெரிய படலமாக நடக்கும். துணி எடுத்தாச்சா என்கிற கேள்வி ஒருவரை ஒருவர் கேட்டபடி இருப்போம். முதலில் சிறுவர்களுக்கு இருக்கும் பின் பெரியவர்கள் என்று கடைக்கு சென்று வருவார்கள். பின் தைக்க என்று தனியாக கடைகள் இருக்கும் தெருவிற்கு சென்று வருவார்கள். சிலர் துணியை தண்ணீரில் நனைத்து காய வைத்து பின் தைக்க கொடுப்பார்கள். சுருங்குதல், சரியாக உடலில் அமராது என்று காரணங்களைச் கூறி அப்படி செய்வார்கள்.

Monday, November 14, 2016

வலிகள் நிறைந்த வாழ்க்கையைக் காட்சிப்படுத்தும்

கதைகள் சாமத்தில் முனகும் கதவு - கே.ஜே.அசோக்குமார்   
ஹரணி

மூன்று முறை சந்திப்பில் எனக்கு அறிமுகம் கே.ஜே.அசோக்குமார். சிறுகதை எழுதியுள்ளதை அப்புறம்தான் சொன்னார். தொகுப்பு வெளிவந்திருப்பதையும் அதற்குப் பின்னர்தான் சொன்னார். அப்புறம் அதன் அறிமுகவிழா குறித்துப் பேசியபின் தாங்கள் அதுகுறித்து பேசவியலுமா எனக் கேட்டார். பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு புத்தகத்தைத் தாருங்கள் படிக்கவேண்டும் என்றேன். புத்தகம் வாங்குவதில் சற்று தாமதம் நேர்ந்தது. பின்னர் கிடைத்து அதுகுறித்துப் பேசுவதற்கு முன்னதாகப் படித்துமுடித்துவிட்டேன்.


Wednesday, October 12, 2016

சிறுகதை: முகங்கள்




சமீபகாலமாகதான் முகங்களை கூர்ந்து கவனித்துவருகிறேன் என்று நான் உறுதியாக நினைக்கிறேன்.. அதற்கு முன்பு எப்படியிருந்தேன் சரியாக நினைவில்லை. ஆனாலும் ஒரளவிற்கு கவனித்தேன் என்பதை ஒத்துக் கொள்ளதான் வேண்டும். நிச்சயம் இந்த அளவிற்கு மோசமாக இருக்காது என நினைக்கிறேன்.. முகங்களை கவனிப்பதென்பது வெறுமனே கவனிப்பது மட்டுமல்ல. நான் நினைப்பது அதன் வளர்ச்சியின்/வளர்ச்சியின்மையின் பரிமாணங்களை பற்றி நம் அபிப்ராயங்கள் எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கின்றன என்பதை கவனிப்பதுதான்.

Monday, August 8, 2016

அல்லோலபதி மருத்துவம்



பலவகை மருத்துவங்கள் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்தன. ஆயுர்வேதம், சித்தமருத்துவம், யுனானி, நாட்டு மருத்துவம், கைமருத்துவம் என்று அவரவர்களுக்கு தேவைக்கும் அவசியத்திற்கும் பொருத்து இந்த மருத்துவங்கள் பயன்பட்டன. நோய் தீர்வுக்காக ஒன்றுக்கொன்று உறவாடிக் கொண்டன. விட்டுக் கொடுத்துக் கொண்டன. இன்று ஒரே மருத்துவம்தான் அது அலோபதி என்று சொல்லப்படும் ஆங்கில மருத்துவம் மட்டும்தான்.. இன்றும் மேற்ச்சொன்ன மருத்துவங்கள் இருந்தாலும், அது கடைசி தீர்வாகவோ, இதையும் முயன்று பார்க்கலாம் என்றோ, அல்லது இல்லாதவர்களின் பிரியமானதாகவோதான் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் உடனடி தீர்வு வேண்டுமென விரும்புகிற மக்களுக்கு மட்டுமல்ல, நம்பகமான மருத்துவமாக அலோபதிதான் திகழ்கிறது.
ஏன் அலோபதிதான் சிறந்த மருத்துவமாக இருக்கிறது? பலவகையிலும் செலவுபிடிக்கிற, பகற்கொள்ளையர்களாக செயல்படும் அல்லோபதி டாக்டர்களை மக்கள் தினம் சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். சின்ன விரல் வலியிருந்து பெரிய நெஞ்சுவலிக்கு என்று எல்லாவற்றிற்கும் அதைத்தான் நாடுகிறார்கள். குணமாகுமா இல்லையா என்பதைத்தாண்டி அதனிடம் எல்லாவற்றிற்கும் மருந்து இருக்கிறது. அதுஒரு பெரிய தொடர் செயல்பாட்டை கொண்ட பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்படும் ஒரு கூட்டு இயக்கமாக உலகம் முழுவதும் பரயிருக்கிறது.. அதன் நம்பகதன்மை அதுவாகத்தான் இருக்கும்.

Saturday, June 11, 2016

முன்னுரை: சாமத்தில் முனகும் கதவு சிறுகதை தொகுப்பு



எழுதுவதைத்தவிர வேறு கதியில்லை என்று வந்தபோதுதான் எழுத ஆரம்பித்தேன். அதுவும் எழுதி என்ன ஆகபோகிறது என்கிற‌ பெரும்தயக்கதோடு. இத்தனைக்கும் என் சிறுவயது லட்சியம் எழுத்தாளன் ஆவதாகத்தான் இருந்தது. சிறுவயதில் என் வீட்டை சுற்றியுள்ள என் வயதொத்த சிறுவர்களுக்கு இட்டுக்கட்டி கதைகளைகூறி சந்தோஷப்படுத்திய‌ இடமான‌ சித்தி விநாயகர் கோவிலில் அமர்ந்து வேண்டிக் கொண்டது இன்றும் நினைவிருக்கிறது. மேஜைமுன் அமர்ந்து பேனா பிடித்து வடக்கே பார்த்து யோசிக்கும் என் சித்திரம் அப்போதிருந்தே என்மனதில் இருக்கிறது. படிப்பு, வேலை, அலைச்சல்க‌ள், என்று தேவையற்ற வேலைகளில் நான் ஈடுபடுவேன் என்று இன்றுவரை நினைத்ததில்லை. எழுத்தாளனுக்கு தேவையான அகங்காரமும், எந்த வேலையும் சரியாக செய்ய தெரியாமையும் எப்போதும் என் வாழ்வில் தொடர்ந்து வருவதை அவதானித்து இருக்கிறேன். என் சிறுவயதில் என் அம்மா ஒளித்துவைத்து பென்சிலால் பேப்பரில் இருபக்கங்களிலும் கதை எழுதுவதை கவனித்திருக்கிறேன். ரொம்பநாள் வரை கதையெழுதி பிரசுரிக்க அனுப்பியிருக்கிறார். இதுவரை ஒரு கதையும் வந்ததில்லை. இந்த ஒற்றை ஆதாரத்தைத் தவிர என் குடும்பவகையில் எழுத்தாளர் என்று யாருமில்லை. என் அம்மாவின் ஆசை, அவர் மனதோடு கூறிய ஆசிகள் என்னிடம் வந்துவிட்டதாக நான் நினைத்துக் கொள்கிறேன். இத்தொகுப்பு அவர் கைகளில் வரும் நாளில் நிச்சயம் அவர் கண்களைப் பனிக்கச் செய்யும்.

Friday, June 10, 2016

அணிந்துரை: கே.ஜே. அசோக்குமாரின் கதையுலகம் -- பாவண்ணன்



தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் கணிப்பொறியில் நேரிடையாக தமிழில் எழுதும் முறை பரவலாக அறிமுகமானபோது, அப்போது எழுதிக்கொண்டிருந்த ஒருசிலர் உடனடியாக அந்தப் புதுமுறையைப் பயின்று தேர்ச்சி பெற்றுவிட்டார்கள். தினந்தோறும் கணிப்பொறியைக் கையாளக்கூடியவனாக இருந்தும்கூட, என்னால் அப்படி உடனடியாக  மாறமுடியவில்லை. ஒரு படைப்பை முழுமையாக கையெழுத்துப் பிரதியாக எழுதி வைத்துக்கொண்டு, அதற்குப் பிறகு ஓய்வாக அதைப் பார்த்து கணிப்பொறியில் எழுதும் வழிமுறைதான் எனக்கு வசதியாக இருந்தது. கணிப்பொறி என்பதை கிட்டத்தட்ட ஒரு தட்டச்சுப்பொறியாகவே நான் பயன்படுத்தி வந்தேன்.