Friday, June 10, 2016

அணிந்துரை: கே.ஜே. அசோக்குமாரின் கதையுலகம் -- பாவண்ணன்தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் கணிப்பொறியில் நேரிடையாக தமிழில் எழுதும் முறை பரவலாக அறிமுகமானபோது, அப்போது எழுதிக்கொண்டிருந்த ஒருசிலர் உடனடியாக அந்தப் புதுமுறையைப் பயின்று தேர்ச்சி பெற்றுவிட்டார்கள். தினந்தோறும் கணிப்பொறியைக் கையாளக்கூடியவனாக இருந்தும்கூட, என்னால் அப்படி உடனடியாக  மாறமுடியவில்லை. ஒரு படைப்பை முழுமையாக கையெழுத்துப் பிரதியாக எழுதி வைத்துக்கொண்டு, அதற்குப் பிறகு ஓய்வாக அதைப் பார்த்து கணிப்பொறியில் எழுதும் வழிமுறைதான் எனக்கு வசதியாக இருந்தது. கணிப்பொறி என்பதை கிட்டத்தட்ட ஒரு தட்டச்சுப்பொறியாகவே நான் பயன்படுத்தி வந்தேன்.

பல ஆண்டுகளாக தொடர்ந்த அந்தப் பழக்கத்தை என்னால் கைவிடவே முடியவில்லை. இரண்டாயிரத்துக்குப் பிறகுதான் நேரடியாக எழுதத் தொடங்கி மெல்ல மெல்ல அந்தப் பயிற்சியில் தேர்ச்சியடைந்தேன். இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுதத் தொடங்கிய புதிய எழுத்தாளர்களுக்கு இந்தச் சிக்கலே இல்லை. முதல் படைப்பு  தொடங்கி அனைத்தையும் அவர்கள் கணிப்பொறியிலேயே உருவாக்கும் ஆற்றல் உள்ளவர்களாக வளர்ந்தார்கள். அவர்கள் அனைவருமே அச்சிதழ்கள் சார்ந்து இயங்குகிறவர்கள் அல்ல. பெரும்பாலானோர் இணைய இதழ்களையே தம் எழுதுகளமாகக் கொண்டவர்கள். கடந்த பத்தாண்டுகளில் இணையத்தில் வெளியிடப்பட்டு, இணையத்திலேயே வாசிக்கப்படும் இதழ்கள் பல உருவாகின. இவ்விதமாக ஒரு புதிய எழுத்தாளர் தலைமுறையின் வருகை தமிழிலக்கியக்களத்துக்குள் நிகழ்ந்தது. இந்தத் தலைமுறையின் நம்பிக்கை அளிக்கக்கூடிய எழுத்தாளர்களில் ஒருவர் கே.ஜே.அசோக்குமார்.
கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக அவர் தொடர்ச்சியாக சிறுகதைகள் எழுதி வருகிறார். தனக்கென ஒரு வலைப்பூவைத் தொடங்கி (www.kjashokkumar.blogspot.in), -புனைவு வகை எழுத்துகளையும் எழுதி வருகிறார். இணையத்திலேயே அவருடைய பல சிறுகதைகளை நான் படித்திருக்கிறேன். இது அவருடைய முதல் சிறுகதைத்தொகுதி. மொத்தம் பதினெட்டு சிறுகதைகள். ஏற்கனவே படித்தவையோடு மேலும் சில புதிய சிறுகதைகளும் உள்ளன. இந்த முன்னுரையை எழுதுவதற்காக இவை அனைத்தையும் ஒருசேர இன்னொருமுறை படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
கே.ஜே.அசோக்குமாரின் படைப்புகளைப் படிக்கும்போது, அவருடைய மனம் இயங்க விரும்பும் முக்கியமான தளத்தை என்னால் உடனடியாகக் கணித்துச் சொல்லமுடியவில்லை. முற்றிலும் எதார்த்ததளத்தைச் சார்ந்த சிறுகதைகளும் உள்ளன. ஃபேண்டசி வகையான சிறுகதைகளும் உள்ளன. சோதனைமுயற்சிகளாக அமைந்த சிறுகதைகளும் உள்ளன. தளவேறுபாடுகளைக் கடந்து, அசோக்குமாருடைய சிறுகதைகள் வாழ்வின் வேதனையை முன்வைப்பவையாக அமைந்திருப்பதை என்னால் உணரமுடிகிறது. நல்லதொரு பாடல்வரியை வெவ்வேறு விதமான ராக அமைப்பில் இசைப்பதுபோல வேதனையின் சித்திரங்களை வெவ்வேறு கோணங்களில் நம் பார்வையில் விழும்படி வைத்திருக்கிறார் அசோக்குமார். அனைத்துவகையான சிறுகதைகளிலும் அவருடைய கதைமொழி வலிமையுடன் இருக்கிறது என்றே சொல்லவேண்டும். ஒரு சித்தரிப்புக்கு எந்த அளவுக்குத் தேவையோ, அந்த அளவுக்கு மட்டுமே மொழியை கச்சிதமாகப் பயன்படுத்தும் புரிதல் அசோக்குமாரிடம் இயல்பாகவே படிந்திருக்கிறது.
அப்ரஞ்சி இத்தொகுதியின் மிகச்சிறந்த சிறுகதை. அசோகமித்திரன் சிறுகதைகளில் காணக்கூடிய கச்சிதத்தையும் மெளனத்தையும் இந்தச் சிறுகதையில் இருப்பதை உணரமுடிகிறது. மிக இயல்பான முறையில் இவற்றை கே.ஜே.அசோக்குமார் சாத்தியமாக்கியிருக்கிறார். இந்தச் சிறுகதை தொண்ணூறு வயதைக் கடந்த ஒரு பாட்டியைப்பற்றிய சித்திரம். நாலு வீடுகளுக்கு தண்ணீர் கொண்டுவந்து கொடுப்பது, வீடுகளில் வாசல் தெளித்து கோலம் போடுவது, விசேஷ நாட்களில் வேலைகளுக்கு ஒத்தாசை செய்ய தன்னை அழைப்பவர்கள் வீட்டில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக்கொண்டு ஓய்வில்லாமல் உழைப்பது என தன் வாழ்க்கையை நடத்திக்கொண்டு வருகிறவள் அவள்.  மொட்டவீட்டு நாகமணிக்கும் கீழத்தெரு காவேரியம்மாளுக்கும் பத்து பத்து பிரசவங்களைப் பார்த்த அனுபவம் அவளுக்கு இருக்கிறது. மருத்துவமனைப் பிள்ளைப்பேறு அறிமுகமாகி நிலைபெறும் காலம்வரைக்கும் அந்தத் தெருவில் நிகழ்ந்த பிரசவங்கள் அனைத்தையும் பொறுப்போடு பார்த்துக்கொண்டவள் அவள்.
அவளுடைய திருத்தமான வேலைகளைப் பார்த்துவிட்டு, தெருவிலிருந்த ஒவ்வொருவரும் தத்தம் வீடுகளில் சிற்சில காலம் வைத்திருக்கிறார்கள். எல்லோரும் அவளிடம் உரிமையோடு வேலை கொடுக்கிறார்கள். எல்லோருக்கும் அவள்மீது ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது. மூன்று தலைமுறைகள் தாண்டியும் அந்தத் தெரு மனிதர்கள் அவள்மீது பாசத்துடன் இருக்கிறார்கள்.
கதை நிகழும் அன்று அவளுக்கு இரண்டு முக்கியமான வேலைகள் இருந்தன. ஒன்று, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துபோன சிறுமியின் நினைவாக கூழ் ஊற்றும் சடங்கு. இன்னொன்று, மொனப்பொங்கல் வைக்கும் சடங்கு. இரண்டையும் இரு வேறு வீட்டினருக்காக செய்வதாக ஒப்புக்கொண்டிருக்கிறாள். வேலையை ஆரம்பிக்கும் முன்பாக அதிகாலையிலேயே எழுந்து அரசலாற்றில் குளித்துவிட்டு, செய்யவேண்டிய வேலைகளை அசைபோட்டபடி திரும்பிக்கொண்டிருக்கிறாள். சில அடிகள் நடப்பதற்குள் தலைசுற்றல் வந்து, அந்த இடத்திலேயே விழுந்து இறந்துவிடுகிறாள். வெளிச்சம் பரவப்பரவ, அவள் இறந்துகிடப்பதை அனைவரும் பார்க்கிறார்கள். பார்த்துவிட்டு ஏதோ ஒரு அச்சத்தில் ஒதுங்கி ஓரமாக கடந்துபோகிறார்கள். அந்த வழியாகச் செல்லும் பால்வண்டிக்காரன் பார்க்கிறான். டீக்கடைக்குச் செல்பவர்கள் பார்க்கிறார்கள். யாரும் நெருங்கிவந்துகூட பார்க்கவில்லை. பாட்டி மரணமடைந்த தகவல் பாட்டி தங்கியிருந்த வீட்டுக்கும் சடங்குக்காரியங்களை அவளிடம் ஒப்படைத்திருந்த வீட்டினருக்கும் தெரியப்படுத்தப்படுகிறது. ஆனால் அவர்களும் அவளை நெருங்கிந்து பார்க்கவோ, தொட்டுத் தூக்கவோ, குறைந்தபட்சம் உயிர் இருக்கிறதா போய்விட்டதா என்று பார்க்கவோகூட மனமற்றவர்களாக தள்ளிநின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.  யாரோ நகராட்சி அலுவலகத்துக்கு தொலைபேசியில் தகவல் சொல்ல, அவர்கள் வண்டியெடுத்து வந்து அனாதைப்பிணமாக அப்புறப்படுத்தி எடுத்துச் செல்கிறார்கள். முதல்நாள் இரவுவரைக்கும் அந்தத் தெருவினரின் பிரியத்துக்கு உரியவளாக இருந்த பாட்டி அதிகாலையில் உயிரிழந்ததும் தேவைப்படாதவளாக மாறிவிட்டாள். அவர்கள் பார்வையில் தங்கம் திடீரென கரியாக மாறிவிடுகிறது.
ஒரு பாட்டியின் வாழ்க்கைச்சித்திரமாக மட்டும் கதை முடியவில்லை. நம் வாழ்க்கைப்பார்வையைப்பற்றிய முக்கியமானதொரு கேள்வியையும் அது முன்வைக்கிறது. உயிருடன் இருக்கும்போது தன் குடும்பத்தில் ஒருவராக நினைத்துக்கொள்கிறவர்கள், உயிரற்றுப் போனதும் தன் குடும்பத்துக்கும் அவளுக்கும் எந்தவிதமான உறவுமில்லை என ஒதுங்கி நிற்பதற்கு என்ன காரணம்? உண்மையில் மரணம் நிகழ்ந்த கணத்தில்தானே, அவர்கள் அவளைத் தன் குடும்பத்தவளாக நினைத்து இறுதிக்கடன் செலுத்தியிருக்கவேண்டும். அப்படி நிகழாமல் போனதற்கான காரணம் என்ன? அன்பு என நாம் நம்பிக்கொண்டிருக்கும் ஒன்று உண்மையில் அன்பே அல்ல. அது தன்னலம் சார்ந்த ஓர் உணர்வு மட்டுமே. பாட்டியின் மரணத்தை முன்வைத்து நமக்குள் மாறுவேடத்தில் உறைந்திருக்கும் தன்னலத்தை அம்பலப்படுத்துகிறது சிறுகதை. இக்கணத்தில் எனக்கு உடனடியாக நினைவுக்கு வரும் மற்றொரு சிறுகதை புதுமைப்பித்தனின் மகாமசானம். அக்கதையில் ஒரு நகரத்தையே மகாமசானம் என எள்ளி நகையாடுகிறார் புதுமைப்பித்தன். தன் சிறுகதையில் தங்கமென மினுமினுக்கும் மக்களுடைய பார்வையில் பொதிந்திருக்கும் கரியை அம்பலப்படுத்தி நகையாடுகிறார் கே.ஜே.அசோக்குமார்.
அப்ரஞ்சி பாட்டியைப் போலவே மற்றுமொரு உதிரிப்பாத்திரத்தின் கதை பஸ்ஸ்டான்ட். தனது பெயரையே மறந்துவிட்ட சிறுவன் அவன்.  பஸ்ஸ்டான்டில் கண்டெடுத்ததால் அவனை வேலைக்கு வைத்திருக்கும் ஓட்டல்காரர்கள் வைத்த பெயர் பஸ்ஸ்டான்ட். சாப்பாட்டுக்கும் தங்குமிடத்துக்கும் பிரச்சினையில்லை என்பதால், அதுபோன்ற வாழ்க்கைக்கு பழக்கப்பட்டுவிடுகிறான் பஸ்ஸ்டான்ட். அவனைப்போலவே பல சிறுவர்கள் இருக்கிறார்கள். வாரம் முழுதும் ஓட்டலில் வேலை. விடுமுறை தினத்தில் ஊர்சுற்றி திரைப்படம் பார்த்து மனம்போன போக்கில் அலைந்து திரிகிறார்கள். வேலை செய்யும் இடத்தில் ஏதேனும் மோதல் உருவானாலோ அல்லது பிடிக்காமல் போனாலோ, சுதந்திரமாக  இன்னொரு ஓட்டலுக்குச் சென்று சேர்ந்துவிடுகிறார்கள். ஓட்டல் மாறுவதை ஒரு சாகசச்செயலாக நினைத்துக்கொண்டு கூட்டாளியுடன் வேறொரு ஓட்டலில் வேலைக்குச் சேர்ந்துகொள்கிறான் பஸ்ஸ்டான்ட். அங்கேயும் நிலைத்திருக்கவில்லை. மற்றுமொரு சாகசமாக நினைத்து அடுத்தவர்களின் சம்பளப்பணத்தைத் திருடிக்கொண்டு ஓடுகிறார்கள். ஆனால் அவர்கள் உடனடியாக நகரத்தை விட்டு வெளியேறமுடியாதபடி ஏதோ கடையடைப்பின் காரணமாக அன்று நகரத்தில் பேருந்துகளே இயங்கவில்லை. ஒருவன் தப்பிவிட, பஸ்ஸ்டான்ட் மட்டும் அகப்பட்டுக்கொள்கிறான். பிடித்துச் சென்றவர்கள் அவனை அடித்து நொறுக்கிவிடுகிறார்கள். வலி தாளாமல் பணத்தை ஒளித்துவைத்திருக்கும் இடத்தைச் சொல்லிவிடுகிறான் அவன். பணம் கிடைத்ததும் அவனை அடித்து வெளியேற்றிவிடுகிறார்கள். பழையபடி கிடைத்ததை உண்டு, பஸ்ஸ்டான்டில் உறங்கி நாட்களைக் கழிக்கிறான். அந்த ஊரைவிட்டே வெளியேறிவிட நினைக்கிறான். இறுதிக்கணத்தில் மனம் மாறி இதற்கு முன்னால் வேலை செய்த கடைக்குச் சென்று முதலாளியின் காலில் விழுகிறான். முதலில் வசைபாடி விரட்டினாலும் கடைசியில் மனமிரங்கி அவனுக்குச் சோறுபோட்டு வேலைக்கு வைத்துக்கொள்கிறார் முதலாளி.
இரக்கத்துக்குரிய சிறுவனாக அவன் எங்குமே சித்தரிக்கப்படவில்லை என்பதிலும் சுரண்டுவதையே நோக்கமாகக் கொண்ட கொடியவர்களாக ஓட்டல் முதலாளிகள் சித்தரிக்கப்படவில்லை என்பதிலும் அசோக்குமாரின் ஆளுமை உயர்ந்து வெளிப்படுகிறது.  இந்தச் சிறுகதையின் வெற்றிக்கு இதுவே காரணம். திட்டமிட்டு திருடுகிறவனாக அவன் எங்குமே செயல்படவில்லை என்றாலும் திட்டமிடாமல் தற்செயலாக தேவைப்படும்போது திருடிக்கொண்டு செல்வதில் எவ்விதமான மனத்தயக்கமும் அவனிடம் இல்லை. மற்றவர்களின் சம்பளப்பணத்தைத் திருடிக்கொண்டு ஓடிய தருணத்தில் அவன் தற்செயலாகத்தான் அகப்பட்டுக்கொள்கிறான். வீட்டைவிட்டு ஓடிப்போய் உதிரியாய் அலைகிறவர்கள் ஏதோ ஒரு கட்டத்தில் தன்னைப்போல இன்னொரு உதிரியைக் கண்டடைந்து இணைந்துவிடுகிறார்கள். அப்படி இணைந்து உருவான ஒரு கூட்டத்தின் மனநிலையை அசோக்குமாரின் சிறுகதை மிகவும் இயற்கையாகச் சித்தரித்திருக்கிறது. எவ்விதத் தர்க்கங்களுக்கும் உட்படாத அவர்களுடைய வாழ்வின் சில பக்கங்களை அவர் இச்சிறுகதையில் முன்வைத்திருக்கிறார். இரக்கத்துக்குரியவனிடம் வெளிப்படும் சுரண்டல் மனநிலையும் சுரண்டல் முதலாளியிடம் வெளிப்படும் கணநேர இரக்கமும் வெளிப்படும் அபூர்வ கணங்களை தொட்டுக் காட்டியிருக்கும் அசோக்குமாரின் முயற்சி பாராட்டுக்குரியது.
வெளவால்கள் உலவும் வீடு சிறுகதையும் மனிதமனத்தில் ஒளிந்திருக்கும் தன்னல உணர்வை வெளிப்படுத்தும் தன்மையை உடையது. பெரிய அண்ணனைப் பார்க்க வரும் சின்னத்தம்பியின் வருகையோடு தொடங்குகிறது கதை. சின்னத்தம்பி அவனைத் தன் தந்தைக்கு நிகராகக் கருதுகிறான், ஆனால் அவன் நினைத்தபடி பெரிய அண்ணன் வாழவில்லை. வீட்டின் ஒரு பகுதியிலிருந்து கிடைக்கும் வாடகைப்பணம்தான் அவன் வாழ்வுக்கு ஆதாரம். அதையும் அவன் குடித்து அழிக்கிறான். பராமரிக்கப்படாத அவனுடைய பரம்பரை வீட்டைப் போலவே அவனும் கவனிப்பாரில்லாத ஆளாக அலைகிறான். அடுத்தடுத்த தெருக்களிலேயே சகோதர சகோதரிகள் இருந்தாலும், அவர்களால் அவனுக்கு எவ்விதமான பயனும் இல்லை. தம்பியைப் பார்த்துவிட்ட மனநிறைவோடு அவன் உயிர் பிரிந்துவிடுகிறது. தம்பியே முன்னின்று அவனுக்கு இறுதிக்கடனைச் செலுத்துகிறான். சடங்குகள் முடிவடைந்த பிறகு ஒருநாள் காலையில் வீட்டில் சந்தித்துக்கொள்கிற சகோதரசகோதரிகளுக்கிடையே நிகழ்கிற உரையாடல்கள்தான் கதையின் உச்சம். அவர்களுடைய மனம் வெளிப்படும் இடம் அது. அந்தச் சொத்தைப் பங்கிட்டுக்கொள்ளும் வேகத்தில் அவர்களுடைய ஆழ்மன விழைவு சொற்களாக வெளிப்படுகின்றன. உண்மையில் அச்சொற்களே வெளவால்கள். அவர்களுடைய மனமே அவை உலவும் அசுத்தமான வீடு. அவை இறக்கையை அடித்துக்கொள்வதும் பறப்பதும் கண்ணுக்குத் தெரியாத விதத்தில் அமைந்திருக்கின்றன என்பதாலேயே வெளவால்கள் இல்லாததுபோல நடிப்புடன் நடமாடுகிறார்கள்.
வருகை, வாசலில் நின்ற உருவம், எறும்புடன் ஒரு சனிக்கிழமை போன்ற சிறுகதைகளில் வேறொரு விதமான கூறுமுறையை கே.ஜே.அசோக்குமார் பயன்படுத்தியிருக்கிறார். ஒரு குணத்தை ஒரு பாத்திரமாக உருவகித்து எழுதும் கூறுமுறை. எவ்விதமான குணம் அந்தப் பாத்திரமாக சமைத்துவைக்கப்பட்டிருக்கிறது என்னும் புதிரை அவிழ்ப்பது வாசகன் முன்வைக்கப்பட்டிருக்கும் சவால். அப்புதிரை அவன் அவிழ்த்துவிட்ட பிறகு, கதையின் சுவாரசியம் குன்றிவிடுகிறது. இது ஒரு வகை. இன்னொருவகையான சிறுகதைக்கு எடுத்துக்காட்டு சாமத்தில் முனகும் கதவு. இச்சிறுகதையில் கதவு ஒரு குணத்தின் படிமமாகவே வெளிப்படுகிறது. எனினும் இந்தப் புதிரை அவிழ்த்தபிறகும் கதையின் சுவாரசியம் தக்கவைக்கப்படுகிறது. முதல் வகையிலான படைப்புகள் அப்படைப்புகளில் உள்ள புதிரை மட்டுமே நம்பியுள்ளன. இரண்டாம் வகையிலான படைப்புகள் புதிரை ஒரு சின்ன நுழைவுவாயிலாகக் கொண்டு உள்ளே வேறொரு உலகத்தை தக்கவைத்துள்ள தோப்புகளாக உள்ளன.
கே.ஜே.அசோக்குமார் தனக்கென ஒரு கதைக்களனை வடிவமைத்துக்கொள்வதில் திறமை மிகுந்தவராக இருக்கிறார். மானுடரின் வாழ்க்கைநோக்கை பரிசீலனை செய்யக்கூடிய களனாக அதை உருமாற்றிக்கொள்ளும் திறமையும் அவரிடம் வெளிப்படுகிறது. சமநிலையான பார்வையும் கட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளுடன் கூடிய கூறுமுறையும் கே.ஜே.அசோக்குமாரின் பலங்களாக இத்தொகுப்பில் வெளிப்பட்டிருக்கின்றன. அவருக்கு என் வாழ்த்துகள்.

No comments: