Wednesday, September 30, 2015

மொழி என்னும் ஊடகம்

ஊருக்கு சென்றிருந்த போது இரு நண்பர்களை சந்தித்தேன். அவர்கள் உயர்கல்வி பயின்று அரசுதுறையில் நல்ல வேலையில் இருப்பவர்கள். ஒரு சயின்டிஸ்ட் மற்றவர் டாக்டர். பேச்சினுடே மஹாராஷ்டிராவில் ஆரம்ப பாடசாலைப் பள்ளிகள் மொத்தம் 3 மணிநேரம் தான் இயங்கும் என்று கேட்டதும் ஆச்சரியப்பட்டார்கள். மிச்ச நேரம் குழந்தைகள் என்ன செய்வார்கள் என்றார்கள். மிச்ச நேரம் நிறைய இருப்பதால் இங்குள்ள குழந்தைகள் கராத்தே, புட்பால், இசை போன்ற எக்ஸ்ரா கரிகுலர் படிப்புகளுக்கு செல்கிறார்கள் என்றேன். அதுதாங்க சரி, அதிகமான நேரம் பள்ளிகூடம் இருக்க கூடாது எனவும் அவர்களுக்கு நிறைய விளையாட்டுகள் இருக்க வேண்டும் என்றும் தங்கள் விருப்பத்தை தெரிவித்தார்கள்.
இங்கு கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், அவர்கள் இருவரும் மாநில அளவில் சிறந்த மதிப்பெண்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் எடுத்தவர்கள். வேலை படிப்பு என்று தீவிரமான மனநிலை கொண்டவர்கள். பள்ளிப்படிப்பை தாண்டி வேறு எந்த விஷயங்களிலும் கவனத்தை சிதறடிக்காதவர்கள்.

Monday, September 28, 2015

ரத்தம் ஒரே நிறம் ‑ சுஜாதா

எல்லோருக்கும் ரத்தம் ஒரே நிறமாகத்தான் இருக்கிறது. அதில் இருக்கும் வித்தியாசம் வேறுபாடுகூட நம் கண்களுக்கு தெரிவதில்லை. போரில் இறப்பவனின் ரத்தமும், விபத்தில் இறப்பவனின் ரத்தமும் ஒன்றாகதான் இருக்கிறது. வீரமரணத்திற்கும் சாதாரண மரண‌த்திற்கு நம் அளவீடுகளைத் தவிர அதிக வேறுபாடு இல்லை. வரலாறு எல்லாவற்றையும் வேறுவேறு கோணத்தில் பார்க்கிறது. தோற்றவன் தன்வரலாறை வீரவரலாறு என்கிறான், வென்றவன் தன்வரலாறை வெற்றி வரலாறு என்கிறான். ஒரே வாழ்க்கையை முன்னும் பின்னுமாக்கி ஆலையில் இட்டு கசக்கி சாறு ஆக்கிவடித்து உண்டு ஜீரணித்துக் கொள்கிறோம்.
ஆண்ட ஆங்கிலேயனுக்கு ஒரு வரலாறு என்றால் அடிமையான நமக்கு ஒரு வரலாறு இருக்கிறது. இந்தியனுக்கு இருக்கும் வரலாற்றை ஆங்கிலேயனுக்கு புரியபோவதில்லை. அதன் வலிகள் அவர்களுக்கு ஒரு பெரிய விஷயமாக இருக்கப்போவதில்லை. ஆனால் நம் தோல்விகள்கூட நம‌க்குள் ஒற்றுமையை கற்று தந்திருக்கிறது என சொல்லலாம். ஒற்றுமைக்கு உயர்சாதி, இடைச்சாதி, கீழ்ச்சாதி என்கிற நிலைகள் மாறவேண்டி இருந்தது. இந்த சாதி பாகுபாடுகள் மாறியபின்னே அல்லது கொஞ்சம் சமநிலை அடைந்த‌பின்னே சுதந்திரபோராட்டமே ஆரம்பமானது. அதுவரை ஆங்கிலேயன் இருக்கட்டும் அவன் கொள்ளைகளில் நமக்கு பங்குகிடைக்கட்டும் என்றே இருந்தார்கள்.

Friday, September 25, 2015

டிஎம்எஸ்ஸும் சிம்ம‌குரலும்

தொலைக்காட்சியில் சிறுவர்களுக்கான‌ பாடல் போட்டி நிகழ்ச்சி ஒன்று நடந்துக் கொண்டிருந்தது. குழுவாக பெரும் கும்பலாக அமர்ந்து உறவினர்கள் அதை கவனித்துக் கொண்டிருந்தவர்கள் மிகத் தீவிரமாக அந்த பாடல்களில் லயத்து அவர்களுடனேயே பாடிக் கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சியில் சிறுவர்களிடம் பிடித்த பாடல்கள், பாடகர்களைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, இங்கேயும் தங்களுக்குள் பிடித்த பாடகர்/பாடகியர் யார் என்கிற கேள்வி எழுந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள், அதற்கான காரணங்களையும் அடுக்கி சிலாக்கித்தார்கள்.
நான் கல்லூரியில் படித்தப்போது யேசுதாஸின், பிபி சினிவாசின் ரசிகனாக இருந்தேன். எஸ்பிபியின் ஆரம்பக் கால பாடல்களுக்கு பெரும் ரசிகனாக இருந்தேன். அதற்கான காரணம் எளிதுதான், அந்த பாடகர்கள் மென்மையாக பாடினார்கள். அதிக ஆண்தன்மை இன்றி இருப்பதால் மீண்டும் நாம் பாட எதுவாக குரலில் ஒரு மென்மை இருப்பதை காணமுடியும்.

Wednesday, September 23, 2015

நகைச்சுவை

நகைச்சுவை எல்லோருக்கும் கைவந்துவிடுவதில்லை. நகைச்சுவையை செய்பவரும் அதை கவனிப்பவருக்கும் இடையே ஒரு மொழி இருக்கிறது. அந்த மொழியை புரிந்தவர்களுக்கு மட்டுமே இடையே இருக்கும் புரிதலை புரிந்துக் கொள்ளமுடியும் என நினைக்கிறேன். மேடையில் செய்யப்படும் நகைச்சுவைகளைப் பற்றி சொல்லவில்லை. ஒரு பார்வையாளர்களை வைத்துக்கொண்டு இன்ன மாதிரி நகைச்சுவைகள், இது காலத்தில் இருக்கும் நகைச்சுவைகள் என்று சொல்லபடுவதை நம்முடைய சொந்த கவலைகளை மறைக்க நாம் கொள்ளும் ஒரு உத்தி என்று தான் சொல்லவேண்டும்.
நான் சொல்லவருவது நகைச்சுவை தங்கள் தினப்படி செயல்களில் ஒன்றாக செய்பவர்களைப் பற்றியது. நகைச்சுவை உணர்வுள்ளவர்கள் அதை செய்கிறேன் என்கிற ப்ரஞ்சை அற்றவர்களாக இருப்பார்கள். இயல்பாக தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக அது இருக்கும். வாழ்க்கையில் அதிகம் அடிப்பட்டவர்கள், துன்பங்களை அதிகம் சந்தித்தவர்களுக்கு சின்ன நகைச்சுவைகூட பெரியதாக இருப்பதை கவனிக்கலாம். ஒவ்வொரு நிமிடத்தையும் நகைச்சுவையால் நிரப்ப விருப்புபவர்களாக இருப்பார்கள். தங்களை தாழ்த்திக் கொண்டும் நகைச்சுவையை வெளிப்படுத்துவதை ஒரு உத்தியாகதான் செய்கிறார்கள். ஆனால் நகைச்சுவையை வெளிப்படுத்துபவர்கள், ஜோக்கடிப்பவர்கள் இவர்களெல்லாம் சற்று அசடு என்னும்படியான தோற்றத்தைக் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் சட்டென ஒரு நகைச்சுவையால அனைவரையும் சிரிக்க வைத்துவிடுவார்கள்.

