Wednesday, December 7, 2016

சோசோ என்கிற பெயர் எப்படி அவரின் பெயரின் முன்னால் வந்தது என்று நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. சோ என தொடங்கும் ஒரு பெயரின் சுருக்கம் என்று நினைத்துக் கொள்ள அதிக வாய்ப்பிருக்கிறது. சோ எப்படி வந்தது என்று ஒரு பேட்டியில் அவரிடம் கேட்டபோது அந்த ரகசியத்த உங்களிடம் சொல்லுவேன்னு நினைக்கிறீங்களா என்றார். சோ என்கிற பெயர் அவர் நடித்த முதல் நாடகத்தின் (பகீரதன் எழுதிய தேன்மொழியாள் என்ற நாடகம்) ஒரு கதாபாத்திரத்தின் பெயர். அவர் நடித்த அந்த கதாபாத்திரத்தின் பெயரை புனைப்பெயராக தன் முன் இணைத்துக்கொண்டார். சினிமாவிற்கு வந்தபின் சோ மிகப் பிரபல்யமான பெயராக மாறிவிட்டது.


அசட்டுமுகத்துடன் பல்வேறு சேட்டைகளை செய்கிற ஒரு அப்பாவியாக தன்னை அவர் சினிமாவில் காட்டிக்கொண்டாலும் நிஜத்தில் மெத்த படித்தவராக இருந்தார். அவர் எழுதிய நூல்களை பார்த்தாலே அது தெரிந்துவிடும். நாடகாசிரியர், நடிகர், வசனகர்த்தா, பத்திரிக்கையாளர், வழக்கறிஞசர், இயக்குனர் என்று பல்வேறு முகங்கள் அவருக்கு இருந்தாலும், ஒரு பத்திரிக்கையாளராக‌, எழுத்தாளராக அதிகம் பரிமளித்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

முதலில் பத்திரிக்கை ஆரம்பித்தபோது வேடிக்கையாகதான் எல்லோராலும் கருதப்பட்டது. பத்திரிக்கையேகூட ஒருவகை கிண்டல் தொணியில் தான் வெளியானது. அதன் அட்டைப்படம் முதல் கேள்வி பதில்கள் வரை எல்லாமே அரசியலை கிண்டல் அடிப்பதுதான். மிக தீவிரமாக மோதவரும் எதிர் கருத்தாளர்களை தன் கிண்டல்களால் அந்த விவாதத்தை தன்பக்கம் இழுத்துவிடும் தன்மைதான் அவருக்கு அதிகம் இருந்தது.

உதாரணமாக பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதிக்கீடு வேண்டும் என ஒருசமயம் விவாதம் வந்தபோது, அதை எதிர்க்கும்முகமாக சோ அதற்கு திருநங்கைகளுக்கும் இடஒதிக்கீடு வேண்டும் என பேசஆரம்பித்தார். எல்லா எதிர்ப்பாளர்களுக்கும் அந்த விவாதம் திசை திரும்பி போனதே தெரியவில்லை.

இவ்வளவு விமர்சித்தபின்னும் எந்த அரசியல் தலைவரும் அவருடன் விரோதித்துக் கொண்டதில்லை. கடுமையாக கருணாநிதியை விமர்சித்த சோ, 96ல் அவரை ஆட்சிக்கு கொண்டுவர அவர்தான் முன்நின்றார். கடுமையாக விமர்சிக்கும் ஒருவருக்கு எதிரிகளே இல்லை என்பது எவ்வளவு ஆச்சரியமான விஷயம். அதற்கு சோவின் ஹாஸ்ய உணர்வும், தன்னலமற்ற வாழ்க்கையே காரணமாக இருக்கும்.

ஊடகத்துறையில் திராவிட அரசியலில் ஒரு முக்கிய எதிர்சாரியாக இருந்தவர் சோ. ஈவேரா பெரியார் தொடங்கி ஜெயலலிதாவரை அனைவரையும் கடுமையாக ஆழமாக விமர்சித்திருக்கிறார்.
 
விமர்சன பார்வையோடு தர்க்கரீதியான சிந்தனைகளை தொகுத்துக்கொள்ள உதவியிருக்கிறார். திராவிட அரசியல் மேலோங்கி இருந்த சமயத்தில் எதிர்வரிசை குரலை தீர்க்கமாக, கிண்டலாக, தவிர்க்கமுடியாதபடி அமைத்திருக்கிறார். அதுவே அவரது சாதனையாக இருக்கும். திராவிட அரசியலின் தர்க்கங்களுக்கு எதிர் தர்க்கம் சோவின் எழுத்துக்கள் என்றால் மிகையில்லை.

பல்வேறு சமயங்களில் அரசியல் காய்களை நகர்த்தியிருக்கிறார். நாரதர், விசிஷ்டர் என்ற பெயர்கள் அவருக்கு உண்டு. ஆனால் என்றும் எந்த அரசியல் லாபத்தை அடைந்ததாக இதுவரை அறியப்படவில்லை. தன் எல்லையை எப்போது அறிந்திருந்தார். சுயலாபமற்ற அவரின் செயல்கள் முடிந்ததும் அதிலிருந்து விலகியே இருந்திருக்கிறார்.

அவர் ஹாஸ்யமாக எழுதிய எழுத்துகளுக்கு மக்கள் மத்தியில் பெரிய முக்கியத்துவம் இருக்கும் என்பது அவரின் தன்னலமற்ற செயல்பாடுகள்தான் காரணமாக இருக்கும். ஒரு சாமியாரை/ஞானியை மக்கள் நெருங்குவதற்கு என்ன காரணம் இருக்குமோ, சோ எழுத்துக்களை, கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு, மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு காரணமாக இருக்கும்.

No comments: