Monday, November 14, 2016

வலிகள் நிறைந்த வாழ்க்கையைக் காட்சிப்படுத்தும்

கதைகள் சாமத்தில் முனகும் கதவு - கே.ஜே.அசோக்குமார்   
ஹரணி

மூன்று முறை சந்திப்பில் எனக்கு அறிமுகம் கே.ஜே.அசோக்குமார். சிறுகதை எழுதியுள்ளதை அப்புறம்தான் சொன்னார். தொகுப்பு வெளிவந்திருப்பதையும் அதற்குப் பின்னர்தான் சொன்னார். அப்புறம் அதன் அறிமுகவிழா குறித்துப் பேசியபின் தாங்கள் அதுகுறித்து பேசவியலுமா எனக் கேட்டார். பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு புத்தகத்தைத் தாருங்கள் படிக்கவேண்டும் என்றேன். புத்தகம் வாங்குவதில் சற்று தாமதம் நேர்ந்தது. பின்னர் கிடைத்து அதுகுறித்துப் பேசுவதற்கு முன்னதாகப் படித்துமுடித்துவிட்டேன்.மொத்தம் பதினெட்டுக் கதைகள் அடங்கிய தொகுப்பு சாமத்தில் முனகும் கதவு. புத்தகத் தலைப்பே என்னை நிரம்ப யோசிக்கவைத்தது. தமிழ்ப் பண்பாட்டில் குறிப்பாகக் குடும்ப வாழ்வில் கதவின் பங்களிப்பு என்பது நீண்ட நெடிய வலிகளையும் பெருமூச்சுக்களையும் ஏக்கங்களையும் எதிர்க்கவியலா இயலாமைகளையும் நிராசைகளையும் இப்படி விரித்துக்கொண்டு போவதற்கான ஏராளமான சாத்தியங்களைக் கொண்டது. சாமத்தில் முனகும் கதவு குறித்து எனக்கு நிரம்பப் பரிதாபமே தோன்றியது. எனவே தொகுப்பில் உள்ள மற்ற கதைகளில் தலைப்புக்களைக் கண்டபோது அவசியம் இவற்றை வாசிக்கவேண்டும் என்கிற உறுதி எனக்குள் நிரம்பிநின்றது. வாசித்து முடித்தபோது பதினெட்டுக் கதைகளில் சரிபாதியாக 9 கதைகள் மனசுக்கு ஒட்டவில்லை. ஒருவேளை இன்னுமொரு வாசிப்பில் அது சாத்தியப்படலாம் என்றும் தோனியது. இருப்பினும் படித்த 9 கதைகள் குறித்துப் பேச இங்கே நிறைய இருக்கின்றன என்பதுவே தொகுப்பின் முழுமையை எனக்குள் உருவாக்கிவிட்டுப்போனது.

ஒரு வாசிப்பாளன் என்கிற ஒன்றின் பிடியிலேயே நின்றுகொண்டு இக்கதைகளை உங்களிடத்துப் பகிர்ந்துகொள்ளலாம் எனத் தோனுகிறது. கதைப் பொருண்மைகளை வைத்து முன்தொடங்கினால் அவை ஏற்கெனவே சொல்லப்பட்ட அல்லது பேசப்பட்ட பொருண்மைகள் என்றாலும் கே.ஜே.அசோக்குமார் தன்னின் வன்மையான அற்புதமான படைப்பாற்றலால் அவற்றை சமரசமின்றி உருவாக்கியுள்ள தன்மை சற்றே வியக்க வைத்தது. வலிகள், அவமானங்கள், அசிங்கங்கள், காயங்கள், கவனிக்கப்படாத தருணங்கள், விலக்கப்பட்ட கொடுமைகள், திறன் இருந்தும் செயல்படுத்தமுடியாத இடர்கள், தன்னுணர்வு சிதைக்கப்பட்ட சூழமைவுகள் எனப் பலவற்றையும் இவரின் கதைகள் எடுத்துரைக்கின்றன. உள்ளதை உள்ளவாறே எடுத்துரைக்கின்றன.

கதைகளின் யாருடைய தாக்கமுமின்றி தனித்துவமான அடையாளத்தை முதல் தொகுப்பிலேயே தக்கவைத்துள்ள கே.ஜே.அசோக்குமாரின் படைப்புத்திறன் பாராட்டிற்குரியது. என்றாலும் இவரின் சித்திரிப்புகளில் சிலவிடங்கள் அசோகமித்திரனையும் சில விடங்கள் பிரபஞ்சனையும் சிலவிடங்கள் லாசராவையும் நினைவூட்டுவது முதல் தொகுப்பு என்பதையும் தாண்டிப் பிரமிக்க வைக்கிறது. பல்லாண்டுகளாக மண்ணுக்குள் கிடந்து முளைத்த விதை விருட்சமானதுபோன்ற உணர்வை கே.ஜே.அசோக்குமாரின் படைப்புணர்வும் நினைவூட்டுவது எதிர்காலத்தில் நம்பிக்கையான ஒரு சிறுகதை படைப்பாளனின் உறுதியான முகத்தைப் பதிவேற்றுகிறது.

இவருடைய கதைசொல்லும் திறனுக்குச் சான்றாகக் குறிப்பிடவேண்டுமென்றால் கதையின் முடிவை இடையிலேயே நுட்பமாகக் கூறிவிடுவது மாறுபட்டதாக உள்ளது. வாழ்வின் சகல வலிகளையும் அனுபவிக்கும் யாரும் இவருடைய கதைகளை வாசிக்கும் தளத்தில் இதனைக் கண்டுவிடமுடியும் என்பதை நான் உணர்ந்துகொள்கிறேன். அப்ரஞ்சி எனும் கதை இத்தொகுப்பின் உச்சமாக கதை. கதை வழக்கமான பொருண்மை என்றாலும் கதையின் நாயகியின் முடிவையும் உலகத்தின் அருவருக்கத்தக்கப் பண்பையும், அப்ரஞ்சி அரசலாற்றில் குளித்துவிட்டு வரும்போது அவள் தலையிலிருந்து சொட்டும் ஈரம் அவள் நடந்துவந்த பாதையைக் காட்டுகிறது என்பதில் அப்ரஞ்சி எல்லாவற்றையும் கடந்து மனிதர்கள் மேல் கொண்ட ஈரமானது அதனையொட்டி அவள் செய்த தொண்டுகள் யாவும் மணல் மேல் விழுந்த ஈரத்துளிகளைப்போல உலர்ந்துபோனது என்பதைக் குறிப்பிடுகிற இடத்தில் கே.ஜே.அசோக்குமாரின் தேர்ந்த படைப்பாளுமை புலப்படுகிறது. மேலும் அவளின் மேல் மற்றவர்கள் காட்டிய அன்பும் அந்தத் துளிகளைப்போல அப்ரஞ்சியைப் பயன்படுத்திக்கொண்டமையையும் புலப்படுத்துகிறது.

ஒரு மனிதன் பிறந்து இறந்துபோகும்வரையில் இந்த மண்ணில் அவன் வாழ்தலின் பொருட்டு அசையும் இடங்களிலும் தருணங்களிலும் செய்யும் செயல்களிலும் என யாவற்றிலுமாக உள்ள அசையும் அசையாக் களங்கள் அனைத்தையும் உவமை எனும் ஒற்றை வடத்தின் வழியாக இயைபுப்படுத்திப் படிப்போரின் உள்ளத்தை அதிர வைக்கிறார் அசோக்குமார். வழக்கமாக நாம் சாலைகளில் பயணிக்கும்போது அல்லது நடந்து போகும்போது ஏதேனும் ஒரு மரத்தில் குறிப்பாக புளிய மரத்தில் சின்ன அறிவிப்புப் பலகை தொங்கவிடப்பட்டிருக்கும். ‘இங்கு பஞ்சர் பார்க்கப்படும்’, ‘இங்கு காற்று அடிக்கப்படும்’ இந்தப் பலகை எங்கே கண்டாலும் அது கோணலாகவே இருக்கும். இதனைக்கூட தன் கதையின் பொருண்மைக்கேற்பப் பயன்படுத்தியிருப்பது வாழ்க்கையாக எழுத்தைக் கையாளும் அசோக்குமார் குறிப்பிடத்தக்க அசைவுகளை உள்ளத்தில் நிலைநிறுத்துகிறார்.