Tuesday, September 22, 2015

போலீஸ் வேலை

சின்ன குழந்தைகளுக்கு பெரியவனாக/ளாக எப்போது ஆகப்போகிறேன் என்கிற எண்ணம் எப்போதும் இருக்கும். நான் எப்போது பெரியவனாக ஆவேன் என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அது ஒரு முதிராத வார்த்தைதான். நமக்கு தெரியும் வளரும் போது வளர்ந்தே தீருவார்கள் என்று. நீ பெரியவனானதும் என்ன ஆவ போற என்று கேட்கப்படுகிற கேள்விக்கு ஒரு குழுவின் இரண்டு குழந்தையாவது போலீஸ் ஆகப்போறேன் என்பதாக இருக்கும்.

போலீஸ் ஆவது மிகப்பெரிய வேலைதான். சமூகத்தில் அதற்கு முக்கிய அந்தஸ்து ஒன்று இருக்கதான் செய்கிறது. நேர்மையான போலீஸ் என்கிற சித்திரம் எல்லோரையும் உதாரண புருஷர்களாக தங்களை ஆக்கிக்கொள்ளும் ஒரு பெரிய வடிவம்தான். ஆனால் நிஜத்தில் அப்படி போலீஸ் ஆவதும், நேர்மையாக போலீஸ் அதிகாரி என்று பெயர் பெறுவதும், போலீஸாக மற்றவர்களோடு உறவாடுவதும்கூட எளிதான காரியம் அல்ல. எங்கோ நடந்த பல்வேறு சம்பவங்கள் நம்மை போலீஸிலிருந்து அன்னியப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு விஷ்ணுபிரியா என்கிற போலீஸ் அதிகாரி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் வரைக்கு அதற்கு உதாரணம் காட்டமுடியும்.

Sunday, September 20, 2015

நாய்கள்

சிறுவர்களுக்கு பொதுவாக நாய்களை பிடிக்காது, நாய்களுக்கு சிறுவர்களை அதிகம் பிடிக்கும் என்பதை கவனித்திருக்கிறேன்., எளிதாக அவர்களிடமிருந்து தங்களுக்கு தேவையான உணவுகளைப் பிடுங்கிவிடமுடியும் என்பது ஒரு காரணம். தனியாக சிறுவர்கள் எதையாவது கடையிலிருந்து வாங்கிவரும் போது அவர்களை வழியில் மடக்கி முகர்ந்து பார்க்க பயந்து போட்டுவிட்டு ஓடிவிடுவார்கள், அதனால் நாய்களுக்கு எளிதாக தின்ன எதுவும் கிடைத்துவிடுகின்றன. பெரிய நபர்களைவிட சின்ன சிறுவர்களை எளிதாக விரட்ட முடியும் நாய்களால்.
 
நான் சிறுவனாக இருந்தபோது என் மாமாவீட்டிற்கு தனியாக செல்ல அங்கு இருந்த அவர்கள் வீட்டு நாய் அன்னியன் என என் மேலே பாய்ந்துவிட்டது. கடிக்க வில்லை, அதுவே நாய்கள் மீது எனக்கு சிறுவயதுமுதல் வெறுப்புவர காரணமாக இருந்துவிட்டது. நாய்களை வைத்திருக்கும் மனிதர்களை, அவர்கள் வெளியே அவைகளை நடத்திச் செல்வதை பலசமயம் கண்டு வெறுப்புடன் நண்பர்களாக அவர்களுடன் பேசாமல் சென்றிருக்கிறேன்.

Wednesday, September 16, 2015

வாகனம்

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நண்பர் இன்றைய தேதியில் பைக் வைத்திருப்பது ஒரு கெளரவமான விஷயமாக கொள்ளப்படுவதில்லை என்றார். அப்போது உண்மையில்லை என்று தோன்றியது. சில வருடங்களிலேயே பல்வேறு மாடல்கள் வந்து பைக் என்பது சாதாரண ஒரு நுகர்வுப் பொருளாக மாறி எல்லோர் கையில் இருந்தது. ஒரு புதுமாப்பிள்ளைக்கு பைக் வாங்கும் வரதட்சனை பந்தாக்கள் பெரிய கவனிப்புகளுக்கு இல்லாமல் போய்விட்டது. நான் சிறுவனாக இருந்தபோது என் வீட்டிற்கு கொஞ்சம் தள்ளி இருந்த ஒரு மாமாவிடம் ஒரு டிவிஎஸ் வண்டி இருந்தது.
அதை அவர் தினம் காலையில் துடைப்பதும், அந்த வழிய எடுத்துச் செல்ல குளத்திலிருந்து கலிமண்ணை எடுத்துவந்து கொட்டி கெட்டி படுத்தியிருந்தார். மழைகாலத்தில் சாதாரண மணலை போட்டால் கரைந்து ஓடிவிடும் என்பது அவரது எண்ணம். அந்த நேரம் அந்த தெருவில் இருந்தவர்களிடம் சைக்கிள் தான் இருந்தது. என் அப்பா ஒரு சைக்கிள் வைத்திருந்தார். அதை ஓட்டவே அவருக்கு சிரமாக இருந்தது. ஆனால் புல்லட், லம்படார் போன்ற கனமான வண்டிகளை வைத்திருந்தவர்கள் பரம்பரை வண்டி ஓட்டிகளாகவோ அல்லது பெரிய பலசாலியாக அல்லது வைத்திருக்கும் பணத்தை பந்தாவிற்கே செலவழிக்கும் ஒரு வகையினர் மட்டுமே வைத்திருந்தனர்.

Friday, September 11, 2015

கீழ்வெண்மணி குருதிப்புனல் ‑ இந்திரா பார்த்தசாரதி

 கீழ்வெண்மணியில் நடந்த படுகொலை என்பது நவீன உலகத்தில் தமிழகத்தின் முக்கியமான திருப்பமாகவும், திராவிட கட்சிகளின் அரசியல் நிலைப்பாட்டை வெட்டவெளிச்சமாக எடுத்துக்காட்ட இது உதவியதுமாகவும் நினைத்தால் அது மிகையில்லை. டிசம்பர் 25, 1968ல் நடந்தது இந்த படுகொலைகள் நடந்தன‌. கீழவெண்மனியில் அப்படி என்ன நடந்துவிட்டது. கம்யூனிசம் வளர்வதையும் தலித்துகள் எதிர்குரல் உயர்த்துவதையும் விரும்பாத பண்ணையார்கள் தங்களின் அதிகார பலத்தையும் பணபலத்தையும் காட்ட, எதிர்ப்பவர்களையும் கேள்வி கேட்பவர்களையும் பயமுறுத்த செய்ய‌ப்பட்ட ஒரு ஒத்திகைதான் இந்த படுகொலைகள் என்று சொல்லலாம். அதில் 44 பேர்கள் இறந்தார்கள். நாற்பத்தி நான்கு பேரில் 39 பேர்கள் குழந்தைகளும் பெண்களும்தான், ஐந்து ஆண்களை கொல்ல 39 எளியவர்களை கொன்ற கோழைகள் என்று பண்ணையார்களை சொல்லலாம். சாதிச் சண்டை என்று முதல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட இந்த படுகொலைகள், 5 ஆண்டுகள் கழித்து வெளியான நீதிமன்ற தீர்ப்பில் 'அதிக நிலங்களை சொத்துக்களை வைத்திருக்கும் பண்ணையார்கள் இப்படிபட்ட செயலை செய்ய மாட்டார்கள், அவர்கள் குற்றவாளிகள் அல்ல' என்று தீர்ப்பளிக்கப்பட்டது.


Thursday, September 10, 2015

சகோதர சண்டைகள்

நாற்பது வயதிற்குமேல் சகோதர சகோதரிக‌ளின் உறவுகளுக்குள் பெரிய சிக்கல்கள் எழுவதை பார்க்கலாம். சொத்தில் எனக்கு பங்கு குறைவு, எனக்கு மரியாதை தரப்படவில்லை, என்று பல்வேறு காரணங்களை சொல்லிக்கொண்டு அடித்துக் கொள்வது எல்லா குடும்பங்களிலும் நடைபெறுகிறது. வயதின் முப்பதுகளிலும் திருமணத்திற்கு முன்னிலும் பொதுவாக பெரிய சண்டைகள் சச்சரவுகள் இருப்பதில்லை அன்புடனே பழகியிருப்பார்கள். ஆனால் சிறுவயதில் சிறுவர்களாக இருந்த சமயத்தில் அப்படி இருந்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. என் பொருட்களை நீ எடுத்துவிட்டாய், நீ திருடிவிட்டாய் என்று எத்தனை முடியுமோ அத்தனையும் சண்டை இட்டுக்கொள்வோம்.
நானும் என் தங்கையும் இளம்வயதில் ஒருவரை ஒருவர் கோபம் கொண்டு பேசி தாக்கிக்கொள்வோம். அதில் முக்கியமாக ஒருவர் பொருட்களை ஒருவர் எடுத்ததாகவோ ஒருவர் புத்தகத்தை ஒருவர் எடுத்ததாகவோ இருக்கும். சாப்பிடும்போது இச்சண்டகள் அதிகம் இருக்கும். சாப்பிடும்போது உணவில் கைவைத்துவிட்டதால் அந்த எச்சியை சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிப்பாள்.

Wednesday, September 9, 2015

டாப் 150 நாவல்கள்

டாப் 150: இதுவரை வெளியான நாவல்களில் டாப் 150 நாவல்கள் எவை என்பதனை திரு. என். செல்வராஜ் பல்வேறு பரிந்துரைகளின் கொண்டு அலசி ஒரு பட்டியலிட்டிருக்கிறார். அது திண்ணையில் வெளியாகியிருந்தது. அவற்றில் இருந்த சில முக்கிய விஷயங்களை தொகுத்து இங்கு மீண்டும் வெளியிடுகிறேன். மேலும் விவரங்களுக்கு enselvaraju@gmail.com என்கிற முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

சிறந்த நாவல்கள் நூற்று ஐம்பது

என். செல்வராஜ்

முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் 1879 ல் வெளியாகியது. 135 ஆண்டு கால நாவல் வரலாற்றில் பல்லாயிரக்கணக்கில் நாவல்கள் வந்துள்ளன. இதுவரை வெளிவந்த நாவல்களில் சிறந்த 150 நாவல்களைக் கண்டறிய நான் எடுத்துக் கொண்ட முயற்சியே தலை சிறந்த நாவல்கள் ஒரு பார்வை, சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்-1 , சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்-2 ஆகிய மூன்று கட்டுரைகளாக வந்தன. இவை திண்ணை இணைய இதழில் வெளிவந்தன. இந்த மூன்று கட்டுரைகளின் முடிவை இதில் காண்போம். டாப் 10 பரிந்துரைகள், எனது தலை சிறந்த நாவல்கள் கட்டுரையில் உள்ளது. நாவல் பரிந்துரைப் பட்டியல், சிறந்த நாவல்கள் பட்டியல்-1 மற்றும் 2 ல் உள்ளவை. இவற்றையே பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் என குறிப்பிட்டு இருக்கிறேன்.