அதிக விழுக்காடு உரையாடல் இன்றி தற்சார்பு நோக்கிலான அகவாழ்வின் அகத்தைக் காட்சிப்படுத்துவனவாக இவரின் வருணனை உத்தி கையாளப்படுகிறது. ஆனால் வரிக்கு வரி சொல்லுக்குச் சொல் இவற்றை உவமையாலே காட்சிப்படுத்துவது வாசிப்போர் உவமையினைப் பிடித்துக்கொண்டு கதையிலிருந்து வழுவிவிடுகின்றனர். இது இவரது கதைகளின் பெருங்குறையாகக் காணமுடிகிறது. பல இடங்களில் இந்த உவமை கதையினை வாசிக்கமுடியாமல் இடர் செய்வதோடு கதையினை உள்ளார்ந்து தொடரமுடியாமல் உவமையில் வழுக்கிவிழுந்து பின்திரும்ப வேண்டியிருக்கிறது. வலிந்து போர்த்தப்பட்ட உவமைகள் அடுத்த தொகுப்பில் நீக்கப்படலாம் என்பதை இவரின் பலமான சிலகதைகளின் வழியாகத் தெளிந்துகொள்ளவேண்டும். என்றாலும் இவரின் சித்திரிப்பு வருணனை பல இடங்களில் அபாரமான வடிவத்தையும் அழகியலையும் வாழ்வின் எதார்த்தத்தையும் தூக்கிப் பிடித்து கதையின் கனத்தை இறுக்குகிறது.

தொடர்களில் அதிகஅளவு கலவைப் பண்பைப் பயன்படுத்துவது மிகவும் அலுப்பூட்டுகிறது. இவரின் கதைசொல்லும் அடையாளமாக இவருக்கு அமைந்தாலும் மேன்மேலும் எதிர்கால இலக்கை சிறுகதையில் இவர் அடைய இதுவே பெருந்தடையாக நிற்கும் என்பதையும் அவதானிக்கமுடிகிறது.

எல்லாவற்றையும் கடந்து கே.ஜே.அசோக்குமார் மிகவும் நம்பிக்கையூட்டக்கூடிய சிறந்த தளத்தின் படைப்பாளியாக அடையாளப்படுவது மறுக்கமுடியாத ஒன்றாக இருக்கிறது. சில கதைகளில் நம்மை அமிழ்த்துகிறார். நாம் என்றைக்கோ அனுபவித்த வலியினை எடுத்து உணர வைக்கிறார். கதைகளின் தீர்வாக எதையும் தராதது ஆறுதலாக உள்ளது. எனினும் படிப்போரின் மனத்துள் சமூக அவலத்தின் காயத்தை ரத்தமும் சதையுமாகக் காட்சிப்படுத்தும் வன்மையில் இவற்றுக்கு எதிராகப் போராடவேண்டும் என்கிற உந்துதலை ஏற்படுத்துகிறார். இந்த உந்துதலின் வேகத்தை எந்தக் கதையும் குறைவுபடாமல் வேரூன்றி உறுதிப்படுத்துகிறது.

சாமத்தில் முனகும் கதவு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை வளர்ச்சியின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக தன்னை ஊன்றிக்கொள்வதை உணரலாம். இன்னும் அடுத்தடுத்து அசோக்குமாரின் சிறுகதைப் பயணம் பல அதிர்வுகளைத் தமிழ்ப் படைப்புலகில் நிகழ்த்தும் என்பதற்குக் கருதுகோளாக இத்தொகுப்பைப் பிரகடனப்படுத்தலாம். வாழ்த்துகள் கே.ஜே.அசோக்குமார்.

அன்புடன்
ஹரணி
13.11.2016 இரவு 7.55
மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் நிறைந்த தருணத்திலிருந்து.

No comments: